கடிதங்கள்

சுகானுபவம்

Staff Writer

ஜனவரி 2018 அந்திமழை இதழ் வாசித்தேன். 19 எழுத்தாளர்கள், அவர்கள் குறிப்பிடும் வாசகர்கள், பல்வேறு சூழலில் ஏற்பட்ட ரசமான அனுபவங்கள் என சிறப்பாக வந்துள்ளது. பார்க்கிற நண்பர்களையெல்லாம் அந்திமழை வாங்கி வாசிக்கும்படி கேட்டுக்கொண்டேன். இப்படி ஒரு யோசனை தோன்றியது பாராட்டுக்குரிய நல்ல விஷயம்தான். எழுத்தாளர்களின் கட்டுரையை வாசித்த பின்பு கிடைத்த சுகானுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.   

இரா.ராஜேந்திரன், கடலூர்-1

பொக்கிஷம்

ஜனவரி 2018 அந்திமழை இதழை பொங்கல் சிறப்பிதழ் என்று சொல்வதைவிட எழுத்தாளர் சிறப்பிதழ் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். எழுத்தாளர்களை சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கும் அந்திமழை ஆசிரியர் குழுவினரைப் பாராட்டுகிறேன். பத்தொன்பது படைப்பாளிகளின் பன்முக அனுபவப்பகிர்வுகள் ஆழமானவை. தேர்ந்த வாசகர் களால் தங்களின் படைப்புகள் பாராட்டப்பட்டு நெகிழ்வான தருணங்களை நினைவு கூர்ந்து எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களுக்கு பெரு விருந்துதான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஞாபகமாக வைத்திருக்க சுஜாதாவின் முடியைப் பிடுங்கிய ஒருவர், கருத்துப்பூசல்களுக்கு இடமின்றி கனிந்த நட்பைப் பேணும் ஜெயமோகன், அறிமுகம் இல்லாத வாசகர்களுடன் ஏற்பட்ட சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சுகா, மணா, தேர்ந்த எழுத்தாளனை உருவாக்கும் வாசகத் தோழர்களின் உறவை உயர்த்தும் பாமரன், தாயைப்போன்ற வாசகி ஒருவரின் அன்பு மழையில் நனைந்த எஸ்.ரா, படைப்பாளிகளும் வாசகர்களே என்று நிறுவிய கலாப்ரியா, உண்மையான வாசகர் யார் என்பதை நயம்பட உரைத்த இமையம் என விரியும் எழுத்தாளர்களின் வாசகர் களைப்பற்றி மலர்ந்த நினைவுகள் இந்த இதழைப் பொக்கிஷமாக மாற்றிவிட்டன. 

நவீன்குமார், நடுவிக்கோட்டை.

நினைவு

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பேட்டி அருமை. கடைசி பக்கத் தில் வெளியாகியுள்ள அருவி திரைப்படம் பற்றிய விமர்சனம் சூப்பர். திரைவலம் பகுதி குறும்பும் சுவராஸ்யமும் கொண்ட பகுதியாக மாறிவிட்டது. எழுத்தாளர்களை வாசகர்களும், வாசகர்களை எழுத்தாளர்களும் நினைவு கூர்ந்தது சிறப்பாக இருந்தது.

அ.முரளிதரன், மதுரை-3

நெகிழ்ச்சி

பொங்கல் சிறப்பிதழ் தமிழக எழுத்தாளர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்திருக்கிறது. மனமார்ந்த பாராட்டுகள். எழுத்தாளர்கள் மனித ஆன்மாவைச் செப்பனிடும் என்ஜினியர்கள்'' என்ற மக்ஸிம் கார்க்கியின் கருத்துச் சிந்தனையை ஆழமாக எழுப்பியது உங்கள் சிறப்பிதழ். தமிழகத்தின் தற்போதைய பிரபல எழுத்தாளர்களின் அற்புதமான வாசகர்கள் பற்றிய பதிவுகள் ஒவ்வொன்றும் நெஞ்சை நெகிழச் செய்தன. குறிப்பாக எங்கள் ஊர் எழுத்தாளர் கிரைம் கதைகள் புகழ் ராஜேஷ்குமார் குறிப்பிட்ட வாசகர் உசேன், உளவியல் பாதிப்புக்குள்ளான மற்றொரு வாசகர் பற்றிய விவரங்கள் மனதை என்னமோ செய்தன. குக்கரில் வெந்த இலை என்னும் வாக்கியம் கொடுக்கும் அர்த்தம்தான் எவ்வளவு பெரியது? சூரியனின் செயல்திட்டத்தையும் கோடிட்டுக்காட்டியது அர்த்தமுள்ளது. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த கட்டுரை அது.

மனோகர், கோயம்புத்தூர் -14.

ஆசான்

குக்கரில் வெந்த இலை! சூரியனின் செயல் திட்டம் என்ன? என்று ஆர்.கே.நகரின் தேர்தல் முடிவு குறித்த கட்டுரை வரிகள் சூடும் சுவையுமாய் இருந்ததோடு, திமுகவின் எதிர்கால வெற்றிக்கான வியூகங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணர்த்திவிட்டன. 'கண்ணீராய் வழியும் கடல்' & ஓகி புயல் சோகம் உள்ளத்தை உலுக்கியது. அரசு இனி என்னதான் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு எதுவும் ஈடாகாது என்னும் யதார்த்தம் நெஞ்சை பாறைபோல் அழுத்துகிறது. திரைவலம் பகுதியில் அந்திமழை விமர்சனக் கருத்துகள் உள்ளன்போடு உரைத்த உண்மையின் பிரதிபலிப்பாக இருந்தது. குறைகளை சுட்டிக் காட்டுவதிலாகட்டும், நிறைகளை தட்டிக் கொடுப்பதிலாகட்டும் அந்திமழை ஒரு சிறந்த ஆசானாகவே செயல்படுகிறது .

