புதுமையான எண்ணங்களை (வழக்கம்போல்) தாங்கி வந்த இதழ். புனைவும் உண்மையும் என்பது நல்ல தலைப்பு. செழியன் நினைவுகளை தாங்கி வந்த திருமாவேலன் கட்டுரை மிகச் சிறப்பு. செழியன் கொண்டாடப் பட வேண்டியவர். ஓவியம் அழகு. ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் தொடர்பான டி.வி. எஸ். சோமு கட்டுரை ஒரு யதார்த்த நிலையை விளக்கியது. இரண்டாவது தலைநகரம் பற்றிய கட் டுரை பலரது எண்ணங்களை தர்க்க ரீதியாக தூண்டுவது. ‘நெல்லை சென்ட்ரல் தியேட்டர்,'' சிறுகதை உணர்வுப்பூர்வமானது.அழகு. ஹரன்பிரசன்னா என்னைப்போல் பலரது பழைய எண்ணங்களை தூண்டி, தொட்டுள்ளார்.சிறப்பு பக்கங்கள்,‘‘புனைவுகளின் நடுவே'' அனைத்து கட்டுரைகளும் அருமை. எண்ணங்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பன. நெல்லை கண்ணன் சிறுகதை &''குல தெய்வம்'' சிறப்போ சிறப்பு. ஆழமான கருத்தை அற்புதமாக நெல்லை தமிழில் அவருடன் அழைத்து சென்று தெரிவிக்கும் பாங்கே அலாதி. இந்த இதழுக்கு முத்தாய்ப்பு. பாராட்டுகள்.
அ.சங்கரலிங்கம், சென்னை-37
புனைவும் உண்மையும் கட்டுரைகள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தன. நந்தி சிலை, கோபுர விமானம், ஐன்ஸ்டின் பள்ளி படிப்பு, ஆதாம் ஏவாள் ஆப்பிள் கதை ( இதை வைத்து ஏகப்பட்ட கதைகளும், திரைப்படங்களும், ஜோக்குகளும் வந்துள்ளன), வலிப்புக்கு இரும்பு பொருள் என்று எண்ணற்ற உண்மை தகவல்கள். தமிழர்களின் வரலாற்றிலும், இலக்கியத்திலும் இடைச்செருகலும் அறிவுத் திருட்டும் நடந்தேறியுள்ளது.. நம் சம காலத்தில் திருக்குறளையும், வள்ளுவனையும், முருகனையும் விட்டுவைக்கவில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சொல்லியே பல ஓலைச்சுவடிகளை அழித்து நம் வரலாற்றின் பல தகவல்களை அழித்தே விட்டனர். கீழடி ஆராய்ச்சி தொடருமா? ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருமா? எது தேவையோ அதுவே தர்மம் என்று ஆட்சி செய்பவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? இக்கட்டுரைகள் போல் ஒரு நாள் உண்மைகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜெகதீசன், திருவரங்கம்.
கொரோனா மரணங்களைவிட மருத்துவமனையில் அனுமதி கிடைக்காமல் ஏற்பட்ட மரணங்கள் தான் கொடுமை. தொழில் பாதிப்பு, வேலையிழப்பு, மன உளைச்சல் என மக்கள் உள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. 90 சதவிகிதம் உண்மைத்தன்மை இல்லை. இந்த சூழ்நிலையிலும் கையெடுத்து கும்பிடும் காவல்துறையினரையும் பார்த்திருக்கிறேன், 500, 1000 என எளிய நடைபாதை வியாபாரிகளிடம் பிடுங்கிக் கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். எல்லாம் மாறக்கூடியதுதான் ஆனால் தமிழகத்தில் எப்போது என்று தான் தெரியவில்லை.
செந்தில், மோகனூர்
கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை பற்றிய தவறான நம்பிக்கைளை விஞ்ஞான ரீதியாகவும், நாம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையிலும் எளிதாக விளக்கம் அளித்து இருந்தது பாராட்டுக்குரியது ஆகும். நிறைய விசயங்களை எடுத்துக்காட்டுடன் மருத்துவர் ஜெயபிரகாஷ் விளக்கியுள்ளது அவரது ஆழ்ந்த அனுபவங்களை பறைசாற்றுகிறது.
