சினிமாவுக்குப் போன தமிழன் சிறப்புப் பக்கங்கள் சிறப்பு. தமிழனின் அந்தப் பக்க உணர்வுகளை தெளிவாகப் புரிந்தவர்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் அருமை. இதில் தொட வேண்டிய இன்னும் பல பக்கங்கள் உண்டு. அடுத்தும் ஓர் இதழில் தருவீர்கள் என்ற நம்பிக்கை மிகுதி. பின்னோக்கிய பயணம் யுவன் சந்திரசேகருக்கு மட்டுமல்ல. படிப்பவருக்கும் அந்த உணர்வுகளைத் தரும் வகையில் அமைந்து அவரது உணர்வுகளுடன் பயணிக்கும் அனுபவப் பிரமையையும் உருவாக்கி விட்டது எனலாம். சிறப்பான எழுத்து. அம்பேத்கருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்கிற ‘அறம்' கோபி நயினாரின் அறச் சீற்றம் நியாயமானதே. ஒப்பீடு என்பது அடிப்படையற்ற புகழுரை அல்ல.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89.
கிளர்ச்சியூட்டியது!
திமுக ஆட்சியின் ஓராண்டு குறித்த அரசியல் அலசல். திருவண்ணாமலை கிரிவல அனுபவம். கூடவே யுவன் சந்திர சேகரின் பயணக் குறிப்புகள். ஜூனியர் நிவாஸ் கே.பிரசன்னா, சீனியர் இயக்குநர் கோபி நயினார் நேர்காணல், ஷாஜியின் சங்கீதத் தொடர், இரா.முருகனின் முத்திரைச் சிறுகதை யாவும் முத்தாய்ப்பாக இருந்தன. எல்லோருக்கும் பால்ய தியேட்டர் அனுபவங்களை கிளறி கிளர்ச்சியூட்டிய சிறப்புப் பக்கங்கள். வழக்கம் போல, கடைசிப் பக்க திரைவிமர்சனம். கோடைக் கால சிறப்பிதழாகத் திகழ்ந்தது, மே இதழ்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78
ஹிட்டான பாடல்
நாகையருகே சிக்கல் ராஜா டூரிங் டாக்கீஸ் இடைவெளியில் கூம்பு ஒலிபெருக்கியில் முதன் முதலாக கேட்ட அந்தப் பாடல் என்னை ஈர்த்தது. ஆபரேட்டரை அணுகி, நேயர் விருப்பமாக விரும்பிக்கேட்க, மீண்டும் அந்த பாடல் ஒலித்தது. ஒரு சிலர் ஆபரேட்டருக்கு டீ, போண்டா வாங்கிக் கொடுக்க அடுத்தடுத்த நாட்களிலும் ஒரே பாடல் மீண்டும், மீண்டும் ஒலிக்க, படம் பார்க்கப் போகாவிட்டாலும், வெளியே நின்று கேட்டு ரசிப்பேன். படமே வெளியாகாமல், ஏன், படமே தயாரிக்கப்படாமல், பாடல் மட்டும் ஒலிப்பதிவாகி, இசைத் தட்டாக வெளியாகி இலங்கை வானொலியில் ஹிட்டானது. அந்தப் பாடல்: ‘ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே' படம்: மணிப்பூர் மாமியார். இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா குரலில் ஒலித்த அந்தப் பாடல் தியேட்டருக்குள் வெளியாகாமல் ஹிட்டான ஒரே பாடலாகும். சிறப்புப் பக்கங்கள் கிளறிய பால்ய அனுபவங்களில் என்பதிவு இது.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை - 61102
சீர்காணல்!
நேர்காணல் பகுதியில் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் பேட்டி ஸ்வீட்டியாக இருக்கிறது. இளமையின் இசையின் இசை ஆர்வம் என்னென்ன ரியாக்ஷன்களை அவருள் உருவாக்கியது என்பதையெல்லாம் நேர்காணலில் சீர்காணலாகப் பிரதிபலிக்க வைத்துள்ளார்.
மருதூர் மணிமாறன், இளையான்குடி 627 651
மென்மை
தமிழ்க்கனலின் ‘சொன்னதை செய்தார்--- களா?' கட்டுரையின் இறுதிப் பத்தி அச்சு அசலாக யதார்த்தம். உண்மையை மென்மையாக உரைத்திருக்கிறார்.
