ரஜினியின் இலங்கைப் பயண முனைப்பும், முடிவும் ஒரு திட்டமிடப்பட்ட நாடகத்தின் சோகமான முடிவாகவே அமைந்தது. தன் சூப்பர் ஸ்டார் இமேஜ் மூலம், ரஜினி மனித மனங்களில் ஆளுமை செய்கிறாரென்பது நிஜமே. ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையின் இருண்ட பக்கங்களுக்குப் பின்னிருக்கும் மர்மங்களை அறியாது, ‘லைக்கா' போன்ற நிறுவனம் விரித்த வலையில் அவர் சிக்கிக் கொண்டிருப்பது வருத்தமான விஷயம். ரஜினியே குறிப்பிட்ட புனிதப் போர் நிகழ்வின்போதெல்லாம் மௌனமாக இருந்து விட்டு, இப்போது எந்திரன்&2 க்காக அவர் மெனக்கெடுவது போலித்தனமாகத் தெரிகிறது. ரசிகர்களை மட்டுமின்றி, அவர்களின் உணர்வுகளையும் இன்னும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
இது சின்ன பிரச்சனை அல்ல எனும் தலைப்பிலான அலசல், கண்ணாடியாக மிளிர்ந்தது. அரசியல் சதுரங்கம் பகீர்..பகீர்! தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு வரவேற்க்கத்தக்கது.
இ.டி.ஹேமமாலினி, ஆவடி
ராஜாவின் நேர்க்கோடு சித்திரம் அருமை. ப்ரியனின் அரசியல் கட்டுரை அருமை, கட்டுரையின் கடைசி வரிகள் சூப்பர் பஞ்ச் தலைவா.
அ.முரளிதரன், மதுரை.
தானோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்டவரோதான் இலங்கையை ஆளவேண்டுமே தவிர, இராவணன் ஆளக்கூடாது என்பதே, ராமனின் முடிவு. இந்த இராம, இராவண தொடர் போராட்டம், இராமாயண காலத்திலிருந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பதை பண்டிதநேரு அவர்களே, தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலில் எத்தனையோ நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும். இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் துருப்புச்சீட்டேரஜினிகாந்த். இதனை அவரும் புரிந்து கொண்டிருப்பார் எனக்கருதுகிறேன். அப்படியில்லாமல், அவசரப் பட்டு அரசியலில் அடியெடுத்து வைப்பாரேயானால் தமிழ்நாட்டில் இதுவரை அவருக்கிருக்கும் உயர்ந்த மதிப்பு தேய்பிறையாகிவிடும்! நாட்டிற்கு மட்டுமல்ல, அவருக்கும் அது ஒரு இருண்டகாலமே!
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
ஏப்ரல்'2017 இதழில் அசோகமித்திரன் அவர்களின் அலாதியான துணிச்சல், அவர் மீதிருக்கும் மதிப்பை மேலும் அதிகப்படுத்தியது. நூல்களை அறிமுகப்படுத்தும் பக்கம் மனதை மிகவும் ஈர்க்கிறது. ‘காமிரா' கண்களின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு உணர்ச்சிப்பிரளயம்.
எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
ரஜினி புரிந்து கொள்வாரா? என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத் தின் அழைப்பை ஏற்று இலங்கை செல்ல வேண்டாம் என்பதற்கான காரணங்களை உருக்கமாக விளக்கிவிட்டு, இறுதியில் ‘‘தமிழக சினிமா பிரபலங்கள் அமைதியாக அவர்களது தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. விடுதலை மண்ணை மலடாக்காமல் இருந்தாலே போதும்'' என்ற அறிவுரையை வழங்கி, அக்கட்டுரையின் நோக்கத்தைப் பழுதாக்கிவிட்டார். ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த ராஜபக்சேவின் அன்றைய இலங்கை ‘‘பேரரசு'' குற்றவாளியல்ல என்று நம் இந்திய அரசே ஐ.நா சபையில் ஆதரவளித்திருக்கும் போது தமிழக சினிமாக் கலைஞர்களால் மட்டும் அந்தத் தீர்ப்பை மாற்றி எழுதவா முடியும்? முதலில் இங்குள்ள ‘‘அகதிகள் முகாம்களில்'' திரிசங்கு நிலையில், எதிர்கால நம்பிக்கையற்று உயிர் பிழைத்திருக்கும் நம் ஈழமக்களின் வாழ்வு மலர உதவட்டும். இதனால் அரசியல் நடத்தினாலும், விளம்பரம் தேடினாலும் தவறில்லை.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.
