அந்திமழை மாத இதழ் அறிவார்ந்த வாசகர்களை நோக்கிப் பயணிக்கிறது,. தமிழ்மொழியின் இதழியல் பரப்பில், முற்றிலும் மாறுபட்டதோர் இதழாக வாசகர்களின் அறிவு தாகத்தைத் தணிக்கிறது என்று சொன்னால், மிகையல்ல. முன்பெல்லாம் ‘தினத்தந்தி' நாளிதழில் முன்பக்கத்தில், ஒவ்வொரு வரியும் தங்க நகை போல் அலங்கரிக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். கலை இயக்குநர் ராமலிங்கத்தின் திரையுலகப் பயணம் கரடுமுரடாக இருந்ததை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். சுயமரியாதை உள்ளவர்கள் சினிமாவில் நிச்சயமாக இருக்க முடியாது என்பது, நிதர்சனமான உண்மை.
‘‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்று ராமலிங்க சுவாமிகள் பேசுவார். விலங்குகளின் நலத்திலும் ஆர்வம் கொண்டு ‘அந்திமழை' சில பக்கங்களை ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது.
‘‘நூல் அறிமுகம் பகுதி'' இன்றைய தலைமுறைக்கு அவசரமும், அவசியமான தேவையும் கூட. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ‘‘ஜாக்கி ஆக்மார்ட்'' என்பவர் கடுமையான எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது மருந்துகளை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். என்னுடைய மக்கள் மருந்தில்லாமல் தினம், தினம் செத்து மடியும் போது , நான் மட்டும் உயிர்பிழைப்பது அறமல்ல என்று கூறுகிறார். ‘‘பண்புடையார் பட்டுண்டு உலகம்'' என்று சொன்ன வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு இந்தப் பெண் ஒரு சத்தியத்தின் வெளிச்சம். கரிசல் குயில் கி.ராஜநாராயணன் பற்றிய பவா செல்லத்துரை, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கட்டுரைகள்,
சிறப்பான அஞ்சலி. சினிமா மற்றும் இலக்கிய உலகில் காதோடுதான் பேசப்படும் வம்புகளும், கிசுகிசுக்களும் இன்றைய வாசகர்களுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லட்சுமிகாந்தன் நினைவில் வந்து செல்கிறார்.
இராம.இலக்குமணன், காஞ்சிபுரம்
நினைவு மலர்!
கொள்ளை நோயின் மறுபக்கம் கட்டுரை சிறப்பானது. கி.ரா. பற்றிய நினைவுகள் இதழ் முழுவதும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. மொத்தத்தில் கி.ரா நினைவு மலராகவே அமைந்துள்ளது.
பல்கலைக்கழக பஞ்சாயத்துகள் கட்டுரை, கல்வி நிறுவனங்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதழ் முழுவதும் பல்வகைச் செய்திகள் பரவிக் கிடக்கின்றன.
இராம.குருமூர்த்தி, சென்னை
வரவேற்கத் தக்கது!
ஜூன் - 2021 இதழ் மிக சுவாரஸ்யம். ஒரு பக்கம் கரிசல் குயில் கி.ரா மறுபக்கம் சிறப்புப் பக்கங்கள்.
கி.ரா. அவர்களுக்கான அஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு சிறப்பு. கரிசல் பூமி மனிதர்களின் பாடுகளை இவர் அளவுக்கு யாரும் எழுதவே இல்லை. ‘கதவு' சிறுகதை மூலம் தமிழர்களின் ‘மனக்கதவை' அசைத் தவர் இவர். கோபல்ல கிராமத்து மனிதர்களை மறக்கவே முடியாது. தன்னைப் பற்றிக் கூறும்போது, ‘நான் மழைக்காக பள்ளியில் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பாடத்தை கவனிக்கவில்லை, மழையை இரசித்தேன்' என்று கூறினார். மழையை இரசித்த அந்த மனசுதான், தான் வாழ்ந்த கரிசல் மண்பூமி -- அதன் மனிதர்களைப் பற்றி அவரை எழுதவைத்தது. அவருக்கான அரசின் இறுதி மரியாதை மிகவும் வரவேற்கத்தக்கது.
