Editorial
கடிதங்கள்

வெகு அழகு!

Staff Writer

அந்திமழை பிப்ரவரி இதழ் கண்டேன். நூல்கள் படிப்பதைப் பற்றிய சிறப்பிதழோ என எண்ணும்படியாக இதழின் பாதிக்கு மேல் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வைக்கும் வண்ணம் இதழைத் தயாரித்துள்ள உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். அரசியல்வாதிகள்/வாக்காளர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்கள் என சில நூல்களைக் குறிப்பிட்ட விதம் அருமை.

வளரும் தலைமுறையினர், அடுத்து அரசியல் செய்வோரைத் தேர்ந்தெடுப்பது என்பது நல்ல நூல்களின் மூலமே நிகழும் என்பது சிந்திக்க வைக்கிறது.

அந்திமழை இதழின் சிறப்புப் பக்கங்கள் அனைத்திலுமே சிறந்த அறிஞர் பெருமக்களின் நூல்களை மேற்கோள்காட்டி இவற்றைப் படித்து உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று தூண்டியிருப்பது வெகு அழகு. அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் உதவும்படியான பல நூல்களைச் சொல்லி சிறப்பும் சேர்த்துள்ள விதத்தை ஒரு பதிப்பாளனாக மிக விரும்பினேன்.

லேனா தமிழ்வாணன், பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

உண்மை

என். கலைவாணன் எழுதிய ‘மக்னா யானையின் கதை' என்ற கட்டுரையில் யானையும் மனிதர்களைப் போலவே அன்பும் உறவும் கொண்ட பேருயிர்கள். அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும், அவை மீதான பொறுப்புணர்வும் மனிதர்கள் மத்தியில் பெருக வேண்டும் என்பதே என் விருப்பம் என்று குறிப்பிட்டுச் செல்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் கடின உழைப்பும், தன்னம்பிக்கையுமே அவரை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றது என்பதே உண்மை.

பணத்தை இஷ்டம்போல் அச்சடிக்காமல் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் தலைவரை உங்களைப் போலவே நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரா. இலக்குமணன், திம்மராஜம்பேட்டை

போதுமா?

தரமான தலைவன் ஆவதற்கு வெறும் புத்தக வாசிப்பு மட்டும் தகுதி தருமா? ஆங்கில புத்தகங்கள் வாசித் தவராலும், தமிழ் புத்தகங்கள் எழுதியவராலும் தானே தமிழக அரசியல் தரம் தாழ்ந்தது! நிர்வாகம் ஊழலானது. ஆக, வாசித்த வண்ணம் வாழ்தலே முக்கியம், அறிஞர் அண்ணா போல. புத்தகம் போல சமூகத்தையும், மக்களையும் வாசிக்க வேண்டும். தென்னப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்த பிறகு தானே தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் இறங்கினார். பெரியாரும், காமராஜரும் கருப்பு பூனைகள் சூழாமல் மக்களோடு கலந்துரையாடியவர்கள் தானே?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

நெகிழ்வு

சிறப்பு கட்டுரையாக விரிந்திருக்கும் முதற்கட்டுரை ஒரு மக்னா யானையின் கதை அருமை. ஆறு டன் எடை கொண்ட மூர்த்தி, ஐம்பது கிலோ எடைகொண்ட தன்னிடம் பாதுகாப்பைக் கோரி தஞ்சமடைந்ததை அனுபவக் கதையாக அப்படியே தந்திருப்பது சிறப்பு. திவ்யபிரபந்த் தொகுத்து வழங்கியிருக்கும் அரசியல் கட்டுரையான திமுகவின் தொகுதி பங்கீடு யாருக்கு எத்தனை? அன்றைய அண்ணாவின் எளிமையான நிலைப்பாட்டை யதார்த்தமாகச் சுட்டி அவ்வாறே தளபதி ஸ்டாலின் சாமானியர்களுக்கும் அதிகாரத்தில் இடமளித்து ‘நல்ல தலைமை‘ என்ற நற்பெயர் எடுக்க ஆலோசனை கூறுவதாக அமைந்திருக்கின்ற நல்ல கட்டுரை எனக் கொள்ளலாம்! பன்முகத் தன்மை கொண்ட ஆய்வறிஞர் பெரியார் கொள்கையில் திளைத்தவர். பண்பாடு, சமயங்கள் குறித்தான கருத்துகளை அடித்தள மக்களுக்கு அறிவுறுத்திய பண்பாட்டாய்வாளர் தொ.ப. குறித்து அவரது மகள் உருக்கமாக பகிர்ந்துகொண்டதை கட்டுரை வடிவில் அளித்திருக்கும் மா. கண்ணனுக்குப் பாராட்டுகள்! அந்திமழை இளங்கோவன் ஒருங்கிணைப்பில் அரசியல் இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அனைத்தும் கருத்துப் புதையல்கள்!

