கடிதங்கள்

திரைக்கலைஞனின் பிரிவு

Staff Writer

தெலங்கானா எழுச்சியைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் மணிவண்ணன் எண்ணியிருந்தார். மார்க்சிய லெனினிய சிந்தனைகள் மேல் கொண்டிருந்த விருப்பங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு எண்ணியிருக்கலாம். பின்னாளில், தமிழ் தேசியக் கருத்துக்களின் மீது பற்றுதல் கொண்டிருந்ததை அவர் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்தியிருந்த கருத்துகள் மூலம் அறிய முடியும். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது கலைத்துறையில் அவர் சனநாயகத்தைப் பேணுவதற்கு உதவியது எனச் சொல்லலாம். அவரது திரைப்படங்கள் அனைத்துமே மிகச் சிறந்த படைப்புகள் என நாம் கொண்டாட முடியாது. ஆனால், அவருடைய கருத்துக்களை அவரது நடிப்பின்  - படைப்பின் வழியாக வழங்கியவர் என்பதில் ஐயமில்லை. நெகிழும் தன்மைகொண்ட ஒரு திரைக்கலைஞன் நம்மைவிட்டு பிரிந்தது மறக்க முடியாத ஒரு சோக நிகழ்வுதான்.

 கு. இரவிச்சந்திரன், ஈரோடு  

வணக்கங்கள்

சிறப்புப் பக்கங்களில்  பதவி உயர்வு குறித்த விளக்கங்கள் யதார்த்தமாகவும், அறிவியல் ஆய்வாகவும், நிறுவனங்களில் முதுநிலை ஊழியர்களை மறைமுகமாக அவமானப்படுத்தும் நடவடிக்கைகளாகவும் இருப்பதை விரிவாக பேசுகிறது. அதேசமயத்தில் 19 வயதில் இளநிலை உதவியாளராகப் பணிக்கு சேர்ந்த மனோகரன் ஐ.ஏ.எஸ் ஆக ஓய்வு பெறும் செய்தி உழைப்பே உயர்வு தரும் என்ற உண்மையை உரத்துச் சொல்கிறது.

கதையல்ல நிஜம் என்ற தலைப்பில் அன்பரசு காமாட்சி இவர்களின் வரலாற்றை வெளிச்சப்படுத்திய கௌதமுக்கு ஒரு பாராட்டு. இளமையிலும் வறுமையிலும் வாழ்வாங்கு வாழ்ந்த அந்தக் காதலர்களின் திருமணத்தை நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அவரின்
ரசிகப் பெருமக்களுக்கும் ஒருகோடி வணக்கங்கள்.

இராம. இலக்குமணன், திம்மராஜாம்பேட்டை

 வித்தியாசம்

அந்திமழை இளங்கோவனின் கட்டுரை சூப்பர் எனில் அதில் கடைசி வரி டபுள் சூப்பர்.(உறங்குவதில் எத்தனை ஆண்டுகள் அனுபவம்?) நடிகர் பார்த்திபனின் பேட்டி அவரது படங்களை போலவே வித்தியாசமாக உள்ளது. மோகனின் வெண்பா எனும் தலைப்பிலான அஞ்சலிக் கட்டுரையை படித்ததும் என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். ஜீவாவின் மணிவண்ணன் ஓவியம் சூப்பர், கடைசி ஆறு வரிகள் சூப்பர். நடுப்பக்க நந்திப்படம் அருமை எனில் நந்தினியின் மற்ற புகைப்படங்கள் மிக அருமை.

அ. முரளிதரன், மதுரை

ராஜினாமாவா?

அந்திமழை ஜூலை இதழில் தலையங்கத்தை எதிர்பார்த்தேன், இல்லை. ஏமாற்றமடைந்தேன். காதலுக்கு மரியாதை அன்பரசு & காமாட்சிபோல் இந்த சமுதாயத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கமாட்டார்கள். நிஜம் என்று சொல்லும்போது பாராட்டப்பட வேண்டியவர்கள். நல்ல தேர்வு. பீட்டர் அல்போன்ஸ் பேட்டி எதார்த்தமாக இருந்தது. இந்திய நாட்டின் தேசிய கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்தால் பாஜக தானே வெற்றிப்பெறும், அதனால்தான் பாஜக வெற்றிப்பெற்றது. மக்கள் பாஜகவை நம்பும் அளவுக்கு அவர்கள் செயல்திட்டம் இருந்தது. மேலும்  தென் பகுதியில் கால் ஊன்ற இப்பவே திட்டமிடுகிறார்கள். தோல்வி அடைந்தவுடன் ராஜினாமா என்பது தற்கொலைக்கு சமம்.  நாட்டில் வாழவா வழியில்லை. இதை அரசியல் கட்சிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அவலம். மதுக்கூடம் கதையில் நாட்டில் நடப்பதை எதார்த்தமாக ஏக்நாத் எழுதியுள்ளார்கள். குடியை ஒழிப்பது என்பது குதிரை கொம்புதான். எந்த அரசியல் இயக்கமும் மதுவை ஒழிப்போம் என்று கூறவில்லை.

