கடிதங்கள்

நல்ல எழுத்தாளர்கள்

Staff Writer

அந்திமழை ஆகஸ்ட் இதழில் வெளியான பாரதிமணி கட்டுரையைப் படித்து முடித்ததும், தருணங்களும், சம்பவங்களும், வாய்ப்புகளும் இவருக்கு தோள் கொடுக்கின்றனவா அல்லது இவர் அவற்றுக்குத் தோள் கொடுக்கிறாரா எனும் சந்தேகம் எழுந்தது. விட்டல் ராவிடம், அவரது நாவல் ‘நதிமூலத்தைப்' பற்றி, அமரர் அசோகமித்திரன் ஒரு முறை இப்படி சிலாகித்தார்: விட்டல்ராவ், இந்த நாவலில் நீங்கள் தந்துள்ள தகவல்களை வைத்து நான் பத்து நாவல்கள் எழுதிவிடுவேன். அசோகமித்திரன் தற்போது இருந்திருந்தால், பாரதிமணியின் கட்டுரையைப் பற்றி இதைப்போன்றுதான் குறிப்பிட்டிருப்பார். நல்ல எழுத்தாளர்கள் மனிதர்களின் வாழ்க்கையைப் பெரும்பாலும் தொட்டு விடுவார்கள். சாதாரணமானவர்கள் அதன்மேல் அவசரமாகக் கையை ஓட விடுவார்கள். பாரதிமணி நல்ல எழுத்தாளர்கள் வரிசையில் சேருவார்.

தேவரசிகன், திருபுவனம்.

கவிதை

புகைப்படக்கலைஞர் ஸ்டாலின் எடுத்த காமிரா கண்கள் பகுதியில் இடம்பெற்ற படங்களை மனதார பாராட்டுகிறேன். திருமணங்கள் சிறப்பிதழ் சூப்பர். புஷ்கர் & காயத்திரியின் காதல் ஓர் இனிய காதல் கவிதையைப் படிப்பது போல் உள்ளது. திருநாவுக்கரசரின் பேட்டி & அரசியலில் பணத்திற் குதான் இப்போது மதிப்பு என்பது இப்போது தான் அவருக்குப் புரிஞ்சதா?

அ.முரளிதரன், மதுரை.

வெள்ளைமனம்

திருநாவுக்கரசரின் நேர்காணல் படித்தேன். அவர்கள் கூரிய கருத்துக்கள் யாவும் உண்மையின் வெளிப்பாடு. ஒளிவுமறைவு ஏதும் இல்லை. என்மகன் தேர்தலில் வெற்றி பெற பணம் கொடுக்க விரும்பவில்லை என்பதைத்தவிர. கலாப்பிரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்க நிகழ்வு படித்தேன், மகிழ்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு ‘நீ போகின்ற பாதையெல்லாம் பூ முகம் காணுகின்றேன் என்ற கலாப்பிரியாவின் கட்டுரைத் தொகுப்பையும் வழங்கியதோடு, ‘அந்திமழை' இதழ் ஆறுமாதம் பரிசாக அனுப்பிவைக்கப்படும் என்ற அறிவிப்பும் பிறர்க்கு வழிகாட்டும் நல்ல செயல்பாடு. என்னைப்போன்றவர்களுக்கு விழாவில் பங்கு பெறவில்லையே என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. வன்னி அரசின் ‘சேரி பிகேவியர்' கட்டுரை படித்தேன். விழிப்புணர்வு இன்மையால் சுகாதாரக் குறைபாடும், தூய்மையற்ற சூழலும் ஒரு சில சேரிகளில் இருப்பது என்பது வெளிப்படை. இதற்கு ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல காரணம், தவறானவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களாகிய நமக்கும் பொறுப்பு உண்டு. தவறான வழிகாட்டுதல்களால் அனைத்துத்தரப்பு இளைஞர்களில் சிலரும் பாதை மாறித்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரி இளைஞர்கள் மிகைப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும் சேரி மக்களில் பெரும்பாலனவர்கள் வெள்ளச் சோளமனம் படைத்தவர்களே.

கோட்டைசெல்வம், கோட்டைக் காட்டுவலசு.

அருமை

ஆகஸ்ட் இதழில் திருமணங்கள் சிறப்பிதழ் பாரதி மணியின் கட்டுரை அருமை. பலமுறை அவரை நேரில் பார்த்துள்ளேன். அவர் எழுதியதை இப்போதுதான் முதன்முறையாக படிக்கிறேன். வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதச்சொல்லுங்க.

தீபம் எஸ்.திருமலை, வேளச்சேரி.

பிக்பாஸ்

காமிரா கண்கள் பகுதியில் இடம் பெறும் படங்களுக்கு ஒரு வரி குறிப்பு தாருங்கள். கொஞ்சம் அறிவையும் வளர்த்துக் கொள்ளுகிறோம். திருமணங்கள் சிறப்பிதழ் பகுதியில் பாரதிமணியின் ‘மணி'யான MONஉஙு நேர்மை பாராட்டுக்குரியது. கல்யாண மாலை மோகனின் நேர்காணல் கல்யாணக்களையையும் நெகிழ்வையையும் கூட்டியது. ஸ்டார்கள் முதல் சாமானியர்கள் வரையிலான கலாச்சார நிகழ்வின் பதிவு என குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அதை ஓரளவு இயக்குநர் அனிஸ் மட்டுமே பூர்த்தி செய்திருந்தார். சாமானியர்களை கண்டுக்கொள்ளாத சாதாரணப் பதிவுதான் ‘திருமணங்கள் சிறப்பிதழ்'. சிறப்பியுங்கள் அடுத்தமுறை. ஆனால் எப்போதுமே சிறப்பிதழ் தருவதில் அந்திமழைதான் ‘பிக்பாஸ்'! இம் முறை இடம் பெற்ற பிக்பாஸ் பற்றிய பார்வையும் அதில் ஒன்று.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், ராமாவரம்.

உண்மை

சேரி பிகேவியர் பற்றிய வன்னி அரசின் கேள்விகள் நியாயமானதே, மேட்டுக் குடி ஆதிக்கச் சமூகத்தில் இப்படியான கேள்விகளுக்குப் பொதுப்புத்தியுடன் இந்த சமூகம் எப்போது மாற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பும் சாதிய பிம்பத்தை உடைத்தெரிய வேண்டும் என்ற ஏக்கமும் நிறைய இருந்தாலும் தீர்வுகள் இல்லாத கட்டமைப்புகளுக்குள் சிக்கிக் கிடக்கிறோம் என்பதே உண்மை.

நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி

பாதுகாக்கலாம்!

ஆகஸ்ட்'17 இதழில் உடலில் உயிர் இருக்கிற வரை ஓடிக்கொண்டிருப்பேன் என்னும் மா.சுப்ரமணியனின் நேர்காணல் மிகவும் அருமை. கலாப்ரியாவை உருவாக்கியவர் தாகூர் என்னும் எஸ்.ராவின் பேச்சு சிறப்பாக இருந்தது. நாலு ஆண்டு கடுங்காவல் தண்டனை என்னும் பேராசிரியர் மா.சு.அண்ணாமலையின் சிறப்புக்கட்டுரை உண்மையில் அற்புதம். கதிராமங்கலம் & நெடுவாசல் போர்க்காலம், எழுத்தோவியம் உணர்ச்சி ஊட்டியது. திருமணங்கள் குறித்த எல்லாபடைப்புகளுமே உள்ளத்தை வெகுவாக கொள்ளை கொண்டன. திருமணங்கள் சிறப்பிதழ் படிக்க மட்டுமன்றி பாதுகாத்து வைக்கவுமான இதழாகும்.

தங்க.சங்கரபாண்டியன் பி.லிட், எம்.ஏ, மணலி.

நெகிழ்வு

பேச்சு வழக்கிலும், திரைப்படங்களிலும் நக்கல், நையாண்டிக்கு சிலர் பயன்படுத்தும் ‘‘அட்டு பிகர்'', ‘‘சேரி பிகேவியர்'' என்ற சொல்லாடல்களின் தாக்கத்தை வன்னி அரசு மனம் கசந்து விவரித்தது, அத்தகைய வார்த்தைகளைச் சொல்பவர்களுக்குச் சரியான சாட்டையடி & ஒரு நல்ல பாடம். நம் சுதந்திரத் திருநாட்டில், ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட சேரி மக்களை இன்னும் அப்படியே இருக்கச்செய்திருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும். அந்த அவலத்தை மாற்ற முன் வர வேண்டும். வசதி குறைந்த நிலையிலும் அம்மக்களின் பண்பாடு, விருந்தோம்பல் மகத்தானது என்கிற வன்னிஅரசின் விரிவான விளக்கம் மனதை நெகிழச்செய்கிறது. ‘‘ஒதுக்கப்பட்ட கல்லே வீட் டுக்குத் தலைக்கல் ஆனது'' என்ற பைபிளின் வாக்குப்படி, ஒதுக்கப்பட்ட குடிசை வாழ்மக்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமானவர்கள். சமுதாய நலப்பணிகளுக்கு முன் நிற்பவர்கள் அவர்களை இழிவான வார்த்தைகளால் அவமானப்படுத்துவது, கொலைக்குற்றத்திற்கு ஒப்பானது.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தெளிவு

பிக்பாஸ் பற்றிய அட்டைப்படக்கட்டுரை நல்ல தெளிவு. மொத்தத்தில் பரணி, ஓவியா போல் பார்க்கும் நாமும், தலைமுடியை பிய்த்துக்க வாய்ப்புபோல் இருக்கு, பைத்தியம் பிடிக்காமலிருந்தால் தம்புரான் புண்ணியம்! திருமணங்கள் சிறப்பிதழ் சூப்பர்! மின்னிய நட்சத்திர திருமணங்கள் ரசிக்க வைத்தது. எந்த பத்திரிகையிலும் படித்திராத மின்னிய நட்சத்திர திருமணங்கள் பற்றிய தகவல்கள், நன்றி!

இ.டி.ஹேமமாலினி, ஆவடி.

விடிவு

விவசாயியை முதுகெலும்பு, முள்ளெலும்பு என்று சொன்னதெல்லாம் ஒரு காலம்! விளமல், நெடுவாசல், கதிராமங்கலம் என்பவை போராட்டங்களின் முன்னுரைதான். கடலூர், நாகை, சீர்காழியில் 45 கிராமங்களைத் தாரைவார்க்க எந்த விவசாயியும் தயாராயில்லை என்பதை ஊடகங்கள்தான் அரசுக்கு உணர்த்த வேண்டும். டெல்டாவில் எரிகின்ற பெருநெருப்பை அந்திமழை யொத்த பெருமழைகள் தான் அணைக்க வேண்டும். அரசுக்கு உணர்த்த வேண்டும். ‘‘விவசாயி களை சோதிப்பவனுக்கு விடிவே வராது''.

கவிஞர்.சித.கருணாநிதி,மருதூர் தெற்கு.