கடிதங்கள்

விழிப்புணர்வு

Staff Writer

ஜூன் இதழில் இடம் பெற்றிருந்த அரசியல் கட்டுரைகள் இன்றைய அரசியல் களத்தை ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பது அருமை. தமிழகத்தைப் பொருத்தவரை புதிய வாக்காளர்களிடம் விழிப்புணர்வு  ஏற்பட்டிருக்கிறது. பாஜக வெற்றிக்கு நரேந்திரமோடியின்  ஆளுமை மற்றும் கூட்டணி வியூகங்களும்தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. எப்படியாயினும் 'அனைவருடனும் ஒன்றிணைந்த அனைவருக்குமான வளர்ச்சி' எனும் மோடியின் தாரக மந்திரம் வெற்றி பெறுமாயின் நாட்டுக்கு நல்லதே! தனக்கேயுரிய நடையழகால் படிப்பவர்களை திருமாவேலன் நெகிழச் செய்துவிட்டார். தமிழ்ப் பதிப்புலகம்  நேற்று &இன்று& நாளை, சிறப்புப்பக்கங்களில் விரிந்திருக்கும்  பதிப்பாளர்களின் நேர்காணல்கள் எழுத்தாளர்கள்-& பதிப்பாளர்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக அமைந்திருப்பது சிறப்பு.

நவீன் குமார், பட்டுக்கோட்டை

ஊர் அறிந்தது

மு. க ஸ்டாலின் வெற்றிமுகம் என்ற கட்டுரையைக் கண்டேன். கடைசி  வரிகள் மிக பிரமாதம்.

செல்வன் எழுதிய தோல்விக்கு என்ன காரணம்? &கட்டுரையை வாசித்தேன். என்னதான் பாஜக தலைகீழ் நின்று தண்ணீர் குடித் தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அத்தோடு கூட்டணி சேர்த்துக்கொண்ட கட்சிகளும் தேர்தலில் தோற்றுப்போகும் என்பது ஊர் அறிந்த வரலாறு

அ. முரளிதரன், மதுரை

இனியாவது

புத்தக விற்பனை சரிந்து, பதிப்பகத் தொழில் நசிவதை அறிந்து மனம் அழுதது. புத்தகங்களை எதற்கு வாசிக்க வேண்டும்? அந்த பழக்கம் இல்லாமலேயே  சம்பாதித்து சந்தோஷமாகத்தானே வாழ்கிறோம் என்ற மனப்பாங்கு தமிழனிடம் ரொம்ப காலமாகவே இருக்கிறது. தலைப்புச் செய்திகளை மட்டுமே வாசித்து விட்டு இண்டலெக்சுவல் போல் அன்றைய டீக்கடை பெஞ்ச் முதல் இன்றைய இணைய தளம் வரை வெட்டி அரட்டையடிப்பதே பொழுதுபோக்கானது. இதனால் இன்றும் சிட் பன்ட்ஸில் ஏமாறுகிறான். தரம் தாழ்ந்தவனையே தலைவனாக  ஏற்கிறான். கேளிக்கை படங்களையே  ரசிக்கிறான். போலி சாமியார்களிடம் சிக்குகிறான். கடன் தொல்லை, காதல், தேர்வில் தோல்வி என வாழ்வில் சிறு சிக்கல் என்றாலும், அதற்கு தீர்வு தெரியாம தற்கொலை செய்துகொள்கிறான். காரணம் சுய சிந்தனையின்மைதான். அதை வளர்க்கக் கூடியது புத்தக வாசிப்புத்தான். வாசிப்பை தொடங்கினால்தான் அதன் பயன்பாட்டை உணர முடியும். இணையம் என்பது தகவல் தரும். கிண்டிலில் வாசித்தாலும், புத்தகம்தான் சிந்தனையை விசாலப்படுத்தி, அறிவை கூர்மையாக்கி, சுய புத்தியை உருவாக்கும். இனியாவது முயற்சித்துப் பாருங்களேன்.

 அ.யாழினி பர்வதம், சென்னை

எதிர்காலம்

அ.தி.மு.க எதிர்ப்பு அலையால்தான் பாஜக தோற்றது என்ற பாஜக செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மாவை ஆட்சி கலைக்கப்படும் என்ற அச்சத்தால்தான் அதிமுகவால் வன்மையாக கண்டிக்க முடியவில்லையே! தவிர உண்மை அதுவல்லவே! நீட், எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் முதல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரை மோடி அரசே காரணமென வாட்ஸ் ஆப் வதந்திகள் மக்களை நம்பவைத்தன. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் கஜா நிவாரணம் தராதது வரை தமிழகத்தை  பாஜக  மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை உறுதி செய்தன.  எனவே,  தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை கைவிட்டு, காவிரி நீர் பெற்றுதந்து, போதிய நிதியுதவி செய்து மக்கள் ஆதரவைப் பெறுவதே தமிழக
பாஜகவிற்கு எதிர்காலம் தரும்.

அண்ணா அன்பழகன் , அந்தணப் பேட்டை        

நாவுக்கரசர்

நாவுக்கரசர் நாஞ்சிலார் பற்றி படித்தபோது பழைய நினைவுகள். திமுக மாணவர்  கிளையின் சார்பாக கும்பகோணத்தில், போர்ட்டர் டவுன் ஹாலில் 18.1.1957ல் நடைபெற்ற கூட்டத்தில் கபிஸ்தலம் சௌந்தரராசன் (மூப்பனார்)அவர்கள் தலைமையில் 'ஜனநாயகக்குடியரசு' என்ற தலைப்பில், நானும் அவரும் பேசினோம். உலக அரசியலை அழகு தமிழில் அருக்கே உரித்தான பாணியில் பேசி மாணவர் உள்ளங்களைக் கவர்ந்ததை என்னால் மறக்க முடியாது. அந்த விளம்பர அறிக்கையை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

மாறுமா?

