கடிதங்கள்

சாராம்சம்

Staff Writer

ஓவியரான நடிகர் சிவகுமாரையே ஓவியமாக்கி அவரது 75வது பிறந்தநாள் பரிசாக்கியது சாலப் பொருத்தம். பேசும் அந்த கண்கள்! லேசான அதே குறும்பு புன்னகை! அடடா, தத்ரூபமாய் நேரில் பார்ப்பது போல அசத்திய ஓவியர் ஏ.பி.ஸ்ரீதருக்கும், அச்சு நேர்த்திக்காக அந்திமழைக்கும் இரட்டை ஷொட்டு. ஒரு பெண் அமெரிக்க அதிபராவதை இதுவரை விரும்பாத அமெரிக்கர்களின் பிற்போக்குத்தனம்தான் ஹிலாரி தோல்விக்கு காரணமென யூகிக்கும் வண்ணம், பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பாவிக்கும் டொனால்ட் டிரம்ப் தேர்வு அதனை உறுதி செய்தது. டிரம்ப்பின் கடந்த கால ப்ளேபாய் தனங்களும், ‘ஏ' கமெண்ட்டுகளும் உவ்வே ரகம்! வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்வு எதிர்ப்பை சந்தித்தது, அந்திமழை கட்டுரை சாரம்சத்தை பிரதிபலித்தது.

மல்லிகா அன்பழகன், சென்னை

பாராட்டு

அட்டைப்படம் சூப்பர், கமல்ஹாசனையும் போட்டிருக்கலாம். கட்டுரைகள், பேட்டிகள் அத்தனையும் அருமை. எதை பாராட்டுவது எதை விடுவது என்று தெரியவில்லை.

அ.முரளிதரன், மதுரை.

கலைமழை

படிப்பறிவைவிட, வலிமை வாய்ந்தது பார்த்து அறிந்துகொள்வது. கற்றோரையும், கல்லாதோரையும் தன்பால் ஈர்க்கக்கூடியதில் இன்று பெரும்பங்கு வகிப்பது திரைப்படங்களே! ஏழ்மை, அறியாமை, வறுமையில் மூழ்கித் தத்தளிப்போரையும் கரைசேர்த்து களிப்பூட்டுவதும் அதுவே. வெறும் புராணப்படங்களையே பார்த்து சலித்துபோன மக்களுக்கு, பராசக்தியும் மனோகராவும், வேலைக்காரியும் இரத்தக்கண்ணீரும் ஒரு திருப்புமுனையையே உருவாக்கிவிட்ட வரலாற்றை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. அது இன்று சமூகத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதன் வரலாற்றை சுவைகுன்றாமல் உலகுக்கு வழங்கிவிட்டது அந்திமழை கலைமழையாகவும் தன் முத்திரையைப் பதித்துவிட்டது.

நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.

ஜோர்

இந்தமாத அந்திமழை தீபாவளி ஸ்பெஷலாக அமைந்திருந்தது. அட்டைப்படம் ‘‘சரவெடி'' போல் ஜோர், ஜோர். சிவக்குமார் சாரின் தத்ரூபமான புகைப்படமும் வெற்றிப்படங்களின் அணி வகுப்பும் மெய்சிலிர்க்க வைத்தது பலே பலே, பேஷ் பேஷ். அந்திமழையின் சிறப்பான பணி மாதாமாதம் மெருகேறிக்கொண்டே போகிறது எனலாம். மேலும் அதிக பக்கங்களுடன், சிறப்பான கட்டுரையுடனும் புகைப்படங்களுடனும் அடுத்த மாத அந்திமழைக்காக..

இ.டி.ஹேமமாலினி, ஆவடி.

ஆ... ட்ரம்ப்!

பெண்களைத் தொடர்ந்து அவமதித்து இழிவுபடுத்தியதுடன், அமெரிக்கர்களை பிளவுபடுத்தியிருந்த இன உணர்வையும் தூண்டிய டொனால்ட் ட்ரம்ப், பெண்ணியவாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க அதிபராகிவிட்டார். சிறுபான்மையினர் உள்ளிட்ட அமெரிக்க வாக்காளர்களின் பேராதரவைப் பெற்றிருந்த ஹிலாரி கிளிண்டனின் தோல்வி, ஒருமைப்பாட்டுடன் கூடிய அமெரிக்க முன்னேற்றத்தை விரும்பிய மக்களுக்கு அதிர்ச்சியே தந்திருக்கும். அமெரிக்க அதிபர் என்ற உச்சகட்ட அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ட்ரம்ப் இனி பெண்கள் குறித்த தனது பார்வையை மாற்றிக் கொண்டாலும், அது செயற்கையான நிகழ்வாகவே கருதப்படும்.

