‘‘இப்படிப் பண்றீங்களேம்மா '' என்ற தலைப்பில் இன்று வைரலாகப் பரவி வரும் வாட்ஸப், சமூக ஊடகங்களில் வலம் வரும் ஜோக்குகள், மீம்ஸ்கள் தரம் இல்லாது இருக்கக்கூடாது. இப்படியே இது தொடர்ந்தால் இதே தரங்கெட்ட அரசியல் தலைமையையே நாம் பெறவேண்டியிருக்கும் என்ற நடுநிலையாளர்களின் உணர்வுகளை அழுத்தமாகச் சுட்டிக் காட்டிய உங்களின் துணிவிற்கு - ஒரு சல்யூட்! ‘‘ கருத்துரிமை '' அரசியல் தலைவர்களை செப்பனிட உதவ வேண்டும். ஆளுங்கட்சிக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டிருப்பவர்கள், ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களை எள்ளி நகையாடுவது -அண்ணாந்து காறி உமிழ்வதற்கு ஒப்பானது!
மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
இந்த மாதம் இளைஞர் சிறப்பிதழாக மலர்ந்த ‘‘அந்திமழை'' எக்ஸலண்ட்! பக்கத்துக்கு பக்கம் ஜொலித்தது. நடிகர்கள் பகுதியில் கலையரசன், ரமேஷ் திலக், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சென்றாயன் பற்றிய பெட்டிச்செய்தி சரியான கருத்து கணிப்புதான். காமிரா கண்கள் சிம்ப்ளி சூப்பர்! இப்படிப் பண்றீங்களேம்மா எனும் தலைப்பில் அரசியல் பக்கத்தில் விஜயகாந்த அவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நாயகன் படத்தில் கமலஹாசனிடம் குழந்தை கேட்கும் வசனம் நீங்க நல்லவரா? கெட்டவரா? நினைவில் மின்னி மறைந்தது! ‘‘பேசும்படம்'' பார்த்ததும் பேசாமல் மௌனமானேன், ஏன் எனில் அருமையான மோதிர சிந்தனை! சுந்தர் பிச்சை அவர்களின் சூத்திரங்கள் கட்டுரை யம்மா.. தலை சுற்றிப்போனேன்! வெற்றி வேண்டுமா போட்டுபாரடா எதிர் நீச்சல் என்ற பழைய பாடலையும் நினைவுபடுத்தியது.
இ.டி.ஹேமமாலினி,சென்னை.
வெற்றிக்குத் தேவையான, உண்மை, உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எழுச்சி, விழிப்புணர்வு அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆற்றல் மிகு இளைஞர்களால் ஆகாத காரியம் எதுவுமில்லை. சாதி, சமயங்களைக் கடந்து, வறுமையை வென்று வெற்றிப்படிக்கட்டுகளிலே விரைவாக ஏறுகின்ற ஆற்றல் மிக்கவர்கள் இளைஞர்களே! அப்துல் கலாம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, விவேகானந்தர் போன்ற சான்றோர்கள் மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற அரசியல் நுண்ணறிவாளர்களும் எதிர்காலத் தமிழகத்தை ஒளிமயமாக்க நம்பி இருப்பதும் இளைஞர்களைத்தான். ஒவ்வொரு இதழ் வாயிலாகவும் ஒவ்வொரு புதுமை படைக்கும் ‘அந்திமழை' செப்டம்பர் திங்கள் இதழ் இளைஞர் சிறப்பிதழாக மலர்ந்திருப்பது கண்டு மகிழ்கின்றேன். வெற்றி பெற்ற இளைஞர்களின் வரலாற்று தொகுப்பு. வருங்கால இளைஞர்களுக்கோர் ஏணிப்படிகள் என்பதிலே சிறிதும் அய்யமில்லை. வளர்க தங்கள் தூய தமிழ்ப்பணி!
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ஊடகத்துறையை பொறுத்தவரை எத்தனை வருஷ அனுபவம் என்று கேட்டு நரைத்த பிறகு வாய்ப்பளித்த காலமுண்டு. இன்று விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தவுடன் வேலைக்கு சேருமளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியால் அனுபவ அறிவு பெறுகிறார்கள். துடிப்புடன் சாதிக்கிறார்கள். அந்திமழை பட்டியலிட்ட நம்பிக்கை நட்சத் திரங்களை பார்க்கும்போது, அரசு அரவணைப்பும், ஊக்கமும் கிடைத்தால் இன்னும் எகிறி அமெரிக்காவுக்கே ஹலோ! சொல்வார்கள் என்ற உற்சாகம் பிறந்தது. வெளிநாட்டில் இந்தியர்கள் பெறும் சம்பளத் தொகையை பார்த்தவுடன் மூர்ச்சையானாலும் இந்தியாவிலும் சாத்தியப்படும் சூழலை உருவாக்குவதே, அடுத்த ஐந்தாண்டு திட்டமாகட்டும்.
