கடிதங்கள்

வெளிப்பாடு

Staff Writer

போராடிய தலைவர்களை ஆராதித்த தலைமுறைக்குப் பின் வந்த தலைமுறை சினிமா நாயகிகளையே கனவுக்கன்னிகளாக மதித்து மகிழ்ந்தார்கள். நாடு, மொழி, இனம் கடந்து ஒருமைப்பாட்டிற்கு இலக்கணம் வகுக்கும் இவர்கள் உச்சத்தில் இருந்தாலும் இவர்களின் வாழ்வில் சோகம், தோல்வி, கஷ்டம், நஷ்டம் நிலவுவது& முரண்சுவை. நம்மை மகிழ்விக்கும் இந்த துருவ நட்சத்திரங்கள் உதிரும் எரி நட்சத்திரங்களாகக்கூடாது என்ற ஆசை - நன்றி உணர்வின் வெளிப்பாடு.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14

படிக்கவேண்டும்

என்ன செய்ய வேண்டும் ரஜினி - எனும் தலைப்பிலான 'அந்திமழை' இளங்கோவனின் கட்டுரை அருமை. இந்தக்கட்டுரையை மற்ற கட்சியினரும் தலைவர்களும் படித்துப் பார்க்க வேண்டும். படித்துவிட்டு அவர்கள் கொஞ்சமாவது திருந்தட்டும். வித்தியாசமான படங்களும் பேட்டியும் அருமை. டிவி சூப்பர் ஸ்டார் பற்றிய கட்டுரை படங்கள் சூப்பர். சிறப்பு பக்கங்கள், விருந்தினர் பக்கங்கள் நன்றாக உள்ளன.

அ.முரளிதரன், மதுரை - 3

நிறம்

சிறப்புப் பக்கங்கள் - ஒளி இழந்த தாரகைகள். நம் கனவுக்கன்னிகளுக்கு என்ன ஆகிறது? உண்மைதான். பலரும் கேட்ட, கேட்கிற கேள்விதான். உதிரும் எரி நட்சத்திரங்களாக ஆகக்கூடாது என்பதே அனைவரின் ஆசையும் கூட. பாதியில் உதிர்ந்த நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் உதிர்ந்த அழகிகளைக் குறித்த கட்டுரையைப் படிக்கும் போது கண்கள் குளம் ஆயின. மனதும் கனக்கச் செய்தது. அந்திமழையின் அட்டை மனித மனங்களின் இப்போதைய குமுறலை எடுத்துரைக்கும் நிறமோ& கருப்பு?

இ.டி.ஹேமமாலினி, சென்னை - 54

அக்கறை

மொழிபெயர்ப்புத் துறையில் மிகச்சிறந்த நூல்களைத்தரும் நாகலட்சுமி சண்முகம் அவர்களின் பணி மிகச்சிறந்த பயனுள்ள பணி. எவ்வளவு பணம் கொடுத்தாலும் சமூகச் சீர்கேட்டைத் தரக்கூடிய நூல்களை மொழிபெயர்க்கமாட்டேன் என்ற அவரது சமூக அக்கறையைப் பாராட்ட வேண்டும்.

நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி.

மறைபொருள் உண்டா?

என்ன செய்ய வேண்டும் ரஜினி என்ற பத்து விஷயங்களும் அதைப்பற்றிய உங்களின் விரிவான விளக்கமும் அருமை. இரண்டு முதல் 9வது கருத்து வரை அதையொட்டிய கருத்தை முன் வைத்த நீங்கள் அந்த ஒன்பதாவது மற்றும் பத்தாவது கருத்துக்கு மட்டும் ஏன் மௌனமாகி விட்டீர்கள்? ஏதேனும் மறைபொருள் உண்டா? சந்தேகம் தொடர்கிறது. அவரைப் பற்றிய கட்டுரையிலும் அவரைப்போலவே கருத்து தெரிவிக்க வேண்டுமா என்ன! ‘ஒளி இழந்த தாரகைகள்' சிறப்புப் பக்கங்கள் மனம் நிறைய செய்திகளைத் தந்த தொகுப்பு. அது போலவே அந்நாள், நடுநாள், இந்நாள் நடிகர்களைப் பற்றிய சிறப்புப் பக்கங்களையும் தருவீர்கள் என நம்புகின்றேன். அங்கும் உண்டு படிக்கவேண்டியபல பக்கங்கள்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89

சிலவரிகள்

ரஜினியின் புதுக்கட்சி பற்றிய பரபரப்பான கட்டுரையோடு வெளிவந்திருக்கும் அந்திமழை ஜூன் - 2017 இதழ் படித்தேன். அதில் ரஜினியின் புதுக்கட்சி பற்றிய சில வரிகள். ஏற்றத்தையும் ஏமாற்றத்தையும் மாறி மாறி பெற்றிருக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியானது. திராவிட இயக்கங்களினால் அடைந்திருக்கும் நன்மைகளை தமிழக மக்கள் அவ்வளவு விரைவில் மறந்துவிட மாட்டார்கள். எத்தகைய பழியை சுமத்தினாலும், பொய் வழக்கு களில் சிக்க வைத்து சீரழிக்க நினைத்தாலும், ஊடகங்களின் ஒத்துழைப்போடு ஒழித்துவிட நினைத்தாலும் அவை வெற்றி பெறாததற்கு இதுவே காரணம். இந்தச் சூழ்நிலையில் ரஜினி புதுக்கட்சி துவக்குவது அவருக்கு அவப் பெயரையேத் தேடித் தரும். ஏனெனில் இதற்கு முன்பே நடிகர்களை நம்பி ஏமாந்த அனுபவங்கள் தமிழர்களுக்கு உண்டு. ரஜினி ஓர் ஆன்மீகவாதி. அவருக்கு புரட்சிகரமான அறிவியல் திட்டங்களை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம்.அது அவரது எதிர்காலத்தையே இருள்மயமாக்கிவிடக் கூடும். இதனை உணர்ந்துதான் அவர் தயங்குகிறார். தலைவர்களுக்குத் தனித்த உறுதிமிக்க முடிவெடுக்கும் துணிவு வேண்டும். எனவே அவர் அரசியலில் பெறுவதைவிட இழப்பதே அதிகமாக இருக்கும்.

நெய்வேலி தியாகராஜன் கொரநாட்டுக்கருப்பூர்

அழகு

பா.கண்மணி எழுதிய ‘கிரௌஞ்சப் பறவை‘ சிறுகதை மிக அழகு. கதை சொல்லப்பட்ட விதம், சிறுகதை உலகில் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்.

க.பிரகாஷ்,ஈரோடு.

சாதனை

இதழ் இதழுக்கு இதழ் புதுமை பொலிய அந்திமழை செறிவும் சிறப்புமாக வெளிவருகிறது. கலைஞரின் 60, சுவையான தொகுப்பு; சாதனைகளைச் சரித்திரமாக்கிய வாழ்க்கைச் சித்திரம். ஆனால் ரஜினி என்ற மனிதர், எம்.ஜி.ஆர் ஆக முடியுமா? சரியான வினா. அத்துடன் விட்டுவிடாமல் ரஜினி என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்தல் அருமை. சிறப்புப் பக்கங்களில் நட்சத்திர வாழ்வில் மகளிர் தம் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். பரிதாபப்பட வைக்கும் செய்திகள் பல. பக்கத்திற்குப் பக்கம் அழகொளிரும் நேர்த்தியான அச்சு, வடிவமைப்பு, அழகிய படங்கள். சாதனை இதழ்.

கவிக்கோ.ஞானச்செல்வன், சென்னை -94

ஆளுமை

மு.க. 60 கட்டுரை சிறப்பாக இருந்தது. இந்திய அரசியலில் திருப்புமுனைகளை ஏற்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 1975 இல் நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட்டபோது மத்திய அரசுக்கு எதிராக சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி ஜனநாயகம் காக்க போர்க்குரல் கொடுத்தவர் கருணாநிதிதான். மண்டல் கமிஷன் விபிசிங் பிரதமராக இருந்தபோதுதான் அமல் செய்யப்பட்டது. இதன்மூலம் திராவிட இயக்கத்தின் சமூக நீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கை இந்திய அளவில் அமல் செய்யப்பட்டது என்பது வரலாறு. இந்தியாவின் நவீன கால அரசியலின் தவிர்க்கமுடியாத ஆளுமை முக.

இரா.மோகனசுந்தரம், சென்னை.