படைப்புகள் எழுதும் அளவிற்கு விமரிசனம் எழுத எவரும் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அந்திமழை விமரிசனப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அரை நூற்றாண்டு தலைமை என்னும் தலைப்பில் கலைஞர் குறித்த கட்டுரை அவரின் அரசியல் வாழ்வைக் கூறியது. வேகம், இலக்கில் குறி என்பதே அவரின் வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராவ். தொடர்ந்து கலைஞரின் சிறப்புகளை பலர் கூறி வியக்கச் செய்துள்ளனர். கருப்பட்டியின் கதையை வாசித்ததும் கருப்பட்டியைச் சாப்பிட்டது போல் இருந்தது.
பொன். குமார் ,
சேலம் - 636006.
1. அரை நூற்றாண்டு தலைமை - கட்டுரை அருமை. கடைசி 10 வரிகளை கொட்டை எழுத்துக் களில் போட்டிருக்கலாம்.
2. கருப்பட்டியின் கதை - கருப்பட்டி போலவே இனித்தது, நொங்கு சீசனில் வந்துள்ளது. கட்டுரை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
3. ஹர்சினியின் காமிரா கண்கள் அழகை வெகுவாக ரசித்தோம்.
4. வட சென்னை குரல்கள் - வற்றாத குரல்கள், அதற்கான படங்களோ மிகப் பொருத்தம்.
5. மணிகண்டனின் பேட்டி - அவரது படங்களை போலவே வித்தியாசமாக உள்ளது.
அ.முரளிதரன்,
மதுரை-3.
எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம். பனைமரம் பலன் அனுபவிக்க பல வருசம் ஆகும். அதனால் தான் நம் முன்னோர்கள் பனையை வைத்தவன் பார்த்துச்சாவான் என்று கூறினர். நம் பகுதி வெப்பமண்டல பிரதேசம். வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம். ஓலை குடிசை வெயிலுக்கு இதமானது. வெப்ப நோய் எதுவும் தாக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் பனை ஓலையையும், தென்னை ஓலையையும் கொண்டு வீடு கட்டி வாழ்ந்தனர்.நன்கு விளைந்த பனைமரம் கொண்டு வீடு கட்டினால் கரையான் தின்னாது. பல தலைமுறை கண்ட பனை மரமும் உண்டு. பனையின் பெருமையை ஏடு எடுத்து எழுதினால் மட்டும் போதாது. காணவேண்டும் என்றால் அது குறைந்து வருகிறது. செங்கல் சூளைக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆ.ர.அருணகிரி
ஆலாம்பாளையம்.
‘‘பொழைக்க வந்தவன தான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது'' முத்திரை பதிக்கும் இந்த வர்த்தைகளில் அடங்கிவிடுகிறது சென்னைக்கு வந்து வாழ்வோரின் ஒட்டுமொத்த வரலாறும்.
சபோராடத் தயங்குவோர் என்றும் எங்கும் வெற்றி பெறுவதில்லை. மான, அவமானங்கள், சகித்தல்கள், எல்லாமே இதற்க்குள் அடக்கம். சென்னை வாழ்க்கையைப் பற்றி கு.அழகிரிசாமி சொல்வதையும் நினைவு கூறலாம்.
சென்னை வாழ்க்கை என்பது அனுபவிக்கலாம். ஆனால் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத உறவுகளைப் போன்றது என்றார் அவர். ஒரு வகையில் அவருடைய இந்த பார்வை முகம் மாறியிருந்தாலும் உண்மை அப்படியேதான்.
தஞ்சை.என்.ஜே.கந்தமாறன்
சென்னை-600089.
படைப்புக்களுக்கு விமர்சனம் முக்கியம். இந்த வகையில் தங்கள் பணி போற்றுதலுக்குரியது. விமர்சனப் போட்டி முடிவுகள் படித்தேன், அதில் உள்ள 8 நூல்கள் படிக்கவில்லை, மற்ற அனைத்தும் படித்தேன். பரிசுகள் அனுப்பும் போது கீழ்கண்ட 2 நூல்கள் தங்கள் வெளியீடுகள் எனக்கு வேண்டும்.
1. வேழாம்பல் குறிப்புகள்
2. போகின்ற பாதையெல்லாம் பூ முகம் காணுகிறேன்
இதழில் வெளியிட்டால் நிறைவு பெற பல மாதங்கள் ஆகும். என்னால் முடியாது. வயது 92. ஆகவே பெரிய விழா நடத்தி புத்தகமாக வெளியிடவும். தமிழ் வாசகர்கள் வளர இது உதவும். மேலும் சில விவரங்கள், நானும் என் நண்பர் தீபம் பார்த்தசாரதியும் 10 ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள். 60 எழுத்தாளர்களை கண்டு பேசவும் உள்ளோம். படைப்புகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சரியான நீதிபதி.
எஸ்.எஸ்.ஆர்.லிங்கம்
ஸ்ரீவில்லிப்புதூர் - 626125.
