எழுத்துலகின் பிரம்மாக்கள் அசோகமித்திரன், வண்ணதாசன், ஜெயமோகன், வண்ணநிலவன், பிரபஞ்சன், இமையம், அம்பை, கி.ராஜ நாராயணன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களைப் பற்றிப் படித்தபோது, மனக்கூட்டில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்தன. இன்று யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுவதுதான் இலக்கியமாய் போற்றப்படுகிறது. வருங்காலச் சந்ததிகளுக்கு எழுத்தாளர்கள் விட்டுச் செல்லும் சொத்து இலக்கியங்கள்தான். தம் கண் முன் காணும் நிகழ்வுகளை, தம்மைச்சுற்றி வாழ்வோரின் வாழ்வியலை எழுத்தாளர்கள் புதினமாய் படைக்கும்போது தான் அது படிப்போர் மனதில் இலக்கியமாய் இனிக்கிறது. அந்த வகையில் ‘‘ஜனவரி மாத'' அந்திமழை சிறப்பிதழ் இலக்கியச் சிறப்பிதழாக மிளிர்ந்துள்ளது. இந்த இதழைப்படித்தபோது பொங்கல் விருந்து சாப்பிட்டது போல் இருந்தது. நாக்கின் நுனியில் இருந்து அடிவயிறு வரை சுவை நிரம்பி வழிந்தது. மனமெல்லாம் மகிழ்ச்சியால் நிறைந்தது. குவலயம் உள்ள வரை அந்திமழை குறைவின்றி பொழியட்டும்.
-முனைவர் இராம.முத்துகுமரனார், கடலூர்.
அந்திமழை மாத இதழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அவர்கள் இணைந்து நடித்த 27 படங்களையும், தங்களின் இதழில் வெளியிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியினைத் தெரிவித்து கொண்டு, 27 படங்களையும் 27 நாட்கள் சென்று பார்த்த ஞாபகம் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அந்திமழை இதழில் புதுப்புது கருத்துகளையும், வாச கர்கள் விரும்பும் வண்ணம் மிளிர வைக்கிறீர்கள். அந்திமழை என்றென்றும் தமிழர்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒளிர உவகையுடன் வாழ்த்துகின்றேன்.
சந்திரமோகன், கடலூர்.
தமிழ்ப்படைப்பாளிகளை மிகவும் அருகில் கொண்டு வந்து காட்டியுள்ளன கட்டுரைகள். படைப்பின் வழியாகப் பார்ப்பதைவிடவும் அவர்களது பண்பு நலங்களை வாசகர்கள் அறியச் செய்ய இக்கட்டுரைகள் மிகவும் உதவும். பாரதிராஜாவின் எளிமை வியக்க வைக்கிறது.
சௌரிராஜன், ஸ்ரீரங்கம்.
சிறப்புப் பக்கங்களுக்காக அந்திமழைக்கு நன்றி. அவற்றில் அசோகமித்திரனைப் பற்றிய சுகுமாரனின் கட்டுரை -‘எளிமையின் உன்னதம்' மிளிர்ந்தது.சுப்ரபாரதிமணியனின் ‘கதை கதையாய் காரணங்கள்' சிறுகதை நெகிழ்த்திவிட்டது.
ஆ.கண்மணி, பெங்களூரு.
கி.ரா.தம்பதியரை தத்தெடுத்து பெற்றோராய் பாவிக்கும் நடிகர் சிவக்குமார் கூறிய தாத்தா& பேரன் கதை, படிக்க விறுவிறுப்பு. அது உண்மை என்று தெரிய திகைப்பு. மூத்தவர் சொல்லும், முற்றிய நெல்லிக்கனியும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும் என்ற பழமொழியை நினைவூட்டியது உண்மை. இது போன்றவை அறிவுக்கு சேர்க்கும் விருந்தான பெருமை. ‘‘பொக்கிஷம் - நன்மை விருட்ஷம்!''