இப்படி மிரட்டும் போஸில் கமலின் படத்தை முகப்பில் போட்டு 'பார்க்காதே, படிக்காதே' என பெரிய எழுத்தில் பயமுறுத்தி, படைப்பும் தடையும் போராட்ட சரித்திரம் என சிறிய எழுத்தில் சமாதானப்படுத்தினால் எப்படி? மனதை தேற்றிக்கொண்டு உள்ளே தேடித் தேடிப்பார்த்தும் கமலைப் பற்றி கட்டுரை எதுவும் இல்லை. சரி! கமலின் முகப்புப் படமே ஏதோ கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறது. சரிதானே! இது அந்திமழையின் சிந்திக்க வைக்கும் மொழி. ஒன்று தெரியுமா? ஜெயதேவரின் ‘அஷ்டபதி' பாடலைக்கேட்ட வெள்ளைக்கார கவர்னர் ஆகா! காமரசம் சொட்டும் பாடலை எழுதியவரை கைது செய் என படையொன்றையே அனுப்பிய போதுதான் தெரிந்தது, அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் ஆன செய்தி. கருத்தும் சுதந்திரமும் படும்பாடும் மாறாது! மறையாது. படைப்பும் தடையும் குறித்த ஜா.தீபாவின் திரைப்படப் பார்வை, சட்டங்கள் பற்றிய நீதிபதி சந்துருவின் விளக்கம், நேர்மையான படைப்பாளிக்கு நிகழும் பாதிப்பு பற்றிய லீனா மணிமேகலையின் விரிவான ஆய்வு எல்லாமே அதற்கான சான்றுகள். தஞ்சை திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற எனக்கு மாலனின் அவரைப்பற்றிய இக்கட்டுரை ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தியது. பாரதியின் பாடல்களைத் தடை செய்ய ஐயர் தேடிப் பிடித்த காரணங்கள், அவரைப் பற்றிய எனது மதிப்பான பார்வையில் ஒரு சறுக்கல்தான். படைப்பும் தடையும் பற்றிய பார்வையில் நம் தமிழகத்தில் இனம், மதம், சாதி என்ற பார்வையில் சிதைந்து கிடக்கும் எழுத்தாளர்களை விட்டு விட்டீர்களே! அடுத்த முறை கண்டு கொள்ளுங்கள். பகற் திருடர்கள் சங்கம் எஸ்ராவின் பார்வையில் புதிய கோணத்தை அறியத்தந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலோடு ஒப்பிட்டேன். சிரிப்பு வந்தது.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை
எஸ்ராவின் பகற்திருடர்கள் சங்கம் சிறுகதையில் நாட்டையே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று அனைவரையும் பகடி செய்துள்ளார். இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு பத்திரிகையின் உரிமையாளரும் அந்த சங்கத்தில் உறுப்பினர். இதை ஒரு ரிப்போர்ட்டரின் மூலமாகவே கதையை கொண்டு சென்றுள்ளார். இன்றைய நம் நாட்டின் சூழலோடும், மக்களின் மனநிலையோடும் பொருந்துகிறது இச்சிறுகதை. ‘‘எதைப் பாத்து குரைக்கணும்னு தெரியலையே நாயே. ஏன் இப்படி லோல்படுறே'' இந்த வரி ஒரு சான்று.
தமிழழகன், நாமக்கல்.