கடிதங்கள்

நிறைவு

Staff Writer

ஏப்ரல் இதழ் கல்வி, தேர்தல் இரட்டைச் சிறப்பிதழாக மலர்ந்தது. கல்வி பெறுவதில் தொலைநோக்குப் பார்வையும் , தேர்தலில் அண்மைக்காலப் பார்வையும் அமைந்திருந்தன, பிளஸ் 2 வகுப்பிற்கு பிறகு வேலை பார்த்து கொண்டே படிக்ககூறிய ஆலோசனைகள் நம்பிக்கை ஊட்டவும், பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும் செய்தி, இதற்கு எடுத்துகாட்டுகள் ஏராளம் , தேர்தல் செய்திகளில் 67 தேர்தலில் எம்.ஜி.ஆர் குறித்த செய்திதான் சிறப்பாக இருந்தது ‘தொல்குடி'யையும் அன்றைய கல்வி இல்லா தன்மையுடன் கூடிய கூட்டுக்குடும்பமாகவும் இன்றைய அரசியலுடன் நாஞ்சில் நாடன் படிமமாகக் காட்டியது மிக மிக அருமை. கடைசிப்பக்கம் தி.க.சி.யின் அஞ்சலியும் நிறைவான செய்தி.

அ.கருப்பையா, பொன்னமராவதி

தவப்புதல்வர்

தி.க சிவசங்கரன் என்ற எழுத்து ஆலமரம் மறைந்தாலும் அவர் விட்டு சென்றுள்ள எழுத்து விழுதுகள் இலக்கிய உலகைத் தாங்கிப் பிடிப்பார்கள்.தி.க.சி நெல்லை மண்ணின் தவப் புதல்வர்.

எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்

பிழைப்பு

ஏப்ரல்-2014 ‘அந்திமழை' இதழினை வாசித்தேன். 'திரு தொண்டனின் புராணம்' கலாப்ரியாவின் அனுபவச் சிதறல்கள் 1967- தேர்தல் காலத் தமிழகத்தின் காட்சிகளை மீளச் செய்தன. சொந்தப் பணத்தைச் செலவு செய்து, இரவு பகல் எனப் பாராமல் கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்களில் பலர் இன்னும் சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருகின்றனர். அரசியலைப் பிழைப்பாக கொண்டவர்கள் ஆடம்பரமாக வாழ்கின்றனர்.

கு.ரவிச்சந்திரன்,ஈரோடு-2

குருவும் சீடனும்

குரு குருவாக இருக்க வேண்டும் , சீடன் சீடனாக இருக்க வேண்டும் , சீடன் குரு பீடத்திற்கு ஆசைப்பட்டால் அது குருவை கீழே தள்ளிவிடுவதற்குச் சமம் , ஆனால் எத்தனை சீடர்கள் குருவை அவர் காலம் வரை குருவாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். சீடன் இடம் மாறி குரு பீடத்தில் அமர வேண்டுமென்ற ஆசையின் விளைவே குருவை மிஞ்சிய சீடர்கள் கதையாகிறது, அது நிஜமும் ஆகிறது.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.

ஜொலிப்பு

இந்த மாத அட்டைப்படம் இனிமை! இளமை! ‘‘கார்ட்டூன்'' புதுமை , சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது. கல்வி மற்றும் தேர்தல் இரட்டைச் சிறப்பிதழாக மலர்ந்ததிலிருந்தே சென்னை வெயிலும் , தேர்தல்களமும், கல்வியும் செம ஹட்டான நிலைமையில் உள்ளதை உணர முடிந்தது! காமிரா கண்கள் ரவிசங்கரனால் ஜொலித்தது , காணக்கிடைக்காத அற்புத ஸ்டில்ஸ், நன்றி.

இ.டி.ஹேமாமாலினி , சென்னை - 23

நினைவுகளின் ஊர்வலம்

அலைகளும் , கணிப்புகளும் , கூட்டங்களும் , வாக்குறுதிகளும் கட்டிப்புரளுகிற நேரத்தில் வந்துள்ள ‘திரு தொண்டர் புராணம்' ரொம்பவே இண்ட்ரஸ்டிங். சலித்துப்போன கதைகளுக்கு நடுவே , இந்த காபியிங் பென்சிலின் ஊதா வண்ணம் நிறமாறும் கதை ஒரு ஹைக்கூ. அனுபவித்து ரசித்து படிக்க முடிந்தது. கலாப்ரியாவின் எழுத்தின் மூலமாய் அழகான நினைவுகளின் ஊர்வலம் நகர்ந்தது...சப்பரங்களுடன்.

ஜே.சி.ஜெரிணாகாந்த், சென்னை

உண்மை தேர்தல்

சிறப்பிதழான ஏப்ரல் மாத அந்திமழை படித்தேன். அதில் குறி தவறும் குருநாதர் என்ற அரசியல் கட்டுரையில் இந்திய வரலாறு முழுக்க குருவுக்கும் சீடனுக்குமான உறவுகளின் பல்வேறு மாறுபட்ட அம்சங்கள் குறித்த சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன , என்பதை தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் குருக்கள் தன் சீடர்களின் வளர்ச்சியைப்பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்களது வளர்ச்சி தன் ஆச னத்துக்கே ஆபத்து என்கிற போது பதட்டமும் , வருத்தமும் அடையாமல் இருப்பது வெகு சிலருக்கே சாத்தியம் .

முத்தூஸ், தொண்டி

அதிசயித்தேன்

நேர்காணல் பகுதியில் , திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு ‘ இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகப்போகின்றன . திமுகவின் நிலையான வாக்கு வங்கி மற்றும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்கும் என்பதால் முப்பது இடங்களில் திமுக வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்ற சுப.வீரபாண்டியனின் நம்பிக்கை பேட்டி கண்டு , ஒரு வேளை இவர் வாக்கு வல்லுநரோ என அதிசயித்தேன்

மு.சுகாரா, ராமநாதபுரம்.

அந்தக் காலம்

அன்றைய தேர்தல் காலங்களில் சிறுவர்களும் இளைஞர்களும் எத்தகைய மனநிலையில் இருந்தார்கள் , எப்படி தங்களுக்கானவர்களுக்காக தேர்தலில் பாடுபட்டார்கள் என்பதை கலாப்ரியா அழகாக எடுத்துரைத்துள்ளார். அகவை 60ஐத் தொட்டவர்கள் எல்லாம் அவர் கூறியவையெல்லாம் தங்கள் மனத்திரையிலும் அப்படியே தெரிவதாக நிச்சயம் கூறுவார்கள். அந்த காலம் போல வருமா? என்று தான் மனம் ஆதங்கப்படுகிறது.

அ.சுகுமார், காட்பாடி

உந்துவிசை

மார்ச் மாத அந்திமழையின் முகப்பு அட்டையில் , அதிமுக ‘நாற்பதும் நமதே ' என்று சொல்லி வரும் கருத்தை , ‘இனியவை 40 - அதிமுகவின் அதிரடித் திட்டம்' என்று தலைப்பிட்டிருப்பது அருமை. ஜெயலலிதா 2011 இல் முதல்வரானதும் தன் தலைமுடியைக் கருப்பாக்கிக் கொண்டார். ஆனால் முகப்பிலும் 6 ஆம் பக்கத்திலும் நரைத்த முடிகளும் கொண்ட செயலலிதாவின் படத்தை வெளியிட்டிருப்பது ஏன்? அவர் பிரதமமந்திரியாவதற்குரிய முதிர்ச்சியை அடைந்துவிட்டார் என்பதன் அடையாளமா? அந்திமழையில் நான் ‘வானவில் கடிதங்கள் ' பகுதியைத்தான் முதலில் படிப்பேன். அறிவார்ந்த பிரிவினர் அந்திமழையை எவ்வாறு நோக்குகின்றனர் என்பதை அறிவதற்கான ஓர் அளவுகோல் இது.ராஜாவின் கருத்துப் படங்கள் ஆழமாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளன. அந்திமழையில் இடம்பெறும் பல்வேறு துறைகளில் சோர்வடையாத விடா முயற்சியால் உயர்ந்தவர்கள் பற்றிய பல உண்மை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களுக்கு இவை பெரும் உந்துவிசையாக அமையும்.

க.முகிலன், சோளிங்கர்