‘நீ பாதி நான் பாதி' மனைவிகள் சிறப்பிதழ் ‘அந்திமழை' யைப் போல் ஒரே கண்ணீர் மழையாய் இருந்தது. குறிப்பாக மார்க்கண்டேயரான சிவகுமார் மனைவியை ‘உன் இரண்டாம் தாய் ' என் புகழ்ந்து பெண்மையை உலகின் உச்சிக்கே உயர்த்திப்பிடித்து விட்டார். அது உண்மையும் கூட. ஷோபா & எஸ்.ஏ.சந்திரசேகரின் வாழ்க்கைகூட இன்றைய இளம் தம்பதியினருக்கு நல்ல வாழ்க்கைப் பாடம்தான். ‘ சிவன் இல்லையேல் சக்தி இல்லை ; சக்தி இல்லையேல் சிவன் இல்லை' என்ற தத்துவத்தை அழுத்தமாய் ஆழமாய் பதித்து சென்றன. பாராட்டுக்கள். காமிரா கண்கள் பொ.காசிராஜனுக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கோ... அவ்ளோ தத்ரூபம் !
முத்தூஸ், தொண்டி.
ஜெ.அரசியல் எதிர்காலம்? நல்ல ஆருடம்! மனைவிகள் சிறப்பிதழ் எக்ஸலண்ட்! எனது பலம் அவங்கதான் என்ற தலைப்பில் பாப்பையா தம்பதிகளின் பேட்டி கட்டுரை படிக்க,படிக்க என் அப்பாவை நினைவுபடுத்தியது. இதே போல் அப்பாவும் அவரின் இளமைக்கால நிகழ்வுகளைபற்றி அடிக்கடி சொல்லும்போது, ரசித்தபடி கேட்டு ஒவ்வொரு வார்த்தைகளும் ஆச்சரியங்களாகவே இருக்கும், அப்பா இன்று இல்லை. அப்பா பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் விரும்பி பார்ப்பார், அப்பாவுக்கும் இவர் சாயல்.
ஹேமமாலினி,சென்னை.
‘‘மனைவிகள் சிறப்பிதழ்'' பொய்யில்லா நிஜமான பதிவுகள்! ‘‘ மனைவி உன் இரண்டாம் தாய் '' என்ற திரைக்கலைஞர் சிவகுமாரின் உணர்வலைகள் அற்புதமானவை. ஆணுக்கு ஆண்டவன் அளித்த ‘கொடைகள்' தாயும், தாரமும் தான். ‘‘ தாய்க்குப்பின் தாரம் '' என்பதை எல்லா ஆண்களும் தங்களின் இளமையில் மறந்துவிட்டு, முதுமையில் உணர்ந்து தாரத்தை தாழ்பணிந்து வணங்குவது வேடிக்கையானது ! தகப்பன், கணவன், பிள்ளை. என்று சார்ந்து வாழும் அர்ப்பணிப்புள்ள பெண்கள் - இவ்வுலகை உயிர்ப்புடன் வாழவைக்கும் இறைவனின் உயர்ந்த படைப்புகள் !
மனோகர்,சென்னை.
மனைவியர் சார்பில் அழகான ரோஜா பூங்கொத்து அந்திமழைக்கு. ஐந்து மனைவியரையும் மிகவும் சிறப்பாக சிறப்பித்துவிட்டது..சிவகுமாரின் சிறுவயது வேகம், முன்னேறும் முனைப்பில் கனவுகளை கருக்கியது பல்லாயிரக்கணக்கான ஆண்களின் ஜெராக்ஸ்.. ஆனாலும் கடைசி பாரா செம டச்சிங் பாஸ் ! காதல் திருமணத்தின் கசப்புகளை, கஷ்டங்களை விழுங்கிவிட்டு, கைப்பிடித்தவளோடு உலா வந்து வெற்றி உலாவாக்கிய ஷோபாவை, எஸ்ஏசி பிரிந்திருந்த நாட்கள் வெறும் 45தான் எனில் அது கின்னஸ் ரெக்கார்டுதான்.! நேர்மை என்றாலே அது ஒற்றையடிப்பாதை..துன்பமும் துயரமும் கைகோர்த்துக்கொண்டு தடைபோடுமே ! ஆனாலும் திருமதி சகாயத்தின் சகாயம் திரு.சகாயத்துக்கு கிடைத்த ஊக்க போனஸ் ! கட்சித்தலைவரின் தலைவியின் எளிமையும், மன வன்மையும், தோழமையும் தோழரின் பலம்..! மனதைத் தொட் டது ! பட்டிமன்ற இளைஞருக்கு(!) சொல்லவா வேண்டும்? ஜெயம் பாய் வந்ததும் வாழ்க்கையே ஜெயகோஷமாய் சிரிப்பலை மோதும் இடமாகிவிட்டது..!ஒவ்வொரு பெண்ணின் கதையும் தனித்தனித் தீவுகள்... தனித்தனி அனுபவங்கள்.. தனித்தனி துயரங்கள்..! ஆனால் நடந்து வந்த பாதையின் அடித்தளம் ஒன்றுதான். பொறுமை, அமைதி, சமயோகிதம், அன்பு இவைகளின் கலவை! தியாகம் ஊடாடும் வழித்தடங்கள்.. மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கம் ! சின்ன வழிகாட்டல்கள் ! பெண்மையின் பெருமிதங்கள் !....