பவளவண்ணன், நடுவிக்கோட்டை

சிலிர்ப்பு

தொ.பரமசிவன் நினைவலைகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது மகளை திருக்குறளைப் படி, போதும் என்றதும், மறுபிறவி எடுத்தால் சிலப்பதிகாரத்தை திரும்பப்படிப்பேன் என்ற வாசகமும் சிறப்பு. புத்தக வாசிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோவைப் பற்றி எழுதியவை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

நேர்காணல்

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும் என்பதை பல அறிஞர்கள் முன்வைத்திருந்தபோதிலும், அண்ணன் சீமான் அவர்கள் அந்த கருத்தை வலியுறுத்தியதை விரிவாக வெளியிட்டதற்கு என் மனமார்ந்த நன்றி! அண்ணன் சீமான் அவர்களின் கோட்பாடுகள் சரி/தவறு என்பதை பொதுவெளியில் விவாதிப்பது என்பது சிறந்தது. அதைவிடுத்து முழுமுற்றுமாக ஊடகங்களால் புறக்கணிக்கப்படுவது என்பது வருத்தமளிக்கிறது. உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் தைரியமாகவும் பொறுப்புடனும் அண்ணன் சீமான் அவர்களை நேர்காணல் கண்டு அவரின் கருத்துகளைப் பதிவிட்டதற்கு, ஒரு கிராமத்து இளைஞன் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோபிநாத் கோபால், பெரியசாமியாபுரம்

ஈர்ப்பு

அரசியலை தரப்படுத்துவது எப்படி...? இதை சரியாக உணர்த்தியது நிறுவிய ஆசிரியர் முன்குறிப்பாக வைத்த கட்டுரையில் இடம் பெற்ற ...எப்படி கரக்ட் பண்ணனும்னு தெரிஞ்சிருக்கு...என்ற வார்த்தை. முழுமையான விளக்கம் அதுதான். மற்றபடி கட்டுரைகளில் குறிப்பிட்ட அரசியல் பற்றிய பொதுக்கருத்துகள் அனைத்துமே அருமை.

முக்கியமாக பேரா.மு.நாகநாதன் கட்டுரையில் அம்பேத்கர் குறிப்பிட்ட ராஜாஜியின் கூட்டரசு தத்துவம் சரியான பார்வை. அது தான் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். அது மறுக்கப்பட்டதன் பின்னணிக்கு ஒரு முன்னணிக் காரணமும், பின்னணிக் காரணமும் உண்டு.

சிறப்பிதழ் பக்கங்கள் அனைத்துமே தனித்துவமான பல கருத்துகளில் ஈர்த்தன என்பதும் உண்மை. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் பற்றிய மகளின் பார்வை அவரின் கூடுதல் சிறப்புக் குணத்தை உணர்த்தியது. மக்னா யானை மூர்த்தி மனதில் பதிந்து நெகிழ வைத்தான்.

-தஞ்சை என்.ஜே.கந்தமாறன். சென்னை - 89

வாசிப்பு

ஆயிரம் ஆயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரம் ஆயிரம் கருத்துகளின் சேகரமே அறிவைச் செழுமைப்படுத்தும் புத்தகங்களாக அமைகிறது என்ற முனைவர் வைகைச் செல்வன் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில்

வாசிக்க வேண்டிய நூல்கள் என்று அந்திமழை இளங்கோவன், கி.வீரமணி, மாலன், பேராசிரியர் மு நாகநாதன், மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் அறுபது நூல்களைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த நூல் பட்டியலிலுள்ள நூல்களை முழுமையாக வாசித்தாலே போதும். சிறந்த வாசகனாகவும் சிறந்த குடிமகனாகவும் ஆகிவிடுவார்.

டாக்டர் குரு, சேலம்.

புரட்சி

நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். புத்தகங்கள் புரட்சியை ஏற்படுத்தும், கிளர்ச்சியை ஏற்படுத்தும், அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள் கோர்த்த புத்தகங்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் மாறுபாடு இல்லை. வாசிப்பு ஒரு நாள் மேன்மையை தரும். வாசிக்க வேண்டியவை, நேசித்து வாசித்த புத்தகங்கள் என ஒவ்வொருவரின் புத்தக அனுபவங்களை அந்திமழை புத்தகம் வழியே பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

தமாஷ் பண்ணாதீங்க

தலைவர் சி.என். அண்ணாதுரை பேருந்திலிருந்து இறங்கி சைக்கிள் கடைக்குப் போய் சர்பத் குடித்துவிட்டு, சைக்கிள் கேரியரில் அமர்ந்து பயணித்து, வயக்காட்டில் தொண்டனைப் பார்த்துவிட்டு களத்துமேட்டில் தூங்கினார். இப்படியாக ஒரு தலைவர் கட்சி நடத்தினார் என்று புதிதாக வாக்களிக்கப்போகும் இளைய தலைமுறையிடம்

சொன்னால் நம்புமா! அது சரி, பத்துகோடி செலவழிப்பவருக்கே எம்.எல்.ஏ சீட்! என்று கறாரான காலத்தில் கதிரறுக்கும் மணி போன்ற சாமானியனையும், தளபதியார் அதிகாரத்தில் அமர்த்துவார் என்ற கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு

சாத்தியப்படுமா? சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்!

அ. யாழினி பர்வதம், சென்னை -78

மார்ச், 2021