இயக்குநர் ராம் - பவா செல்லத்துரைக்கு இடையிலான, பொய்க் கலப்பும் போலித்தனமும் இல்லாத, நேர்மையான நட்பின் ஆழத்தை, மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் தொடரில் படித்தபோது சிலிர்த்துப் போனேன். வாழ்விலும், வறுமையிலும், வசந்தத்திலும் அபூர்வமானது. அதைவிட, தான் உண்ண நல்ல உணவு கிடைத்த தருணத்தில், தன் இயக்குநரின் பசி குறித்து கவலைப்பட்ட மாரி செல்வராஜின் பாசத்தையும் அளவிட முடியாது. இத்தகைய உயர்ந்தவர்களை உயிர்ப்புடன் அறிமுகப்படுத்தும், பவா செல்லதுரை போன்ற இலக்கியவாதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நெகிழ்வான நன்றிகள்..!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
வேலைக்குப் போகும் பெண்கள் சிறப்பிதழ் & உழைக்கும் மகளிர் எதிர்கொள்ளும் விவகாரத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு வழக்கறிஞர் அஜிதாவின் ஆய்வுக் கட்டுரை ஓர் அருமருந்து! என்.சி.ஆர்.பி கணக்குப்படி வருடத்திற்கு 20000 பெண்கள் இப்பிரச்சனைகளினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற நிலை மாறி, ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறார்கள் என்பது இன்றைய உண்மை நிலை! எனவே காலத்திற்கேற்ப பெண்களை மதித்து, இசைந்து வாழ்ந்தே ஆக வேண்டும். மாதர் தம்மை இழிவு படுத்தும் காலம் மலையேறிப் போய்விட்டது என்றாலும் விவாகரத்துக்கள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வது வேதனையளிக்கிறது. வழக்கறிஞர் அஜிதா, விவாகரத்துக்கான சட்ட விதிகளை விளக்கியதோடு, ஆணும் பெண்ணும் அடிமைப்படுத்தும் எண்ணம் இன்றி, சமத்துவப் போக்கைக் கடை பிடித்தால் இந்த அவலம் நடக்காது என்ற அற்புதத்தீர்வையும் குறிப்பிட்டிருக்கிறார். இது அர்த்தமுள்ள, இனிய இல்லத்திற்கு வழிவகுக்கும்!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.
போட்டியாளர்களை வணங்க வேண்டும் என்ற நடராஜனின் நேர்காணல் அருமை. ஆண்களே வெட்கப்படுங்கள் கவர் ஸ்டோரி அருமை, சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
அ.முரளிதரன், மதுரை.
வரலாற்றையே இலக்கியமாக எழுதிக்காட்டிய கிப்பன் என்பாரின், ரோமானிய பேரர சின் வீழ்ச்சியும் அழிவும் (The Fall and Decline of the Roman Empire) என்ற நூலை என் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். இன்றைய தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கும்போதும், விசுவாசிகளின் மோதல் என்ற அரசியல் கட்டுரையைப் படித்த போதும் என் உள்ளத்தில் அந்தப் பழைய வரலாற்று நிகழ்வுகளே நிழலாடின. எத்தகைய வலிமை மிக்க பேரரசாக இருந்தாலும், ஆள்வோர் தனக்குப்பின் நாட்டை ஆள, ஒரு சரியான வாரிசை உருவாக்கத்தவறினால், அந்த நாட்டின் வீழ்ச்சியையும், அழிவையும் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது என்பதுதான் வரலாறு நமக்குத்தரும் எச்சரிக்கை ஒலி. ஆனால், அந்த நிலை, அதிமுகவில் இல்லாமற் போனதற்குக் காரணமே, அதன் தலைமைதான். சேர, சோழர், பாண்டியர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு எப்படி வாரிசுப்போட்டி, ஒற்றுமையின்மை காரணமோ, அதே காரணம் தான் இன்றைய அதிமுக அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் விரும்புவது, குழப்பமில்லாது, நாட்டை வழிநடத்திச்செல்லும் நல்ல தலைவரைத்தானே தவிர பதவிச்சண்டை போடுகின்ற தன்னலக்காரர்களையல்ல..
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
போட்டியாளர்களை வணங்க வேண்டும் எனும் வைகை கார்மெண்ட்ஸ் நடராஜன் அவர்களின் சொற்றொடர் வைர வரிகள். உலகம் உன்னுடையது பகுதியில் சுரேந்திரன் மிதமிஞ்சிய ஆச்சர்யத்தைத் தந்தார். தாண்டிய தடைக்கற்கள் தான் எத்தனையெத்தனை? ‘‘வலி, வேதனை தோல்விகளைப் பார்த்திரா விட்டால் வெற்றியை நான் சுவைத்திருக்கவே மாட்டேன்'' என்று அவர் கூறியிருப்பது அவர் எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்திருக்கிறார் என்பதைப் புரியவைத்தது. நன்றி!
எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
வெளிப்புறம் இருளிலும், உட்புறம் ஒளியிலும் மிளிரும் தஞ்சைப் பெரிய கோவிலின் இருநிலைத் தோற்றம் மனதைக் கொள்ளை கொண்டது. நோயல் கார்க்கியின் தனித்துவப் பார்வைக்கு வாழ்த்துகள் பல. உண்மைகள் பேசும்போது உறவுகள் ஒதுங்கிவிடுகின்றன என்பதை பச்சமால் தேவர் நன்றாகப் புரிய வைத்தார். கலப்பும் கௌரவமும் அதைத்தீர்மானிப்பதை வன்னிஅரசு வார்த்தைகளில் எண்ணி உரைத்தது மனதில் பதிந்தது. போட்டிகளே இல்லாத உலகில் நான் எதற்காக வாழவேண்டும் எனக்கேட்கும் கன்னட மொழியில் புழங்கும் நாடோடிப் பாடல் ஒன்று. வைகைகார்மெண்ட்ஸ் நடராஜனின் நேர்காணல் அதற்கான செயல் விளக்கம். ஆண்களை வெட்கப்படச் சொல்லிவிட்டு பின் எதற்காக இதழின் முதல் படைப்பான விசுவாசிகளின் மோதலில் அந்தப் படத்தை வைத்தீர்கள்? ரொம்பக் குறும்பு சார் உங்களுக்கு.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
வேலைக்குப்போகும் பெண்கள் சிறப்பிதழ், மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டீர்கள் அருமை! இல்லத்தரசிகள் சிறப்பிதழ் என்று வருமோ? அவர்களும் சகலகலா வல்லிகள் என்பது உலகுக்குத் தெரிய வேண்டாமா? எத்தனைப் பொறுப்பு, எத்தனை இடர்ப்பாடு, அவஸ்தை, எத்தனை எத்தனை அவதாரம் தினம், தினம் எடுக்கவேண்டியுள்ளது என்பது இல்லத்தரசிகளிடம் பேட்டி கண்டால்தானே தெரியும்? அவர்களுக்குள்ளும் கோடி திறமைகள் ஒளிந்து கிடக்கிறது, அங்கும் ஆண் ஆதிக்கத்தால், என்ன கிழிச்சுட்டே என்ற ஒற்றை கேள்வியில் முடங்கி, நொந்து நூடுல்ஸ் ஆகிறோம்!
இ.டி.ஹேமமாலினி, ஆவடி.
காதம்பரியின் சினிமா விமர்ச னம் பார்க்க வேண்டாம் என்று நினைத்து (அ) பெரிதாக ஆர்வம் காட்டாத ''அதே கண்கள்'' திரைப்படத்தை பார்க்கத்தூண்டியது. போகன் விமர்சனத்தில் கேரக்டர் ஸ்டடி (Character Study) பற்றி கூறியது நல்லதொரு விமர்சனத்தை படிப்பதாக தோன்றியது. ஒரே பகுதியில் மூன்று படங்களை விமர்சனம் செய்வதும், திரைவலம் பகுதியில் வராத படங்கள் என்று சொல்லி ‘‘ரிலீஸாகிடுச்சுப்பா. வாழ்த்துக்கள்'' என்று இரண்டு வார்த்தையில் நான்கு படங்களின் விமர்சனத்தை முடித்தது செம!
மோகன், மாதவரம்.
அந்திமழை இதழின் அறிமுக வாசகன் நான். தமிழில் நான் விரும்பியதுபோல் ஓர் மாத இதழை கண்டடைந்ததில் மகிழ்ச்சி. உலகம் உன்னுடையது அந்திமழையின் சிறந்ததொரு பகுதியாக கருதுகிறேன். சுரேந்திரன் ஜெயசேகரின் பேட்டி, வாழ்வில் வெற்றிபெற துடிக்கும் என் போன்றோருக்கு உந்துசக்தியாக இருக்கும். குடும்ப கஷ்டங்கள், தந்தை மறைவுக்கு பிறகான தன் போராட்டங்கள், தாயை ராணியாக வாழவைக்க வேண்டும் என்ற சபதமும், கடினமான காலங்களில் காட்டிய மனத்திண்மையும் என் மனதளவில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது.
கோவிந்தராஜ், தர்மபுரி