கடிதங்கள்

ஆழமான இதழ்

Staff Writer

‘‘மொழியைக் கொலை செய்வது எப்படி?''  என்ற கட்டுரை ஆழமானதும் அழுத்தமானதுமாகும்.  இந்த இதழில் வெளிவந்த அத்தனை கட்டுரைகளும் அருமையானவை, ஆழமானவை.  ''ஒரு மொழி வளர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்'' என்ற அறிஞர்களின் கருத்துகள், கட்டுரைகளுக்கு அணி சேர்க்கின்றன. ‘‘மொழிகள் குறைவாக இருப்பதால் யாருக்கு லாபம்? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு லாபம், மக்களுக்கு அல்ல.'' என்ற இளங்கோவனின் கருத்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது.  ‘‘தனது மொழியின் மேல் காதல் கொண்டு வளர்க்க பற்றோடு பாடுபடும் அத்துணை பேருக்கும் மொழி காலங்காலமாக எப்படி அழிக்கப்-படுகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளது முற்றிலும் ஏற்புடையது.

கி. தனவேல் இ.ஆ.ப (ஓய்வு)

சென்னை - 37.

பெருமிதம்

அந்திமழை,   தமிழில் உள்ள தரமான இதழ்களில் ஒன்றாக இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த அக்டோபர் மாத இதழில் 38 பக்கங்களுக்கு,   மொழி அழிவு தொடர்பான கட்டுரைகளும் நேர்காணல்களும் இடம்பெற்றிருப்பது அறிந்து& மொழிஅழிவு என்னும் மொழியியல் பிரிவில்  நாட்டம் கொண்டுள்ளவன் என்னும் முறையில் மகிழ்கிறேன்; பெருமிதம் கொள்கிறேன்.

மொழிகளின் மனிதர் என்னும் தலைப்பில் பேரா. கணேஷ்தேவி அவர்களைப்பற்றி  மொழி &குறிப்பாக  நலிவுற்றநிலையில் உள்ள பழங்குடிமொழிகளுக்கு அங்கீகாரம் கிடைகப்பதற்காகப் போராடி வரும் போராளி&  என்னும் முறையில்  பல தகவல்களை,  முதன்முறையாகத்  தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளும்  வகையில்   சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்.

கணேஷ் தேவி அவர்களின் பெயர் தவறுதலாக கணேஷ் டேவி என்று வெளியாகிவிட்டது. முடிந்தால் திருத்தம்  வெளியிடலாம்.

வ.ஞானசுந்தரம்

(மின்னஞ்சல் வழியாக)

இனிமை

அந்திமழை இதழில் மொழிகள் குறித்த சிறப்புப் பக்கங்கள் மிக முக்கியமானவை. நான் பணிபுரியும் உடுப்பியில் பேசப்படும் துளு மொழிக்கு வரி வடிவமில்லை என்கிறார்கள். ஆனால் துளு பேச்சு மொழியில் தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய சொற்கள் கலந்து இருப்பது இனிமை! அதே நேரம் அலுவல் மொழியான கன்னடம் துளுவை தின்றுவிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது. அத்தகைய அச்சத்தை இந்தியிடம் தாய் மொழியை இழந்த பீகாரிகள் கட்டுரை உருவாக்கியது.

''வம்சி'' யின் காமிராக் கவிதைகளுக்கொரு பூச்செண்டு! பதினாறு அடி பாயும் குட்டி!

அன்பாதவன், விழுப்புரம்           

தணிந்த ஆதங்கம்

அக்டோபர் 2018 அந்திமழை படித்தேன். திரைப்படம் என் தந்தையின் கனவு. மேற்கு தொடர்ச்சிமலை படம் எடுத்த தற்காக அவரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டுமென்ற ''ஆதங்கத்தை'' அந்திமழை தனித்தது. அப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் உயிர்ப்புடன் இருக்கிறது. என் வீட்டுத் திண்ணையில் இருந்து பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை கம்பீரமாக தெரிகிறது.

எஸ்.பஞ்சலிங்கம் திருப்பூர்

நிறைவு

மொழி தொடர்பான ஆசிரியரின் கருத்து, மற்ற ஆளுமைகளின் ஆலோசனைகள், புதிய பார்வையில் மொழியை வளர்க்கும் வழிகள் என விவரித்தது கவர் ஸ்டோரி. ''ஏழைக்கு எழுத்தறிவித்தல்‘‘ பணியினை சிறப்பாக செய்யும் வானதியின் பணி வியக்க வைக்கிறது. கல்வியை உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்.

பாரதிராஜாவின் பேட்டி நிறைவாக இருந்தது. நல்ல உரையாடல். செறிவான தீர்க்கமான பதில்கள். சமரசமில்லாத கலைஞன் பாரதிராஜா என்பதில் சந்தேகமே இல்லை.

