சீராளன் ஜெயந்தனின் ‘காரச்சேவு' அன்றைய கிராமத்துச் சிறுவனின் மன நிலையை, வாழ்வியலைச் சிறப்பாகப் பிரதிபலித்து என்னுள் மலரும் நினைவுகளை கிளறிவிட் டது. மார்க்சியத்தின் நிழலில் சிறப்புப் பக்கங்களில் அது குறித்து தமிழில் இடதுசாரி எழுத்துகள் பற்றிய ஆய்வுப்பார்வை அருமை. இதில் இடதுசாரி எழுத்து களில் ஆளுமை செலுத்திய இதழ்களைப் பற்றிய ஒரு பார்வையை இடம்பெறச் செய்திருக்கலாம். கூறுவது எளிது. செய்பவர்களுக்குத்தானே சிரமம் தெரியும் என்றால் அதுவும் சரிதான். ஜெயமோகனின் விரிவான பார்வை பலவற்றைப் புரிய வைத்தது. எனக்குப் பிடித்தால் மிதவாதி. இல்லாவிட்டால் தீவிரவாதி என்கிற போக்குதான் இலக்கிய உலகிலும் அரசியலிலும் தொடர்கிறது.
என்.ஜே.கந்தமாறன், சென்னை.
மு.க.ஸ்டாலின் 2.0 என்ற சிறப்பான கட்டுரை படித்தேன். ‘‘மு.க.ஸ்டாலின் பலமென்ன? பலவீனமென்ன?'' என்று தலைவர் கலைஞரிடம் கேட்டபோது அவர் தந்த பதிலே அனைவரையும் சிந்திக்க வைத்தது. அவர் கூறினார்; ‘‘ஸ்டாலினின் பலம் அவரது உழைப்பு, உழைப்பு, உழைப்பு! அவரது பலவீனம், அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த தந்தைக்கு மகனாகப் பிறந்ததுதான்''! என்று. உண்மைதான்! இங்கு, மனிதர்களுடைய திறமைகள், அவர்களின் சாதியைக் கொண்டே மதிப்பிடுவது, ஒரு மிகப்பெரிய அவலமே! எனவே, இவைகளைக் கடந்து வெற்றி பெறுவது கடினமான செயலே! தனது சாதனைகளால், கின்னஸ் புத்தகத்திலே இடம் பெற்றுவிடலாம். ஆனால், மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல! அதிலும், இன்று அவர், வெற்றிபெற்று வருகிறார்.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
சீராளன் ஜெயந்தன் எழுதிய காரச்சேவு படித்தேன். காரச்சேவு நாக்கு ருசி. தன் அக்காளின் திருமணத்தின் போது நிறைய, நிறைய காரச்சேவு கிடைக்கும் என்று ஆசையுடன் இருந்தவனுக்கு.. அந்தக் குழந்தையின் ஆசை நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அன்று வயல் காட்டில் பழைய சோற்றுடன் தொட்டுக்கொள்ள அமராவதி ஆற்றுக் கருவாடு, மொச்சக்கட்டை, கத்தரிக்காய், உ.கிழங்கு கூட நண்டு காயவைத்த அமராவதி காகா மீன் கருவாடு சாப்பிட்டு விட்டு ஒரு சார்மினார் சிகரெட் புகைத்து விட்டு.. அதற்கு இணையா நச்சுன்னு ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்.. சிறுகதை படித்த சுகம்.. கடுமையான உழைப்பாளிக்கு மகனாக பிறந்ததால் சுகமாக சிறுகதை படிக்க முடிந்தது அந்த வறுமையிலும் அந்த இளம் வயதிலும். காரச்சேவு கதை அப்பாவை ஞாபகப்படுத்தியது. சம்பளம் வாங்கினாலும் சரி, பென்சன் வாங்கினாலும் சரி, விளைந்த வயல் நெல்லை விற்று காசு வாங்கினாலும் சரி மணி அய்யர் கடை ரோஸ்ட், அதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி கிடையாது. நூர் கடை கோழி குருமா..காரச்சேவு கதை நாக்கின் ருசியையும் எப்போதோஇறந்து போன அப்பாவின் ஞாபகத்தையும் கிளறி விட்டது.
எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக் குளம்.
மரபியல் பொய் சொல்லாது. மனிதன்? சிந்திக்கத்தூண்டிய முடிவோடு மரபியல் குறித்த விளக்கங்கள் நல்ல புரிதலைத் தந்தது. ஆரியர்களின் வருகைப்பற்றிய குழப்பங்களுக்கு இக்கட்டுரை நல்லதொரு தெளிவைத் தந்திருக்கிறது. டாக்டர் பிச்சப்பன் வணக்கத்துக்குரியவர், மேலும் சிறக்கட்டும் அவரது பணி.
நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி.
மு.க.ஸ்டாலின் 2.0 கட்டுரையில் செயல் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பாஸ் மார்க் பெற்றுவிட்டார் என்பதை படித்தவுடன் சிரிப்புதான் வந்தது. சட்டமன்றத்தில் அவர் எப்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்றே தெரியவில்லை. எல்லோரையும் ஆரியர்கள் என்று டாக்டர் பிச்சப்பன் கூறியது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் மட்டும் கொண்டாடக்கூடிய திருவிழாக்களை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பெண்களே நடத்தக்கூடிய சந்தையை இப்போது தான் பார்க்கிறேன். அன்வரின் பதிவு பாராட்டுக்குரியது.
காவினி, சென்னை.
விகேடி பாலன் அவர்களின் பேட்டி நெகிழ்ச்சியாக இருந்தது. உழைப்பால் உயர்ந்த அவர் வாழ்க்கை மிகச்சிறந்த தன்னம்பிக்கைச் சித்திரம்! இடங்கை இலக்கியம் கட்டுரையில் ஜெயகாந்தனை எந்த அளவிற்கு உயர்த்தி பிடித்தாரோ அதே அளவிற்கு மற்றவர்களை தூக்கி போட்டு மிதித்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். எஸ்.ராவின் இடதுசாரி எழுத்து கட்டுரையில் எந்த எழுத்தாளரையும் தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் மிக நேர்த்தியாக ரஷ்ய மற்றும் சீனாவின் இடது சாரி எழுத்தாளர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
தமிழழகன், நாமக்கல்.
மு.க.ஸ்டாலின் 2.0 கட்டுரை அருமை. அசோகனின் அறிவியல் கட்டுரை அருமை, இக்கட்டுரை சிந்தனையைத் தூண்டியது. சுரேஷ் சங்கையாவின் பேட்டி அவரது படத்தைப் போலவே வித்தியாசமாக இருந்தது.
அ.முரளிதரன், மதுரை
இடதுசாரி இலக்கியச் சிறப்பிதழ் சிறப்பாக வந்துள்ளது. இடதுசாரி இலக்கியம் குறித்து ஜெயமோகன் சரியான முடிவுக்கு வந்திருக்கிறார். தமிழில் இடதுசாரி சிந்தனையை மிக நேர்த்தியாக கதைக்குள் கொண்டு வந்து, தேர்ந்த சமூக உரையாடலை நடத்தியவர் ஜெயகாந்தன். மற்ற முற்போக்கு எழுத்தாளர்கள் ஒரு வட்டத்துக்குள் சிக்கித் திணறியபோது அதனை உடைத்துக் கொண்டு மேலெழுந்து நின்றவர்.
சிவகுமார் முத்தய்யா, திருவாரூர்
இடங்கை இலக்கியம் - ஜெயமோகன் அவர்களின் நீண்ட ஆழமான கட்டுரை. ஜெயகாந்தனை மூன்று கருத்தாங்களில் ஆழமாக அலசியுள்ளார்.இதுவரை ஜெயகாந்தனை இதுபோன்ற கோணத்தில் யாரும் ஆய்வு செய்யவில்லை. பல்வேறு இடதுசாரி எழுத்தாளர்களின் புகைப்படங்கள் கட்டுரைக்கு முத்தாய்ப்பு.
பொன்னம்பலம் காளிதாஸ் அசோக் (முகநூல் வழியாக)