சிறப்புப் பக்கங்களில், வதந்திகளும், கிசுகிசுக்களும் பல்வேறு துறைகளில் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன? என்று விரிவாக அலசியது. ‘எல்லை மீறாத' கிசுகிசுக்கள் வரவேற்கப்படுகின்றன. மீறும்போதே விபரீதம் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு இது தெரிந்தும் அதை விரும்புகிறார்கள். கட்டற்ற ‘ஊடகவெளி' இந்தக் கிசுகிசுக்களை நம்ப வைக்கிறது. வலையில் விழாமல் மீள்வது மனிதர்களின் கையில்தானே உள்ளது.
ஆர். மோகன், சேலம்
ஜோர்!
அந்திமழை ஜூன் இதழில், கி.ரா.விற்கு நினைவு அஞ்சலியில் அவரை நன்கு அறிந்த நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பவா செல்லதுரை ஆகியோரின் தகவல் நிறைந்த கட்டுரைகள் மிகச் சிறப்பு. அரசியல் - ராவ், அசோகன் வெளிப்படுத்திய கிசுகிசுக்களும், சினிமா - முத்துராமலிங்கனின் சக்கைப் போடும் ஜோர்! மொத்தத்தில் சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிய வைத்துவிட்டீர்கள்.
-டி.கே. சுப்ரமணியன், விழுப்புரம்
அழகாக்கி உள்ளார்!
ஜூன் மாத அந்திமழை, கரிசல் காட்டின் கதாநாயகர் கி.ரா.அவர்களின் அசத்தலான அட்டைப்படம். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு சிறப்பான மரியாதை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்ட காட்சி, நான் அவர்கள் பதினாறாம் நாள் நிகழ்ச்சிக்கு டூவிலரில் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு பெரிய மகிழ்ச்சி! அதுவும் கொரோனா காலத்தில் அவர்கள் இளைய மகன் பிரபாகரன் ஓர் எழுத்தாளர், ஐயாவின் 95&வது பிறந்த நாள் விழாவில் அவர்கள் வெளியிட்ட மலரில், ‘ராஜ்பவனமும் மஞ்சவடியும்' என்ற கட்டுரை எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத அந்திமழை கோடை நேரத்தில் பெய்த மழையாய், குளிர்ச்சி அடையச் செய்துள்ளது. வாயில்லா ஜீவன்களைக் காப்பாற்றிய பெருமை மருத்துவர் செசிலியா ஜோசப் அவர்களைச் சாரும். நல்ல அனுபவக் கட்டுரை. பன்றிக்கு நன்றி சொல்லி சிறுகதை, வாசிப்பதற்குச் சிறப்பாக கருத்தாழம் மிக்கதாக உள்ளது. தமிழ் ஈழ பிரபாகரன் கரிசல் கி.ராவை சந்தித்து அவர்க்குப் புத்தகத்தில் கையெழுத்திட்டது ஒரு பெரிய வரலாறு. அதிலும் இளவேனிலை தன் சொந்தப் பிள்ளையாக வளர்த்து வாழ்வை அழகாக்கியுள்ளார்.
அவர் மரணம் ஒரு பாதிப்பு. கிசுகிசுகள் மனிதன் தோன்றிய நாளிலிருந்து உள்ளன. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி பல்கலைக்கழக பஞ்சாயத்து படிக்க ரொம்ப சுவாரஸ்யம்!
இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்
குறிஞ்சிப் பூ!
ஜூன் மாத அந்திமழை சூப்பராக உள்ளது. முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை அருமை. எதைப் பாராட்டுவது எதைவிடுவது என்றே தெரியவில்லை. அட்டைப் படத்தில் உள்ள கி.ராவின் படம் புகைப்படமா அல்லது ஓவியமா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. புதுவை இளவேனிலுக்கு நன்றிகள்.
கிராவும் பிரபாகரனும் தலைப்பிலான தகவல்கள் எங்கேயும் பார்க்க முடியாத குறிஞ்சிப் பூ.