அ.யாழினி பர்வதம், கே.கே.நகர்.
இனி தப்பித்துக் கொள்ள வழியில்லை என்கிற நிலையில்தான் பலர், இருள் வாழ்விலிருந்து உண்மையின் வெளிச்சத்திற்கு வருகிறார்கள் என்பதை இயற்பெயரைத் தொலைத்தவன் சிறுகதை இயல்பாகப் பேசியிருந்தது. மதுவிலக்குப் போராட்டத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதைக் காட்டிய ஊடகங்கள், அவர்கள் உள்ளே அடைக்கப்பட்டதும் ஊமைகள் ஆகியது ஏன்? அதற்குப் பின் தமிழக அரசின் வேறு சில மிரட்டல்களால் அரசியல் கட்சி களும் அடங்கிப் போனதன் மர்மக் காரணம் என்ன? நினைவில் காடுள்ள மிருகம். அருமையான கவியை அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஷைலஜா. தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
எழுத விஷயமுள்ளவர்கள் கூடவே எழுதத் தெரிந்தவர்கள் எழுத்தாளராகலாம், பதிப்பாளர் உட்பட. ஆனால் யார் வாங்கிப் படிப்பது? ஒரு விழாவில், ‘ஏழரை கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் ஒரு புத்தகம் 2000 பிரதிகள் கூட விற்பதில்லை' என்று ப.சிதம்பரம் வருந்தியது, புதிதாக புத்தகம் போட நினைப்பவர்களை பயமுறுத்துகிறதே! வாசிப்பே சுவாசிப்பானால் வாழ்க்கை வளமாகும் என்பதை இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது!
மல்லிகா அன்பழகன், சென்னை
தமிழன் என்று சொல்லடா ; தலை நிமிர்ந்து நில்லடா என்பதை தங்கள் தனித்துவத் திறன்களால், உலகிற்கே பறை சாற்றும் உன்னதமான இளைஞர்களை, சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி கௌரவித்த கவர் ஸ்டோரி நெகிழ வைத்தது. கலை, இலக்கியம், பத்திரிகை சமூக சேவை மற்றும் ஊடக செயல்பாட்டாளர்கள் என, தனித்தனியே வகைப்படுத்திய விதமும் அவர்களின் மாறுபட்ட சமூகப் பார்வையை எடை போட்ட விதமும் பாராட்டுக்குரியன.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
அரசியலில் ஈடுபட்ட பின் எத்தகைய போட்டிக்கும் அஞ்சக் கூடாது. நிருபர்கள் என்றால் ஆயிரம் கேட்பார்கள். எரிச்சலூட்டப் பார்ப்பார்கள், வாயைப் பிடுங்கப் பார்ப்பார்கள். அத்தகையவர்களின் கேள்விகள் என்ன, எதற்கு, ஏன், எதை எதிர்பார்த்து அக்கேள்விகளைக் கேட்கிறார்கள் என ஆத்திரப்படாமல் ஆழமாகச் சிந்தித்து, நிதானமாகப் பதில் சொன்னால் & சில சமயம் கேள்விகளைக் கேள்விகளாலேயே மடக்கலாம். எதிர்பார்த்த நிருபர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். பொறுமை, அமைதி, நிதானம் ஓர் அரசியல்வாதிக்கு அணிகலன். பொறுமை இழந்து, அமைதி குலைந்து நிதானம் தவறினால் நிருபர்களிடம் வசமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்!
குடியாத்தம் கான், சென்னை.
ஆழ்கடலில் வெண்முத்துகள் கிடைக்கும். ஆனால் கருப்பு முத்துகள் கிடைப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. அந்திமழைப் பொழிவில் திறந்திருந்த சிப்பிகளுக்குள் விழுந்து, விளைந்த கருமுத்துகளைக் கண்டெடுத்து மாலையாகத் தொடுத்து சூட்டிய விதம், புதுவிதம். இன்றைய சூழலில் திரை, இலக்கியம், சமூகவியலாளர்கள் பன்முகத் திறனாளர்கள். சமூக ஊடகம் என பிரித்து வழங்கிய விதம் சிறப்பிலும் சிறப்பே! ‘‘ நூறு இளைஞர்களைக் கேட்டார் சுவாமி விவேகானந்தர். கிட்டத்தட்ட அதில் பாதி இளைஞர்களைத் தந்துவிட்டது அந்திமழை. இளைஞர்கள் தொகுப்பு இளமையின் தாலாட்டு. பிடியுங்கள் என் பாராட்டை. அந்திமழைக்கு இது ஒரு சீராட்டு.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு