காவி - கருப்பு ; இதுவா அதுவா என்று கேட்டால் அது தான் இது என்பர்! ஆம்; கருப்புதான். அது தான் அழகு. காவி, நிறம் மாறி மங்கி, வெளுத்து கிழிந்து தொங்கும். கிழிந்தாலும், தொங்கினாலும் கருப்பு கருப்பாகத்தான் இருக்கும்! காவி ஓங்கவும் முடியாது, உயரவும் முடியாது! இந்துக்களுக்காக வாதாட, போராட பரிந்து பேச என்று சொல்லப்படுகிறதே தவிர, இந்தியர்களுக்காக என்று ஏன் குரல் எழுப்பவில்லை? ஏன் சொல்லவில்லை. என்ன தான் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது! காவி நிலையும் & தமிழ்நாட்டில் பொருத்தவரையில் அது தான். இந்துத்துவ எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய ஓர் அரசு வரும் என்பது பகற்கனவு!
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு
பெண்கள் படம் போடாத எந்த விளம்பரமும் இன்று வெளியாவதில்லை. பெண்மையின் அழகு பல கோணங்களில் விளம்பரம் மூலம் சந்தைப் பொருளாகிவிட்டது. இன்னமும் ஆண் சமுதாயம் பெண்களைப் போகப் பொருளாகவே கருதுகிறது. மேலும்‘ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ' உள்ளது பெண்கள் அணியும் ‘ லெக்கின்ஸ்' ஆடைகள். பெண்களே உணர்வீர்களா?
முனைவர் இராம.முத்துக்குமரனார், கடலூர்.
தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசு வரும் என்று நம்பி நாராயணன் தன் கனவை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்துத்துவ வளர்ச்சிக்காக ஆர்.எஸ். எஸ் அதன் சார்பாக உள்ள விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற சங் பரிவார் அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை யாவும் பிராமணியத்தையும் சமஸ்கிருத மொழியையும் உயர்த்திப்பிடிப்பவை. வருணா சிரம தர்மம் தான் இவர்களுக்கு உவப்பான வேதம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், தேவாரம், திருமந்திரம் என்று பட்டியலிடும் நம்பி நாராயணன், உலகப் பொதுமுறை என்று உயர்ந்தோர் ஏற்றுக்கொண்டுள்ள திருக்குறளைக் குறிப்பிட மாட்டார். தமிழர் பண்பாட்டின் குறியீடு திருக்குறள். ஆகவே தமிழர்கள் பிராமணியத்தை ஏற்க மாட்டார்கள். இவர்களிலும் ஒரு சிலர் வருணாசிரம மயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது மெய்யே.
க.சி.அகமுடை நம்பி, மதுரை
வேல்முருகனின் நேர்காணல் , அதிலும் கடைசிக் கேள்விக்கான பதில், அட்டைப்படம், பாமரனின் கட்டுரையில் கடைசி 12 வரிகள் அனைத்தும் சூப்பர்.
அ.முரளிதரன், மதுரை
விடைபெறல் தலைப்பில் ‘‘ ஆலிவர் சாக்ஸ் '' அவர்களின் மரணச்செய்தியும், கட்டுரையும், என்னை மிகவும் கலங்கடித்து விட்டது. கட்டுரை படிக்கப் படிக்க நெஞ்சம் கனத்து கண்கள் குளமானது, சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் பேசிய, சாகும் நாள் தெரிந்து விட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும் என்ற வசனம் போல் இவரது வாழ்க்கை பயணம் அமைந்து விட்டது. அந்திமழைக்கு நன்றி மொழி பெயர்த்து இதை வெளியிட்டமைக்கு.
இ.டி.ஹேமமாலினி, சென்னை.
பெரியாரின் கொள்கைகளில் பெண் விடுதலை, சுய மரியாதை மட்டுமே வெற்றிக் கண்டது. ஜாதிமத மோகம் அதிகரித்தது அதிர்ச்சியான அறிவீனம். நாத்திகம் தோற்கக் காரணம் கடவுள் தேவையில்லையென்றால் எதில் நம்பிக்கை கொள்வது! தன்னம்பிக்கை என்றால் அதை பெரியார் அழுத்தி பிரச்சாரம் செய்யவில்லையே! இதை குறிப்பிட்டபோது, கி.வீரமணி தவற்றை உணர்ந்து, சமீப காலமாக ‘ வாழ்வியல் ' சிந்தனைகள் நூல்களை வெளியிட்டு வருகிறார். சுயசிந்தனையற்ற மக்களுக்கு ஆன்மிகம் அவசியமாவதால் நாத்திகம் தோற்கலாம். ஆனால், மத ரீதியான அரசியலை ஆதரிக்க தமிழினம் விரும்பாமல் மத நல்லிணக்கத்தை விரும்புவது ஆச்சரியமான ஆனந்தம். ஆக, காவி தமிழ் மண்ணில் வலுபெற வாய்ப்பேயில்லை. காவியா & கருப்பா என்பதைவிட பகுத்தறிவின் கை ஓங்குவதே நாட்டுக்கு நல்லது.
அ.யாழினி பர்வதம், சென்னை
வானவில் காவி - கருப்பு யார் கை ஓங்குகிறது? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இரும்படிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை? தமிழ்நாட்டின் வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட தந்தை பெரியார் வாழ்ந்த மண், இந்த மண். இதில் காவிகள் எப்படி காலூன்ற முடியும்? இப்போதும் வீடணர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அவர்களின் துணையோடு காவி, கருப்பை வெற்றிக் கொள்ளலாம் என்பது பகற்கனவே. அப்படியே வஞ்ச கத்தால் வெற்றி பெற்றாலும் அது தற்கால வெற்றியே! ஏனெனில் உரிமைப் போராட்டங்கள் எந்தக் காலத்திலும் தோற்றதாக வரலாறில்லை! காவி - வானவில், கருப்பு - இளஞாயிறு என்பதை எதிர்கால இளைஞர்களே உறுதி செய்வார்கள்.
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக் கருப்பூர்.
காவி - கருப்பு கவர் ஸ்டோரி படித்தேன். மதச்சார்பற்ற தேசமாய் ஒளிர்ந்த இந்திய ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற, இந்துத்துவ உணர்வையும், இஸ்லாமிய எதிர்ப்பையும் தூண்டிவிட்டு, அதன் மூலம் எழுந்த மதவெறி நெருப்பில் அரசியல் குளிர்காயும் காவி இயக்கங்கள், பகுத்தறிவு கொள்கையை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தப் பாடுபட்டு, அங்கிருந்து திசைமாறி, ஆட்சி பீடத்தை நோக்கி பயணித்து, அதில் விளைந்த விரோதங்களால் சிதறுண்டு கிடக்கும் கருப்புக் கட்சி கள் என இரு தரப்பின் உண்மையான நிலையை படம் பிடித்துக் காட்டிய கவர் ஸ்டோரியின் நேர்மையான பார்வை பாராட்டுக்குரியது.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
கே.வி.ஷைலஜாவின் ‘‘ ஏன் விஷ்ணுப்பிரியா இப்படி? '' என்ற கட்டுரை விஷ்ணுப்பிரியாவின் துர்மரணம் இனி எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தப் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டும் ஊக்க மருந்து என்றால் மிகையில்லை. இதனை வலியுறுத்த கட்டுரையாளர், படிப்பறிவில்லாத, பல அவலங்களை அனுபவித்த சில அபலைப் பெண்களின் அற்புதமான வாழ்க்கைகளை ஒப்பிட்டுக்காட்டுகிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அவலத்தின் உச்சம்! படிப்பறிவு மிக்க விஷ்ணுப்பிரியாவுக்கு மனத்துணிவு இல்லாதது ஏன் என்று வருந்துகிறார். இன்றைய சூழலில் பெண்களுக்கு இன்றியமையாதது - இக்கட்டுரை!
மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
காவி - கருப்பு சரியான அலசல் பார்வை. காலத்திற்கேற்ற பார்வையுடன் கருத்துகள் எண்ணக் களஞ்சியத்தில் இருப்பு வைக்கும் தன்மையுடன் திகழ்ந்தன. திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை பாமரன் அழுத்தமான பார்வையுடன் சுட்டிக் காட்டியிருந்தார். தேர்தல் கலப்பிலிருந்து திராவிட இயக்கங்கள் காலமறிந்த தனித்துவப் பார்வையுடன் செயல்பட்டால் தான் அது பல தலைமுறைகளுக்கும் தொடரும். திராவிடம் மாறலாம், பெரியாரியம் வாழும். அது தான் மனிதனை மனிதனாகப் பார்க்கும் திறன் கொண்டது.
தஞ்சை என்.ஜே. கந்தமாறன், சென்னை