எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நெகிழ்ச்சி நினைவுகள் - சிறப்புப் பக்கங்கள் அருமை. இன்னும் கூட அவரின் மனிதாபிமானம் நிறைந்த பல நிகழ்வுகளைத் தொட்டிருக்கலாம்.அறம் இயக்குநர் கோபி நயினாரின் ‘ இந்தியாவின் வளர்ச்சி பெற்ற அறிவியல் யாருக்கான அறிவியல்' என்ற அழுத்தமான கேள்வி எல்லோருக்குமானதுதான். ஆப்ரஹாம் பண்டிதர் பற்றிய நா.மம்மது அவர்களின் நேர்காணல் சரியான கோணத்தைக் கொண்டிருந்தது. எந்த அறிஞரைத்தான் நாம் முழுமையான மொழியுணர்வுடன் புரிந்துகொண்டிருக்கிறோம்?. பாஜக வெல்லத் துடிக்கும் இடங்கள் கேரளமும் தமிழகமுமே என்ற ஹாதியாவின் கதையில் இடம்பெற்ற கோணம் என் சிந்தனையை எண்கோணமாக்கிவிட்டது.
தஞ்சை. என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாகப் பளிச்சிட்ட நடிகை நயன்தாராவை அறச்சீற்றத்தோடு மாவட்ட ஆட்சியாளராக வாழ்ந்து காட்டிய புரட்சிப் பெண்ணாகப் படம் பார்ப்பவர்களின் மனங்களில் பதியவைத்த ''அறம்'' படத்தின் இயக்குநர் கோபியுடனான நேர்காணல், அவரின் லட்சிய உணர்வுகளை வெளிப்படுத்தியது. பெரும்பாலான தமிழ்ப் படங்கள் பெண்களை இயல்புக்கு மாறாக கவர்ச்சியாக சித்தரிப்பது தவிர்க்க இயலாதாகிவிட்ட இக்காலத்தில் தனது அறம் படத்தின் மூலம் நயன்தாராவின் இமேஜை மாற்றி தாய்க்குலத்திற்கு உரிய மரியாதை அளித்து மேன்மைப்படுத்திய இயக்குநர் கோபி பாராட்டுக்குரியவர்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14
ஜெ.வுக்கு பிந்தைய ஓராண்டு - குடும்பமும் குழப்பமும் என்ற கட்டுரை படித்தேன். ஆணிவேர் இல்லாத மரம் அடியோடு சாய்வதைப் போலத்தான் கொள்கையற்ற அரசியல் கட்சியும் காலப்புயலில் வீழ்ந்து அழியும். ஊழலை ஒழிப்பதற்காகத் துவங்கப்பட்ட கட்சி ஊழல் புதைமணலில் சிக்கி இன்று கரைசேர முடியாமல் அழிந்துகொண்டிருப்பது ஒன்றே இதற்கான சரியான எடுத்துக் காட்டு! ஜெ இருக்கும் வரை நல்ல மேய்ப்பனாக கோலோச்ச முடிந்தது. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகோ அ.தி.மு.க பல அணிகளாக உடைந்து சிதறியது. உடைந்த கண்ணாடி இனி ஒட்டுமா என்பது ஐயமே. இந்தப் பலவீனத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது தமிழக பா.ஜ.க.!
நெய்வேலி.க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
அந்திமழை டிசம்பர் 2017 இதழில் கலாப்ரியா எழுதிய ‘ரசிகர் மன்றங்கள் ஒரு சங்கப் பலகை' என்ற கட்டுரை படித்தேன். தொண்டனை வைத்துத்தான் கட்சி; கட்சிக்காக தொண்டன் இல்லை. வாழ்க்கையை எங்கும் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம், அன்றைய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள், அதை உயிர்ப்புடன் கலாப்பூர்வமாக நடத்திய தேர்ந்த ரசிகர்கள் ஆகியவற்றை ஒரு படைப்பாளியின் பார்வையில் பதிவு செய்திருப்பது சிறப்பு. மேலும் எம்.ஜி.ஆர் வாழ்த்தி எழுதிய கடிதத்தின் ஒளிநகலையும் கட்டுரையில் இணைத்திருப்பது கட்டுரையின் கனம் கூட்டியது. எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் பலர் பன்முக ஆற்றலோடு பல்வேறு நிறுவனங்களை நடத்தியதும் கல்வி நிறுவனங்களை அமைத்து தாளாளராக உயர்ந்ததும் வரலாறு சொல்லும் உண்மையாகும். நாடோடி மன்னனின் வெற்றிக்கு திமுகதான் பெரும் காரணம். அப்போதெல்லாம் கட்சி யையும் எம்.ஜி.ஆரையும் பிரிக்க முடியாது என்று எழுதியிருப்பது உண்மையானது. எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து போன போது கட்சி தள்ளாட்டம் கண்டதும், கட்டமைப்பு சிதறிப்போனதும் தி.மு.க.வுக்கு பெரிய இழப்பு என்பதும்தான் கடந்தகால நிதர்சனம்.
நவீன்குமார், நடுவிக்கோட்டை - 614602
அந்திமழை நிருபரின் ஜெவுக்கு பிந்தைய ஓராண்டு - கட்டுரை + படம் அருமை. மான்கள் புலிகளை வேட்டையாடுகின்றன என்ற கட்டுரை டபுள் சூப்பர். அந்திமழை இதழில் கேள்வி பதில் பக்கம் தொடங்கலாமே. பரிசீலனை செய்வீர்களா? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நெகிழ்ச்சி நினைவுகள் கட்டுரைகள் மற்றும் படங்கள் அனைத்தும் படித்துப் பாதுகாக்கவேண்டிய அம்சங்கள். அன்புமதியின் படங்கள் சூப்பர். டைரக்டர் கோபியின் பேட்டி சிறப்பாக இருந்தது. கடைசிக் கேள்விக்கு கோபியின் பதில் டாப் டக்கர்.
அ.முரளிதரன், மதுரை - 3
அந்திமழை டிசம்பர் 2017ஆம் ஆண்டின் கடைசி இதழ். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு இதழ் உண்மையில் நெகிழ்ச்சி நினைவுகள் கொண்டதாக அமைந்திருந்தது. இதுவரை எந்த இதழிலும் படித்திராத பொக்கிஷமான செய்திகள், தகவல்கள், தெரிந்திராத கடந்தகால நிகழ்வுகள் என இந்த இதழ் முழுக்க மேஜிக்தான். அட்டையை திருப்பியதும் ஓவியர் ஜீவாவின் கைவண்ணம் எம்.ஜி.ஆரின் ஜீவனுள்ள தோற்றத்தைக் கண்முன்னே கொண்டுவந்து மனதைக் கொள்ளை கொண்டது எனலாம். எக்ஸலண்ட். நான் மலையாளியா என்ற கேள்விக்குறியுடன் தொடங்கிய கட்டுரை முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் பின் தெளிவடையவைத்தது. மலையாளியோ; தமிழரோ, அவர் சிறந்த மனிதர். அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கையாலும் தான் ஒரு மாமனிதர் என்று உலகுக்கு உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
இ.டி.ஹேமமாலினி, ஆவடி - 54.
டிசம்பர் 2017 அந்திமழை இதழ் படித்தேன். எம்.ஜி.ஆரை மலையாளி என்று எந்தத் தமிழனும் சொல்ல மாட் டான். மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட பிம்பம் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டு விழாவை ஜெயலலிதாவோ அல்லது கலைஞரோ நடத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு காரணமானவர்கள் நான்கு பேர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, இவர்களுக்கு இணையாக அவரது ரசிகர்கள் அல்லது தொண்டர்கள். தமிழக மக்களைப்பொறுத்தவரை யார் எந்த மாநிலம் என்று பார்ப்பதில்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எம்.ஜி.ஆர் நினைவுகளை மீள அசைபோட வைத்த அந்திமழைக்கு மிக்க நன்றி.
ஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டின் நெகிழ்ச்சி நினைவுகளாக புலவர் புலமைப்பித்தன், ராவ், மணவை.பொன்.மாணிக்கம், நடிகை லதா நேர்காணல், கலாப்ரியா, ரகுமான்கான் என அனைத்தும் வாசித்த எங்களை எம்.ஜி.ஆரை நேசிக்க வைத்ததும் நிஜம். பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் பொன்மனச் செம்மலின் பூமுகம் அழகின் சிலிர்ப்பு. அறம் பட இயக்குநர் கோபியுடனான நேர்காணலில் இந்த அறிவியல் யாருக்கானது என்று அவர் கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தம் பொதிந்த ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது. நடுப்பக்கத்தில் காமிரா கண்கள் பகுதியில் காணக்கிடைத்த அரிய&அழகிய&அபூர்வ புகைப்படங்கள் காண இரண்டு கண்கள் போதாது. அன்புமதிக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.
கொ.சி.சேகர், பெங்களூரு.
கோவையில் எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நான்தான் புகைப்படம் எடுப்பது வழக்கம். திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் மூலம் கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர் என்னை அழைத்தார். 1948 முதல் எம்.ஜி.ஆர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள், நானே வரைந்த இங்க் ஓவியங்களுடன் எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்தித்தேன். என் மொத்த சேகரிப்புகளையும் அவர் ஆர்வத்துடன் பார்த்தார். மிகவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய அவர் நான் வரைந்த ஓவியங்களில் கையெழுத்திட்டுத் தந்தார். என் மீது உனக்கு அவ்வளவு பிரியமா என்றார். நீங்கள் என்றால் எனக்கு உயிர் என்று நான் பதில் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைப் பற்றிக்கொண்டார்.
எஸ்.ஆர்.கோபாலகிருஷ்ணன், பி.என்.புதூர், கோவை