அந்திமழை செப் - 18 இதழில் இடம்பெற்றிருந்த முகப்புக் கட்டுரை குமரி முதல் காஷ்மீர் வரை குடும்பங்களின் அரசியல், சிறப்புப் பக்கங்களில் சூடும் சுவையும் ஒரு சேர அமைந்திருந்த கட்டுரைகள் அனைத்தும் நன்று. எதுவும் திடீரென்று நடப்பதில்லை கட்டுரை உலக அரசியலை ஊடுருவிப் பார்த்து, அரசியலில் ஈடுபடும் குடும்பங்களை அரசியல் வம்சம், அரசியல் வாரிசு மற்றும் அரசியல் குடும்பங்கள் என்று மூன்று வகையாக வரிசைப்படுத்தி, உலக அரசியல் வரலாற்றை உற்று நோக்கும் வண்ணம் பதிவு செய்திருக்கிறார் அந்திமழை இளங்கோவன்.
-நவீன் குமார் , நடுவிக்கோட்டை.
பிறருக்கு உதவும் உள்ளம், அவருக்கு உதவும் உள்ளம். பயன் கருதாத அவரின் தொண்டிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் உள்ளங்கள். ஆன்மன் பெயருக்கேற்ற அன்பு உள்ளம். ஆம், உதவும் உள்ளங்கள் என்றுமே உயர்ந்தவை. வணங்குகிறேன். குடும்பங்களின் அரசியல் பற்றிய விளக்கத்தை அந்திமழை இளங்கோவன் தனது விளக்கத்தில் சரியே என பல கோணத்திலும் சொல்லி ஏதோ ஒரு வகையில் நம்பவும் வைத்து விடுகிறார். அவர் எழுத்தின் வலிமை அது. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகள் யாருமே அரசியலுக்குள் நுழையவில்லை என்ற வாக்கியம் நிறைய சிந்திக்க வைத்தது.
வாரிசாக வரலாம். நிற்க நிறைய திறமை வேண்டும். வாழ்வியலைச் சொல்லும் நேர்மையான படைப்புகளுக்கும் ஏதோ ஒரு தியேட்டர், அதிலும் ஒரே காட்சி என்பதிலும் எக்க சக்க அரசியல் என்கிற மேற்கு தொடர்ச்சிமலை விமர்சனம் அழுத்தமான உண்மை. பாராட்டுக்கள். இம்முறை காமிரா கண்கள் பகுதியில் இடம் பெற்ற புகைப்படங்களில் உள்ள கண்கள் மிகவும் தனித்துவமாகப் பேசுகின்றன. அரிய ஒற்றுமை. குறிப்பாக அந்த நாட்டியக் குழுவினரின் கண்கள் காட்டும் விழிமொழி மிகச் சிறப்பு. மறக்காத முகங்கள் பகுதியில் நிமாய்கோஷ் உடனான மணாவின் கட்டுரை நினைவில் நிற்கும் பதிவு.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,
சென்னை -89.
கவிஞர் ஆன்மன் அவர்களின் விருந்தினர் பக்கம் படித்து நெகிழ்ந்து போனேன். மனித நேயம் மரித்துப் போகவில்லை என்பதை நம்மவர்கள் பல தடவை நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்றாலும், கேரளத்துப் பங்காளிகளுக்காக கவிஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் கண் கலங்க வைத்தன.
எதையும் எதிர்பார்க்காமல் முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவதில் தனி இன்பம் தான். அமைப்பு ரீதியாக செய்வதில் கூட பல்வேறு உட்கருத்துக்கள் பேசுவார்கள். ஆனால் ஓடி ஓடி உதவி செய்கிற போக்கு உண்மையிலே தமிழ் இனத்துக்கு தனிப் பெருமையே. ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்கிற வள்ளலாரின் வாசகங்கள் தமிழ்நாட்டில் தோற்றுப்போக வில்லை. தழைத்து வாழ்கின்றது என்பதை கேரளத்து வெள்ளம் நிரூபித்திருக்கிறது.
கவிஞர்.சித.கருணாநிதி
மருதூர் தெற்கு.
தி.மு.க.வோடு 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை நடத்தினாலும், மேயர், துணை முதல்வர் பதவிகள் தந்தையின் தயவால் அமைந்ததால், பொறுமை இழந்து தலைவரான பிறகு, இனிவரும் இடைத் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ, மு.க.ஸ்டாலின் பெறும் வெற்றிகள் தான் அவரது திறமைக்கும், தகுதிக்கும் அங்கீகாரமாகும். 2006 - ல் மைனாரிட்டி ஆட்சி அமைத்த பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்தது. அ.தி.மு.க பிளவுபட்ட சமயத்திலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாஸிட் இழந்த தி.மு.கவுக்கு அழகிரி தலைவலியோடு அடுத்த தேர்தல்தான் அக்னி பரிட்சை. அந்திமழை பொறுத்திருந்து புதிய தலைவருக்கு வாழ்த்து.