தோழர் இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

துருவ நட்சத்திரம்

அவர்கள் அவர்களே - தொடரில் இயக்குநர் மணிவண்ணன் பற்றிய அழுத்தமான செய்திகள் அவரின் பிம்பத்தை என்னுள் கூடுதலாகவே வலுப்படுத்தின. தனித்துவம், எப்போதுமே ஈர்ப்பு ஆளுமை கொண்டது. பிரபல எழுத்தாளர் ஆனதின் பிரச்சனைகள் நிறைந்த பெருமைபற்றி 'இசை' பட எழுதி இருந்தார் அவர் அருமை. பெண்களும் பதவி உயர்வும் உண்மையை அழுத்தமாகச் சொல்லியது. மறுக்க முடியாதவர்கள் ஒத்துக்கொள்ளதானே வேண்டும். அதன் பக்கங்கள் இன்னும் பல உண்டு. ராகுல் காந்தியின் தோல்விக்கு காரணங்களில் அது தேட வேண்டிய தீர்வுகள் பல உண்டு. வேலையே செய்யாமல் புரமோஷன் வாங்குவது எப்படி? ஓ.. இதுதான் அதற்கு அகராதியா? (அட... டிக்ஷனரின்னு பொருள்சார்) உழைப்பின் முத்திரையை, அதன் சிகரத்தை மிக அழகாக
சொன்னது பாபி திமோதி யுடனான நேர்காணல். இப்பக்கங்களில் இடம்பெற்ற படைப்புகள் மிக அருமை.
சிறப்புப் பக்கங்கள் வாசகனுக்கு வழி காட்டும் துருவநட்சத்திரம்.

தஞ்சை என்.ஜே. கந்தமாறன், சென்னை - 89.

விமோசனம்

அதிமுக போல் தேசிய காங்கிரஸும் ஆளுமை தலைமையில்லாமல் அல்லல்படுகிறது. காணாமல்போன கம்யூனிசம் போல, காங்கிரஸும் கரைந்துபோனது. தோற்றது காங்கிரஸ் அல்ல, அதன் கொள்கைகளும்,
சோனியா, ராகுல், பிரியங்கா என தலைமைகளும் தான். அரசியல் என்பது கைத்தட்டுக் காக, சவால்விடும் மேடை பேச்சுக்கு மட்டுமல்ல. அதை சாதிக்கும்வண்ணம் தேர்தல்களத்தில் கூட்டணி காணும் ராஜ தந்திரம், மக்களை ஈர்க்கும் யுக்திகளும் அவசியம். அரசியலுக்கு புதுசாக அறிமுகமானாலும் ராஜிவ்காந்தி கற்றுக்கொண்டே வளர்ந்ததை, ராகுல் பின்பற்ற தவறினார். பிரதமர் பதவி தனக்கு தயார், பிரதமர் பதவிக்கு தானும் தயார் என் இறுமாந்து சறுக்கினார். இனி சோனியா குடும்பத்திலிருந்து காங்கிரஸ் விடுபட்டால்தான் விமோசனம்.

மல்லிகா அன்பழகன்,

கே.கே. நகர் கிழக்கு, சென்னை.

சரியா?

ஜெயமோகனின் புளித்த மாவு சர்ச்சையில் யாரேனும் அவரது ஒரு வரியையாவது வாசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார் இசை. நடந்த சம்பவத்துக்கும், அவர் எழுத்தை வாசிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நான் இப்படிக் கேட்கிறேன். அவ்வளவு எழுதக் கூடியவர், அவ்வளவு சிந்தனையாளர், சாதாரண தோசை மாவு பிரச்சினையில்
சாதுர்யமாக தன் சிந்தனையைச் செலுத்தியிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காதே! பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர் குடியிருப்பு பகுதியிலே தாக்கப்படுகிறார் என்கிறபோது... யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? நான் வாசித்த வகையில் 'செம்மலர்' இதழில் மிகவும் மோசமாக எழுதியிருந்தார்கள். அதைகூட (என்ன இருந்தாலும் ஜெயமோகன் ஓர் எழுத்தாளர்) கண்டித்து இவ்வளவு தரக்குறைவாக எழுதக்கூடாது என்று கடிதம் எழுதியிருந்தேன்.

இரா. இராஜேந்திரன், கடலூர்.

பாடம்

'காதலுக்கு மரியாதை' ஜி. கௌதம் எழுதிய கட்டுரை, புரிதலின்றி கண்டதும் காதல், ஒருதலைக் காதலால் கட்டுண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் காதலர்களுக்கும் பாடம் புகட்டுகிறது. அன்பரசு & காமாட்சியின் உண்மைக் காதலை உயிரோட்டமாக வடித்துத்தந்திருக்கும் கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுகள். தமிழன் தன் ஒருநாள் வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வடநாட்டு பனியா முதலாளிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆளுவதற்கும், சந்தையாக மட்டும் என் தாய்த்தமிழ் நாடு பயன்படுகிறது என்ற மணிவண்ணன் கட்டுரை ஒன்றை எடுத்துக் காட்டி விவரித்திருந்த விதமும் அவரை பழைய முதலாளி என்று விளித்த காரணமும் தன்மீது அவர் வைத்திருந்த அபரிதமான அன்பையும் கருணை உள்ளத்தையும் காட்சிப்படுத்தி ப. திருமாவேலன் எழுதியிருந்த 'கோபுரங்கள் சாய்வதில்லை'
கட்டுரை ஒரு தேர்ந்த திரைக்கலைஞரை நமக்கு அறிமுகப்படுத்தியது.

நவீன்குமார், நடுவிக்கோட்டை.

"பெண்ணின் பதவி

ஜூலை மாத அந்திமழையில் சிறப்பு பக்கங்களாக வந்த பதவி உயர்வு குறித்த தொகுப்பில் 'பெண்களும் பதவி உயர்வும்' கட்டுரை பல முக்கிய செய்திகளை கூறியிருந்தது. திறனின், வாய்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று ஆண்கள் மிக எளிதாக சென்றுவிடுகின்றனர். ஆனால், இவை இரண்டும் இருந்தாலுமேகூட பெரும்பாலான பெண்கள் குடும்ப, பண்பாட்டு கட்டுப்பாடுகளில் சிக்கி முடங்கிவிடுகிறார்கள்.

கலையரசன், பேராவூரணி.