கடிதங்கள்

கலைடாஸ்கோப்!

Staff Writer

மினிமலிசம் குறித்து இரண்டுபக்கம் விலாவாரியாக விளக்கியதைத்தான் எங்கள் புரட்சித் தலைவர் அன்றே, ‘‘இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அது தான் வாழ்வில் நிம்மதி''யென ஒற்றை வரியில் பாடிவிட்டாரே! குதிரை மருத்துவர் ஜெயபாரத், சவாலான புதிய துறைகளில் தனித்துவமாக சாதிப்பது தான் வாழ்வை அர்த்தப்படுத்தும், உற்சாகப்படுத்துமென உணர்த்தினார். இலங்கைத் தமிழர் பிரச்ச னைக்காக மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற திமுக  எம்.பி&க்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென தமிழகமே கொதித்து கோரிக்கை விடுத்த போது, ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பாமல், கட்சித்தலைவர் கலைஞரிடம் கொடுத்த காமெடி காட்சியையும் குறிப்பிட்டிருந்தால் ராஜினாமா சிறப்பிதழ் சுவாரசியம் கூடியிருக்கும். மொத்தத்தில் அந்திமழை, மாறுபட்டதாக நுணுக்கமாக, பலதுறைகளையும் கலவையாகக் காட்டும் கலைடாஸ்கோப்!

மல்லிகா அன்பழகன், சென்னை

புதியன அறிவோம்!

கொங்கு மண்ணின் கதை சொல்லிகள்... ஒவ்வொரு பக்கமும் ஆவணங்கள்.அவ்வளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கடலைக் கலயத்திற்குள் அடைக்க முயற்சித்திருப்பதாக நிறுவிய ஆசிரியர் சொல்லி விட்ட பிறகு... ஆர்வத்துடன் முழுமையான தொடர்ச்சிக்கு காத்துள்ளேன். சிறப்பிதழ் பகுதியில் ராஜினாமா ரகசியங்கள் பற்றி அப்பட்டமாகவே நிறைய அறிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக பாமரனின் படைப்பில் எத்தனை சுவராசியமான நிகழ்வுகள். அவருக்கு அமைந்த அற்புதமான அலுவலர்களின் அன்புமிக்க அணுகுமுறைகள் மனதை நெகிழ வைத்தன. அருமை. சும்மா சொல்லக் கூடாது. இதழுலகில் அன்றே அற்புதமாகத் தொடங்கி விட்ட மிரட்டல், விரட்டுதல், வெளியேற வைத்தல், கூண்டையே இழுத்துக் கொண்டு வெளியேறல், தனித்து வெளிப்பட முயலல், மீள்தல் போன்ற அத்தனை அம்சங்களையும் மிகத் தெளிவாகத் தந்திருந்தார் ஆ.இரா.வேங்கடாசலபதி.. அத்தனையும் இன்று பல புது வடிவங்களில் விரட்டுவதைப் பார்க்கிறோம். தகவல் தொழில் நுட்பம் ராஜினாமாவை மிகச் சாதாரணமாக மாற்றிவிட்டதை அராத்தும், மற்றவர்களும் தனித்துவமாகவே விளக்கி இருந்தார்கள். எல்லாம் மேல்மட்ட விவகாரங்கள் போலவே இருந்ததை சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு தொழிற்சங்கவாதியிடமும் கேட்டிருக்கலாம்... சிறப்பில் திருஷ்டி படக் கூடாதல்லவா... அதற்காக இந்தக் கருத்து. மினிமலிசம் பற்றிய இரா.கௌதமனின் இணையப் பார்வை நிறைய சிந்திக்க வைத்தது. முக்கியமாக குதிரைப் பண்ணையில் தனது மருத்துவ அனுபவம் பற்றி எழுதிய எஸ்.ஜெயபாரத் பல புதிய விவரங்களை நிறைய உணர்த்தி இருந்தார். அருமை.கால்நடை வளர்ப்பு அனுபவங்களை இப்படித் தொடர்ந்து தாருங்களேன். புதியன அறிவோம்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89

கூண்டுக்கிளி!

செப்டம்பர் இதழை ராஜினாமா சிறப்பிதழாகத் தலைப்பிட்டு பல ராஜினாமா ரகசியங்களை, குறிப்பாக அந்தக்காலத்தில் பிரபலமான இதழ்களின் நிர்வாகத்தில் நடந்த பல சுவையான செய்திகளை விரிவாக வெளியிட்டு அசத்திவிட் டீர்கள். ஆளுமை அரசியல் அலுவலகங்கள் தொடர்பான பல ராஜினாமா விவகாரங்களை அம்பலப்படுத்திவிட்டீர்கள். ஜேபியில் ராஜினாமா கடிதம் என்ற தலைப்பில் வெளிவந்த நீண்ட கட்டுரை என்னதான் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றி பத்திரிகை ஆசிரியர்கள் எழுதினாலும் அவர்கள் பதவி கூண்டுக்கிளி போலத்தான். எப்போது வேண்டுமானாலும் பறிபோகும், தூக்கி எறியப்படுவார்கள் என்ற உண்மைகளை இன்றைய காலகட்டத்தில் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்! பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் என்னதான் அருமையாக எழுதினாலும் அவர் தமக்கு மேலே கத்தி ஒன்று தொங்கிக்கொண்டே இருக்கும் என்ற உண்மையை அவரும் அறியவேண்டும். பத்திரிகை சுதந்திரம் என்பது அதன் ஆசிரியருக்கு கட்டுப் படுத்தப்பட்ட சுதந்திரம்தான்! அதன் எல்லையை மீறினால் அவர் ஆசிரியர் இல்லை என்றாகிவிடும் சூழ்நிலை. வித்தியாசமான இதழ் பாராட்டுகள்.