அண்ணா அன்பழகன்
சென்னை -28
கருணாநிதி, அடல் பிஹாரி வாஜ்பாய் இருவருமே பன்முகத்தன்மை கொண்ட அரசியல் சாணக்கியர்கள். கலைஞர் தனக்கென மிகப்பெரிய குடும்பத்தை உருவாக்கி அரசியல் செய்து வந்தார். வாஜ்பாய் தனி நபராக நின்று சங்க ஸ்வயம்சேவகராக தனி மனித ஆளுமையை வளர்த்து உலக அளவில் பேசப்படும் தலைவர் ஆனார். கலைஞருக்கும் இப்படி பல சிறப்புக்கள் உண்டு.
கவி முகிலன்,
அந்தியூர்.
1.இந்த செப்டம்பரில் இனிய பிறந்த நாள் கொண்டாடும் எங்கள்.. சாரி.. நமது அந்திமழைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
2. அன்புதாசனின் பேட்டி அருமை. கடைசி 4 வரிகள் பெரிய எழுத்துக்களில் போட்டிருக்கலாம்.
3. காமிரா கண்கள் பக்கங்கள் - சூப்பர். எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.
4. குடும்ப அரசியல் தலைப்பிலான மாலனின் கட்டுரை அருமை.
அ.முரளிதரன்
மதுரை.
92 வயதில் கி.ரா நாவல் எழுதுவது ஆச்சரியமல்ல. மடத்து கதைகளுக்குள் பால் கதைகளும் படைப்பது தான் பரவசமான அதிசயம்.
சரியானது. ஆனால் ஜனநாயகத்திற்கேற்ப செயல்பட வேண்டிய பொதுச் சேவை அமைப்பான அரசியலில் வாரிசுகளை திணிப்பது நியாயமல்லவே என்றாலும் தொண்டர்களும், மக்களும், ஏற்றுக் கொண்டால் அதுவே அங்கீகாரமாகும்.
ஆயிரம் புன்னகைகளை பதிவு செய்து ஆவணமாக்கும் நாராயண் சங்கரின் புது முயற்சி ரசனைக்குரியது.
கோ.கோ. படம் பார்த்தவர்கள் யார் அந்த அன்புதாசன் என்று யோசிப்பதற்குள், அவருடன் நேர்காணல் நடத்தி, திறமை மிக்கவர்களை தேடிப்பிடித்து அங்கீகரிக்கும் உங்கள் பரந்த மனசுக்கு ஒரு பாராட்டு. திரை வலத்தில் வாழ்வியலைச் சொல்லும் நேர்மையான படைப்புகளுக்கு ஏதோ ஒரு தியேட்டர், அதிலும் ஒரே காட்சி என்பதிலும் எக்கச்சக்க அரசியல் இருக்கிறது, என்று கடைசி வரியாக காதம்பரி கடிந்து கொண்டதில் கடும் அதிர்ச்சி...
யாழினி பர்வதம்
கே.கே.நகர்
இலக்கிய வரலாற்றில் கி. ரா. வின் படைப்புகளுக்குத் தனித்தன்மை உண்டு. தனி இடமும் உண்டு. எழுதி எழுதி சலிக்காதவர் கி. ரா. அவர் படைப்புகளும் வாசிக்க
வாசிக்க சலிப்படையாதவை. ‘இந்த இவளின்' முன்னோட்டமே நாவலின் வாசிப்பைக் கோருகிறது. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மேலும் பல நாவல்கள் எழுதுவார். குடும்ப அரசியல் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. மு. க. ஸ்டாலின் கலைஞரின் வாரிசு என்றாலும் மற்ற வாரிசுகளுடன் அவரை ஒப்பிட முடியாது. அவர் அடிபட்டு அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவர். வளர்க்கப்பட்டவர். கட்சியின் தலைமைப் பதவிக்கு வருவதற்கே கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது.குடும்ப அரசியல் என்னும் எல்லைக்கு அப்பாற்பட்டவர் மு. க. ஸ்டாலின். நாராயண் சங்கரின் காமிரா பார்வை எவ்வளவு வித்தியாசமானது என்பதை அவரின் படங்கள் காட்டுகின்றன. மறக்காத முகங்கள் வரிசையில் நிமாய் கோஷ் குறித்து எழுதியுள்ளார் மணா. அவரின் குறிப்புகளையும் தந்து மறக்க முடியாமல் செய்து விட்டார்.
பொன் குமார்
சேலம் 636006.
சென்ற இதழில் கி.ரா. எழுதும் நாவலின் முன்னோட்டம் பார்த்தேன். நாவலுக்காக காத்திருக்கிறேன். ஆனால் கிராவின் வயது 96 அல்லவா? 92 என்று போட்டு நான்கு வயதைக் குறைத்துவிட்டீரே? கி.ரா. வயதைக் குறைத்ததால் சந்தோஷப் பட்டிருப்பாரோ?.
எழிலன், கடலூர்.
அக்டோபர், 2018.