ஆர்.மோகன், சேலம்

ஆவணம்

அக்டோபர் 2018 இதழில் சிறப்புப் பக்கங்களாக விரிந்திருக்கிற ‘‘மொழி வளர'' கருத்துக் கணிப்புக்கள் அத்துணையும் ஆவணமே! சமூக மாற்றத்தை உண்டு பண்ண விழிப்புணர்வு தர களம் காணும் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளோ ஆங்கில கலப்பின்றி தமிழை உச்சரிக்கவோ, எழுதவோ முடியவில்லை என்பது அவலம். மொழியை வளர்த்தெடுக்க தொடக்கக்கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி வரை தாய் மொழியிலேயே கற்பிக்க ஆவன செய்வது அவசியம். காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

விழிப்பு

ஒரு இனத்தின் உயிர்துடிப்பே அது பேசும் மொழிதான். தாய் மொழியை இழந்த சமுதாயம் தன் வேர்களை இழந்து, தன் அடையாளத்தையும் இழந்து இறுதியில் அழிந்தே போகும்! ஆனால் தமிழ்ச் சமுதாயம் எத்தனையோ

சோதனைகளை சந்தித்த பின்னரும், எதிர்ப்புக்களை புறந்தள்ளி, செழித்து வளர்வதற்கு காரணம் என்ன? தனது பண்பாட்டுச்

செல்வங்களை, மொழியை அழிந்து விடாமல் அடுத்த சந்ததிக்கும் வழங்க வேண்டுமென்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றுக் கடமை என்பதை தமிழ் சமுதாயம் உணர்ந்து கொண்டு விழிப்படைந்ததின் விளைவு தானே தவிர வேறில்லை! நெய்வேலி க. தியாகராசன் கொரநாட்டுக்கருப்பூர்

நல்ல தலைப்பு

மொழியை கொலை செய்வது எப்படி தலைப்பு நல்ல தலைப்பு. ஒரு மனிதன் தன்னுடைய தாயின் மொழியைத்தான் உயிராக போற்றவேண்டும். அதே நேரம் அடுத்த மொழிகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். மொழியை சீண்டுவதென்பது ஒரு அறியாத்தனம்.

சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

ஒரே இதழில்

அக்டோபர் 2018 அந்திமழை இதழ் அரியதொரு ஆவணம். மொழிகள் என்னும் தலைப்பிலான

சிறப்புப்பக்கங்கள் இந்தியினால் காவு கொள்ளப்படும் வட இந்திய மொழிகளை விவாதிக்கும் போது, தமிழினால் தமிழகப் பழங்குடியினரின் மொழிகள் அழியும் நிலையில் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. கணேஷ் தேவி மற்றும் வி.ஞானசுந்தரத்தின் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள். அது போலவே திரைத்துறை சார்ந்து இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் லெனின் பாரதியின் நேர்காணல்கள். திருமாவளவன் பத்திரிகையாளர் சின்ன குத்தூசியின் ஆளுமையினை அழுத்தமாகவும், நுட்பமாகவும் சித்தரித்துள்ளார். கவிஞர் லாவண்யா சுந்தர்ராஜனின்

சிறுகதையும் நல்ல பங்களிப்பே. ஒரு வருடத்தில் அடுத்தடுத்து வெளியிட வேண்டியவை, ஒரே இதழில் சேர்ந்து கொண்டிருப்பது போன்றிருந்தது.

சா.தேவதாஸ். இராசபாளையம்

சிறப்பு

 ஏழை அளியவர்களுக்கு கல்வி கற்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்ற வானளவு விரிந்த கனவைச் செயல்படுத்திவரும் கோவை வானதி பற்றிய பதிவு பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

 சின்னக் குத்தூசி பற்றிய திருமாவேலன் கட்டுரை சுருக்கமாக இருந்தாலும் மிக சிறப்பாக இருந்தது. பொருளையோ புகழையோ கருதாது சமூக முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பிறர்க்குரியவர்களாக வாழும் இவர்கள் போன்றோரே சமூகத்தின் அடித்தளமாகும்.

'மொழிகளின் மனிதர் குஜராத்தை சேர்ந்த திரு.கணேஷ் தேவியிடம் கண்ட நேர்காணல் மிகச்

சிறப்பாக இருந்தது. வாழ்க்கை பூராவும் அலைந்து திரிந்து (உ.வே.சா வைப் போல) அவர் கண்டடைந்த மொழிகள் பற்றிய கருத்துக்கள் அனைவரின் கவனத்திற்கும் உரியன. தமிழின் தனித்தன்மையான உயர் சிறப்புப் பற்றியும் தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள வேறுபாட்டையும் நடுநிலையோடு கூறியுள்ளார். தமிழ் / வடமொழி குறித்த ஒரு தனிக் கட்டுரையை அவரிடமிருந்து கேட்டுப் பெற்று வெளியிட்டால் மிகப் பலருடைய கவனத்தையும் பெற வாய்ப்புண்டு.

ச.பூங்குன்றன். ஈரோடு

 அதம் கதம்!

 தேசிய விருது தேர்வுக்குச்

சென்று ஏமாந்த படமா மேற்கு தொடர்ச்சிமலை? லிங்கத்தை தோளில் தூக்கியவருக்கு கிடைத்த தேசிய விருது, ஏலக்காய் மூட்டையை தூக்கியவருக்கு கிடைக்க வில்லை என்ற இயக்குநர் லெனின் பாரதியின் வலி. பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் தமிழ் சினிமா நம் கலாச்

சாரத்தை தொலைத்து விடுமோ என்ற பாரதிராஜாவின் கிலி. மொழிகள் குறித்த திறனாய்வு பக்கங்கள் பிரசுரமாகி, மெட்ராஸ் பாஷைக்கும் வக்காலத்து வாங்கியது, நம் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விகடனிலிருந்து தொலைந்து போன ப.திருமாவேலனை எங்கே காணோம் என்று தேடினால்,  ''அவர்கள் அவர்களே''! என்று அந்திமழையில் வந்து குந்தி விட்டாரே! வாசிக்க,

யோசிக்க, நேசிக்க, ப.திருமாவேலன் எழுத்துக்களில் இனி மாதா மாதம், 'அதம் கதம்' தான்.

அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை.

நவம்பர், 2018.