கடிதங்கள்

தனி முத்திரை

Staff Writer

மணா எழுதிய ‘அண்ணாவுக்கு  கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்' ! கட்டுரை வாசித்தேன். சிறப்பாக இருந்தது. லட்சிய நடிகர் வழங்கிய ஐம்பது பவுனில் இராஜாராம் அண்ணாவுக்கு வீடு வாங்கித்தந்தது என்பது உண்மையிலேயே சரித்திர நிகழ்வு. இலட்சிய நடிகரின் நடிப்புத்திறனும், தமிழ்மொழியை உச்சரித்த பாங்கும் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவை. நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், திராவிட இயக்க வளர்ச்சியிலும் தனி முத்திரை பதித்தவர் எஸ். எஸ். ஆ.ர்.

மோகனசுந்தரம், சென்னை.

செம தீனி செய்திகள்

தீபாவளியை பலகார திருவிழா என்று சொல்லலாம். எத்தனை காரம்,ஸ்வீட்ஸ்! அதையொட்டி பிரியாணி முதல் பிரண்டை வரை ( ஹோட்டல் அம்சவள்ளி பவன் உட்பட) 30 உணவுப் பக்கங்களை மூச்சு  முட்ட விமர்சித்து திக்கு முக்காட வைத்து விட்டீர்களே! செம தீனி செய்திகள்.  மலையாள கரையோரம் நல் முத்துக் களான திரைப் படங்களை சேகரித்து, அடையாளப் படுத்தி அப்படியான முற்போக்கு முயற்சிகள் ஒன்றிரண்டு தமிழிலும் வந்தாலும் அவற்றை வெற்றி பெற செய்யாமல் இப்படியான படங்களை எதிர்பார்ப்பது 'யார் தவறு!' என செம்மையாக குட்டியது எல்லோருக்கும் வலித்திருக்கும்.

யாழினி பர்வதம், சென்னை

காந்திய ஒளி

நல்லறமும் அன்பும், அகிம்சையும் இந்தியர்களின் ஆதார குணம் என்பதை காந்திதான்  அடையாளம்  காட்டினார். காந்தியை  புதிய கோணத்தில் அறிய வைத்து, நூற்று ஜம்பதாம் ஆண்டு அஞ்சலியை சரியாக செய்தது எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியை சுமப்பவர்கள்'

சிறுகதை. நெருக்கடி நிலை, பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் குண்டு வெடிப்பு, காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து என அரசியல் தடுமாறிய போதும் பாரதத்தின் ஐக்கியம் குலையாமலிருப்பதற்கு காந்தி ஒளி இன்னும் இந்தியாவை காக்கிறது என்றே அர்த்தமாகும்.

அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை

சிலிர்ப்பு

மாதப்பத்திரிகைகளில் அந்திமழை 'திரைவலம்' பகுதியில் பந்திவைப்பதில் வித்தியாசமாக முந்திவிடுகிறது. வாரந்தோறும் திரைப்படங்கள் படை எடுப்பதால் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு மாதம் என்ற கணக்கில் தரும் விமர்சனத் தொகுப்பு நம்மை சிலிர்ப்பாக்கிவிடுகிறது!

விநாயகராமன், திசையன்விளை  

கண்ணீர்

 'தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் விஜயலட்சுமி' கட்டுரையைப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தாலும் அவரது உறுதி, துணிவு, தன்னம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது. அதோடு சோதனையான நேரங்களில் துவண்டு போகக் கூடாது என்ற உறுதியையும் நம்மிடம் ஏற்படுத்துகிறது. அவர் இன்னும் வளர மனமார வாழ்த்துகிறேன்.

பிருந்தா இரமணி, மதுரை

சுவை

' உணவே உயிரே' என்று தரப்பட்ட சிறப்புப்பக்கங்கள் 'உணர்வே உணர்வே' என்று சுவை விரும்புவோர் அனைவரையும் ஈர்த்ததால் நவஅயிட்டங்களையும் கவனிக்கவைத்தது!

ஒன்பது அயிட்டங்களுக்கு இருப்பதியொரு பக்கங்களை ஒதுக்கி சுவைக்க வைத்த விதத்தில் எல்லா இதழ்களையும் விட 'கிச்சன்' அமைப்பதில் அந்திமழை 'அச்சா' என்று அப்ளாஸ் கொட்ட வைத்து விட்டீர்கள்! கங்ராட்ஸ்!

மணிமாறன், இடையன்குடி

மகிழ்ச்சி

காமிரா கண்கள் - பி.வெங்கட்ராமன்  பேட்டியும் படங்களும் சூப்பர். அவரைக்கண்டு  ராஜா மகிழ்ந்தது போல் அவரது படங்களை கண்டு நான் மகிழ்ந்தேன்.

முரளிதரன், மதுரை

நிறைவான கட்டுரை

காளிமுத்து அவர்களின் ஆகச் சிறந்த திறமைகளையும், ஆற்றல்களையும் அறியத்தந்திருக்கிறது 'அவர்கள் அவர்களே' தொடர். மூளை மூலமாகப் படிக்கக் கூடாது, இதயம் மூலமாகப் படிக்க வேண்டும். உப்புமூட்டையை எடுத்துப்போனால் விற்கலாம், அழுக்கு மூட்டையை எடுத்துப்போனால் விற்க முடியாது. தேசியத்தீயை மிதித்து வளர்ந்தது திராவிட இயக்கம், அதனால் எந்தக் கரையானும் அரிக்க முடியாது போன்ற காளிமுத்து உதிர்த்த சுந்தரத் தமிழ் சொற்சித்திரங்களால் கட்டுரையை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் திருமாவேலன்.

உணவே உயிரே பக்கங்களில் இடம்  பெற்றிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் அறுசுவை உண்டியை வயிறு முட்டச்சாப்பிட்ட திருப்தியை அளித்தன.

நவீன் குமார், நடுவிக்கோட்டை

ரசனை ஊற்று

 

'கன்னித் தமிழும் உண்டு..கத்தித்தமிழும் உண்டு ' அவரது' தலையையும் கண்டு ஆஹா...இந்த ' சொற்குண்டு' ' கற்கண்டு' ஆச்சே... நிச்சயம் இலக்கியத் தீனியாகத்தானிருக்கும் என்று நான்கு பக்கங்களிலும் நன்றாகவே உலாவந்தேன்! முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் ' காளிமுத்து' என்பதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசனை ஊற்றுப் பெருக்கெடுத்தது!

கூடவே மாகாபாரத கதாபாத்திரங்களை இத்தனை காலத்திற்குப் பின்னும் காளிமுத்து பாஷையில் ரசிக்க வைக்க காரணம் என்ன என்ற சிந்தனையும் வர , கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழார் என்று முழங்கியவரை நினைத்துப் பார்க்கத்தான் இத்தனை மெனக்கெட்டுள்ளீர்களோ...என்று தோன்ற மனசுவெட்கப்பட்டது!

ஆர்ஜிபாலன் , திசையன்விளை

தாயின் மாண்பு

மாதாமாதம் மணா அவர்களது கட்டுரையில் தமிழ்ச் சமூதாயம் மறந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் எடுத்துக் கூறி எங்களைப் போன்றவர்களை திக்குமுக்காட வைக்கிறார். எண்பத்து ஏழாம் வயதில் நடைபயின்றுகொண்டிருக்கும் நான் அவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் உண்மை இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். 'மணா' விற்கு எனது பாரட்டுகள்.

