எஸ்.ராமகிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் பற்றிய கட்டுரை மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் பற்றிச் சொல்ல அவரிடம் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று தெரிகிறது. ப.சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர் நாடகங்களை சிலவற்றை தமிழாக்கியிருக்கிறார். அமலாதித்தன் (Hamlet), மகபதி (Macbeth), வெனிஸ் வணிகன் (The Merchant of Venice) போன்றவை சில. நிறைய வரிகள் கவிதையாகவே அமைந்திருக்கும். ஹாம்லெட்டின் To be or not to be என்ற வரிகள் ‘இருப்பதா இறப்பதா என்பதே கேள்வி' என்று தொடங்கிச் செல்கிறது. The Merchant of Venice-இல் நீதிமன்றத்தில் போர்ஷியா கூறும் The quality of Mercy is not Strained என்ற வரிகள் இரக்கம் என்பதன் இனிய இயல்பு வருத்தி வருதல் அன்றென அறிக வானில் இழியும் மெல்லிய மழைபோல் நானிலம் வீழ இருவகை நலத்தது அரியணை மன்னர்க்கு முடியினும் தக்கது ஈவான் பெறுவான் இருவரும் உய்வர்.., என்று இனிய நடையில் தொடர்கிறது. க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கையில் அந்த நாடகங்களை எழுதியது ஷேக்ஸ்பியர்தானா என்ற சர்ச்சை பற்றி பேச்சு வந்தது. ‘அவற்றை எழுதியது ஷேக்ஸ்பியர் அல்ல. வேறொருத்தர். ஆனால் அவர் பெயரும் ஷேக்ஸ்பியர்தான்' என்றார் அவர் வேடிக்கையாக.
எம்.எஸ்., நாகர்கோவில்
இந்த மாத அந்திமழையின் சமையல் பகுதியில் வெளியான,சமையல் குறிப்புகள் வித்தியாசம், அவர் கூறிய அனைத்தும் வித்தியாசமாக இருந்தது! குழந்தைகளை சமையல் கட்டுக்குள் நுழைய விடாத ஹிட்லர் தான் தாய்மார்கள், ஏதாவது வில்லங்கம் ஆகிவிடுமோ என்ற அச்சத்தால். ஆனால் இவரோ குழந்தைகளை சமையலுக்கு பழக்குங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். பலே பலே, நல்லதோர் அறிவுரை தான், நன்றி! அது குழந்தைகள் கற்றுக்கொண்டதும் ஆச்சு, அடம் புடிக்காம சாப்பிட்டது போலும் ஆச்சு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம்.
இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.
‘எழுத்துப் பிழை' உலவும் உயிர்ப் பிழைகளை கதாபாத்திரங்களாகக் கொண்ட சிறப்பான படப்பிடிப்பு யதார்த்தமான பார்வை சிறுகதையின் தனித்துவம். விடுதிகளாக மாறிய வீடுகள் & உறவுகள் உறிஞ்சும் சொந்தங்களாக சொத்து உள்ளவர்களுக்கு மாறிப்போகும் அவலத்தை விரிவாகச் சொல்லியது. மருத்துவமனைப் பொறுப்பில் மனித மனங்களை நன்றாகவே வாசித்திருக்கிறார் ராம் பாபு. இறக்குமதி ரூ.36 ஆயிரம் என இருந்த டிவி பூஸ்டரை 12 ஆயிரத்துக்கு தயாரித்து தந்த ராமராஜிக்கு தொழில் வணக்கம். தேர்தல் களத்தில் பெண் முகங்கள் 25 பேர் சரிதான். இவர்கள் வென்ற பிறகு அவர்களின் ‘அய்யா' முகங்கள் அல்லவா அந்த இடத்து அரிதாரத்தைப் பூசிக் கொள்கின்றன.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
ஒரு மீனின் கதை& பழனிபாரதியின் கட்டுரை கவிஞர் வாலி அவர்களது திறமைகளையும், திரையுலகம் மட்டுமின்றி அரசியல் களத்திலும் அசைக்க முடியா செல்வாக்கினைப் பெற்ற எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களையும் செவ்வனே வெளிப்படுத்தின. ‘‘முத்தமிழ் பாலருந்த மூல காரணம், நான் முஸ்லீம் பால் குடித்ததுதான் எனும் வாலியின் கூற்று எத்தகைய உயர்ந்த உணர்வுடையது. அபூர்வமான தகவல்களை அடங்கிய பழனிபாரதியின் கட்டுரையினை வெளியிடும் ‘அந்திமழை' இதழுக்குப் பாராட்டுக்கள்.
கு.இரவிச்சந்திரன், ஈரோடு.
சமையல் டிப்ஸ் அருமை. குழந்தைகளை சமையலுக்குப் பழக்குங்கள்! அருமையான தலைப்பு. அட்டகாசமான கட்டுரை. உலகம் உன்னுடையது கட்டுரை சூப்பர். கடைசிவரிகளை கொட்டை எழுத்துகளில் போட்டிருக்கலாம்.
அ.முரளிதரன், மதுரை
முகப்பு கட்டுரையில் 25 பெண்முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். என் சமையலறையில் வெளிவந்த சமையல் டிப்ஸ் ஒவ்வொன்றும் மிக மிக அருமை. கற்றாழை ஜூஸ் மற்றும் பன்னீர் பாயாசமும் செய்து பார்த்தோம். சுவையோ சுவையை அனுபவித்தோம். இதழ் அந்திமழை மட்டுமல்ல..சந்தோஷ மழையுங்கூட.
சு.இலக்குமணசுவாமி, மதுரை.
ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மங்கையர் குலம் இன்று சட்டங்கள் செய்திட சட்டமன்றங்கள் நோக்கிச் செல்வதை எண்ணும் போது, இது ஓர் யுகப்புரட்சியாய் தான் தோன்றுகிறது, இன்னும் ஏராளமான பெண்கள் செல்லவேண்டும், இனியாவது நம்மில் சரிபாதியாக பெண்களைப் போற்றி புதிய சமுதாயம் படைப்போம்.
இராம.முத்துகுமரனார், கடலூர் துறைமுகம்.
ஆங்கில இலக்கிய நாடக படைப்பாளிகளில் ‘‘சூப்பர் ஸ்டார்'' ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு தினத்தில் ‘‘ஷேக்ஸ்பியர் வாழ்கிறார்'' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒரு அற்புதமான ‘‘நினைவஞ்சலி''. நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமானுடன் தொலைபேசி மூலம் நடத்திய நேர்காணலில் கேட்கப்பட்ட ஆறு கேள்விகளும் அர்த்தமுள்ளவை. அது நடு நிலையாளர்களின் உள்ளங்களில் உள்ள கேள்விகள்!
மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை
ஷேக்ஸ்பியர் பற்றிய எழுத்துச் சித்திரம் அழகு. என் ஞாபகம் சரியென்றால் ‘நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்' தயாரித்த ‘அன்பு' படத்தில் சிவாஜி ஒத்தெல்லாவாக நடித்துள்ளார்! ‘‘எம்.ஜி.ஆர் ஹாம்லெட்டைத்தழுவி புதுமைப்பித்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கினார்'' என்ற விபரம் சரியல்ல. புதுமைப்பித்தன் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. அந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார் அவ்வளவே! படத்தை வழங்கியவர் குடியாத்தம் கே.எம்.முருகேச முதலியார். என்றாலும் திரு.எஸ்.ரா ‘ஷேக்ஸ்பியர்' பற்றி வழங்கிய சொற்சித்திரம் ஒரு கல் மேல் எழுத்து எனலாம். அவருக்கு நன்றி சொல்கிறேன்!
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.