கலிலூர் ரகுமான் (மின்னஞ்சல் வழி)
சிறப்புப் பக்கங்களில் தாங்கள் எடுக்கும் சீரான கவனம் தங்கள் தலைப்புகளிலேயே பிரதிபலிக்கிறது... புனைவும் உண்மையும்... என்ன அற்புதமான பார்வை.. அதில் அரசியல் முதல் அன்றாடம் வரை என வந்துள்ள படைப்புகள் பல பாராட்டத தக்கவை. சில அவர்களின் பாரபட்சமான அண்மைக் கால சார்பியல் பார்வைகளைக் கொண்டவை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் பல சிறப்பான புரிதல்களைத் தந்த கட்டுரைகள் தனித்துவமானவை. அதைச் சிறப்புப் பக்கங்களின் மிக அழகாகவே குறிப்பிட்டிருந்தார் அந்திமழை இளஙகோவன். முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா...என்ற எனது நீண்டநாள் கேள்விக்கு தக்க விடை கிடைத்தது. பலருக்கும் பயனான விளக்கமாகவும் அது இருந்திருக்கலாம். குடும்பத்திற்குள் தம்பதிகள் சண்டைபோட வழிகாட்டிய விதம் அருமை. பலர் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் எனச் செயல்பாடு களில் இறங்கியும் இருக்கலாம். அராத்துவின் பிஸினஸ் மூளை என்ன விலை... மிகப் பிரமாதமான விளக்கம் .தொழில் முனைவோருக்கு உதவும். நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல் மிகச் சரியான பார்வையில் ஆழமான பல பிரச்சினைகளுக்கு தீர்வையும் சுட்டிக் காட்டியுள்ளது சிறப்பான வழிகாட்டலும் கூட... வாசகர் மைண்ட் வாயஸ் என நீங்கள் குறிப்பிட்ட அந்திமழை ஓர் இலக்கியப் பத்திரிகை என்ற ட்தூtட பற்றி... அப்படித்தான் பலர் எண்ணுகிறார்கள். மருத்துவக் கட்டுக் கதைகளும் மறுக்கும் உண்மைகளும் விழிப்புணர்வு தரும் படைப்பு. கொரோனா அழுத்தங்களில் இருந்து விடுபடுவது எப்படி... காலத்திற்கேற்ற கூடுதல் எச்சரிக்கையை உணர்த்தியது. இன்னொரு புனைவும் இங்கே உண்டு. கையில் வைத்திருக்கும் நாளிதழ், புத்தகம் இதைப் பார்த்து நம்மை அது சார்ந்த கட்சி அல்லது இயக்க மனத்தவராகப் பார்க்கும் ஒரு பொதுமைப் புனைவு.. நெல்லை சென்ட்ரல் தியேட்டர் சிறுகதை அருமை... ஹரன் பிரசன்னா கதைக்குள் நம்மை எங்கும் நகர விடவில்லை. அங்கேயே இழுத்துப் போட்டு விட்டார் இந்த ஊரடங்கின் உள்ளடங்கிலும் சிறந்த படைப்புகளைத் தேடித் தந்த அந்திமழைக்கு நன்றி.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன் சென்னை - 89
மழையாக பொழியும் அந்திமழையே நீ அடைமொழியுடன் அடைமழையாக பொழிக மலர் புலர்க மாதம் தோறும்..
மருதூர் ஆ.இராஜமாணிக்கம், பசுமை கவிஞர், ஜெயங்கொண்டம்
அவர்கள் அவர்களே பகுதியில் பூவுலகின் பெருந்தோழன் நெடுஞ்செழியனின் தனித்தன்மைகளையும், தீர்க்க தரிசனத்தையும் மனதில் நிற்கும்படி பதிவாக்கியிருந்தார் திருமாவேலன். எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களோடு மக்களாக போராளியாக களத்தில் நின்று மனித உரிமை, சமூக நீதி, பொதுவுடமை, தலித் விடுதலை போன்ற மக்கள் மேம்பாடு உயர அவராற்றிய அரிய பணிகளைப் பட்டியலிட்டிருப்பதுடன், அவர் நிலத்துக்குள் வேராக இருக்க வேண்டும் என்று நினைத்தாரே தவிர, மரத்தில் அனைவரும் பார்க்கும் பூவாக இருக்க நினைக்கவில்லை. என்ற கட்டுரையாளரின் தனித்த பார்வையும், களிப்பும் பொருள் பொதிந்ததாகவே உள்ளது.
பவளவண்ணன், நடுவிக்கோட்டை.
‘எதுவுமே செய்யவில்லையா?' என்ற சுப.வீரபாண்டியனின் ஆய்வு கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கு ஒரு சாட்சி எங்கள் குடும்பமே. எனது மகன் முனைவர் பட்டம் பெற்று குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் கல்லூரியில் 12 ஆண்டு கள் பணியாற்றிய நிலையில், 2007இல் கலைஞர் முதல்வராக இருக்கும் போது 1000பேருக்கு கல்லூரி உதவிப்பேராசிரியர் பணி இடங்களை ஏற்பாடு செய்தார். அதில் அவனும் ஒரு பைசா செலவில்லாமல் இடம் இடம்பெற்றான் என்பதை ஆதாரமாக கூறுகிறேன்.
லயன்.கே.முத்துகிருஷ்ணன், மதுரை.