கடிதங்கள்

கேடு

Staff Writer

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் பழநி பாரதி அந்திமழை ஏப்ரல் 2016 இதழில் ‘'கடைசி மனிதனின் தலை'' என்ற தலைப்பில் சாதிவெறி என்ற சமுதாயப் பிணியை படம்பிடித்து காட்டியிருக்கிறார். கஜேந்திர பாபு பேசும் போது ‘'இங்கு சாதியைப் பற்றி பேசக்கூடாது'' என்று ஒருவர் இரண்டு தலைமை ஆசிரியர்களின் தூண்டுதலினால் ஆட்சேபித்தது தான் கொடுமையின் உச்சம்! யாதும் ஊரே யாவரும் கேளீர், சாதி இரண்டொழிய வேறில்லை, சாதிகள் இல்லையடி பாப்பா, சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே& என்பதையும் மீறி சா‘தீ' கொழுந்து விட்டு எரிவது வெட்கக்கேடு!

மேட்டுப்பாளையம் மனோகர்,சென்னை.

இனிப்பானது

மிதித்து வாங்க வேண்டும் எனும் தலைப்பில், just buy cycles நிறுவனமும் அதன் செயல்பாடும் பற்றிய தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியது. புதியன கழிதலும் பழையன புகுதலும் என்ற நிலைமைக்கு மக்கள் திரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை! எந்த அளவுக்கு சைக்கிளை மக்கள் மறந்தார்களோ, அந்த அளவுக்கு பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் என்பது தானே நிதர்சனம்? மக்கள் மீண்டும் சைக்கிளுக்கு திரும்புகிறார்கள் என்ற செய்தியே இனிப்பானது. உடல் நலம் மற்றும், இயற்கையை பாதுகாக்கும், சமூக நோக்குடனான இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

ஹேமாமாலினி,சென்னை.

வாழ்த்துகள்

தேர்தல் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பிலான பேட்டிகள் படித்தேன். அந்த பேட்டிகளின் கடைசியில் உள்ள வரிகளை கொட்டை எழுத்துகளில் போட்டிருக்கலாம். இயக்குநர் சசியின் பேட்டி கண்டேன் வணிகப்பட இயக்குனராகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள அவர் நிச்சயம் பிழைக்கத் தெரிந்த மனிதர்தான். நடுப்பக்க படங்கள், தரமான படங்கள்.பிரசாந்த் சுவாமிநாதனுக்கு வாழ்த்துகள்.

அ.முரளிதரன், மதுரை.

இனிக்கும் வாழ்க்கை

பழம்பெரும் தலைமை - நமது இதழில் தங்கப்பதக்கமாய் ஒளி வீசியுள்ளது. எதிர்ப்புகள் தேடி வரும் போது எல்லாம் அதை ஏற்றுக் கொள்வதின் மூலம் தன்னை கலைஞர் கருணாநிதி உயிர்ப்பித்து கொள்கிறார். இதன் மூலம் தன் உறுதித்தன்மையை உலகிற்கு தெரியப்படுத்துகின்றார். ஆச்சர்யப் படத்தக்க ஆற்றல். ஆனாலும் அவரின் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கை அகற்றியதும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த விதமும் தமிழர்கள் மனதில் ஆறாத புண்ணாகி விட்டது. கலைஞர் வாழ்க்கையிலும் நீக்கமுடியாத கறையாக அமைந்து விட்டது. கேரளாவில் அச்சுதானந்தன் 93 வயதிலும் நான் தான் கட்சியின் உச்சாணிக் கொம்பு என்று எண்ணுவதும், கலைஞரின் மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது. இயற்கை இவர்களுக்கு முதுமை என்கிற ஓய்வு காலத்தை அளித்திருக்கிறது. அதை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்கள் துணையை நாடி வாழும் இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று பிறர் எண்ணுவதில் கூட நியாயம் இருக்கிறது. இது கருணாநிதிக்கும் பொருந்தும். நாம் வாழ்வது தான் வாழ்க்கை. அதையே ஞாலத்தில் உள்ளவர்களும் விரும்புவர். இதை இவர்கள் விரும்புவார்களா? விரும்ப வேண்டும்! அப்போது தான் இருக்கும் வரையிலும் வாழ்க்கை இனிக்கும்.

முனைவர். இராம.முத்துக்குமரனார்,கடலூர்.