அ. முத்துலிங்கம் அவர்களது கட்டுரையில்  '' கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்'' என்ற திருக்குறளின் மேன்மையை எடுத்துச் சொல்லும் கதையே என் மனதில் ஆழப்பதிந்தது. உலகத்தில் பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறு மாதிரி இருப்பார்கள். தாய்மார்கள் எல்லாரும் ஒன்றுதான். நான் மட்டுமல்ல இந்த உலகமே ஒப்புக்கொள்ளும்.

முத்துகிருஷ்ணன், மதுரை

பயனுள்ளவை!

அந்திமழை திபாவளி சிறப்பிதழில் வெளியான ப. திருமாவேலன் எழுதிய கன்னித்தமிழும் உண்டு கத்தி தமிழும் உண்டு என்னும் முன்னாள் அமைச்சர்
காளிமுத்துவைப் பற்றிய கட்டுரை அதி அற்புதம்.

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் விஜயலட்சுமி என்னும் எழுத்தோவியம் உண்மையாக மிகவும் அருமை. விஜயலட்சுமியின் தன்னம்பிக்கை என்னை வியக்கமட்டும் அல்ல மலைக்கவும் வைத்தது. ''அண்ணாவுக்குத் கொடுத்த 50 பவுன் தங்கம்', எஸ். எஸ். ஆர் பற்றிய மணாவின் கட்டுரை வெகு சிறப்பு. அ. முத்துலிங்கத்தின் ஆட்டுச் செவி கட்டுரை பிரமாதம். 'உலகின் மிகவும் சுவையான மீன்', ' மிஷ்கின்  சாப்பிட்ட மீன் குழம்பு' ஆகிய கட்டுரைகள் மிகவும்  பயனுள்ளனவை.

சங்கரபாண்டியன் , சென்னை

யதார்த்தம்

 உணவே உயிரே& கட்டுரை அனைத்தும் சிறப்பு. நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவர் பேட்டி ரொம்ப சிறப்பு. யதார்த்தத்தை  அப்படியே பிரதிபலித்துள்ளார். அவர் உணவு வைத்தியம் 78 வயதான எனக்கு ரொம்ப பொருந்துகிறது.

சண்முகவேல், கீழ்க்கலங்கல்

கைகூப்புகிறேன்

'தன்னம்பிக்கைக்கு இன்னொருபெயர் விஜயலட்சுமி' மிகச் சிறப்பாக இருந்தது. பெற்றோரை எதிர்த்து திருமணம். ஸ்டீபனும் விஜயலட்சுமியும்
சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற்றம் காண்பது அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனது கணவன் மரணத்தையும் தாங்கிக்கொண்டு  கோவலன் குற்றமற்றவன் என நிரூபணம் செய்த கண்ணகியின் வழியில் வந்த விஜயலட்சுமியின் தன்னம்பிக்கைக்கு கை கூப்பி வணங்குகிறேன்.

இலக்குமணன், காஞ்சிபுரம்

மீன் குழம்பு நினைவுகள்

உணவே உயிரே & உயர்வான கட்டுரை படித்தேன். 
அ. முத்துலிங்கத்தின் தாய் அந்திமழை வாசகர்களின்
நெஞ்சத்தை நிறைத்திருக்கிறார்.

மிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு அரைத்து வைத்து மண்சட்டியில் மீன் உடையாமல் வெந்து போவது... எந்தச் சமையலாக இருந்தாலும் அக்கறையுடனும் அன்புடனும் சமைக்க வேண்டும் & என்ற ஷாஜியின் கருத்து உயர்வானது.

பஞ்சலிங்கம், திருப்பூர்

அகிம்சைவாதி

காந்தியைச் சுமப்பவர்கள் மூலம் 150 ஆண்டுகளுக்கு பின்னும் காந்தியின் தேவை இந்தியாவிற்கு அவசியமானது என்பதை உணர்த்திவிட்டார். எஸ். ரா..
' என் வாழ்க்கையே என் செய்தி' என்று சொல்லும் துணிச்சல் மிக்க அகிம்சைவாதி யாரும் தற்போது இல்லை.

மோகன், சேலம்