கடிதங்கள்

மகிழ்ச்சி மனதுக்குள்

Staff Writer

‘வலி' சிறுகதை பெண்களின் வலியின் அடித்தளத்தை தொட்ட பார்வை. வெளியில் நியாயங்களைத் தேடித் தந்த தலைவர்கள் கூட தங்கள் வீட்டுப் பெண்களின் நியாயத்திற்கான குரலைக் கண்டு கொள்ளாமல் இருந்ததை வரலாறு சொல்கிறது. அதைச் சரியாக தன் எழுத்தில் மையப்படுத்தியுள்ளார். காவேரி குழுமத் தலைவருடனான நேர்காணலின் நிறைவு வரிகள் மனதுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. மகிச்சி என்பது வெளியில் தேடுவது அல்ல, மனதுக்குள் இருப்பது என்று உணர்ந்துகொள்ளுங்கள் என்றார் தாமஸ் ஜெபர்சன். அந்திமழையின் மகிழ்ச்சி மட்டும் இதழ் அதற்கு உதாரணமாக இருக்கும்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.

மகிழ்ச்சி

இசை அமைப்பாளர் அருள்முருகன் அரோல் கொரோலி ஆன கதை அற்புதம். குணச் சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இதுவரை கிளிசரின் போட்ட தில்லை என்பது வியப்பின் உச்சம். இன்னும் இன்னும் அவரின் சாதனைகள் தொடரட்டும். எதையும் எளிதாய் ஏற்றுக்கொண்டு அதனினும் மகிழ்ச்சியைக் காண்பதுதான் வாழ்க்கையின் மகிழ்ச்சி. அந்திமழை இளங்கோவனின் மகிழ வைக்கும் கட்டுரை மகிழம்பூவாய் மணம் வீசுகிறது. முதலில் நமக்கு என்ன பிடிக்குமோ அதைப் பிடியுங்கள். வாழ்வில் பிடிப்பு உண்டாகும் என்ற சுஜாதாவின் எண்ணப்படி நாம் நடந்தால் வாழ்வு வண்ணமயமாக இருக்கும் என்பதுதான் உண்மையாகும். மன அழுத்தத்தை இவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதைப் படிக்கும் போதே மன அழுத்தம் என்னை விட்டு பறந்தோடிப்போய் விட்டது. இன்றைய தினத்தை ரசித்து வாழ்வதுதான் மன அழுத்தத்தைப் போக்கும் முக்கிய வழி. அற்புதமான வைர வரிகள். அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே உளவியலை உள்ளது உள்ளபடி உணர்த்தும் மகத்தான கட்டுரை. முத்தான கட்டுரைகளை முத்தாரமாய்க் கோர்த்துத் தந்துள்ள அந்திமழை இதழினைப் படித்தபோது தீபாவளிப் பண்டிகை தந்த இன்பத்தை விடவும் பன்மடங்கு இன்பத்தைப் பெற்று மகிழ்ந்தேன்.

முனைவர். ராம . முத்துக்குமரனார். கடலூர் - 607 003.

வழிகாட்டுதல்

தீபாவளி சிறப்பிதழ் மகிழ்ச்சி மட்டும் நிறைவான சரவெடியாக இருந்தது. மகிழ்ச்சி மட்டும் தலைப்பிலான கட்டுரையில் ஜென் துறவியின் கதை அருமை. அற்புதம். பகிர்ந்தமைக்கு அந்திமழை இளங்கோவன் அவர்களுக்கு நன்றி. சுஜாதா ஏன் அப்படிச் செய்தார் கட்டுரையில் நாம் பின்பற்ற வேண்டிய பல உண்மைகள் பொதிந்துள்ளன. சொற்களின் அடுப்பில் எரியும் துக்கம் தலைப்பிலான கட்டுரை அபாரமான வழிகாட்டுதல். எப்படிச் சமாளிக்கிறார்கள் எனும் கட்டுரை ஏராளமான தகவல்களைச் சொன்னது. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும் கட்டுரை அமைதி என்பது அவரவர் கையில்தான் உள்ளது என்று அழகாக நமக்கு உணர்த்தியது.

எஸ்.ஸ்நேகா ஸ்யாம், ஆவடி.

நம்பிக்கை

இசையமைப்பாளர் அருள்முருகன் ஸாரி அரோல் கொரோலியின் பேட்டி அவரது தன்னம்பிக்கையைக் காட்டியது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே முன்னேற முடியும் என்பதைப் பறை சாற்றியது. யாருக்குப் பாதிப்பு & கட்டுரை சூப்பர். கடைசி ஐந்து வரிகள் பிரமாதம். பெரிய எழுத்துக் களில் போட்டிருக்கலாம். மகிழ்ச்சி மட்டும் என்னும் அந்திமழை இளங்கோவனின் கட்டுரை பல உண்மைகளைத் தொட்டுக்காட்டியது.

அ.முரளிதரன் , மதுரை - 3

கடிவாளம்

கொள்கை அடிப்படையில் இயங்கும் அரசியல் கட்சிக்கும் வெறுப்பினால் துவக்கப்பட்ட கட்சிக்குமிடையே மிகுந்த வேறுபாடு உண்டு. வெறுப்பினால் துவக்கப்பட்ட கட்சியில் வெளிப்படைத்தன்மையைக் காண முடியாது. இதற்கு அதிமுகவே சிறந்த எடுத்துக்காட்டு. எம்ஜிஆர் திமுகவில் பயிற்சி பெற்ற காரணத்தினால் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தினார். ஜெயலலிதா எல்லாம் நானே என்று அமைச்சர்களையெல்லாம் ஆட்டிப்படைத்ததினால், தலையாட்டி அமைச்சர் களை வைத்துக்கொண்டு ஓரளவு சமாளித்தார். அவரது மறைவிற்குப்பின் இன்று கட்சி கடிவாளமில்லாத குதிரையாகிவிட்டது. ஜெவின் சாவிலே இருக்கிற மர்மங்களைக் கூட அறிந்துகொள்ள முடியவில்லை. கட்சியின் பெயரையும் இழந்து சின்னத்தையும் இழந்து இன்று உடைந்த கண்ணாடியாகக் காட்சி அளிக்கிறது.

நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

விளக்கவில்லை!

அட்டைப்படம் மெர்சலாக்கியது. எம்.எஸ்.பாஸ்கரின் நேர்காணல் அருமை. அவர் மாமனிதர் என்பதை உணர்த்தியது. முத்தம் கொடுப்பதற்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும் என்னும் தலைப்பில் அராத்து அவர்களின் கட்டுரை விழிப்பை ஏற்படுத்தினாலும் அது எப்படிப்பட்ட முத்தம் என்று அராத்து விளக்கவில்லை. மனைவியைத் தவிர்த்து கணவனுக்கும் வேண்டாம், கணவனைத் தவிர்த்து மனைவிக்கும் வேண்டாம் கொஞ்சம் கிளுகிளுப்பு& இது தவறான வழிகாட்டுதல் அல்லவா? எண்டம்மே ஜிமிக்கி கம்மல் எனும் தலைப்புக் கட்டுரை நெத்தியடி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பட்டிமன்றத்தில் இந்த பாடல் பற்றி ஒரு சகோதரி வாதிட்டார். தவறான தூண்டுதலுக்கு வரிகளில் வன்முறை ஆபாசம் என்று, அப்படித்தான் இந்தக் கட்டுரையும் திரும்புமோ என்று சற்று பயந்தேன். ஆனால் அப்படியல்ல என்று முழு கட்டுரையும் படித்து முடித்தவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி அந்திமழைக்கு!

ஹேமமாலினி, சென்னை.

அழுத்தம்

அந்திமழை அக்டோபர் இதழ் தீபாவளி சிறப்பிதழாக 'மகிழ்ச்சி மட்டும்' என்ற தலைப்பில் உருவாக்கியதற்குப் பாராட்டுகள். இன்று பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தில் வாழ்வின் மகத்துவத்தை அறியாதிருப்பது வேதனை அளிக்கிறது. அப்படிப்பட்டவர்களை மகிழ்ச்சியாக இருக்கப் பல பிரபலங்களின் ஆலோசனைகளை விளக்கி ஊக்குவித்த நற்பணிக்கு நல்வாழ்த்துகள். தீவிர சிந்தனை பேராசை, ஒப்பிட்டுப் பார்த்தல், தாழ்வு மனப்பான்மை போன்றவை மக்களின் மன அழுத்தத்திற்கான காரணங்கள். எங்கும் சிவப்புக் கம்பள வரவேற்பும், புகழ்ச்சி பாராட்டும் தொடர் வெற்றிகளும் மக்களுக்குக் கிடைக்காமல் போகலாம். அதற்காக மனம் உடைந்து போனால் எப்படி? முயற்சி திருவினையாக்கும், தோல்விகளே வெற்றிக்கான படிகள், கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்ற மந்திர வார்த்தைகள் நம் நிறைவான வாழ்க்ø கக்கு வழிகாட்டக் காத்திருக்கும் போது கவலை, மன அழுத்தம் அழுகை அவசியமே இல்லை. வாழ்வது ஒரு முறை. அதனை வேதனையோடு வாழாமல் மகிழ்ச்சி மட்டும் என்று வாழ்ந்து பிறரையும் மகிழ்வித்தல் பேரின்ப வாழ்வாகும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14

கனமானது

மகிழ்ச்சி மட்டும் சிறப்பிதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கட்டுரை கனமாக இருந்தது. மனிதர்கள் தங்கள் தனிமையிலிருந்தும் வெறுமையிலிருந்தும் விடுபடுவதற்கான எளிய வழிகளை அந்தக்கட்டுரை சுட்டிக் காட்டியது. மன அழுத்தத்தை கையாளும் வழிகளை துல்லியத்துடனும் சரளமாகவும் விவரித்தது. நகர்ப்புற மனிதர்களின் வாழ்க்கையில் கார்ப்ரேட் சாமியார்களின் அவசியம் எழுவதற்கான காரணத்தையும் தெளிவாக முன்வைத்தது. சொல்கிறேன் அதனால் இருக்கிறேன் என்கிற வாசகத்தை அவரவர் தொழில் சார்ந்தும் நாம் பொருத்திக்கொள்ளலாம். அந்திமழைக்கு வாழ்த்துக்கள்.

மது நீலகண்டன், திருவண்ணாமலை - 1

மதிப்பு

சினிமாவில் வேலை செய்யும் பிரபலங்கள், அவர்கள் துறை சார்ந்து எழும் அழுத்தங்களை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்னும் கட்டுரை சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜ சேகரின் குரு ராஜீவ் மேனனின் நடத்தையில் இருந்து நாமும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. தொழிலையும் தனிப்பட்ட வாழ்வையும் சமமாக கையாள்வது மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது என்பது வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம். மேலும் சீனு ராமசாமி, ஒப்பனைக் கலைஞர் சண்முகம், நிர்வாகத் தயாரிப்பாளர் வரதன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தாட்சாயிணி ஆகியோர்களின் அனுபவங்கள் அந்திமழை இதழை மத்தாப்பு போல் ஒளிரச்செய்தது. அனுபவத்திற்கு எப்போதும் மதிப்பு அதிகம்.

தமிழழகன், நாமக்கல் - 19.