அ.முரளிதரன், மதுரை
சிந்திக்க வைத்தது!
அந்திமழை ஜூன்2021 இதழ் கட்டுரைகள் அருமையாக இருந்தன. குறிப்பாக அரசியல் பகுதி நமது சிறப்பு நிருபர் எழுதிய ‘சரியும் சீட்டுக்கட்டுகளா சிறுகட்சிகள்?' சிந்திக்க வைத்த கட்டுரை எனலாம். தினகரன், சீமான், கமல், விஜயகாந்த் போன்ற தலைவர்கள் சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்றதற்கான காரணங்களை உள்ளங்கை நெல்லிக் கனி போல் விளக்கியது கட்டுரை. நன்றியும் பாராட்டுகளும்.
கு. உஷா சுதர்சன், திருச்செங்கோடு
பாவத்தைச் சேர்க்காதீர்கள்!
எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு வதந்தி பரப்பப்பட்டது. தேர்தல் முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பியபோது, அந்த வதந்திதான் இறந்தது. எம்.ஜி.ஆர் கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும்போது, கையில் ஒரு கருப்புக் கண்ணாடி வைத்திருப்பது வழக்கம். அது படிப்பதற்காகப் பயன்படுத்துவதாகும். ஆனால் அது எக்ஸ்ரே கண்ணாடி என்றும் ஒரு புரளி எழுந்தது. எஸ்.வி. சேகர் காமெடி காட்சி அமைத்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அப்படியொரு கண்ணாடி இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று தெரிந்தபோது அந்தப் புரளி புஸ்வாணமானது. இப்படித்தான், அந்திமழை இளங்கோவன் கல்லூரி காலத்தில் புழங்கிய லட்சுமிகாந்தன் கொலை நடந்த, அதே சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில், பாடி நடித்த அந்நாளைய ஹீரோ, உடன் நடிக்க மறுத்த நடிகையை மானபங்கம்படுத்தியதாக ஒரு புரளி உண்டு, இன்று வரை நிரூபணமாகாமல்! எனவே, இன்றைய வலைதள வதந்திகளை சந்தேகக் கண் கொண்டு பாருங்கள். நிரூபணமாகும் வரை நிஜமென்று நம்பி, சுவாரசியத்திற்காகப் பரப்பி பாவத்தைச் சேர்க்காதீர்கள்!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
சரியான விளக்கம்!
படைப்பாளியாக கி.ராவின் பரிணாமத்தைத் திறம்படத் திறனாய்வு செய்து, அவர் கதை
சொல்லியா, எழுத்தாளரா! அவர் கரிசல்வாதியா, அவர் படைத்ததை வட்டார வழக்கு இலக்கியம் என்று சொல்வதா! என அஞ்சலி பக்கங்கள் விவாத களமாகி, முத்தாய்ப்பாக, ‘கி.ரா - மண்ணின் கலைஞன்' என்று ஜெயமோகன் சொன்னது, பட்டிமன்றத் தீர்ப்பு போல் அமைந்தது. படைப்பாளி என்பதற்குச் சரியான விளக்கமும் எங்களுக்குக் கிடைத்தது.
-யாழினி பர்வதம், கே.கே.நகர், சென்னை
அருமையான பதிவு!
புலிகள் தலைவர் பிரபாகரன் - கி.ராவின் சந்திப்பு பற்றி வழக்கறிஞர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த தகவல் அறியாத அருமையான பதிவு. மேலும், கரிசல் குயிலின் அந்திமழை அட்டைப்படமும், மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்பும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமே.
-ஏ.பிரபாகர், சின்னனுர்.
அஞ்சலி
ஓர் எழுத்தாளனாக இன்னொரு எழுத்தாளனுக்கு இதய அஞ்சலி செய்திருக்கிறார் , பவா செல்லத்துரை அவர்கள். கி.ராவின் எழுத்துகள் உள்ளவரை அவர், வாசகர்களால் வாசிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்!
-மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.
ஜூலை, 2021