எம்.சம்பத், வேலாயுதம் பாளையம்.

விடுபட்டது

வசூலில் சாதித்த 100 படங்கள். மிக்க சிரமப்பட்டு தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆகும். நடிகர்கள் வரிசையில் ஜெமினிகணேசன் விடுபட்டுள்ளாரே... ஜெமினியின் மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம், கல்யாணப்பரிசு போன்ற படங்களில் அவரின் நடிப்பு இன்றளவும் பேசப்படக்கூடியவை. இவர்களுக்கும் முன்னோர்களின் தொகுப்பில் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி பற்றிய செய்தி எதுவும் இல்லையே! அறிஞர் அண்ணா படைத்த வேலைக்காரி படம் சமூகப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். அதில் அண்ணாவின் வசனமும் கே.ஆர்.ஆரின் நடிப்பும் இன்றளவும் பிரசித்தம். மலைக்கள்ளன் படத்தின் மகத்தான வெற்றிக்கு அடிப்படை கலைஞரின் நகைச்சுவை வசனம் ஒரு முக்கிய அம்சம். அனல் தெறித்தது. ‘பராசக்தி' யில் வசனம், புதுப்புனல் என நகைச்சுவை அருவியாய்க் கொட்டியது மலைக்கள்ளன் படத்தில் கலைஞரின் வசனம்! சந்திரமுகி 800நாட்கள் ஓடிய படம் இல்லை. ஓட்டப்பட்ட படம். கபாலியும் ஓட்டப்பட்ட படம்தான். புரிந்தால் சரி.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு

சொல்ல மறந்தது

நவம்பர் 2016 அந்திமழை இதழ் வாசித்தேன். ‘ விதிகளை மீறியவை' என்கிற இரா.கவுதமனின் கட்டுரையில், அவர் சொல்ல மறந்த இரண்டு திரைப் படங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழக மக்களின் உயிர் மூச்சில் கலந்தது தாலி செண்டிமெண்ட். சாரதா திரைப்படத்திலேயே அதனை உடைக்க விரும்பிய கே.எஸ். கோபாலகிருஷ்னன், துணிச்சல் இன்றி வழக்கமான சட்டகத்திற்குள் நின்று, அந்த முயற்சியில் தோற்றுப் போனார், என்பது இன்றைய தலைமுறை அறியாதது. ஆனால் அப்படிப்பட்ட தாலி செண்டிமெண்டை, ‘புதிய வார்ப்புகள்' திரைப் படத்தின் மூலம் துணிச்சலாக உடைத்தவர் இயக்குனர் பாரதிராஜா, அந்த படத்தில் நாயகனாக அறிமுகம் செய்யப் பட்ட பாக்கியராஜ், தனது ‘அந்த ஏழு நாட்கள்' திரைப் படத்தில், தாலி செண்டிமெண்டை மீண்டும் தூக்கி நிறுத்தியது நகை முரண். எதிர்மறைத் தலைப்பு கொண்ட படங்களுக்கு, முன்மாதிரி என்று, தமிழ்த் திரை உலகில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி விட்டு மறைந்திருக்கும், இயக்குநர் கே.பாலச்சந்தரின்‘நீர்க் குமிழி'யைச் சொல்லலாம். அது அவரது முதல் திரைப்படம் என்பது, அவரது தன்னம்பிக்கையையும், அது சார்ந்த துணிச்சலையும் காட்டுகிறது.

சு.இராமசுப்பிரமணியன், தோவாளை

மகத்தானது

தமிழ்த்திரைப்படங்களில் மிகச்சிறப்பாக ஓடிய படங்கள் என்று 100 படங்களின் பெயர்களைத் தொகுப்பது மகத்தான பணி. இதில் அந்தப் படம் விடப்பட்டது, இந்தப்படம் விடப்பட்டது என்று குறைகள் நிச்சயம் வந்தே தீரும். ரசிகர்களால் ஆனது தமிழ்கூறும் வாசகப்பரப்பு. விருந்தினர் பக்கங்கள் இல்லாமல் வந்த அந்திமழையாகப் போய்விட்டதே தீபாவளி சிறப்பிதழ்!

கன்னிமைந்தன்,மைலாப்பூர்