கடிதங்கள்

உண்மை

Staff Writer

சொல்லப்படாத கதையின் நாயகர் பல்ராஜ் மதோக் பற்றி, தெளிவான பல விவரங்களை  அறியவைத்தார் பாரதி மணி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் -  என்ற வாசகம்  எல்லோருக்கும் பொருந்தும்தானே. அத்வானி உட்பட.

'அவர்கள் அவர்களே' தொடரில், திருமாவேலன் கவிஞர் வாலியைப் பற்றி எழுதியிருந்தது என்னை அதிகம் பிரமிக்க வைத்தது. கவிஞர் வாலி ஈர்ப்பு மிக்க எளிமை கொண்டவர் என்பதை உணர்த்திக்கொண்டே  இருப்பார் என்று அவரை நெருங்கி அறிந்த என் நண்பர்கள் சிலர் சொன்னதை இந்தத் தொடர் மூலம் உண்மை என்று அறிந்துகொண்டேன். அறிவுக்கும் வயிற்றுக்கும் ஒரு சேர உண்ண வேண்டுமானால் நாஞ்சில்நாடனிடம் மண்டியிட்டுத்தான் கேட்க வேண்டும்.

தஞ்சை என்.ஜே கந்தமாறன் , சென்னை - 89

நல்லாட்சி

தேர்தல் களத்தில் கே. எஸ். ராதாகிருஷ்ணன் (திமுக) ஒட்டப்பிடாரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் , 'தண்ணீர் தண்ணீர்' படம் இவற்றைப் பற்றி பேசியதைப் பார்த்தேன். இயற்கை பொய்த்துவிட்டால் யாராலும்
சொன்னதைக் காப்பாற்ற முடியாது.  தண்ணீர் தண்ணீர் படம் வந்து எவ்வளவும்  வருடங்கள் ஆகிவிட்டது? ஆட்சியாளர்கள், என்ன செய்தார்கள்?   இந்தத் தேர்தலில் பணம் விளையாடி இருக்கிறது.  வாக்குகளை விற்க மாட்டேன் என்று கூறுவதெல்லாம் வெறும் கதைக்காகத்தான். நல்லாட்சி மலர வேண்டும் என்பதே எனது எண்ணம்.

இரா. சண்முகவேல்  கீழக்கலங்கல்.

நம்பிக்கை மனிதர்கள்

இண்டர்வியூக்காக வந்திருக்கும் இரட்டை ஜடை பெண் பாத்திரம் இவனைக் கவர்வது வெற்றித் தேர்வுக்காகப் படித்தோய்ந்த கண்ணன் மனநெருக்கடிக்கு ஆளாகிடாமல் இருக்கவே அந்தப் பெண் பாத்திரத்தை ஒப்பேற்றியுள்ளார் கதாசிரியர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 'ஐ லவ் யூ' என்கிற வார்த்தைப் பிரயோகம் பரஸ்பரக் காதலுக்கானதல்ல. தன் பணியின் மீதான  நேசிப்பாக, கண்ணன் மூலமாக  கதை முடிவுறுவது அருமை. மனிதனின் மன ஊடாட்டங்களுக்கு இடையே ஆறுதலையும் தேறுதலையும் கதை சொல்லத் தவறவில்லை. சரவணன் ராஜேந்திரன், விஜய் ஆண்டனி என விரிவு பெற்ற சாதனையாளர்களது கட்டுரைகள் இரண்டும் ஒரே இழையோட்டத்தால் மட்டுமே பின்னப்பட்டு இருந்தன. வெற்றியின் இலக்கை நோக்கிய பயணம் என்பது தன்னம்பிக்கை, துறை சார்ந்த நேர்மை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய தொழில்நாட்டத்தின் மீது குவியவேண்டிய கவனம் என இரண்டு கட்டுரைகளிலும் விரவி இருந்ததை என்னால் முழுமையாக உணர முடிந்தது. 

செல்வவிநாயகம், சென்னை.

நல்ல கட்டுரை

'கதையல்ல நிஜம்' என்ற தலைப்பில் ஜி. கௌதம் எழுதிய கட்டுரை, உழைப்பின் உன்னதத்தை அற்புதமாகப் பதிவு  செய்திருக்கிறது. இந்தக் கட்டுரையைத் தமிழ், துணைப்பாடப் பிரிவில் சேர்த்துக்கொள்ளலாம். இராமஸ்வாமி உழைப்பின்
சிகரம். ஒரு குடும்பத் தலைவன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தவர். வீட்டிற்குவந்த மருமகள் இன்னொரு தாயாக மாறி கணவரின் உடன் பிறப்புகளைப் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்' என்ற வரி அன்னாரின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு. அந்தப் பெரிய மனிதனை இரண்டு கரம்  கூப்பி வணங்குகிறேன். தேர்தல் கால கருத்துக் கணிப்புகள் பற்றிய அறிவியல் சார்ந்த ஆய்வு சிறப்பாக இருந்தது. நாஞ்சில் நாடனின்'மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்' கட்டுரை செட்டிநாட்டு விருந்தினை நோக்கி அழைத்துச் சென்றது.  அண்ணாவுக்கு முன்னால்

வாசித்த'நலம்தானா' பாடல், என் 76 வயதில் நான் விரும்பிக் கேட்கும் பாடல்.

இராம. இலக்குமணன் , காஞ்சிபுரம்.

நூல் எழுதுக

ஏப்ரல்  மாத இதழில் வெளியான முழுநம்பிக்கைக்குப் பாத்திரமான  சுயவிளம்பரத்தை முற்றிலும் விரும்பாத சோலை என்னும்
சர்வோதயச் சான்றோர் குறித்த திருமாவேலனின்  கட்டுரை ஒரு குறுங்காவியப் படையல் என்றே சொல்லலாம்.'மிகப்பெரிய வரலாற்றை ஒன்றை வரியில் முடிப்பார்,''சீன  இந்திய மேலாதிக்கப் போரில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள்'
சோலை வெளியிட்டுள்ள இந்த வரலாற்று உண்மையை, இந்திய ஆட்சியில் அடுத்து அமர இருப்பவர்கள் புரிந்துணர்ந்து செயல்படுவார்களாக. சோலை என்ற இப்புனித ஆளுமை பற்றி விரிவான ஒரு நூல் எழுதி வெளியிடுமாறு எழுத்தாளர் திருமாவேலனை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

க.சி. அகமுடைநம்பி, மதுரை.

வெற்றிக்குக் காரணம்

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் தொழில் கற்றுக் கொள்ளும் முன்பே ஒழுக்கத்தைக் கற்றுக். கொண்டதே இயக்குநர்
சரவணன் ராஜேந்திரன் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் குறித்தும் எழுதி சமன் படுத்தியுள்ளது அந்திமழை. பாடலாசிரியர் வாலி அவர்களை பாட்டுடைத் தலைவன் என பாராட்டி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் திருமாவேலன்.  பாடலையும் தாண்டி ஒரு பெருங்கவிஞன் என்று போற்றியுள்ளார். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் பெயரன் விஜய் ஆண்டனி என்னும் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா போல ஒரு படைப்பாளியாக வேண்டும்.  வெல்வது யார் என்னும் கட்டுரையில் மாநிலக் கட்சிகளின் கை உயர்ந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார் என மனம் கவர்ந்துள்ளார்
நாஞ்சில் நாடன்.  தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஆருடம் போலத்தான். ஆருடங்கள் மெய்யாவதும் இல்லை.

பொன். குமார், சேலம் -  636006.

பழைய நினைவுகள்

பள்ளிக்காலத்தில் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோவிற்கு முள்ளும் மலரும் படத்திற்குச் சென்றிருந்தேன். இடைவேளையின்போது புத்தகப் பையைத் தலைக்குக் கொடுத்துவிட்டு சில நிமிஷம் கண் அசரலாம் என்றால், முறுக்கு, டீயுடன் ஒருத்தர் நின்றார். யார் வாங்கிக்கொடுத்தது என்று அவரைக் கேட்டேன். சேர் டிக்கட் பக்கம் கை நீட்டினார். அட அப்பா! தொப்பியும் இல்லை, பூட்சும் இல்லை. மப்டியில் வெள்ளை வேட்டி சட்டையுடன் அப்பா.. அவரும் வேலைக்குப் போகவில்லை. கான்ஸ்டபிளான அப்பா என்ன பொழப்பு என சினிமாவுக்கு வந்திருந்தார். அவர் தீவிர ஜெயசங்கர் ரசிகர். அப்பா பார்த்துவிட்டாரே என்று வருத்தம் சிறிதும் இல்லை. படத்தில் ஆழ்ந்துவிட்டேன். வீடு வந்து இரவு திண்ணையில் படுத்திருந்தஅப்பாவைக் காணவில்லை. செகண்ட் ஷோவிற்குச் சென்றுவிட்டார். அலைந்து திரிந்துவிட்டுத் தூங்கவேண்டிய நேரத்தில் அவருடைய மூளையில் இரண்டாம் முறை முள்ளும் மலரும். மகேந்திரனுக்காக சென்றுவிட்டார். என் அப்பா இரண்டாவது முறை பார்த்த படம் அது ஒன்றுதான். அண்ணா அன்பழகனின் கட்டுரை, மகேந்திரன் என்ற மகத்தான கலைஞன் பற்றிய பழைய நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. மணா எழுதிய மறக்காத முகங்கள் கட்டுரையில் நாதஸ்வர இசையில் கரைந்துபோனேன். தில்லானா மோகனாம்பாளில் நலந்தானா பாடல் எத்தனை யுகங்கள் ஆனாலும் மறக்கவே முடியாது.

எஸ். பஞ்சலிங்கம்,

மடத்துக்குளம்.

மண்டியின் சுவை

நாஞ்சில்நாடனின் மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார் படித்தேன். தமிழகத்தின் பாரம்பரிய உணவுவகை பற்றிய கட்டுரைதான் என்றாலும், அதில் அவர் பதிவு செய்திருக்கிற
சுவாரஸ்ய அனுபவங்கள், பயணம் போன்றவை அருமையாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக நாஞ்சில்நாடனின் மொழியும், சொற்களுக்கு அளித்துள்ள விளக்கங்களும் வியப்பை ஏற்படுத்துகின்றன. உணவுவகை பற்றியக் கட்டுரையிலும் தனது எழுத்தாளுமையை நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருக்கிறார். அடுத்தமுறை காரைக்குடி
சென்றால் எப்பாடுபட்டாவது மண்டியை சுவைத்துவிட வேண்டும்.

கலையரசன், பேராவூரணி.