பாடம்

தி.மு.க ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. அது தமிழினத்தின் மீட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாய இயக்கமும் கூட. எனவே பல நெருப்பாறுகளை கடக்க வேண்டி இருக்கிறது. பூனையிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வருபவனையே கிளி, பயத்தில் கொத்துவதைப் போல, அப்பாவித் தமிழர்களே மயிலிறகால் வருட வேண்டிய இயக்கத்தைக் கோடரியால் பிளந்தெறிய துடிக்கிறார்கள். அந்தோ! அவலம்! அவலம்!.. இதற்கு அடிப்படைக் காரணமே, சாதியக் கண்ணோட்டம் தான். தகுதி, திறமை, உழைப்பு இவை அனைத்தும் அளக்கப்படுவது சாதியால் என்பது நாட்டின் வரலாறு கற்றோர் நன்கு உணர்வர். கூழாங்கல்லை வைரமென்று சாதிக்க முயல்வதும், வைரத்தை கூழாங்கல் என்று கூசாமல் கூறுவதும் சாதியத்தின் அடிப்படையிலேதான். தமிழினத்தின் இதய துடிப்பாகவும், வட நாட்டு அரசியலை ஆட்டிப் படைக்கும் அரசியல் நுண்ணறிவாளராகவும், தமிழ் மொழி இனப்பாதுகாவலராகவும் விளங்கினாலும் 92 அகவையிலும் ஓயாத உழைப்பாளியாக இருந்தாலும் கலைஞர் மீது கண்டனக்கணைகள் பாய்வதற்கு காரணம் இதுவே. தவறே செய்யவில்லை என்றாலும் ஊழல் பழி உலகமறிய தவறுகளை அடுக்கடுக்காக செய்து சட்டத்தை மீறி நடந்தாலும் அவர்களுக்கு பாராட்டு விருது எல்லாம்! இது எதனால்? சாதி ஆணவந்தானே இதற்குக் காரணம். பூனை வாழ்கின்ற அதே வீட்டில் தானே எலியும் வாழ்கிறது. அதே நிலைதான் திராவிட இயக்கத்திற்கும்! சமத்துவ சமதர்ம சமுதாயம் மலர பாடுப்படுவதால்தான் கலைஞருக்கு இத்தனை எதிர்ப்புகள்! எனினும் இறுதியில் வெல்லப் போவது கலைஞரே! உழைப்பை சூது கவ்வினாலும் இறுதியில் வெல்ல போவது உழைப்பே! இதுவே கடந்த கால வரலாறு உணர்த்தும் பாடம்.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டு கருப்பூர்.

ஏமாறுவர்

பழம் நழுவி பாலில் விழும் என்று தான் எதிர்பார்த்தார். கலைஞர், ஆனால் பழம் பாலிலும் விழவில்லை, தரையிலும் விழவில்லை. தனியாக தன் நிலையில் நின்று கொண்டது. என்ன நடந்ததோ காட்சி மாறிவிட்டது. பழம் பெரும் தலைவர் கலைஞர்... உண்மை. அரசியலில் பழுத்த பழம். இன்றுள்ள அனைவரிலும் பெரியவர். ‘தலைவர்' என்ற ஸ்தானத்தை இன்று வரை & ஏன் என்றும் தக்க வைத்துக் கொண்டவர். கொள்வார்! அரசியலில் அவரைப்போல ஏற்றம் கண்டவர் இல்லை. இறக்கம் கண்டவரும் இல்லை. ஆனால் எவரின் இறக்கத்திற்கும் இறையானவர் இல்லை. அதனால் தான் இன்றும் இறையாண்மையோடு நிற்கிறார். வாக்குச் சாதுர்யம், எழுத்துச் சாகசம், அரசு என்றால் அதில் சாணக்கியம். எப்படி, இத்தனை சரிவிகித கலவையில் அவர் வடிக்கப்பெற்றார் என்று விழி அகற்றி வியந்து பார்க்க வைத்தவர்! புது தில்லியில் சதுரங்கம் ஆடியவர். தன் எழுத்து வன்மையால் சொல் வித்தகத்தால் ஒரு மாமாங்க காலம் கட்சியை கட்டுக்கோப்புடன் காத்தவர். அன்று அவர் கட்டிக் காக்காது போயிருந்தால் தி.மு.க மண், மூடிப்போயிருக்கும். ஒரு பினீக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்த தி.மு.க அது கலைஞரால் தான் சாத்தியமாயிற்று. மறுக்க முடியுமா? இல்லை மறக்கத் தான் முடியுமா? 90+ நாட் அவுட் சாதாரணம். 100+ நாட் அவுட் பார்க்கத்தான் போகிறது நாடு!

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.