கடல் நாகராஜன், கடலூர்

ஆச்சரியத்தகவல்கள்

‘‘ராஜினாமா ரகசியங்கள்'' சிறப்பிதழா! வித்தியாசமாக இருக்கே... புரட்டிப் படிக்கப் படிக்க சுவையோ சுவை! தோற்றுவாயில் அந்திமழை இளங்கோவன் நேர்முகத்தேர்வு அனுபவங்களில் தொடங்கி, தொகுத்துத் தந்திருக்கும் அனைத்தும் சிறப்பு. வளர்ந்த நிறுவனங்களின் பின்னணியில் திறைமையையும், உழைப்பையும் ஒருசேர நல்கி, அர்ப்பணிப்பு உணர்வோடு அசத்திய பணியாளர்களின் செயல்பாடுகள் இருந்ததையும், கடமை உணர்வும், உழைப்பும் உள்ள ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள நிறுவனம் படும்பாடுகளையும் பட்டியலிட்டு, படிப்பவர்களை படபடக்கவைத்துவிட்டார் ஆசிரியர். நல்ல ஊழியர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், சராசரி பணியாளர்களை எப்படி வெளியேற்றுவது போன்ற காரணிகளை அடுக்கியிருப்பதும் ஆச்சரியத் தகவல்களாக இருப்பதும் வாய்ப்பை உருவாக்கி, இதழில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க வேண்டும் எனும் விழைவைத் தந்துவிட்டது. கருந்தேள் ராஜேஷ், முத்து மாறன், செல்வன், சாருநிவேதிதா, ராவ் மற்றும் அராத்து உள்ளிட்ட எழுத்தாளர்கள் தங்களின் அனுபவங்களை அவரவர் தனித்த பார்வையில் பதிவு செய்திருப்பது நன்று. ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஜேபியில் ராஜினாமா கடிதம் நீண்ட ஆய்வுத்தொகுப்பாக இடம்பெற்று ‘ஆஹா' சொல்லவைக்கிறது. சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கின்ற கொங்குமண்ணின் கதை சொல்லிகள். கொங்கு நாட்டு கதையுலகம் போன்ற கட்டுரைகள் கொங்கு எழுத்தைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு வழிகாட்டும் என்று அந்திமழை இளங்கோவன் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை எனலாம்.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

பாராட்டுகள்

‘‘கொங்கு படைப்புலகம்'' தலைப்பிலான கட்டுரைகள் சூப்பர். எதைப் பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தலைப்பிலான கட்டுரை சூப்பர்... இல்லை இல்லை டபுள் சூப்பர். காலக்கண்ணாடி மட்டுமே கட்டுரை... டபுள் சூப்பர் அல்ல, ட்ரிபிள் சூப்பர்... ராவ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அ. முரளிதரன், மதுரை

இபிஎஸ் தான்!

நேரு குடும்ப வாரிசுகளுக்கு மன்மோகன் சிங் போன்ற தலையாட்டி பொம்மை இன்னும் கிடைக்காததால்தான் காங்கிரஸ் தள்ளாடுகிறது. ஆனால், அதிமுக அப்படியல்ல. பிஜேபி பினாமியாக அதிமுகவை உடைத்து, சின்னத்தை முடக்கிய துரோகம், ஓ.பி.எஸ்க்கு அழியாத களங்கம். நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைவிட்ட ஓ.பி.எஸ்ஸை இன்று எந்த அமைச்சரும், எல்.எல்.ஏவும் பகிரங்கமாக ஆதரிக்காதபோது, அவர் எப்படி முதல்வர் வேட்பாளராக முடியும்? நான்காண்டு கட்சி யையும் இடைத்தேர்தல்களில் வென்று, ஆட்சியையும் நிலைநிறுத்திய இ.பி.எஸ். தான் முதல்வர் வேட்பாளராக தகுதி படைத்தவர். ஆனால் மக்கள் அங்கீகரிப்பார்களா என்பது பொதுத்தேர்தலில்தான் தெரியவரும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

வாழ்த்துகள்

ஓவியர் வி. மோகன் அவர்களின் தமிழக கலாசார அடையாள ஓவியங்கள் அற்புதம். தொடரட்டும் இவரது பணி. வாழ்த்துகள். & ஜெயராம்.ஜி. கடையநல்லூர் செப்டம்பர் மாத அந்திமழையில் வெளியான கொங்கு மண்டல இலக்கியங்கள் பற்றிய அறிமுகங்கள் பயனுள்ளதாக இருந்தன. கொங்கு மண்ணின் முக்கியமான இலக்கியங்களை அறிந்துகொண்டு, அதனைத் தேர்வு செய்து படிப்பதற்கு இந்த இதழ் வழிவகுத்திருக்கிறது. ராஜினாமா பற்றிய கட்டுரைகள் வெறுமென எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டுமென மட்டும் சொல்லி நகராமல் விரிவாக அலசியிருப்பது சிறப்பு. ராஜினாமா அனுபவம் பற்றி பாமரன் அவருக்கே உரிய மொழியில் சுவாரஸ்யமான கட்டுரையாக அளித்திருக்கிறார். ‘சேம் சைட் கோல்' கட்டுரை துல்லியம்.

ஆதன் பாஸ்கரன், கிராண்டிபுரம்