கடிதங்கள்

வியப்பு

Staff Writer

விருதாச்சலம் கரிபால்டி- கட்டுரை வாசித்தேன். இன்றை நாளிலும் அரசியல், சமூக செயற்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு எழுதியும், பேசியும் வருகின்ற வீரமணி, வைகோ, சுபவீ, அருள்மொழி உள்ளிட்ட பிரபலமானவர்களோடு பழகும் வாய்ப்பை அந்தக் காலத்திலேயே உருவாக்கித் தந்த இராசு அண்ணனின் மறக்கவியலா தனித் தன்மையை, சிறப்பியல்புகளை சிலாகித்து எழுதிச் சிறப்பித்திருக்கிறார் ப. திருமாவேலன். ‘உடலில் கதராடை உள்ளத்தில் கறுப்பு சிந்தனை' கொண்ட இராசு அண்ணனின் கொள்கைப் பிடிப்பையும் குணநலன்களையும் கட்டுரையாளர் பதிவு செய்திருப்பதைப் படிக்கும்போது வியப்பை தருகின்றன.

நவீன்குமார், நடுவிக்கோட்டை.

கேலிக்கூத்து

எந்தப் பொருள் மார்க்கெட்டில் அதிகம் விற்கிறதோ அதற்கு அசல் போலவே டூப்ளிகேட் தயாரித்து லாபம் பார்க்கும் மோசடித்தனத் தில் நம்மவர்கள் கில்லாடிகள். ரூபாய் நோட்டுக்கு தத்ரூபமாய் ஜெராக்ஸ் எடுப்பது போல! இந்த ஜெகஜால பிரதாபம் தொற்று நோயாக எல்லாத்துறைகளிலும் வியாபித்திருப்பதுதான் வேதனையான விபரீதம். சொந்த ஊரில் கர்நாடகம் முதல் சென்னை வந்து தனபால் மாஸ்டரிடம் மேற்கத்தியம் வரை கற்றதால் தான் இளையராஜா இசை ஞானியானார். ஆனால், இன்றைய இசையமைப்பாளர்கள் அந்நிய தேசத்து சி. டிக்களை தழுவி ஒட்டு வேலை செய்து பாடல்கள் தயாரிப்பது மேற் சொன்னது போன்ற மூர்மார்க்கெட்தனம் தானே!. இன்றைய இயக்குனர்களின் திரைக்கதையும், பட ஆக்கமும் இதே ரகமே! இந்த வரிசையில் இன்று அரசியலுமா! பெரியார், அண்ணா முதல் கலைஞர், எம். ஜிஆர், ஜெயலலிதா வரை சுய திறமையை நம்பித்தானே அரசியலில் வியூகம் அமைத்து வெற்றி பெற்றனர். பிரசாந்த் கிஷோரால் மோடி பிரதமரானதாக நினைத்து பலரும் அவரை நம்புவது அரசியல் கேலிக்கூத்து .

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

கூர்மையானது

தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு 2000க்குப்பிறகு எப்படி என்ற அலசல் அருமை என்பதைவிட கூர்மையானது! நுட்பமாக ஆய்ந்து திட்பமாகப் பரிமாறியதில் சிறுகதை வேந்தர்களுக்கு கூட நிலைகண்ணாடியானது தொகுப்பு! சிறந்தவழிகாட்டும் வகுப்பு என்றானது! உலகின் ஒவ்வொரு ஜீவன்களின் இசைவோடு இணைந்து எழும் சொற்களுக்கு காலத்திற்கேற்ற வகையில் விசாரணையாக்கும் விசனத்தைக்கூட வசனத்தில் படம் பிடித்துக்காட்டும் யுக்தி சக்தி மிக்கது என்பதை சிறுகதை அவதாரங்கள் அற்புதமாகப் படைத்து வாசக உலகிற்கு படையலிட்டு வருகிறார்கள்.

ஆர்ஜிபாலன், திசையன்விளை

உவகை மழை

சிறப்புப்பக்கங்களில் 'தேரோடும் வீதிகள்' என்ற தலைப்பில் தந்த விவரம் அந்திமழை இளங்கோவன் புண்ணியத்தில் வாசகர்களுக்கான வரம்! புத்தகம் இலக்கியம் என்றெல்லம் காசை வீணாக்குகிறாயே.. பழைய பேப்பர்கடைக்காரன்கூட விரும்பமாட்டான் என்றெல்லாம் ‘நெகட்டிவ்' அனுபவ வார்த்தைகளைக் கேட்காத இலக்கிய விரும்பிகளின் செவிகள் கிடையாது! தமிழ் சங்கங்கள் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளை அந்திமழை விரும்புவதை அறிந்தேன். தமிழன்னை பிரகாசிக்கும் தேரோடும் வீதிகளாக புத்தகங்களை பிரகாசிக்க வைப்போம் என்றெல்லாம் உணரவைத்து உவகை மழைக்கும் காரணமானது அந்திமழை!

ஆர் ஜே கல்யாணி, திசையன்விளை

உலுக்கிவிட்டார்!