ஜே.சி.ஜெரினா காந்த், ஆலந்தூர்.
அரசியல்வாதியின் இன்னொருமுகம் கட்டுரை ஒரு நேர்மையான அதிகாரியின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டியது. சக்திவாய்ந்த அரசியல்வாதிகளை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறையபேர் தேவை. நிகில் முருகனின் பேட்டியும் அவரது சுவாரசியமான பின்னணியை அறிமுகப்படுத்தியது. சமையல் பகுதியில் இயக்குநர் கரு.பழனியப்பன் இல்லம் பற்றிய குறிப்புகளும் கனஜோர்!
குமாரசாமி, நாமக்கல்
முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாய் வாழும்போது இலைமறைவாய், காய்மறைவாய், இருந்த கணவன் & மனைவி இருவரின் அன்பும், காதலும் இப்போது அரிதாகிவிட்டது. இப்போதெல்லாம் தனிக்குடித்தனமாய் வாழும்போது இருவரிடமும் உள்ள ஈகோவினால் அங்கு அன்பு அந்நியமாகி விடுகின்றது. இந்த நிலையில் அந்திமழையின் மனைவிகள் சிறப்பிதழை கணவன், மனைவி இருவரும் படிப்பதின் மூலம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஈருடல் ஓருயிராய் ஒன்றிணைந்து உளம் மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது உறுதி. ‘‘அந்திமழை'' குடும்பங்களின் அன்புமழையைப் பொழிய வைக்கும். மேலும் சகாயம் அவர்களுக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் அதை அவர் துணிவுடன் எதிர் கொள்வார். ஏன் என்றால் எதையும் தாங்கும் இதயமாய் துணைவியார் அருகில் இருக்கும்போது எந்தத்துயர் தான் என்ன செய்யும் !
ராம.முத்துக்குமரனார், கடலூர்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். மனைவி என்பவள் மனையாளும் அரசி. அதனால்தான் அவளுக்கு ‘இல்லத்தரசி' என்று பெயர். நல்ல துணைவியரை அடைந்து, பேரும்,சீரும் பெற்று நிறை வாழ்வு வாழும் ஐந்து குடும்பத்தலை மகன்களை, தலைமகள்களை அழகுற அறிமுகப்படுத்தி, மனைவியருக்கு மரியாதை செய்து விட்டது அந்திமழை.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு
பார்க்காத படத்தின் கதை தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். மனைவிகள் ஸ்பெஷல் & மிக மிக அருமையாக உள்ளது. இனியாவது தத்தம் மனைவியாரை கிண்டல் செய்யும் கட்டுரை + ஜோக்கை, கணவன் மார்கள் நிறுத்துவார்கள் என்று நம்பலாம்.
அ.முரளிதரன்,மதுரை.
எலிகள் என்ற சேஷையா ரவியின் சிறுகதை மிக அருமையாக வந்திருந்தது. மனிதனின் வாழ்க்கையை குறியீடுகள் மூலமாக மிக அற்புதமாக உணர்த்தினார். எலி, பூனை, நாய், அப்புறம் அந்த துப்பாக்கி, பின்னர் கொடூரமாக மாறிப்போகும் அப்பா என்று காலத்தை வென்ற கதை அது. 1987&ல் எழுதப்பட்ட கதை என்றதும் ஆச்சரியம். ஓவியர் மருதுவின் கைவண்ணமும் பலே!
எஸ்.முருகன், பாளையங்கோட்டை