கடிதங்கள்

கண்ணதாசன்!

Staff Writer

பூமாலையில் ஒரு மல்லிகை! அந்திமழையில் நனைந்து கொண்டே படித்தேன். நீ என்ன பெரிய்ய கண்ணதாசனா என்று என்னைக் கேட்ட பெண் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. எனக்கு பிடித்தது இரண்டு, 1.கண்ணதாசன் பாடல்கள், 2.இலங்கை வானொலி . இன்று இரண்டும் இல்லை. இருந்தாலும் அந்திமழை வாயிலாக காதல் சிறப்பிதழ் படித்தவுடன் கண்ணதாசன் பாடல்தான் ஞாபகம் வருகிறது. நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்... கண்ணதாசனைத் தெரியவில்லை என்றால் அவர் காதலிக்கவில்லை என்று பொருள். காலம் கடந்தாலும் காதல் சிறப்பிதழ் மூலம் கண்ணதாசனை நினைவு படுத்திய அந்திமழைக்கு அதிக அன்புடன்.

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

சிறப்பு

தமிழால் காதலை மேம்படுத்திய வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், டி.ராஜேந்தர், மு.மேத்தா, அறிவுமதி, தாமரை என பெயர்களே காதுகளை ஸ்பரிசித்தன. முத்துகுமார்,வாலிப கவிஞர் வாலி, கண்ணதாசன் என காதல் சிறப்பிதழ் தொகுத்த விதமே வெகு சிறப்பு. என்றும் இனிய பாடல்கள், சாகாவரம் பெற்ற பாடல்கள், நெஞ்சில் நிறைந்த பாடல்கள் என அப்பப்பா அந்திமழையை எப்படி பாராட்டுவது, எனது உளமார்ந்த நன்றி!

இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.

மணிமகுடம்

பிப்ரவரி 2015 ‘அந்திமழை' ஒரே காதல் மழை தான் போங்கோ. காதல் சிறப்பிதழ் பகுதியில் நா.முத்துகுமார், இருப்பதில் இருந்து இல்லாததை தேடுவது. இல்லாததில் இருந்து இருப்பதைத் தேடுவது. இதுதான் காதல் என்று காதலுக்கு பளீர் விளக்கம் தந்தது செம சுளீர். ‘எதிர்ப்பும் பின்னணியும் 'கட்டுரை செம ஹாட். அடுத்து ‘இலக்கியத்தில் எதை எழுதுவது எதை எழுதக்கூடாது என்பதை அந்தந்த ஊர் சாதி&மத&அரசியல் பிரமுகர்கள் தீர்மானிக்க வேண்டுமா? அவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்த படிதான் எழுத்தாளன் செயல்படவேண்டுமா? மற்றதை பிறகு பேசுவோம்!' என்ற ஜெயமோகன் கேள்வியின் மூலம் ‘மீண்டு எழுக பெ.மு' கட்டுரைக்கு நேசக்கரமாய், மணிமகுடமாய் அமைந்தது.

முத்தூஸ், தொண்டி.

புதுப்புது வார்த்தைகள்

‘காதல் சிறப்பிதழ் - திரைப்பாடல்களில் காதல்' நமது, தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களால் எழுதப்பட்ட, காலத்தால் அழியாத பாடல்கள் குறித்த தகவல்களும், அப்பாடல்களில் பொதிந்துள்ள காதல் நயங்களும், இன்பச் சாரலாய் இதயத்தில் பட்டுத்தெறித்தன. கவிஞர் கா.மு.ஷெரீப், மருகதாசி, தஞ்சை ராமையாதாஸ், கு.மா.பாலசுப்ரமணியம், கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டையார் போன்ற பாவலர்களும், காதல் பாடல்களை எழுதியுள்ளனர். தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்று பாடல் எழுதுவோரையும் மிஞ்சும் வகையில் இன்றைய இளம் கவிஞர்கள் கவித்துவமிக்க பாடல்களை எழுதுகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ் மொழியின் எல்லையற்ற வலிமையால், புதுப்புது வார்த்தைகளுடன் பாடல்கள் உலா வருகின்றன.

கு.இரவிச்சந்திரன், ஈரோடு.

காதல் குருதி

மனசு ஜில்லிட்டுக் கொண்டது. இடையில் இறக்கைகள் முளைத்துக் கொண்டன; வானமெங்கும் பெண் தேவதைகளை காண அது விரைந்தது. அணுக்கள் ஒவ்வொன்றிலும் காதல் குருதி சுகமாக வழியத் தொடங்கியது. எல்லாம் ‘அந்திமழை''யில் காதல் சிறப்பிதழை வாசித்ததின் பொருட்டு.

சூர்யநிலா, சேலம்.

கவிதாஞ்சலி

காதல் சிறப்பிதழில் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்ற என்றும் அழிவில்லாத காதல் பாடல்களை, இயக்குனர் சீனுராமசாமி தனது துல்லியமான ஆய்வினை ஆரம்பித்து வைக்க அவரைத்தொடர்ந்து முனைவர் பா.இரவிக்குமார், செல்வன்,முத்துமாறன்,நெல்லை ஜெயந்தா, மீரா வில்வம் ஆகியோர் கவிஞர் கண்ணதாசன், வாலி துவங்கி இன்றைய இளங்கவிஞர்கள் வரை, அவர்களின் அழகான பால்வரிகளை நினைவூட்டி ஒரு கவிதாஞ்சலியை நடத்தியது அற்புதம்! இது அந்திமழை & இதழ் காதலுக்குச் செய்த நிறைவான மரியாதை! இதற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை

காதலிசை

காதலின் பரபரப்பும், துடி துடிப்புமாய் துள்ளிசையாய் மடியில் விழுந்தது அந்திமழை! காதலை, காதல் பாட்டுக்களின் பரிமாணங்களாய் விஸ்தீரணப் படுத்திவிட்டீர்கள்..கண்ணதாசன் அறிமுகப்படுத்திய ‘‘ஆயிழை'', தென்னவர் கையிலிருக்கும் திருவாளை போலிருக்கும், நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றல்...எதை மறக்க முடியும்? அப்போது ஆரம்பித்து இப்போது வரை நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை வரை.. சரசரவென சாரைப் பாம்பு வரை.. எதை விட? எதைச் சொல்ல? சீனு ராமசாமி குறிப்பிட்ட அத்தனையும் அழகியலுக்கு சாமரம் வீசுபவை! நம் கவிஞர்களுக்கு மட்டும் எல்லாம் சரியாக அமைந்தால் வானத்தையே சுருட்டி வைத்து நட்சத்திரங்களை எண்ணி விடமாட்டார்களா? நெஞ்சில் ஊஞ்சலாட.. காதலிசை தந்த அந்திமழைக்கு நன்றி!

ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

கிளர்ச்சி

இயக்குநர் சிகரம் ‘தண்ணீர் தண்ணீர்' பற்றி படமெடுத்தாலும் சரி, இயக்குநர் இமயம் ‘என்னுயிர் தோழன்' என அரசியல் படம் எடுத்தாலும் சரி, காதல் கலக்காத திரைக்கதைகளே தமிழ் சினிமாவில் கிடையாது. அதனால், டூயட் சாங்தான் தமிழர்களின் இளமை வேதம். முத்திரைப் பதித்த காதல் பாடல்களை, எழுதிய கவிஞர்களே எடுத்துக்காட்டியது, வளரும் கவிஞர்களுக்கு வகுப்பு எடுத்தது போலிருந்தது. அவைகளில், எல்லா வயதினருக்கும் ஏதோ ஒரு டூயட் சாங், அவர்களது இளமைகாலங்களை ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும் சாகும்வரை! அப்படியான கிளர்ச்சி யைத் தூண்டியது, காதல் சிறப்பிதழ்.

மல்லிகா அன்பழகன், சென்னை.

காதல் வரும்

காதலைக் காதலுடன், காதலாகவும் அத்துடன் கவிதையாகவும் பொழிந்தது ‘அந்திமழை'. மழையில் விளைந்தது, வளைந்தது காதல் வானவில் வண்ணங்களுடன். இது காதலுக்குத் தந்த சிறப்பு. அறிய உரிய மரியாதை. காதல் வயப்படாதவன் மனிதனே அல்ல. ஒரு மென்மையான மலர், நம் இதயத்தை வருடுவது போல வருடும் காதல். காதல் வரும். அது வையமெல்லாம் வாசம் வீசும். அந்தச் சுகந்த நறுமணமே நம் நாசிக்குச் சுவாசம்.

கே.ஏ.நமசிவாயம்,பெங்களூரு.

சூடும் சுவையும்

கே.கே.யின் திரைவலத்தில், சூடும் & சுவையும் இரண்டறக் கலந்திருந்தன. ‘ஐ' ஷங்கரின் மேஜிக் படத்தை வாரிய விதம் ஒரு ரகமென்றால், கேபிள்சங்கரின் ‘தொட்டால் தொடரும்' படத்தை பாராட்டுகிறீர்களா, இல்லையா என்பது புரியாத புதிர். ‘டார்லிங்' படத்தை மென்மையாய் வருடிவிட்டு, ‘ஆம்பள' படத்தை அடுத்து துவைத்து காயப் போட்டுட்டீங்க!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.