எங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவரிடம் காரில், பிளாஸ்டிக் கூடையில், அரவணைப்பில் அந்தஸ்தாக வரும் செல்ல பிராணிகளைப் பார்த்து இதுகளுக்கு வந்த வாழ்வை பாருப்பா! என்று கேலி பேசுவதுண்டு. நாகர்கோயில் மருத்துவர் மூலம் பாசம் பரிமாறிக்கொள்ளும் ஆறறிவு + ஐந்தறிவு =பந்தத்தைப் படித்து சிலிர்த்தோம். மனிதர்களுக்குள் அந்நியோன்யம் குறைந்து மனித நேயம் மறந்து வரும் நாளில், பூனைக்கும் நாய்க்கும் ‘பாசக்கார மனிதர்கள்!' அது மனிதனுக்கு வைத்த குட்டு.
மல்லிகா அன்பழகன், சென்னை -78
வயசெல்லாம் ஒரு மேட்டரா, ஐம்பதுக்குப் பின் கதாநாயகர்கள் என்று அந்திமழை இளங்கோவன் தந்த சிறப்பு பக்கங்கள் மகா சிறப்பு ! எம்.ஜி.ஆர் குறித்த விரிவான விளக்கம் மெகா சிறப்பு. ஜான் ட்ரவோல்டா+நடிகர் திலகம் +கமல்+ரஜினி +அமிதாப்+என்று சிறப்புப் பக்கங்களில் வெவ்வேறு கட்டுரையாளர்களால் அந்திமழை முழுக்க ‘அந்த நாள் ஞாபகம்' என்று போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷம் கிடைத்துள்ளது. அந்திமழையால் ஆத்மா நனைந்து குளிர்ந்து, ஒளிர்ந்தது.
ஆர். இராஜகோபாலன் கொம்புக்கோட்டை - 628653
‘‘நமஸ்தே ட்ரம்ப்'' என்று 55 வரிகளில் 2000 ஆண்டுக்கு முன்பிருந்த அமெரிக்க இந்திய உறவு மற்றும் முந்தைய பொருளாதார உயர்வு பிந்தையச் சரிவு என்றெல்லாம் குறிப்பிட்டுவிட்டு கிளிண்டன், புஷ் விசிட்களையும் ‘ஒபாமா' வின் இரு வேறு விசிட்களையும் பதிவிட்டு தற்போது ட்ரம்பின் விசிட் ப்ளஸ் மைனஸ் என்று நறுக் நறுக்காக கருக் கருக்காகத் தந்த விளக்கம் ‘பாவமன்னிப்பு ‘படப் பாடலான சிலர் சிரிப்பார் என்ற பாடலை பாட வைத்தது.
ஆர்.ஜே.கல்யாணி, மணலிவிளை - 627657
‘டாடாவின் காதல்' என்பதைப்படித்தேன் ! பணம் + பதவி+பட்டம் +பவுசு என்பதே வாழ்க்கை என்று கருதி அண்ணாந்து பார்த்தே ஏக்கப் பெருமூச்சு விடும் இளசுகளுக்கு ‘டாடாவின் இளம் வயது +பெற்றோர் நிலைப்பாடு+அரும்பிய காதல்+அத்தனையுமே மனத்தாங்கல் கொண்டதுதானே தவிர பணத்தாங்கலால் எதையுமே தடுக்க இயலவில்லை என்பதால் இளசுகள் ‘பணம் மோகம் தவிர்த்து குணம் எனும் குன்றேறி நிற்க டாடா தகவல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா அமையட்டும்.
பிரகாஷ், பெரிய தாழை - 628703
அதுசரி அந்திமழை இளங்கோவன் சார், கேப்டன் 53, எம்.ஜி.ஆர் 55, சிவாஜி 60 வயசில் கட்சி தொடங்க, ரஜினி 70ல் தொடங்கினால் என்ன! தேர்தல் வெற்றிக்குத் தேவை ஏஜ் அல்ல, மக்கள் வோ(ல்)ட்டேஜ். ரஜினியின் வாய் சவடாலுக்கும் தான் அவரே நிர்ணயித்துக் கொண்ட (2021) காலக்கெடு நெருங்கி வருகிறதே, பார்ப்போம். (இதுவே பசுவய்யா கவிதைக்கும் பதிலாகும்)
அ.யாழினி பர்வதம், சென்னை - 78
பாசக்கார மனிதர்கள் கட்டுரை பூனை நாயிடம் மனிதர்கள், பாசமாக இருப்பதை அடையாளப்படுத்துகிறது. அந்த கால டாக்டர் சென்ன கேசவனைப் பற்றி கட்டுரை சிறப்பு. அப்படிப்பட்டவர்களை அரசு கௌரவிக்க வேண்டும். இப்பொழுது வைத்தியத்தை விட சம்பாத்தியம் என்ற கொடிய நோய் பரவி சமுதாயத்தை அலைக்கழிக்கிறது, நோய் இருந்தால் தான் டாக்டர் பிழைப்பு. மனிதர்களும் தன்னைக்காப்பாற்றி கொள்ள முடியாத இயலாமையில் மருத்துவமனைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. தமிழ் நாவல்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. கலாப்ரியாவின் கட்டுரையில் நினைத்ததை முடித்தவர் உலகத்திலேயே அவர் ஒருவர்தான். மக்களை கவர்ந்தவர், நடிகர், அரசியல்வாதி, இனி ஒருவர் தலைஎடுப்பது கடினம். தோழர்
இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்
மார்ச் மாத இதழின் அட்டைப்படம் வரைந்த ஜீவாவின் கரங்கள் என்றென்றும் என் வாழ்த்துக்குரியது. சூப்பர் ஸ்டார் பற்றிய கட்டுரையும் இளையராஜாவின் தூரிகை வரைந்த படங்களும் நன்று.
அ.முரளிதரன் , மதுரை - 3
‘வேட்டையாடத்தான் வந்தேன்' என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்தி ரஜினியின் அரசியல் பிரவேச திருவிளையாடல் ஆரம்பமாக அஞ்சுபக்க தொகுப்பு தந்து அசத்திய அந்திமழை! என்றாலும் தூவானம் கூடத் துவக்காமல் அடைமழையென ரஜினியை கருதும் ஆர்வலர்கள் அறிந்து கொள்ள அஞ்சு பக்கத் தகவல்களும் 2021க்கான ஜாதகம்தான். அவரு யாருக்கான சாதகம் என்று எண்ணாமல், அவர் மக்களுக்கான போதகம் என்றாகிவிட்டார்! வேட்டையாடத்தான் வந்தேன் என்ற கவிதை வரிக்கு முன் ‘ஓட்டு' என்ற வார்த்தையையும் சேர்த்து ஓட்டு வேட்டையாடத்தான் வந்தேன் என்று அவர் நிரூபிக்கும் நாளே ரஜினியின் ரசி கர்களுக்கு வேட்டு போட்டதின் அர்த்தம் புரியும்! ஆரம்பத்தில் அவரது பாட்சா பலித்தது! பின்னர் அவர் பருப்பு வேகவில்லை என்றாலும் கூட இன்றிருக்கும் அரசியல் சூழலில் அவரிடம் ஏதோ ஒரு பவர் இருப்பதாகக் கருதுகிறார்கள். கமலுடனும் டிடிவியிடமும் கே.எஸ்.அழகிரியிடமும் கம்யூனிஸ்டுகளிடமும் சீட்டுகளை பங்கிட்டு ரஜினி களம் கண்டால் மாற்று அரசியல் என்பது ஏற்றம் பெறும்! இல்லையென்றால் பழைய குருடி கதவை திறடி என்றாகிவிடும், சிஸ்டமே கெட்டு போகும்.
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை - 627657
காத்திருப்பின் கணக்கு ! திருவிளையாடல் ஆரம்பம் அந்திமழை இளங்கோவன் அட்டைப்பட கட்டுரை ஆழம்!உலக புகழ் பெற்ற மால்கம் க்லாட் வெலின் ஆய்வு நூலான ணிதtடூடிஞுணூண் எத்துறையாயினும் அத்துறை சார்ந்து அனுபவமும், பயிற்சியும், அவசியம் என்றும் அதில் வாகை சூட பத்தாயிரம் மணி நேரம் பரிச்சயம் இருந்தால்தான் வென்றெடுக்க முடியும் என்பதை விண்டுரைத்து, தமிழக அரசியலில் கால் பதித்த திரைக்கலைஞர்களில் எம்.ஜி.ஆர் தவிர ஏனையோர் தோல்விகளை தழுவிய வரலாற்றை துல்லியமாக எழுதிச் சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு. சினிமா வேறு, அரசியல் வேறு, என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டார் கட்டுரையாளர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்ற சொன்ன அதே ரஜினி, மீண்டும் அவரது ஆட்சிக்கு ஆதரவு தரும் வண்ணம் ‘தைரிய லட்சுமி' என்று புகழ்ந்துரைத்ததையும், அவர் மறைந்ததும் சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று பிதற்றியதையும், போர் வரும் போது பார்த்துப்போம், 234 தொகுதிலேயும் நாம போட்டியிடுறோம் என்றெல்லாம் அறிவித்துவிட்டு இன்றுவரை கட்சி தொடங்காமல் வாளாவிருப்பதையும் தனது கருத்தில் உறுதியில்லாமல் உளறிவருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நேர்மை, வாய்மை, பொதுவுடைமை போன்ற வெற்று வார்த்தைகளால் மக்கள் மயங்கமாட்டார்கள் என்பதை வரும் 2021 தேர்தல் தமிழகத்துக்கு காட்டிவிடும், பார்ப்போம்.
பவளவண்ணன் , நடுவிக்கோட்டை.
அரசியலில் ரஜினி - இதுவரை என்று மார்ச் இதழில் வெளிவந்திருக்கும் பெட்டிச்செய்தியே அவர் எத்தகைய குழப்பவாதி என்பதற்கு ஒரு சான்று. பிரச்சனைகள் வரும் போது, அதனை எதிர் கொண்டு, தன் சொந்த அரசியல் நுண்ணறிவால் வெற்றி கொள்ள வேண்டும். அண்ணா போல், கலைஞர் போல், காமராஜர் போல், அப்படியில்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காண இமயமலைக்குச் சென்று தியானத்தில் அமர்ந்து விடக்கூடாது. அடிப்படையே தகர்ந்து போய் விடும், விஜயகாந்த் போன்றோரின் அரசியல் வரலாறே இதற்கொரு எடுத்துக்காட்டு. சிவாஜியாலேயே வெற்றிகாண முடியாத அரசியலை, சிவாஜிராவால் வெற்றி காண முடியுமா! சினிமா ரசிகர்கள் வேறு, அரசியல் தொண்டர்கள் வேறு, இந்த வேறுபாட்டை முதலில் ரஜினி புரிந்து கொண்டால் அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது வெறும் கானல் நீரே என்பது புரிந்துவிடும் .
க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
காத்திருப்பின் கணக்கு... திருவிளையாடல் ஆரம்பம்...என நீங்கள் குறிப்பிட்டது மாதிரியே மிகச்சரியாக ரஜினியின் அடுத்த நகர்த்துதல் அமைந்து விட்டது. கட்டுரையும் சரியான அழுத்தமான கருத்துகளை முன் வைத்தது தெளிவான பார்வை. சிறப்புப் பக்கங்களில் இடம் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் நிறைவானவை. கலாப்பிரியாவின் மக்கள் திலகம் பற்றிய படைப்பு ஏறத்தாழ எல்லாவற்றையும் சிறப்பாகப் பேசிவிட்டது எனலாம்.முதல் மரியாதை பற்றிய ஒவ்வொரு கருத்தும் நுணுகிப் பார்த்ததில் கிடைத்த முத்துகள். இரண்டாயிரத்தில் ஒருவன்... தலைப்பு சரியானது என்றாலும் எம்.ஜி.ஆர்.ரசிகர்களை மிகவும் மனம் நோக வைக்கும். நூற்றுக்கு நூறு மனமொத்த கருத்துகள்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89