சு.கௌரிபாய், பொன்னேரி
அந்த 27 சினிமாக்கள்; எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்த படங்களின் தொகுப்பு, கணிப்பு ‘கலாப்ரியா'வின் சிறப்பு. இதுவரை இவரின் கட்டுரை, கவிதைகளை படிக்கையில் இவர் ‘பெண்' என நினைத்தேன். ‘அந்திமழை' வாயிலாக, இளங்கோவன் - இவரை (கட்டுரை மூலம்) இனங்காட்டினார். அறிய முடிந்தது.
சு.நவீனா தாமு, திருவள்ளூர்.
2017 சென்னை புத்தகக் கண்காட்சிக்கான டீஸர் என்று அறிவிக்கப்படாமலேயே தொகுக்கப்பட்ட எழுத்தும் ஆளுமையும் எழுத்தாளர்கள் குறித்த ஷார்ட்(டாகுமெண்டரி) ஃபிலிம் என்றால் அவர்களின் நட்சத்திரப் புத்தகங்களின் பட்டியல் நல்ல தொரு கைடு. நன்றாகவே எடுபட்டது, எழுத்துச் சிறப்பிதழ்.
மல்லிகா அன்பழகன், சென்னை.
மறைந்த திமுக அமைச்சர் கோ.சி.மணிக்கு அஞ்சலி, நல்லதொரு அரசியல்வாதியை ஞாபகப்படுத்திய முயற்சி. கடைசி வரை ஊழல் குற்றச்சாட்டு இல்லாத, கட்சி மாறாத கோ.சி.மணியிடம் எங்கள் தாத்தா ஆறுமுக படையாட்சி உதவியாளராக இருந்த 1970களில் ஆடுதுறை வீட்டில் அவரது ஆளுமையைக் கண்டு வியந்ததுண்டு. இன்றைய அரசியலுக்கு நிறைய கோ.சி.மணிகள் வேண்டுமென உணர்த்தியது, அஞ்சலி கட்டுரை.
அ.யாழினி பர்வதம், சென்னை.
அந்திமழையின் சிறப்புப் பக்கங்கள் தூள்! உதாரணமாக அந்திமழை இளங்கோவனின் கட்டுரையை சொல்லலாம். எழுத்தும் ஆளுமையும் சூப்பர் பக்கங்கள். எழுத்தாளர்களை போற்றும் அந்திமழையை நாமும் போற்றுவோம்.
அ.முரளிதரன், மதுரை.
நேர்க்கோடு உணர்த்தும் மறைபொருள் சரியான எள்ளல். உண்மையும் அதுதான். புது அணுகுமுறை இறுதிகட்ட காய் நகர்த்தல்கள் சரியான ஆய்வுப் பார்வை. இதுவரை இருந்து வந்த இரு துருவ அரசியல் இனிமேலாகிலும் மாறட்டும். மனங்கள் மாறாத நிலையில் அத்தகைய புதிய அணுகுமுறைகளை இல்லாமையும், தள்ளாமையும்தான் இங்கு தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. நடக்கட்டும். அறம்பாடும்; பொருள் பேசும்; இன்பம் கொண்டாடும். வாய்ஸ் ஆப் வள்ளுவம் குழுவின் இந்த சேவை இலாபம் பார்க்காத அப்பழுக்கற்ற பிராண்ட் பிசினஸ். அந்திமழையில்தான் இது போன்று எவ்வளவு செறிவான சாரல்துளிகள்.
தஞ்சை என்.கே.கந்தமாறன், சென்னை.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியல்களம் மாறி இருக்கிறது. இந்த மாற்றம் நல்ல தொடக்கம். இது தொடருமேயானால் எதிர் காலத்திலும் அரசியல் கண்ணியம் காப்பாற்றப்படும். மறுபடியும் உணர்ச்சியாளரின் கரங்களிலே சிக்குமானால் அரசியல் மீண்டும் பன்றிகள் புரளும் சேறாகிவிடும்.
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.