அந்தி மழை அக்டோபர் 2020 இதழ், எழுத்தாளர் தி. ஜானகிராமனின் நூற்றாண்டை யொட்டி தி. ஜா. சிறப்பிதழாக மலர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் ஜப்பானிய பயணம் குறித்து எழுதி ஒரு பயண அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.அவரின் சிறுகதை ஒன்றையும் தற்போதைய வாசகர்கள் வாசிக்கத் தந்திருப்பது வரவேற்பிற்குரியது. பிரியத்திற்குரிய பாடகர் எஸ். பி. பி. அவர்களின் மரணம் உள்ளபடியே வருத்தத்துக் குரியதாகும். கொரானா எவ்வளவு கொடுமையானது என்பதையும் காட்டுகிறது. அவர் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர் முகம் மட்டுமே நினைவிற்கு வருகிறது. அவரின் பேரன்பின் குரலை ஒலிக்கச் செய்துள்ளார் கவிஞர் பழநிபாரதி.
பொன். குமார் (மின்னஞ்சல் வழியாக)
தி.ஜா 100 சிறப்பிதழ் பார்த்துப் பரவசமானேன். மானிடம் பேசிய அந்த மகத்தான மனிதனுக்கு சிறப்பான அஞ்சலியை, அந்திமழை பதிவு செய்திருக்கிறது. ஜானகிராமனின் கதைகள் வாசிக்கக் கிடைத்த வாசகர்கள் பாக்கியசாலிகள் என்கிறார், க.நா.சு. அந்திமழை மட்டுமென்ன, தமிழில் நெடிய வாசிப்புப் பழக்கமுள்ள நானும் வழிமொழிவதில் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன். ‘கும்பகோணம் போனவங்க, அங்கிருக்கும் வீட்டுக் கதவுகளைப் பார்த் திட்டு, பாபு இங்கதான் இருந்திருப்பானோ? என்ற நினைவாக இருப்பார்கள்.'' என்ற மனப்பிரமையை, முதுபெரும் எழுத்தாளர் கி.ரா. அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மாத இதழ்களில் இலக்கியம், பொருளியல், அரசியல், அறிவியல் சித்தாந்தங்க ளையும் தாங்கி, அழகிய தாளில் அச்சிடப்பட்டு பவனிவருகிறது அந்திமழை. இந்த அந்திமழையில் நீங்களும் நனைந்து மகிழுங்கள்! சேர வாரீர்! ஜெகத்தீரே! என உங்களை நான் அழைக்கிறேன்.
இராம. இலக்குமணன் திம்மராஜாம்பேட்டை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா சம்மதத்துடன் முதல்வரான ஓ.பி.எஸ், பா.ஜ.க&வின் கைப்பாவையானதால் சசிகலாவே முதல்வராக முயன்றபோது, கிடப்பில் கிடந்த தீர்ப்பை அமல்படுத்தி சிறைக்குத்தள்ளியது அரசியல் சூழ்ச்சி. இல்லாவிட் டால் சசிகலா தானே இன்றும் முதல்வர்! எது எப்படியோ, சிறைக்கு புறப்படும் முன்பு, அம்மா சமாதியில் அடித்து சத்தியம் செய்தாரே! அந்த சபதம் என்ன? அது எப்போது நிறைவேறும்? என்பது தான் விடுதலைக்கு பிறகான கிளைமாக்ஸ்.
அண்ணா அன்பழகன். அந்தணப்பேட்டை
எஸ்.பி.பி பற்றிய கட்டுரைகளைப் படிக்கப் படிக்க என்னை அறியாமல் அழுது விட்டேன். முட்டிக்கொள்ளும் சசிகலாவின் முன்னாள் சகாக்கள் கட்டுரை சூப்பர். கடைசி வரிகளை கொட்டை எழுத்தில் போட்டிருக்கலாம். காமிரா கண்கள் பக்கங்கள் ட்ரிபிள் சூப்பர் பக்கங்கள்.
அ. சந்திரலேகா, மதுரை
சோஷியல் டைலமா என்ற வலைதள ஆவணப் படம் நமக்கு உணர்த்தும் நீதி யாதெனில், சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுங்கள். கைபேசி திரை என்ற மாய உலகைத் தாண்டி உண்மையான உலகம் வெளியே இருக்கிறது. நமக்காக படைக்கப் பட்ட உலகத்தில் நமக்கான வாழ்க்கையை வாழுங்கள். அடடா, இதைத்தானே உச்ச நீதிமன்றம் முதல் உள்ளூர் சமூக ஆர்வலர் வரை உரக்கச் சொல்கிறார்கள். காதில் வாங்காமல் கைபேசிக்குள் புதைந்து, மன அழுத்தத்தையும், மனச் சிக்கல்களையும் உருவாக்கிக் கொண்டு தவிக்கலாமா! நாளிதழ்களையும் பருவ இதழ்களையும் புறக்கணித்த பாவத்திற்கு இது தான் தண்டனையென உணர வேண்டாமா? எப்போது திருந்தப் போகிறோம்!
மல்லிகா அன்பழகன், சென்னை - 78
எழுத்தாளர் மாலன் அவர்கள் தி.ஜானகிராமன் குறித்து எழுதிய கட்டுரையைப் படித்தேன். மிகச் சிறப்பாக, உணர்வோட்டத்துடன் அது எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சி. அதில் தி.ஜானகிராமன், மாலன் அவர்களுக்குக் கூறியிருந்த அனைத்து அறிவுரைகளையும் நான் அவர் எனக்குக் கூறியதாகவே கருதுகிறேன். இத்தகைய கட்டுரைகள் என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு மிகவும் ஊக்கம் தரத் தக்கவை. அந்த வகையில் வளரும் எழுத்தாளர்கள் அனைவருமே திரு. மாலன் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளனர். வளரும் எழுத்தாளர்கள் சார்பில் நான் ‘ஆசான்' திரு. தி.ஜானகிராமன் அவர்களை வணங்குகிறேன்.
