தன்பலம், தன் கட்சி பலம், மாற்றார் பலம், மாற்றார் கட்சி பலம் இவை எல்லாவற்றையும் அறிந்தபின் (அறிந்தும் இருக்கலாம்)தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்தம் அனுதாபத்திற்குத்தான் ஆளாக நேரிடும். வாக்குகளிலா இருக்கிறது, போராளியின் வெற்றி என்று கேட்கப்பட்டுள்ளது. இல்லைதான், ஆனால் அந்தப் போராளி மக்கள் மனத்தை வென்றவராக அவர்தம் மனக்களத்தில் நின்றவராக இருத்தல் வேண்டும். ஆனால் தமிழருவி மணியன் போன்றோர் தேர்தல் களத்தில் நின்று, வாகை சூட வழியில்லை. மக்கள் மனதில் அவர் போன்றோர் அழுத்தமாகப் பதியவில்லை. தமிழகத் தேர்தல்களம் விசித்திரமானது. வாக்குகள், இன்று பணபலத்தாலும் கட்சி பலத்தாலும் தொண்டர்கள் பலத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது. நல்லவர்கள் என்றும் நல்லவர்களே! ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வல்லவர்கள் அல்ல. இன்று ஓர் அரசியல் தலைவரின் வெற்றியை நிர்ணயிப்பது தேர்தல் களம்தான். கட்சி பலம் இல்லையெனில் அவர்கள் என்னதான் நல்லவர்களாக இருப்பினும் அவர்கள் மக்கள் மனத்தில் ஒளிர்வதில்லை. இது தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்தான் பொருத்தம்தான்.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
நேர்க்கோடு கார்ட்டூன் அருமை, ராஜாவிற்குப் பாராட்டுக்கள். தேவை ஒரு பெண்ணுடல் - சிந்தனையைத் தூண்டியது. ஜெட் ராதாகிருஷ்ணன் நேர்காணல் சூப்பர்.
அ.முரளிதரன், மதுரை.
சண்டைப்படங்கள் சிறப்பிதழ் அதிரவைத்தது! அட்டைப்படம் செம்மம...டப்பிங் ஆர்டிஸ்ட் முரளிகுமார் அவர்களின் இன்னா மாமே! ஜாக்கியின் தமிழ்க்குரல் பற்றிய தகவல் கட்டுரை படித்தபோது நீண்டநாட்கள் ஆஹா அவர் யாரோ? என்று குழம்பிய கேள்விக்கு ‘‘ஓஹோ'' இவர்தானா என்று புருவம் உயர்த்த வைத்தது! இவர் நன்கு பரிச்சயமானவர்தான். ஆனாலும், இவர் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அந்திமழைக்கு நன்றிகள்! மாநில அரசு விருது போன்று, இன்னும் பல விருதுகள் அவருக்கு கிடைக்க வாழ்த்துக்கள்!
இ.டி.ஹேமமாலினி, சென்னை.
சண்டைப் படங்கள் சிறப்பிதழ் வழக்கம் போன்றே அருமை. இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் எதிரிகளை அலட்சியமாக புன்னகையுடன் சமாளித்து சண்டைபோடும் எம்.ஜி.ஆர் பட சண்டை காட்சிகளைப் பற்றிய விரிவான கட்டுரையைத் தந்திருக்கலாம். கை முண்டா தெரிய போடும் சட்டையின் மூலம் இளைஞர்களின் தன்னம்பிக்கையை ஆரோக்கியச் செயல்பாடுகளின் பயிற்சிகளுக்கு அழைத்துச் சென்ற அற்புதமான வழிமுறை அது. மேலும் ஹாலிவுட் படங்களில் சிறப்பான சண்டை முறைகளை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ்பாண்ட், சில்வஸ்டர் ஸ்டோலன், அர்னால்டு, வில்ஸ்மித் போன்றோர் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். தமிழகத்தில் ரஞ்சன், பி.யு.சின்னப்பாவின் கத்திவீச்சு, படங்களின் சண்டைக் காட்சியையே தங்கள் பட வெற்றிக்கு முதன்மைப்படுத்திய தயாரிப்பாளர்கள் பற்றிய ஒரு விரிவான பார்வையாக அமைந்திருக்கலாம். அடுத்தமுறை எதிர்பார்க்கிறோம்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
‘எழுதுவது அல்ல; எழுப்புவதுதான் எழுத்து' என்று எழுத்துக்கே இலக்கணம் வகுத்தார் பேரறிஞர் அண்ணா. அப்படி அந்த எழுத்துக் களை விட வலிமை பெற்ற பேசாத காவியங்களான ஓவியங்கள், பல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை ஒரு ஓவியமே தெளிவாக உணர்த்திவிடும். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, எப்படி கொலை நகரமாக மாறிவிட்டது என்பதை குருதிவழியும் ஒரு கத்தியேந்திய கொடியகரம் பற்றிய ஒரு ஓவியம் உள்ளத்தை உறையவைக்கும் வகையில் உணர்த்திவிட்டது. இத்தகைய அவலங்கள் நிகழ்வதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், பொருளாதர சூழ்நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கு அனைத்துமே காரணம். ஊடகங்கள் இதனை உணர்ந்து செயல்பட்டால் எதிர்காலம் செழித்து வளருமே.
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக் கருப்பூர்.
சூழலியல் ஆர்வலர் ச.முகம்மது அலியின் கட்டுரை என்னைத் திடுக்கிட வைத்தது. தமிழர்களிடம் விஞ்சியுள்ள ஓரளவு தாய் மொழி ஆர்வத்தையும் ஏளனம் செய்ய முற்படாமல் தமிழ்வழிக் கல்விக்குக் குரல் கொடுக்குமாறு அன்பர் முகம்மது அலியை அன்புடன் வேண்டுகிறேன்.
க.சி.அகமுடை நம்பி, மதுரை.
பா.செயப்பிரகாசத்தின் ‘செண்பகா' சிறுகதை படித்தேன். இலக்கற்ற செண்பகாவின் காதல் தோல்வி, மனதை வெகுவாய் காயப்படுத்தியது. சிவகுரு போன்ற முகமூடி மனிதர்களின் போலித்தனமான அன்பு, தன் நிஜ உருவைக் காட்டி வக்கிரமாய் நிரூபிக்கும்போது, இயல்பாய் எழவேண்டிய ஆக்ரோஷமின்றி, செண்பகா அமைதியாய் அதனை எதிர்கொண்டவிதம் மறக்கவியலாதது! சமூகத்தின் எல்லாப்பக்கங்களிலும், அன்றாடம் நிகழும் இத்தகைய சம்பவங்கள், சில சரித்திரங்களாகின்றன; சில இப்படி ஓசையின்றி உள்ளடங்கிப் போகிறது, மறக்கமுடியாத படைப்பு. தமிழருவி மணியனின் அரசியல் துறவறம் குறித்த கட்டுரையின் வருத்தம் மிக நியாயமானதுதான். ஆனால், அரசியல் நேர்மையும், உண்மையும் தழைக்க வேண்டுமென்றே, காலத்திற்குப் பொருந்தாத கொள்கையை முன்னிருத்தி, அவர் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ள முனைந்தது அவசியம்தானா என்பதுதான், நம்முன் நிற்கும் கேள்வி! மக்கள் தேர்தல் களத்தில் தங்களைப் புறக் கணித்தாலும், அரசியல் பணிகளால் சமூகத்தைச் செப்பனிடும் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை. வாழ்க்கையின் வெற்றியை வாக்குகளா நிர்ணயிக்கின்றன..?
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஜூலை அந்திமழை படித்தேன்.சண்டைக்காட்சிகள் சிறப்பிதழ் புரட்சித்தலைவரையும்,புரூஸ்லீயையும் மனத்துக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர் அடித்தால் அடிப்பது,அழுதால் அழுவது,சிரித்தால் சிரிப்பது என அன்றைய திரைப்பட அனுபவமும்,புரூஸ்லீ படம் பார்க்க சுற்றுலா ஏற்பாடு செய்து இளைஞர்கள் சென்னையில் குவிந்ததும் தனி வரலாறு.விருந்தினர் பக்கத்தில் கவிஞர் பழநிபாரதி அவர்களின் பத்தி தேவை ஒரு பெண்ணுடல் படிக்கிறபோது இந்த சமூகத்தின் மீது வெறித்தனமான கோபம் தான் வருகிறது. கவிஞராதலால் அண்ணன் சிக்கனமான சொல்லாடல்களால் அழுத்தமாகவே கருத்தை பதிவு செய்திருக்கிறார்..ஜெட் இராதாகிருஷ்ணன் குறித்த பதிவும் மிக முக்கியமான ஒன்று. அவரின்அறிவியல் பங்களிப்பும் இலக்கியக் கொடையும் அந்திமழையால் தமிழ் மக்களிடம் கவனம்பெறும் என்பது உறுதி. பா.ஜெயப் பிரகாசத்தின் செண்பகா சிறுகதையும் மண்வாசனையோடும் வட்டார வழக்கின் தனித்தன்மைகளோடும் நேர்த்தியாக வந்திருக்கிறது. காதல் எனும் பெயரால் வஞ்சிக்கப்படும் செண்பகாவாகவே மனது நினைத்து துயருறுகிறது. சிதம்பர நினைவுகள் குறித்த ஷைலஜாவின் எழுத்து என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. பாலச்சந்திரனை அவர் நேரில் சந்திக்க சென்ற அனுபவம்,எங்கள் கவிதைக்கு வயது ஐம்பது என கேரள மக்கள் கவிஞனைக் கொண்டாடுவது இவையெல்லாம் உலுக்கிவிட்டன. அட்டையில் பார்க்கிறபோது சினிமா இதழ்போல இருந்தாலும் தேரந்தெடுக்கப் பட்ட படைப்புகளால் ஒரு இலக்கிய வாசகனாய் இன்னும் இன்னும் மதிப்பில் உயருகிறது அந்திமழை.
மு.பாலசுப்பிரமணியன் புதுச்சேரி