தோப்பில் முகமது மீரான் ஒரு இஸ்லாமிய சமூக அமைப்பில் உள்ள யதார்த்தத்தை துணிந்து எழுதிய தோழர். கம்பீரமான தோற்றம் எடுப்பான பேச்சு. சமீபத்தில் இஸ்லாமிய தொடக்க பள்ளியில் நடந்த கூட்டத்தில் பேசிய பின்பு தனிமையாக அவரிடம் உரையாடிய காட்சி, அப்படியே மனதில் இன்னும் நிற்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்களின் அவலம் என்று மாறப் போகிறது? உலகத்தில் அவர்கள்தான் கடமை உணர்வோடு நடந்து கொள்கிறார்கள்.  வாழ்க்கைத் தரம்தான் உயரவில்லை.

ரா. சண்முகவேல், நெல்லை மாவட்டம்

நூலகங்கள்

தமிழகப் பதிப்புத்துறை வளர்ந்த முறை இன்றைய நிலை, வருங்கால சவால்கள் பற்றிய சிறப்புப் பக்கங்கள் நிதர்சனத்தை வெளிப்படுத்தியது. புத்தக வாசிப்பு பரவலாக மேம்பட்டுள்ளது என்று எடுத்துகொண்டாலும், பதிப்பகம் தொடங்கி நடத்துவது சிரமம் என்பதை அறிய முடிகிறது.

ஓர் அறிவார்ந்த சமூகம் உருவாக பதிப்பகத்தின் வளர்ச்சி மிக முக்கியம். நேர்காணல்கள் மூலம் பதிப்பகங்களின் இன்றைய நிலையை அறியும்போது வேதனையே மிஞ்சியது.  பதிப்பகம் நடத்துபவரின் முகத்தில் சந்தோஷம் மலர வேண்டுமானால் தமிழ் மக்கள் நூல்களை விலைகொடுத்து வாங்கி படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  அரசும் நூலகங்களும் தொடர்ந்து நூல்களை அச்சடிக்க வேண்டும்.  ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் மக்களிடையே பரவலாக வேண்டும். புதிய எழுத்தாளர்களின் படைப்பை மக்கள் வரவேற்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் நூலகம் என்ற நிலை ஏற்பட வேண்டும். டாஸ்மாக் மூலம் முக்கிய பண்டிகை நாட்களில் குடித்து தீர்க்கும் தமிழக மக்கள் புத்தக வாசிப்பிற்கும் இலக்கு நிர்ணயித்து படிக்க முயன்றால் பதிப்பகம் வளரும். தமிழக மக்கள் முயற்சிப்பார்களா?!

ரா. மோகன் , சேலம்

பதிப்புலகு

மறக்காத முகங்கள் வரிசையில் மணா, சகஸ்ர நாமம்  பற்றி எழுதியது மிக அருமையான பதிவு. 'கலை மக்களுக்கு புரியலைன்னா நாம்தான் நம்மை மாதிக்கணும்' என்ற கருத்து ஒரு வகையில் எல்லோருக்குமான பாடம்கூட. தமிழகத்தில் தங்கள் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை  அதிமுகவும் பாஜகவும்  உணர்ந்தாலும்  அதை மறைத்தே போலிக் காரணங்களையும் பேசி வருகின்றன. எதிர்க்கட்சிகளோ மௌனப் புலம்பலில். மீட்பர் யாரோ? தமிழ்ப் பதிப்புலகு நேற்று இன்று நாளை!&மிக அருமையான தலைப்பு. பதிப்பாளர்கள் அனைவருமே மிகப்பக்குவமான பார்வையில் பேசி இருந்தார்கள். பேராசிரியர் வி.அரசுவின் 'இரட்டைமலை சீனிவாசன் முதல் திருமாவளவன்வரை' &பல நுணுக்கமான பார்வைகளைக் கொண்ட கட்டுரை. காலச்சுவடு கண்ணன், கிழக்கு பதிப்பகம் பத்ரியின் நேர்காணல், பதிப்புலகு சார்ந்த சில முகங்களை பிரச்சனைகளுடன் அடையாளம் காட்டியது. பதிப்பகம் நடத்தும் எழுத்தாளர்,வாசகன் எதிர்பார்க்கும் அணுகுமுறை போன்ற தலைப்புகளையும் தொட்டிருக்கலாம்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,

சென்னை – 89.

அரசியல் சூழல்

தமிழ்ப் பதிப்புலகு பகுதி சமகால சூழலில் மிகவும் அவசியமான ஒரு ஆவணம் என கருதுகிறேன். பதிப்பகத் துறையில் நிலவும் சவால்களையும், சிக்கல் களையும் உணர்ந்து, வாசகர்களாக இத்துறைக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பை மேற்கொள்ள தூண்டும் வகையில் கட்டுரைகளும், நேர்காணல்களும் இருந்தன. அதேபோல், காமிர கண்கள் பகுதியில் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரத்தை பதிவு செய்துவரும் பழனிகுமாரின் நேர்காணல் என்னை மிகவும்
பாதித்தது. குறிப்பாக துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்தில் ஓளமிடும் பெண்கள், இருள் சூழ்ந்த புகைப்படங்களில் காட்சியளிக்கும் குழந்தைகள் மனதை கனக்க செய்கின்றனர். மக்களவை தேர்தல் முடிவுகளை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் அரசியல் சூழலை சரியாக அணுகியிருந்தன.

கலையரசன், பேராவூரணி