ப.சரவணன், மதுரை
அன்றைய எழுத்தின் ஜாம்பவான் தி.ஜா.வின் 100 வது ஆண்டை நினைவூட்டி அவரது அருமையான படைப்புகளை இன்றைய தலைமுறைக்கு படம்பிடித்துக் காட்டிய விதம் மிக சிறப்பு. அவரது படைப்பின் மகிமையை இன்றைய மறுவாசிப்பின்போது உணரமுடிந்தது, அதேபோல பாடகர் பாடும் நிலா பாலு& அவர்கள் பற்றிய அருமையான பெருமையான தகவல்களையும் அரியதான படங்களையும் வெளியிட்டு அவரை கௌரவித்த விதம் பாராட்டுக்குரியதாகும்! பொதுவாக அந்திமழையின் ஒவ்வொரு பக்கமும் மிகுந்த கவனத்துடன் சிரத்தையுடன் ஆசிரியரின் கடின உழைப்பில் உருவாக்கம் செய்யப்படுவதுதான் அந்திமழைக்கே உள்ள தனிச் சிறப்பு!
கவி. கடல். நாகராஜன், கடலூர்
தி.ஜா.100 சிறப்பிதழின் 32 பக்கங்களும் முத்திரை பதித்த படைப்புகள். சுகுமாரனின் நித்தியப் புதுமையின் கலைஞன் என்ற தலைப்பே முழுமையாக அவரை உணர்த்தி விடும். மனித மனத்தின் இயல்பான பல குணங்களை மெல்லிய இழையில் ஊடாட விடும் எழுத்தாளுமை அவருக்கே உரிய தனித்திறன். பாஷாங்க ராகம் சிறுகதையையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் உரையாடலின் சிறு குறிப்பிலேயே அதன் முழு வீச்சையும் உணர்த்தி விடுவார். தி.ஜா. படைத்த பெண்ணுலகு என்ற சிறப்பிதழ் முகப்புக் கட்டுரையிலேயே அதை அழகாக இப்படிக் குறிப்பிட்டு விடுகிறார் நிறுவிய ஆசிரியர். தி.ஜா.வின் படைப்புகள் மனித மனங்களின் இண்டு இடுக்குகளைப் படம் பிடித்துக் காட்டுபவை - அதற்கு மேல் வேறென்ன சொல்ல..! நசிமாத்தா சிறுகதையில் துணையின் இழப்பிலிருந்து மீளமுடியாத இதயம், விரும்பிய மனிதனைக் கண்ட மகிழ்வில் மனநிறைவை மீட்ட விதத்தை நெஞ்சைத் தொடும் விதத்தில் அருமையாகச் சொல்லி இருந்தார், தாமிரா. பாராட்டுகள்!
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89
அக்டோபர் 2020 இதழ் ஒரே நேரத்தில் இலக்கிய ஆளுமை தி.ஜா மற்றும் இசை ஆளுமை எஸ்.பி.பி ஆகியோரின் சிறப்பிதழாக வெளிவந்து வாசகர்களுக்குப் பரவசத்தை கொடுத்தது. ‘‘பேரன்பின் குரலாக'' கடைசிவரை வாழ்ந்து மறைந்து விட்டார் நம் எஸ்.பி.பி. தன்னம்பிக்கையுடன் பாடி காற்றில் கலந்த அந்த இனிய கந்தர்வக் குரலை இனி எப்படி கேட்க முடியும்? இலக்கிய ஆளுமை தி.ஜா படைத்த பெண்ணுலகம் சார்ந்த சிறுகதைளும், நாவல்களும் மறக்க முடியாதவை. மனித நேயமும் அன்பும் கலந்த துணிச்சலான எழுத்து அவரின் தனித்த அடையாளம். தன் ஊர், அதன் மனிதர்கள், அவர்களின் குணநலன்கள் ஆகியவற்றை எழுத்தில் வார்ப்பதில் தேர்ந்த ஒரு சிற்பியின் லாகவம் அவரின் எழுத்தில் தென்படும். அதை படிக்கும்போது அந்த ஊர் நம் கண்முன் விரியும் அற்புதம் மூலமாக நம் மனதை வெல்லும் அவரது திறமை பளிச்சிடும்.
ஆர். மோகன், சேலம்
எஸ்.பி.பி - யின் நேர்காணல்கள், இசை நிகழ்ச்சிகளில் பேசியவை பல பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை எடுத்து தொகுத்து, மணம் வீசும் மலர் மாலையாகத் தந்து மகிழ்வூட்டிய அந்திமழை இளங்கோவனின், ‘இந்த ஜென்மம் போதாது' கட்டுரையும், ஏராளமான படங்களும் மிகவும் மனதைத் தொட்டது. ‘காலம் கொடுத்த கொடை' என பெரியவர்கள் கூறுவார்கள். தி.ஜானகிராமனின் நூற்றாண்டு விழாவினையொட்டி, அவரது பெருமையினை உலகம் முழுதும் அறிந்துகொள்ள, இக்கட்டுரைகள் பெரிதும் உதவும் என நம்புகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் எங்கள் கரம் பிடித்து அழைத்துக் கொண்டு ஜப்பான் நாட்டை முழுவதும் பார்க்க வைத்து விட்டாரே!
லயன் ஓ. முத்துகிருஷ்ணன், மதுரை