கலைஞர் அவர்களின் அட்டை படத்தோடு வெளிவந்திருக்கும் அந்திமழை (ஆகஸ்டு 18) இதழ் படித்தேன். போராட்டமே வாழ்க்கை என்று ஆன பிறகு போராடத் தயங்கலாமா? என்ற உறுதியோடு இளமை காலத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்ட களத்திலே குதித்ததிலிருந்து, இறுதியில், இறந்தும் தன் இட ஒதுக்கீட்டு பிரச்சனையிலும் போராடி வெண்று புது வரலாறு படைத்திட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாறு, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அத்தனை இளைஞர்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்கு. உணர்ச்சிவசப்பட்டு, தற்கொலை செய்து கொள்கின்ற பலவீனமான உள்ளங்களுக்கெல்லாம் அவருடைய வாழ்க்கை வரலாறு ஒரு திருப்புமுனையை நிச்சயம் உருவாக்கும். அடி, உதை, கொலை வெறி தாக்குதல், அவதூறுகள், அவமானங்கள், விமர்சனங்கள், சிறைகள், சித்திரவதைகள், துரோகங்கள், தோல்விகள், என ஒரு தனி மனிதனாகவும், இயக்கத்தின் தலைவராகவும் எதிர்கொண்டு, தனது கடும் உழைப்பால் அனைத்தையும் தாங்கி, இறுதியில் பெரும் வெற்றியினை குவித்தவர் கலைஞர். கலைஞரைப் பற்றிய மூன்று கட்டுரைகளும் இதழுக்கு மகுடம்.
க.தியாகராசன்
கொரநாட்டுக்கருப்பூர்.
காலா திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்த மணிகண்டன் பல்வேறு ஆளுமை கொண்டு வசனகர்த்தா, இயக்குநர், மிமிக்ரி கலைஞர் என பல முகங்களை கொண்டிருப்பினும் அவரை கலைஞனாக ஆக்கியது திரைத்துறையே. அந்த திரைத்துறையில் சிறந்த இயக்குநருக்கான இலக்கணமாக திகழக்கூடிய இலக்கிய
செறிவு கொண்ட திரைக்கதை உருவாக்கத்தில் போதிய கவனத்தை செலுத்தினாலே போதும், அவரை சிறந்த ஆளுமை திறன் கொண்ட நட்சத்திரமாக ஜொலிக்க செய்திடும். இந்த இதழில் வெளியான அ.முத்துலிங்கத்தின் மொழிபெயர்ப்புக் கதையும், மணி.எம்.கே.மணியின் ‘‘வெள்ளம்'' என்கிற சிறுகதையும் இதழை சிறப்புக்குரியதாய் ஆக்கியுள்ளது.
சிறப்பு பக்கத்துக்கு சிறப்பு சேர்த்த வே.எழிலரசுவின் ‘‘பொழைக்க வந்தவன தான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது'' என்ற இக்கூற்று பஞ்சம் பிழைப்புக்கான மிகப்பெரிய கூடாரமானசென்னை பலரது வாழ்வு சிறப்புற பொருளாதார அந்தஸ்து பெற வைத்தது உண்மையின் சாரம் என்பதே வாஸ்தவம்.
பா.செல்வவிநாயகம்
சென்னை - 600068.
இரண்டரை லட்சத்தில் படம் எடுத்தோம் என பிரமிக்க வைத்த விக்ரம் வேதா வசனகர்த்தா மணிகண்டனின் முன்கதைச் சுருக்கம் இன்றைய இளைய தலைமுறையின் எழுச்சியைக் காட்டுகிறது. நுழையவே வழி தெரியாத, சாமானியனுக்கு சாத்தியப்படாத கனவு கார்ப்பரேட்டான கோலிவுட்டில், இணையத்தில் பயின்று, எவரிடமும் உதவியாளராக இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், பாமரனின் ரசனை உயர்த்தும், இளைய படைப்பாளிகளின் லட்சிய உழைப்புக்குவாழ்த்துக்கள்.
அ.யாழினி பர்வதம்
கே.கே.நகர், சென்னை-600078.
என்னை ஆண்டவரேன்னு கூப்பிடுவார் எம்ஜிஆர் என்ற தலைப்புடன் வந்திருந்த சிடி ராஜகாந்தம் பற்றிய கட்டுரையை மணா நிதானமாக எழுதி இருந்தார். பழைய பக்கங்களைப் பொறுமையாகப் புரட்டிப்பார்ப்பதில் ஒரு தனி அனுபவம் இருக்கத்தான் செய்கிறது. சைமன் ரிச் என்பவர் எழுதிய கதையை அ. முத்துலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் வாசித்தபோது மிகவும் மிரட்டலாக இருந்தது. கற்பனைக் கதைதான் என்றாலும் நாயக வழிபாடு என்பது முதல் திரைக்காட்சியிலேயே தொடங்கிவிட்டது என்பதுதான் காட்சி ஊடகத்தின் அபத்தங்களில் ஒன்று. கருப்பட்டியின் கதை, பனைமரங்களின் கதையாக மாறி, தமிழர்களின் வரலாற்றுக் கலாச்சார அலசாக நிகழ்ந்திருக்கிறது. நாஞ்சில்நாடன் மாபெரும் கட்டுரையாளர் என்பதை நிறுவிக்கொண்டே இருக்கிறார்.
ரா. சுந்தரம் அருப்புக்கோட்டை.