சிறப்புப் பக்கங்களுக்கான முகவுரையே முத்தாய்ப்பான அழைப்பாக அமைந்து விடுவது அந்திமழையின் தனித்துவம். காலை நேரத் தென்றலின் மென்மையும் , மாலை நேரச் சாரலின் மென்மையும் ஒரு சேர, தேரோடும் வீதிகளில் பயணித்தேன். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யும் இலக்கிய அமைப்புகளின் விவரங்கள், சேவைகள் பற்றிய தொகுப்பு அருமை. அரசியல் பேசாத நாஞ்சில் சம்பத் என் நெஞ்சிற்கு மிகவும் பிடித்தமானவர். சிறப்புப் பக்கங்களை ஒருங்கமைத்த ஆசிரியர் குழுவின் அரிய உழைப்பிற்கு நன்றி. சாப்பாடு சிறுகதை மனமும் வயிறும் ஒரு சேர நிறைந்த நல்ல உணர்வைத் தந்தது. நீண்ட நாள் நினைவில் நிற்கும் அறுசுவை உணவு. ‘ அவர்கள் அவர்களே' தொடரில் விருத்தாசலம் கரிபால்டி இராசு அண்ணன் கட்டுரை கட்சிக் காக உழைப்பது எப்படி என்ற இலக்கண அரிச்சுவடி இதுபோல் அன்று பலர். ம்...கட்சி, கொள்கை என அர்ப்பணிப்புகள் இருந்த காலமது. பிரசாந்த் கிஷோர்... கார்ப்பரேட் அரசியல் சூத்திரதாரி உடன் பிறப்புகள் பலரை உலுக்கிவிட்டார் போலும் .

தஞ்சை என்.ஜே. கந்தமாறன், சென்னை

பயன்பாடு

எப்போது? 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெரியார் திடலில் நடந்த கி. வீரமணியின் சொற்பொழிவு கேட்க போயிருக்கிறேன். சரியாக மாலை 6.00 மணிக்கு ஆதாரம் காட்ட அடையாள அட்டை வைத்த தடித்த புத்தகங்களை சுமந்தபடி கி. வீரமணி ஆஜராகி பேசுவதை குறிப்பிட்ட ஒரு கூட்டமே தொடர்ந்து வந்து கேட்கும். 2019ல் சென்னை அசோக்நகர் நூலகத்தில் வாசக சாலை நடத்தும் கூட்டத்தையும் கவனித்திருக்கிறேன். புத்தகம் அல்லது பருவ இதழ் வாசித்துக் கொண்டிருப்போரை கவிதைப்பற்றி பேசப் போகிறோம், வந்து கேளுங்கள் என்று பவ்யமாக அழைக்க யாரும் அதை சட்டை பண்ணாமல் வாசித்துக்கொண்டிருக்க, வெளியிலிருந்து வரும் பத்துக்கும் குறைவானவர்கள், ஓரிரு கவிதை நூல்கள் குறித்து தங்களுக்குள் விவாதித்துவிட்டு விடைபெறுவதே சம்பிரதாயம். தமிழக மக்கள் தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் இன்று இலக்கிய ஈடுபாடு. இலக்கியம் பாமரனை எட்டுவது எப்படி ! அவனும் பயன்பாடு பெறுவது எப்போது! அதை யோசித்து செயல்படுத்துவதை 2020 புத்தாண்டு சபதமாக்குவோம்.

மல்லிகா அன்பழகன், சென்னை

ஏக்கம்

டைரக்டர் அதியன் ஆதிரையின் பேட்டி சூப்பர். அவரது படத்தைப்போலவே, பேட்டியும் மிகவும் வித்தியாசமாக உள்ளது! நன்றி! விருத்தாசலம் கரிபால்டி கட்டுரை படித்தேன், அவர் இறந்ததைப் படித்ததும் கண்ணீர் வந்தது. அவர் தலைவர் அல்ல! இவரைப்போல தங்கமான தொண்டர் தோன்றுவாரா எனும் ஏக்கமே எனக்கு ஏற்பட்டது.

முரளிதரன், மதுரை

ஜொலிப்பு

சமூக ‘வடு'க்களை கேமரா நடுங்காமல் நடுப்பக்கங்களில் நடவைத்து அழவைத்துவிட்டார் யாழினி! சென்னை அம்பேத்கார் நகர் வாழ்வியலை சேம்பிளாகத்தந்து யாழினி ஜொலிப்பதால் ‘ ஹம்பிள்' ஆக அவருக்குத் தெரிவிப்பது. 'வெல்டன் யாழினி! புரொசீட்!'

உமா, திசையன்விளை

மொழியின் நேசிப்பு

சூல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது என்ற செய்தியை வாசித்தி ருக்கிறேன். ஒரு நாவலுக்காக பத்து ஆண்டுகள் வேலை செய்திருப்பார் என்றெல்லாம் யோசித்ததுகூட கிடையாது. அந்திமழையில் வெளியான சோ. தர்மனின் பேட்டி ஒரு எழுத்தாளரின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்துள்ளது. ஒரு படைப்பாளியை குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானவர் என்று சித்திரிப்பதால் அவரது படைப்புகள் எளிதில் நிராகரிப்படுகிறது என்ற உண்மையை இந்த நேர்காணல் மூலம் தெரிந்துகொண்டேன். இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனரான ப.லட்சுமணனின் பேட்டி அருமை. அவரின் ஸ்டெல்லா அக்கா மனதில் நின்றுவிட்டார். ராசி அழகப்பன் எழுதிய ‘இப்படியாகத்தான் இலக்கியம்' கட்டுரை வியக்கவைக்கிறது. அவரின் அனுபவப் பகிர்தல் மூலம் மொழியை இப்படி எல்லாம் நேசிக்க முடியுமா என்று மேலும் வியக்க வைக்கிறார். நாஞ்சில் சம்பத்தின் மேடை ஆளுமை, அவர் பேசிய இலக்கியத் தலைப்புகள் அனைத்தும் பிரமிப்பை வரவழைத்தன. தமிழகம் எங்கும் மேடைகளில் இலக்கிய அமைப்புகளின் மூலமாக வீசிவரும் தமிழை இந்த இதழில் சுவாசிக்க முடிந்தது.

ஜெயஸ்ரீ, திருநெல்வேலி