கடிதங்கள்

விடுவதில்லை

Staff Writer

தலைமையின் நிழல் என்ற தலைப்பிலான சென்ற இதழில் வெளியான கட்டுரைகள் அனைத்துமே மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்டிருந்தன. தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விதத்தில் தனியர்களே. அவர்களுக்குத் தன்னலம் பாராது உதவி செய்யவும் அவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபடவும் நம்பிக்கையான நபர்கள் தேவை. ஆனால் சில தலைவர்கள் சந்தேகப் பிராணிகளாகவே இருந்து தொலைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு யாரும் இருப்பதில்லை. இருக்கவும் அவர்கள் விடுவதில்லை. வரலாறு இதையும் சொல்கிறது.

புதுவை ரோஜா, சென்னை - 27

பாடம்

விருந்தினர் பக்கம் - காய்கறிக்கடையில் கற்ற பாடம் பற்றி கட்டுரையாளர் அந்திமழையோடு பகிர்ந்து கொண்டதற்கு முதலில் நன்றி. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்ற பழைய பாடல் வரிகளையும் இந்த கட்டுரை நினைவூட்டியது. இவற்றைப் பாடம் கற்றதோடு, நல்லதோர் பாடமும் கற்றுத்தந்தார் என்பதே உண்மை! பின்பற்ற வேண்டிய ‘கணக்கும்' இருந்தது! அருமை! நன்றி.

இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்

ஒரு சிலர்

தலைமைக்கு மிக அருகில் அட்டைப்பட கட்டுரை சிந்தனைக்கு விருந்து. புகழ் மிக்க மன்னர்கள் ஆண்ட பெரும் பேரரசுகள் எல்லாம் அவர்களின் காலத்திற்குப் பிறகு அடியற்ற மரமாக வீழ்ந்து அழிந்து போனதற்குக் காரணமே அவர்களுக்குப் பின் நாட்டை ஆள சரியான வாரிசுகள் இல்லாமற் போனதால் தான். எல்லாம் நானே என்று ஆணவத்தோடு ஆட்சி நடத்தியதின் விளைவே அது. அதுபோல் மக்களாட்சியில் தங்களது கட்சிக்கும் வந்துவிடக்கூடாது என்ற நுண்ணறிவின் காரணமாகத்தான் இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி, தங்களுக்குப்பிறகும், மக்கள் நம்பிக்கை பெற்ற நல்ல வாரிசுகளால் வழி நடத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள். அதில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள்.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.

பிரதிபலிப்பு

ஜெயலலிதா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஸ்டாலின், விஜய்காந்த், மோடி, சோனியா காந்தி & ஆகியோரின் அரசியல் பயணத்தில் துணை நின்ற & நிற்கும் சக்திகளை அடையாளம் காட்டி, அவர்களின் திறன்களை அலசிய கவர் ஸ்டோரி படித்தேன். ஜெயலலிதாவின் பக்கபலமாக நிற்கும் சசிகலா, அவரது உடன்பிறவா சகோதரி என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ஆருக்கு உற்ற தோழராக உடனிருந்து வலம் வந்தவர் ஆர்.எம்.வீ தான் என்பது நிஜம். உங்கள் தலைமையின் நிழல், தொகுப்பு வெளிச்சத்திற்கு வராத பல உண்மைகளைப் பிரதிபலித்தது. பாராட்டுகள்!!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தோன்றாத்துணை

‘ தலைமைக்கு மிக அருகில்', தீர்க்கமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. அன்று நேருவுக்கு அவர் மகள் இந்திராகாந்தி இருந்தார். அரசியல் நுணுக்கங்களைத் தந்தையிடம் கற்ற இந்திராகாந்தி, நேருவின் மறைவுக்குப்பின் பதினாறடி பாய்ந்த வேங்கையானார். ஒவ்வொரு தலைவருக்கும் நம்பிக்கையான ஒரு துணை, நட்பு, உறவு வேண்டும். அந்த வகையில் இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் பவனி வரும் தலைவர்களுக்குரிய நட்பு வட்டம், உறவு வட்டம் அமைந்துள்ளது. தலைவன் வழி காட்டலாம். அந்த வழி சரியான வழியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தவறான பாதையில் சென்று தானும் விழுந்து, தன் கட்சியையும் விழ வைத்து, எழ முடியா நிலைக்கு போகும். தமிழகத்தில் இதற்கு எடுத்துக்காட் டாக சில கட்சிகளும் தலைவர்களும் இருக்கிறார்கள். ஜெயலலிதா - சசிகலா, கலைஞர் - மாறன், எம்.ஜி.ஆர்- ஆர்.எம்.வீ, ஸ்டாலின் - சபரீசன், விஜயகாந்த் - பிரேமலதா என்று ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு தோன்றாத்துணை இருப்பது நல்லது. நன்கு அலசி, ஆய்ந்து, ஆராய்ந்து எழுதப்பட்ட விமர்சனம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது தான் நிதர்சனம்.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.

உந்துசக்தி

மீன் சாப்பாடு சிறுகதையை படிக்கும்போதே சாப்பிட தோன்றுகிறது. சுஜாதாவின் சிறுகதையின் முடிவில் சுவாரசியமான ட்விஸ்ட் வைத்திருப்பார், அதுபோல் ஒரு திருப்பம் வைத்து அருமையாக சிறுகதையை முடித்திருக்கிறார் பா.கண்மணி. விருந்தினர் பக்கத்தில் ‘செம ஹிட்டு இந்த உணவு' தலைப்பில் நீலகிரி மக்களின் பாரம்பரிய உணவுமுறை, விருந்தோம்பல் கட்டுரை மிக அருமை. மனிதர்கள் பகுதியில் ஷூ பாலிஷ் செய்யும் ஒருவரின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் ஷூ பாலிஷ் செய்பவர்கள் சக மனிதர்களாக கூட மதிக்கப்படுவதில்லை. மூன்றாவது நதி சிறுகதையில் ஒரு கிராமத்தானின் மனித நேயத்தை அழகாக பதிவிட்டிருக்கிறார் பாவண்ணன்.

தமிழழகன், நாமக்கல்.

வெளிப்பாடு

‘நாம் கப்பல் படை வைத்திருந்த ராஜேந்திர சோழன் மண்ணை சேர்ந்தவர்கள்' தலைப்பில் நீர் நிலைகளையும் அதன் ஆக்கிரமிப்புகளையும் கட்டுரையாளர் தெளிவாக விளக்கியிருக்கிறார். ‘‘தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பார். ஆனால் அவரிடம் அவர்களை நாங்கள் அனுப்பி வைப்போம்'' என்று புடினும், பூக்கள் மெழுகுவர்த்தியுடன் தந்தை மகன் உரையாடல் & இரண்டுமே நியாயமான அவரவர் மனநிலையின் வெளிப்பாடு. பூக்கள் எப்போதும் நம்ம ஊர் காவல்துறை மாதிரி, கடைசியாக தான் வரும் அல்லது தேவைப்படும். அன்னப்பறவை நீரையும் பாலையும் தனியாக பிரிப்பதுபோல் முத்தபோராட்டத்திலும், பாலியல் தொழிலிலும் ஈடுபட்ட அந்த ஜோடியை சரியாக பிரித்து பார்த்து கலாச்சார காவலர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். மூச்சு முட்டுது இந்த ஓர் இச் ஒரு கைது கட்டுரை.

காவினி, விருகம்பாக்கம்.

வேதனை

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கான உள்நாட்டுப் பொறிமுறையில் சர்வதேச விசாரணையாளர்கள் இடம்பெற, இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்பது பகல் கனவு. இந்திய அரசியலில் தான் உலக மகாநடிகர்கள் அதிகம். நம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது கனவாகவே போய்விடும் சூழல் தான் இருக்கிறது. தலைமைக்கு மிக அருகில் & காமராஜர், அண்ணா பக்கத்தில் இந்த மாதிரி சாணக்கியர்கள் அல்லது இராஜதந்திரிகள் யாரும் இருந்தார்களா? அப்படி இருந்திருந்தால் அரசியலில் அவர்களின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும். இராஜதந்திரம் என்பது மக்களையும், நாட்டையும் காப்பற்றவே..ஆனால் இங்கே கட்சியையும் குடும்பத்தையும் காப்பற்றவே பயன்படுவது வேதனையிலும் வேதனை..

இ.இளவரசன், உடையம்பாளையம்

நச்!

ஆங்காங்கே சில தகவல் பிழைகள் இருப்பினும் கூட தலைமையின் நிழல் கட்டுரைகள் நச்செனவே அமைந்திருந்தன. அவற்றுக்கான ஓவியக் கலைஞர் ராஜா அவர்கள் சித்திரங்களும் சூப்பர். விருந்தினர் பக்கங்களில் அனைவருமே நன்றாக எழுதுகிறார்கள். குறிப்பாக ச.ம.உ. எஸ்.எஸ். சிவசங்கர் மழைவெள்ளம் பற்றி எழுதியது மிகுந்த காவியத்தன்மை வாய்ந்ததாக அமைந்துவிட்டது. ஒரு மாதத்தில் வெளியான திரைப்படங்களை அலசும் பகுதியிலும் கூட படக் சடக் என்று நெத்தியடி அடித்துவிடுகிறீர்கள்! நன்று!

க.சரவணராஜன், திருச்சி