வாசிப்பவர்களின் மனதில் மென்மையான அதிர்வுகளை ஏற்படுத்தும் பவா செல்லதுரையின் புதிய தொடரின் தொடக்கமே கனல்வீச்சை உணரச்செய்தது எனில் மிகையில்லை. இலக்கியவாதிகளின் இயல்பான முரண்பாடுகளும் மூர்க்கத்தனமான எதிர்க்கருத்துகளும் ஜெயமோகனில் தொடங்கி இன்னும் பலரிடமிருப்பதை இத்தொடர் இரக்கமில்லாமல் வெளிப்படுத்துமென்றே தோன்றுகிறது. இதன் எதிர்விளைவுகள் தமிழ் இலக்கிய உலகில் நீர்ச்சுழல்களையும் காற்றுச் சூறாவளிகளையும் உருவாக்கலாம். ஆனால் அவை மூலமும் நல்லன விளையவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம் தொடரை வரவேற்கிறோம்!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
வார்த்தைகளுக்கு அன்பை ஊட்டியவன், கவிஞர் முத்துக்குமாரைப் பற்றி கவிஞர் பழநிபாரதி கூறியுள்ள கருத்துக்கள் கண்ணில் நீரை வரவழைத்தது. தயிர் சாதமும் தங்க வேட்டையும் கடைசி பத்தியில் உள்ள கேள்வி நியாயமானதே.
அ.முரளிதரன், மதுரை.
இந்த சிறப்பிதழ் சரியான வேளையில் பெய்த மழை எனலாம். மொழி நேசிப்பு என்பதை தேசிய உணர்வாளர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள் வெறியாகச் சித்தரிக்கும் சூழல் இங்கே உருவாகிவிட்டது. மொழி சார்ந்த தெளிவான பார்வைகளை உருவாக்க இப்படிப்பட்ட சிறப்பிதழ்களை அடிக்கடி மலரச் செய்யுங்கள். ஓரிருவர் பேசும் வார்த்தைகளை வைத்து இனத்தையே ஒட்டு மொத்தமாக இழிவாகப் பேசும் நிலை மாற வேண்டும். படைப்புக்கு வெற்றி தோல்வி என்பதே இல்லை என்ற சீனு ராமசாமியின் பக்குவப்பட்ட பார்வை உண்மை. கவிக்கோ ஞானச்செல்வன் கட்டுரை எங்களையும் சிறிது ஞானம் பெறச்செய்தது.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
புதுமைப் பாதையிலே நடைபோடவரும் அந்திமழை இதழ், காலத்துக்கேற்ற கருத்துக்களை தாங்கி தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழாக மலர்ந்து மணம் கமழ்கின்றது. நாட்டைப்பற்றியோ, தாய்மொழிபற்றியோ கவலைப்படாத ஒரு இனம் உலகில் உண்டென்றால் அது தமிழினமே. தமிழையும் தமிழ்நாட்டையும், பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற அவ்வபோது பல சான்றோர்கள் தோன்றி இருக்கிறார்கள். முதலில் கால்டுவெல் என்பாரே தமிழின் சிறப்பை உலகுக்கு உணர்த்தினார். தமிழினப் பகைவர்களிடமிருந்தும், வடமொழி ஆதிக்கத்திலிருந்தும் தமிழைக் காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது திராவிட இயக்கங்களே. புதை மணலில் புதைய இருந்த தமிழினத்தைக் காப்பாற்றி கரை சேர்த்த பெருமை திராவிட இயக்கங்களுக்கே உரியது என்பதே வரலாறு. தமிழில் வேர்ச்சொற்கள் ஆழமாக இருப்பதால்தான் வேறு எந்த மொழித்தாக்குதலையும் தாங்கி, தகர்த்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. இது தமிழுக்கே உரியத்தனிச் சிறப்பு. இதனை உணர்ந்து பணியாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனின் கடமை. விழித்துக்கொண்டால், சங்கத் தமிழ், கணினித் தமிழாய் வீறுகொண்டு நடைபெறும் என்பது உறுதி!
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
தன்மொழிச் சார்பு என்பது ‘தன் மொழி காத்தலும், பிறன்மொழி பாதுகாத்தலுமே' என்பதையும், இதுவே தமிழின் தனிச் சிறப்பென்பதையும் பட்டவர்த்தனமாக ஆவணப்படுத்தியிருந்தது நமது அந்திமழையின், ழ தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் கட்டுரைகள்..!
ஆர்.ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம்.
அந்திமழை செந்தமிழின் சீர்மை போற்றும் சீரிய இதழாக மலர்ந்திருப்பது தமிழார்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ப.சரவணன், செல்வன், சொக்கன், கரு.பழனியப்பன், மகுடேசுவரன் ஆகியோரின் கட்டுரைகள் மூலம் தனித்தமிழ் இயக்கத்தினை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள அந்திமழையைப் போற்றி மகிழ்ந்து வாழ்த்துகிறோம்.
க.சி.அகமுடைநம்பி, மதுரை.
‘‘சிந்தனையை சீர்படுத்தி செதுக்கிடும் பொற்சிலையாய்.. செந்தமிழை அலங்கரிக்கும் அந்திமழை நீடு வாழ்க..! இலக்கியவானின் முழுமதியாய் என்றும் நிலைத்த ஒளிவீசி தொட்டாய் மாதம் அரை நூறு தொடரட்டும் இன்னும் பலநூறு!''
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஆகா! ‘அந்திமழை' 50... அடடா!. முதல் இதழிலிருந்து படிக்கிறேன். அதில் ‘வானவில்' மூலம் எண்ணங்களை வடித்துள்ளேன்; வடிக்கிறேன்; வடித்து வருகிறேன். மழை, வான் தரும் தேன். மழை மண்ணில் வீழின் அங்கே எழும்பும் மண்வாசனை நாசி நுகர் வாசனை. ‘அந்திமழை' அகத்தில் பொழியும்போது எண்ணப் பயிர்கள் செழிக்கின்றன. மழை என்றும் தேவை. அது ‘அந்திமழை' என்றால் அது மந்தார மழை; மகிழ்ச்சி மழை. பொழியட்டும் என்றும்! மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
இணைய தள எழுச்சியால் அச்சு இதழ்கள் தடுமாறும் சூழலில் ஒரு சிற்றிதழ் 50வது பிறவி காண்பது ஆச்சரிய ஆனந்தம் தான். ஜனரஞ்ச கமான இலக்கிய இதழாய் கணையாழி முதல் சுபமங்களா வரை முன்னுதாரணமாக, அதன் தொடர்ச்சியாய், நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் இன்னும் கூடுதல் அழகோடு, ரசனை மேம்பாட்டோடு இன்றைய இதழியல் உச்சம் தொட உயர்வதன் ஓர் உதாரணம்.. எங்கள் அந்திமழை. பழமையும், புதுமையும் சங்கமிக்கும், சங்க இலக்கியம் தொட்டு சாருநிவேதிதா வரை ஒரு கலக்கல் காக்டெயில்..எங்கள் அந்திமழை.. அரசியலில் நுட்பமான அலசல் என்றால், சமூக பிரச்சனைகளில் சரியான தீர்வுகள். கோடம்பாக்கப் படங்களை ஈரானியப் படங்களாக்கும் விமர்சனங்கள் என்றால், வாசகர் கடிதங்களிலும் ஒரு திறனாய்வு ஸ்டைல். ஆக நூற்றாண்டு காணும் எங்கள் அந்திமழை.
அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை