கடிதங்கள்

உணர்த்தியது!

Staff Writer

அன்றாடங்காய்ச்சி என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் விளிம்புநிலை மனிதர்களை சிறப்புப் பக்கங்களால் கௌரவப்படுத்தியது, எல்.கே.ஜி படிக்கும் எம்.டி மகனைக் கூட ‘‘தம்பி வாங்க'' என்று அழைப்பவர், ஹோட்டலில் சர்வரை ‘‘வா, போ''வென ஒருமையில் அழைக்கும் மனப்பாங்கை உடைத்தது. வாழ்க்கையின் சறுக்கல், சூழல், பொருளாதாரம், சில நேரம் தனிப்பட்ட குணங்களும்கூட மனிதனை தாழ்த்தலாம். அவரே முயன்று முன்னேறலாம். எல்லோரையும், எல்லா காலக்கட்டத்திலும் மனிதனாக முதலில் மதிப்பதுதான் மனிதாபிமானம் என்பதை சிறப்புப் பக்கங்கள் அழுத்தமாக உணர்த்தியது.

யாழினி பர்வதம், சென்னை

நெஞ்சைத் தொட்டது!

அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள் ஆனால் உரிய மதிப்பு வழங்கப்படாதவர்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் சிறப்பு. பாமரனின் சலூன் கடைக்காரரும் கலாப்பிரியாவின் டிக்கட் கிழிப்பவரும் நெஞ்சைத் தொட்டனர். ‘கொரோனாவின் மடியில்' & கோ.ப. ஆனந்த் கட்டுரை அவரின் அனுபவம் மூலம் யதார்த்த நிலையை விளக்கியது. நாஞ்சில் நாடனின் ‘தத்து' பழக்கமான வார்த்தைகளின் நீள அகலத்தை அழகுற விளக்கியது.

அ. சங்கரலிங்கம், நொளம்பூர் சென்னை 600037.

மிளிர்ந்த மனிதம்

ஆகஸ்ட் 2020 இதழின் சிறப்புப் பக்கங்கள் அருமை, நம் தினசரி வாழ்க்கையில் கலந்து நமக்கு சேவை செய்யும் செக்யூரிட்டி, தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என நிறைய எளிய மனிதர்களை சற்றும் சிந்திக்காத ஒருவித அலட்சிய மனோபாவத்துடன் கடந்து செல்லும் நம்மை, நம் பொதுப் புத்தியை கேள்விக்கேட்க வைத்தது சிறப்புப் பக்கங்கள். இந்த கொரோனா காலத்தில் நாம் மட்டும் விழித்திருந்து, * வானவில் ? கடிதங்கள் வானவில் கடிதங்கள் வீட்டில் தனித்திருந்து வாழப் பழகிக்கொண்டோம். ஆனால் எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட பாடுகளை கவனிக்க மறுக்கிறோம், இதுவே உண்மை. சிறப்புப் பக்கங்களில் மிளிர்ந்த மனிதர்களை அறிமுகப்படுத்திய கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

ஆர். மோகன், சேலம்

ராகுல் காந்தியின் எண்ணம்

சௌபாவைப் படித்தவுடன் அடுத்த பக்கங்களை புரட்ட மனமின்றி படித்தவற்றையே மீண்டும் மீண்டும் படிக்க மனம் விழைந்தது. இப்படியும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மக்களை படம் பிடித்த மனிதம் தோய்ந்த படைப்பாளர் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறாரே என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் திருமாவேலனின் ஆறாவது விரல் அபிநயம் ஆடியிருக்கிறது. ‘சின்ன குத்தூசி' ஒரு தலைமுறை என்றால் சௌபா இன்னொரு தலைமுறை. ‘போரிடத்தவறிய ராஜகுமரன்' காங்கிரஸ் தோற்றம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை வளர்ந்த வரலாற்றை வளர்ச்சியை ஆய்வுக்குட்படுத்தி அப்படியே எழுதப்பெற்றிருப்பது சிறப்பு. நேர்மை, உண்மை, உழைப்பு, திறமையுள்ள இளைஞர்களை கட்சிக்குள் கொணர்ந்து புதுரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற ராகுலின் எண்ணம் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வெளுத்துப் போனதால் தலைமையிலிருந்து விலக நேரிட்டது. பழமும் தின்று கொட்டையைப்போட்ட பழம் பெருச்சாளிகள் கட்சிக்குள் இருக்கும் வரை ராகுலின் எண்ணம் ஈடேறப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் படித்து உணர வேண்டிய ஆய்வுக் கட்டுரை இதுவென்பேன். செங்குட்டுவன் தம்பிக்கு ரெட் சல்யூட்!

பவளவண்ணன், நடுவிக்கோட்டை

வித்தியாசம்

வானவில்லை போன்ற அந்திமழை மாதந்தோறும் வித்தியாசமான பல வண்ணங்களில் எண்ணங்களை அழகாக அருமையாக வெளிப்படுத்தி வருகின்றது. நன்றி கலந்த பாராட்டுகள். ஆகஸ்டு 2020 இதழ் உண்மையிலேயே சிறப்பு பக்கங்கள் மட்டுமல்ல நம் வாழ்கையில் அன்றாடம் சந்திக்கின்ற சக தோழர்கள், வழித்துணையாக வருகின்ற பால்காரர், தபால்காரர், காரோட்டிகள், எங்கிருந்தோ வந்தான், பால் என்பது வெண்ணிற அன்பு, சோகப் பட(ல)ங்கள். இப்படி வித்தியாசமான தலைப்புகளில் பல சாமான்ய மனிதர்களைப் பற்றிய யதார்த்தமாக வெளிப்படையாக படைப்புகள் படிக்க படிக்க புத்துணர்வு, புதுச்சு வை இப்படி இதழ் முழுவதும் பக்கம் தோறும் பார்க்க படிக்க ரசிக்க ருசிக்கவும் கொஞ்சம் மனதில் அசைபோட்டு சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்பும் வித்தியாசமாகவே இருந்தன. கொரோனா இக்கட்டான நேரத்திலும் இத்தகைய அக்கரையோடு சிறப்புடன் அந்திமழையை ஆனந்த மழையாக்கிய உங்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுகள்.

கடல் நாகராஜன், கடலூர்

இன்றைய சுவாசம்

அவர்கள் அவர்களே தொடர் நிறைவு பெற்றது வருத்தம்தான்... நேற்றைய மூச்சுக் காற்று பற்றி எழுதிய ப.திருமாவேலன்... இன்றைய சுவாசம் பற்றியும் எழுதுவார் என நம்பலாம். சௌபா பற்றிய பதிவு அருமை. பிரபலங்களின் மகனாக இருப்பதில் உள்ள பிரச்னையைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த சாந்தனு போக சாத்தியமான பயணப் பாதையையும் அறிந்திருப்பதால்... விரைவில் எதிர்பார்க்கும் வெற்றியையும் பெறுவார் என நம்புகிறேன். வாமனம் சிறுகதை நச்... சென்று மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது. சூழல் சார் நியதிகளின் நீதி சரியான பாத்திரங்களாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது... ராகுல் காந்தி பற்றிய அரசியல் அவதானிப்பு சரியானதே..செயல்பாட்டில் தெளிவு இருந்தாலும் வேகம் இல்லாத விவேகம் வீண் என்பதை கட்டுரை உணர்த்தியது. கவனிப்பீர்களா ராகுல்... வழக்கம் போன்றே சிறப்பிதழ் கவனத்தை குவி மையத்தில் ஈர்த்துக் கொண்டது. அழகிய பெரியவனின் பால் என்பது வெண்ணிற அன்பு இயல்பான உறவின் பதிவை அடையாளப்படுத்திய விதம் அருமை...இப்போதுதான் சதுரப் பால் பாக்கெட்டுகளில் அந்த அன்பு அடைக்கப்பட்டு விட்டதே.. வழித் துணையாக வருபவர்கள் வரிசையில் நெல்லை கண்ணனின் ஓட்டுநர்கள் பற்றிய கட்டுரை தனித்துவமானது .. சிறப்புப் பக்கங்களின் பக்கங்கள் மிகச் சிறப்பானவை என்பது நான் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வேண்டுமா என்ன...? வழித் துணையாளர்கள் வரிசையில் தையல்காரர், பேப்பர் போடுபவர் என தவிர்க்க இல்லாதவர்களையும் சேர்த் திருக்கலாம்.... கூடுதல் சுவையாக இருந்திருக்கும். நெகிழவும் மிரளவும் வைத்தது கோ.ப.ஆனந்தின் கொரோனாவின் மடியில் கட்டுரை. விழிப்புணர்வையும் கூட்டியது.

தஞ்சை என்.ஜே. கந்தமாறன் சென்னை - 89

காரணம்

தேசிய காங்கிரஸின் மாபெரும் வீழ்ச்சிக்கு வாரிசு அரசியல்தான் காரணமாகும். நேருஜிக்குப் பிறகு இந்திராஜி வந்தபோது, அப்பாவோடு இருந்த அனுபவம் கைக் கொடுத்தது. காமராஜரின் பக்கபலமும் இருந்தது. இந்திராஜிக்கு பிறகு வாரிசு அடிப்படையில் வலுக் கட்டாயமாக ஒரு விமானியை இழுத்து வரவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ராஜிவுக்கு பிறகு அரசியலே தெரியாத சோனியாஜி வசம் காங்கிரஸ் போனது. அவருக்கு உடல்நலம் பாதித்ததால், ராகுல்ஜிக்கு வாய்ப்பு வந்தது. ஆக, இந்த மூன்று தலைமுறை வாரிசுகளால் காங்கிரஸ் சரிந்தது. இனி, நேரு குடும்பத்திடமிருந்து காங்கிரஸ் விடுதலை பெறுமா? என்பது சந்தேகமே! அந்த விடுதலையில் தான் காங்கிரஸின் எதிர்காலமே இருக்கிறது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

அழகிய வண்ணம்!

வண்ணதாசனின் கட்டுரையில் தபால்காரர்கள் பற்றி படிக்கும்போது, என் பெயருக்கு முதன் முதலில் வந்த ஒன்பதாவது வகுப்பில் தேர்ச்சிபெறவில்லை என்ற தகவலைச் சொன்ன போஸ்ட் கார்டை நினைவுபடுத் தியது. அதை எங்கள் ஊர் தபால்காரர் அன்பழகன் கொடுக்கும்போது தம்பி வருத்தப்படாதே என்று கரகரத்த குரலில் கொடுத்து சென்றார். இப்போது பார்த்தாலும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்வார். தபால்காரர் நந்தகோபாலை பற்றி வண்ணதாசன் குறிப்பிடும் சித்திரம் அழகு. எளிய மனிதர்கள் பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள். கொரியர் கொடுக்க வந்த லெட்சுமணனிடம் அவர் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும் என்று சொன்னது மனதைத் தொட்டது. எளியவர்கள் அவர்கள் செயல்களை செய்துவிட்டு காணாமல் போய்விடுகின்றனர்.

ஜெகதீசன், திருவரங்கம்