கடிதங்கள்

சுக அனுபவம்

Staff Writer

'அந்திமழை' இப்படியோர் காரியம் செய்யும் என்று சிறிதும் எண்ணவில்லை... ‘‘பிடித்த பாத்திரம்'' தந்த ரகளை தான் மனசுக்குள் எத்தனை எத்தனை தெரியுமா? வந்தியத்தேவன் முதல் விவேக் ரூபலா வரை படிக்க படிக்க பழைய நினைவுகள்... படித்த அந்த அனுபவ அலைகள்... முதன் முறையாக ஒரே மூச்சாக இரண்டு நாளில் சிவகாமியின் சபதம் படித்த அந்த நாள் ஞாபகம்..சிவகாமிக்காக எழுந்த துக்கம் இன்று வரை...விதவிதமான வடிவங்களை படிக்கையில் எழத்தான் செய்கிறது. காயத்ரி தான் மிஸ்ஸிங்..! மீண்டும் அவர்கள் பார்வையில் ஒரு அலசலில் கரைந்தபோது அதுவும் தனி சுகம் தான்.. .அற்புதமான மஹா அலாதியான சுக அனுபவம்.. நல்ல இசை கேட்ட சுகம்! நன்றி..மீண்டும் திருப்பிபோட்டதில் மனசுக்குள் சுக ராகம்! & ஜே.சி.ஜெரினா காந்த், ஆலந்தூர்

வாசிப்பு

என் அம்மா பள்ளிப்பருவத்தில் ‘கண்ணன்' இதழ் வாசகி. கல்யாணத்திற்கு பிறகு மங்கையர்மலர் சந்தாதாரர். அப்பா மாத நாவல் - தொடர்கதை அபிமானி. ராணிமுத்து, மாலைமதி தொடங்கிய நாளிலிருந்து வாங்கி சேகரித்தவர். தவிர, தொடர்கதைகளை பைண்ட் செய்து, வீட்டு நூலகம் அமைத்தவர். அந்த பாதிப்பில் வாசக எழுத்தாளராக, எனக்கு தூண்டுகோல். லயன் காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி, அம்புலி மாமா, அணில், இதழ்கள். பள்ளிபருவத்தில் வாசித்த முதல் நாவல் ‘பார்த்திபன் கனவு'. பத்தாம் வகுப்பு கோடை விடுமுறை தொடங்கி, இன்று வரை, நாகை கிளை நூலகம் முதல் கன்னிமாரா வரை 40 ஆண்டு கால நூலக உறுப்பினர். வாசித்த நாவல்களும், தொடர்கதைகளும் தான் என் பொழுது போக்கு. 40 வயது கடந்த பிறகு தொடர்கதைகளை காத்திருந்து படிப்பது பிடிக்காமல், புத்தகமாக வாசிக்கவே பிடித்தமான வழக்கமானது. பழைய நினைவுகளை கிளறிய சிறப்பிதழுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அண்ணா அன்பழகன், சென்னை

அழகு

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் கௌதம் அவர்களின் காமிரா கண்கள் புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர். வயல் வெளி, புல்வெளி, மலைகள், மேகங்கள், மரங்கள், ஆறு, குளம் என இயற்கையின் ஒட்டு மொத்த அழகையெல்லாம் மொத்தமாய் தன் காமிராவுக்குள் பதிவு செய்த விதம் ஒரு பாலுமகேந்திராவை ஞாபகப்படுத்தியது. தொடரட்டும் உமது புகைப்பட புரட்சி ! வாழ்த்துக் கள்... அட்டைப்படம் மற்றும் உள்படங்களில் வந்த கமல் செம கியூட். கீப் இட் அப் கமல் சார் !

முத்தூஸ், தொண்டி

கமல் தொகுப்பு சிறப்பு

‘‘ ஜில்லுன்னு ஓர் அந்திமழை'' அட்டைப்படமும், கமல் பை கமல், கமல் 60 சிறப்பு தொகுப்பு செம..இந்த நேர பருவ நிலை போலவே கூல்..கூல்! அவர் நடித்த படங்கள் அத்தனையும் நினைத்தாலே இனிக்கும், கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார், காதல் சரச காட்சி களில் சொக்க வைத்துவிடுவார். வீரம், காதல், வெகுளி, சோகம், என பல முகபாவங்களில், பல படங்களில் நம்மை மிரள அல்லவா வைத்துள்ளார் கமல். தடைகளை உடை ரகம் அவர், தத்ரூபமாக நடிக்கக் கூடியவர்.மேம்போக்காக செய்யக் கூடியவர் அல்ல கமல், ஆழமாக, ஆராய்ந்து தெளிவு பெற்ற பின் நடிப்பவர் என்பதற்கு அவரது படங்களே சான்று ! அவரை பற்றிய அந்திமழையின் தொகுப்பு வெகு சிறப்பு.