கொ.சி.சேகர், பெங்களூரு.

அன்பு

எழுத்து ஒரு மனிதனை பண்படுத்துகிறது. எல்லா எழுத்தாளர்களும் தன் படைப்புகளின் வழியே அன்பை மட்டுமே விதைத்துச் செல்கிறார்கள். முகம் தெரியாத வாசகனை மதித்து அவனைப் பாராட்டி, அவன் அன்பை ஏற்றுக்கொண்டு அவனை வியந்த பல்வேறு எழுத்தாளர்களின் பண்பை என்னவென்று சொல்வது? வாசகனை அவர்கள் கொண்டாடிய விதம் பாராட்டக்கூடியது. சமூக அக்கறை நல்ல வாசகனுக்கு எப்போதும் உண்டு. எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமூகத்தில் இப்படிப்பட்ட வாசகர்களால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது கவர் ஸ்டோரி. தொடரட்டும் அந்திமழையின் பணி.

ஆர்.போகன், சேலம் -1

மண்?

பொங்கல் சிறப்பிதழில் பொங்கியதெல்லாம் எழுத்தாளர்களும், எழுத்தாளர்களின் மனங்களில் பொங்கிய வாசகர்களும்தான். ஆனால் பொங்கலன்று மண் சார்ந்த, மொழி சார்ந்த, மண்மணம் சார்ந்த, உழவு சார்ந்த மக்கள் சார்ந்த எதையும் நினைவுபடுத்தாத இதழாக அந்திமழை இருந்தது. கோடைகால வெப்பச் சலனங்களில் வெக்கையைத் துரத்தும் கானலாக நிறைந்தது அந்திமழை. கொஞ்சம் மனது வைத்து இதையெல்லாம் உள்ளடக்கிய இதழ் ஒன்றை கொண்டுவாருங்கள். இந்த ஜனவரி 2018 இதழை புத்தகத் திருவிழா இதழ் என அறிவித்திருக்கலாம். நன்றி.

விஷ்ணு.கே.பிரசாத், சென்னை - 78

முத்திரை

‘பாதுகாப்பு என்பது எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாப்பது மட்டுமல்ல, புயல், பூகம்பம் மாதிரியான பேரிடர்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதும்தான்' என்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸின் வார்த்தைகள் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாடமாகும். இழப்பீடுகள் மட்டுமே ஒரு மனிதனை நிரந்தரமாக தூக்கி நிறுத்திவிட முடியுமா என்ன? ‘கண்ணீராய் வழிந்த கடல்' கட்டுரையில் ஃபாதர் ஷைனிஸ் போஸ்கோவின் வார்த்தைகளில் சத்தியம் இருந்தது. சாகர் மாலா என்ற பெயரில் கடலோரம் துறைமுகங்களை அமைக்க பன்னாட்டு நிறுவனங்கள், எண்ணூரில் அதானி நிறுவனம் தொடங்கிய பின் எழுந்துள்ள பிரச்சினைகள் ஆகியவற்றின் பின்னால் இருக்கும் நிதர்சனமான முகம் அதிர்ச்சியளிக்கக்கூடியது. சொல்லப்போனால் உண்மையின் உரத்த குரலாக மீனவர்களின் குரல் பதிவாகியிருந்தது. ஒவ்வொரு இதழுக்குமான சிறப்புத் தலைப்புகளை எங்கிருந்துதான் தேடிப்பிடிக்கிறீர்களோ? இது தனித்துவ முத்திரை.

தஞ்சை.என்.ஜே.கந்தமாறன்,

 சென்னை-89.  

விருந்து

அந்திமழை எழுத்தாளர்& வாசகர் சிறப்பிதழில் நாஞ்சில் நாடன், மதன், இமையம் ஆகியோரின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. பெரு மலையைக் கண்டு இன்பநிலை எய்துகிற நாஞ்சில் நாடனின் வரிகளும், வாசகனின் வாசிப்பில்தான் ஒரு படைப்பு முழுமையாகிறது என்ற இமயத்தின் நெருப்பு போன்றதான வரிகளும், என் வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களை வாசகர்கள்தான் உருவாக்கினார்கள் என்ற கார்ட்டூனிஸ்ட் மதனின் மனம் திறந்த வார்த்தைகளும் அந்திமழையை அலங்கரித்தன. வழக்கம் போல சீரியசான விஷயங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்லும் சுகாவின் கட்டுரை சிரிப்பு மருந்து. 

மது நீலகண்டன்,

திருவண்ணாமலை.

கட்டாயம்

அந்திமழை ஜனவரி 2018 இதழில் சிறுகதை இல்லாத குறையை எழுத்தாளர், வாசகர் சிறப்பிதழ் கட்டுரைகள் போக்கி விட்டது. உண்மையில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு பெரும் பொக்கிஷம்  என்றே உறுதியாகச் சொல்ல முடியும்.  ‘கண்ணீராய் வழியும் கடல்' என்னும் கட்டுரை மீனவ மக்களின் துயரக் கதைகளில் ஒரு பகுதிதான். இன்னும் வெளிப்படாத பல துயரங்கள் அவர்களுக்கு உண்டு.  சிறுமி கோத்லூஃபாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேற மனம் பிரார்த்தனை செய்கிறது. 

கமல் ப்ரஸ்ன்னா, திருமுல்லைவாயில்.

 (கடந்த இதழில் வெளியான கண்ணீராய் வழியும் கடல் கட்டுரைக்கான புகைப்படங்களை எடுத்தவர் ராய்டன் லால், கிரிஸ்டல் ஸ்டூடியோ.)