எந்த அலுவலகம் போனாலும் லஞ்சம் இருக்கிறது மேடையில்; ஏழை எளியவர் தொடுத்த மனுக்கள்
சேர்வது குப்பைக் கூடையில். அனுப்பிய மனுக்கள் எதிர்பார்த்து ஏங்கி லட்சக் கணக்கான மக்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக் கின்றார்கள் என்பதை விளக்கியது அருமை.
சி.பொன்ராஜ், மதுரை
கிரிவலம்
ஓராண்டைக் கடக்கும் திமுக அரசு தரப்பிலான கட்டுரை டபுள் சூப்பர்! சினிமாவுக்கு போன தமிழன் தலைப்பிலான கட்டுரைகள் சூப்பர். எதை பாராட்டுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அகம்& முகம் பகுதி அருமையாக உள்ளது. நாங்களும் திருவண்ணாமலை கிரிவலம் செய்ய புறப்பட்டுவிட்டோம்.
அ.முரளிதரன், மதுரை
உழைப்பிற்கு முக்கியத்துவம்
திமுகவின் ஓராண்டு சாதனையைப் பற்றி தமிழ்க்கனல் எழுதியுள்ளார். திராவிட மாடல் கட்சி, சமூக
நீதி கட்சியென்று பெருமைக்கு கூறலாம். நடைமுறையைத் தினம் செய்தித்தாளில் பாருங்கள். தியாகம் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை. இலவசம் என்று சொல்லியே திராவிட பாரம்பரியம் நாட்டைக் கெடுத்து வராமல், உழைப்பிற்கு முக்கியத்துவம் வந்தால், நாடு சிறக்கும்.
தோழர் இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்
நலம்
அறம் போன்ற தரம்மிக்க படம் தந்து திரையுலகின் வரம் போல் வலம் வந்து பலம் சேர்க்கும் கோபி நயினாரின் நேர்காணல் நலம் பயப்பது! அறம்-2 க்கான முயற்சி தொடர்வதைக் கூட பின்னணியில் சில சாக்குகள் பின்னிப் பெடல் எடுப்பதை அவர் காட்டிய விதம் விழிகளிலிருந்து கொட்டிவிட வைத்தன. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா குறித்த கேள்விக்கு, உண்மையான ஜனநாயக-வாதியான அவரை உலகில் யாரோடும் ஒப்பிட முடியாதென்ற அவரின் ஆணித்தரம் அபாரத்திறம்! இது கூட அறம் தான் .
எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன், தூத்துக்குடி
தமிழனின் முகம்
சினிமா தமிழனின் ரத்தத்தில் கலந்தது. திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டது பழைய திரைப்படக் காலங்களில் தான். நேர்மறை சிந்தனை, குடும்ப உறவு, பாசம், தத்துவம், தாலாட்டு, சோகம் என பழைய திரைப்படங்கள் திரையரங்கை நோக்கி ஈர்த்தன தமிழர்களை. நல்ல படம் பார்த்தேன் என்ற மனத் திருப்தியும், சந்தோஷமும் படம் முடிந்து வெளிவரும் தமிழனின் முகத்தைப் பார்த்தே அறிய வைத்தது ஒரு காலம். தியேட்டர்கள் இடிக்கப்படும் நிகழ்வைக் கேள்விப்படும் போதெல்லாம், அதன் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பது தமிழனின் இதயம் என்பது எத்தனை பேருக்கு புரியும்? திரையரங்குகளை நேசித்த தமிழனின் கண்ணீர்த் துளியில் பிம்பங்களாக தெரிவது, மாலையில் திரையரங்கை நோக்கித் துள்ளி ஓடும் தமிழனின் சந்தோஷ முகம்!
கீ. மோகன், சேலம் - 01
சுவாரஸ்யம்
ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய சினிமா கட்டுரை எங்களின் இதயங்களைத் தொட்டுப் பரவச மூட்டியது அழகான,நேர்த்தியான, நடை.
கே.குப்புசாமி, சென்னை- 93
நடுநிலை
ஓராண்டைக் கடக்கும் திமுக அரசு! சொன்னதை செய்தார்களா? கட்டுரை கனகச்சிதம். எவ்வித அரசியல் சார்புமின்றி நடுநிலையோடு எழுதியிருக்கிறார் தமிழ்க்கனல்!
பவளவண்ணன், நடுவிக்கோட்டை
50 ப்ளஸ்
சினிமா சிறப்பிதழாக மே திங்கள் இதழ் மிளிர்கிறது. 50 பிளஸ் அனைவரும் சந்தோசக்கடலில் நீராட வைத்துவிட்டீர்கள். நல்ல தொகுப்பு. தனியே எடுத்து வைத்து விட்டேன். எனது மூன்று வயது பேத்திகள் (இரட்டையர்கள்) வளரும்போது நாம் அனுபவித்த ஆனந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.
ந மனோகரன் (பாரதி மணா) சிங்கை, கோவை - 5.
விடாமுயற்சி
மே மாத அந்திமழை இதழில் பிரசுரமான இலவசமாக இசை கற்றுத்தருவேன் என்னும் நிவாஸ் கே.பிரசன்னா அவர்களின் நேர்காணல் அவருடைய இசையின் தேடலையும், விடாமுயற்சியையும் காட்டியது.
மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.
பெங்களூரு திரையரங்குகள்
சினிமாவுக்குப் போன தமிழன் சிறப்புப் பக்கங்கள் அருமை.
சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் திரையரங்குகள் மறைந்தாலும் குறைந்தபட்சம் இது போன்ற கட்டுரைகளிலாவது வாழ்கின்றன.
இந்த வாய்ப்பும் கிடைக்காத தியேட்டர்கள் என்றால் பெங்களூரு போன்ற பிற மாநிலங்களில் தமிழனை மகிழ்வித்த தியேட்டர்கள்தான்.
சுஜாதா எழுத்துகளில் சில திரையரங்குகள் பதிவாகி சாகாவரம் பெற்றன. உதாரணமாக பெங்களூரு சிக்பேட் விஜயலட்சுமி தியேட்டரை அவர் அவ்வப்போது குறிப்பிடுவார். அங்கே ஆங்கிலப்படம்தான் திரை-யிடப்படும் என்றாலும் தமிழன்தான் அதிகமாக அங்கே செல்வான். இரண்டு ஆண்டு- களுக்கு முன்பு வெளியான திரைப்படங்களை தற்போது யாரும் திரையிடுவதில்லை. இப்படி சற்று பழைய தமிழ்த் திரைப்படங்களை பார்க்க வசதி செய்து தந்த திரையரங்குதான் சூப்பர் டாக்கிஸ்.
சற்று சொகுசாக தமிழ்ப்படம் பார்க்க முடிந்த பல்லவி தியேட்டரில்தான் தளபதி, ரோஜா, குணா என பல படங்களை ‘தமிழன்' பார்த்தான். அவையும் இன்று இல்லை.
50 வருடங்களாக பெங்களூரு தமிழர்களை மகிழ்வித்து வந்த நடராஜ் தியேட்டர் மூடப்பட்ட செய்தி அறிந்த போது பல பெங்களுர் தமிழர்கள் அதை தமது உறவினர் மறைவு செய்திபோலவே உணர்ந்தனர்.
அந்தக்காலத்தில் தமிழ்ப்படங்களின் செல்வாக்கில் இருந்து கன்னடப் படங்களைக் காக்க பல்வேறு சலுகைகளை கன்னடப்படங்களுக்கு வழங்கியது கர்நாடக அரசு. ஆனால் இப்போது கன்னட டப்பிங் படங்களால் நம்மூர் வருங்கால முதல்வர்கள் படங்கள் அடிவாங்குவதால், பிறமொழிப்படங்களிடம் இருந்து தமிழ்ப்படங்களைக் காக்கும் முயற்சியில் நாம்தான் இறங்க வேண்டி இருக்கிறது. ஆனால் அவர்கள் செய்ததுபோல திரையரங்குகளைக் கட்டுப்படுத்தி இதை சாதிக்க முடியாது. காரணம் சினிமா பார்க்க திரையரங்குகளை மட்டுமே நம்பி நாம் இல்லை. திரையரங்குகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் யோசிக்க வைத்த சிறப்புப் பக்கங்களுக்கு நன்றி.
பிச்சைக்காரன், சென்னை
ஜூன், 2022