ஹேமமாலினி, அயனாவரம்

நேர்த்தி

காமிரா கண்கள் பகுதியில் பிரசுரமாகியுள்ள நவீன் கௌதம் அவர்களின் புகைப்படங்கள் கலை நேர்த்தியுடன் உள்ளன. அப்புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கும் நேர்த்தியும் மிக அழகாக உள்ளது. கேமரா கலைஞர் நவீன் கௌதமிற்கு வாழ்த்துக்கள்.

கழனியூரன், சென்னை

பக்குவம்

அந்திமழை ( நவம்பர்' 2014 ) இதழில், கமல்ஹாசன் தனது அகவை 60 - இல் தன்னைப்பற்றிய பகிர்ந்து கொண்ட செய்திகள் சத்திய சோதனையை நினைவூட்டியது! அன்று சிறுவன் கமலுக்கு படிப்பா? நடிப்பா? என்ற அக்னி பரீட்சை வினாவிற்கு கமலின் தந்தை ‘நடிப்பு' என்ற விடை எழுதி கமலின் கலையுலகப் பயணத்திற்குப் பச்சைக்கொடி அசைத்து தான் ஒரு அரிதான தந்தை என்பதைப் பதிவு செய்திருக்கிறார். யாரும் படாத சிரமங்கள், செய்யாத வேடங்கள், பெறாத வெற்றிகள் அனுபவங்கள் கமலை ‘கலை ஞானி' யாகப் பக்குவப்படுத்தியுள்ளன. சாதி, சமயத்தை விட்டு விலகி, அரசியல் ஆசையைத்தவிர்த்து, தன்னை உலக சினிமா தரத்திற்கு உயர்த்தியிருக்கும் கமல் - இன்றும் பல வெற்றிகளைக் குவிக்க விருக்கும் பந்தயக் குதிரைதான்! நாளைய சினிமாவிற்கு ஒரு கலைக்களஞ்சியம் தான் ! சினிமாவில் தத்தளிக்கும் கலைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்குதான் ! சுருக்கமாக கமலுக்கு நிகர் கமலேதான் !

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை

soon

ஒரு பிறவிக் கலைஞனின் கலைத்தாகம் அடங்கவே அடங்காது. தீரவே தீராது; உப்பைத் தின்னவன் கதை தான் அது. கமல்ஹாசன் அப்படித்தான். கலை என்னும் உப்பைத் தின்றுள்ளார் அவரின் தாகம் அடங்காது. தீராது. அதிகரித்துக்கொண்டே இருக்கும். என்று தீரும் என்று கேட்டால் அவருக்கே பதில் சொல்லத் தெரியாது. நாம் கேட்பதிலும் அர்த்தமல்ல. ஓர் உன்னதக் கலைஞன் கமல்ஹாசன். அவர் எட்ட வேண்டிய உன்னதம் இன்னும் உள்ளது. எட்டுவார்: நம் நெஞ்சைத் தொட்டுவிடுவார்: உலகக் கலை உலகத்தாரின் நெஞ்சையும் கூட. அவரின் தந்தை தீடஞுண ணிண்ஞிச்ணூ என்று கேட்டாரே, அதற்கு கலை உலகின் பதில் இதுவாகத்தானிருக்கும்.. ‘soon'.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு

உன்னத சினிமா

ஷாஜி அவர்களின் நடுத்தெரு சினிமா கட்டுரைத் தொடர் அழகாக ஆரம்பமாகி உள்ளது. நாம் பார்க்கத் தவறிய பல உன்னத சினிமாக்களைப் பற்றி அவர் எழுத இருப்பது ஆவலைத் தூண்டுகிறது. எல்லா சினிமாக்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. பார்க்காத சினிமாக்களைப் பற்றி படித்துக்கொள்ளலாம் அல்லவா?

சி. சந்திரன், மின்னஞ்சலில்

ஞாபகம் வருதே

கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் கட்டுரை மூச்சுத் திணற வைத்தது. எவ்வளவு விஷயங்கள்.. எல்லாவற்றையும் வாசித்துப் பைத்தியமாகத் திரிந்த காலத்தைக் கடந்துதான் வந்துள்ளோம். இறந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதில் ஒரு சந்தோஷமே. கிரைம் நாவல்களின் சகாப்தம் முடிவடைந்திருக்கலாம். இருப்பினும் அது வேறொரு வடிவில் முளைக்கும்.

எஸ்.கோமதி, நெல்லை