தங்கம் தென்னரசு ரவிபாலட்
அரசியல்

“வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்!”

அசோகன்

தமிழக தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களுடன் நம் மாநிலத்தில் செய்யப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகள், சோழர் வரலாறு உள்ளிட்ட பல செய்திகள் குறித்து அந்திமழைக்காக உரையாடினோம். அதில் இருந்து சில பகுதிகள்:

பழங்காலத்து கல்வெட்டுகளை வாசிக்கும் திறன் பெற்ற ஓர் அமைச்சராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் நான் பள்ளியில் படிக்கும்போது ஏற்பட்டது. பிறகு கல்லூரிக்காலத்துக்கு வந்தபோது வரலாற்றில் இடம் பெற்ற இடங்களை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்ததால் அங்கே நடராஜர் கோவிலைச் சென்று பார்ப்பேன். அதில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அது தொடங்கியது. கோவில்கள், சிற்பங்கள், கட்டடக் கலை என அந்த ஆர்வம் விரிவடைந்துகொண்டே சென்றது. அந்த காலகட்டத்தில் பல பயணங்களை மேற்கொண்டேன். குறிப்பாக பொன்னியின் செல்வன் கதை நிகழும் இடங்களுக்கெல்லாம்

சென்றுள்ளேன். இந்த ஆர்வம் தான் என் கல்வெட்டு வாசிப்பாக உருவெடுத்தது. இதற்காக தனிப்பயிற்சி என எதையும் மேற்கொள்ளவில்லை. பழக்கத்தின் வாயிலாகவும், அறிஞர்களிடம் உரையாடியதன் மூலமாக எழுத்துருக்கள் காலந்தோறும் மாறியிருப்பதைக் கவனித்ததன் வழியாகவே நான் கல்வெட்டுகளை வாசிக்கத் தொடங்கினேன் என சொல்லலாம்.

தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்?

எப்போதும் இல்லாத வகையில் இப்போது நிறைய நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். கீழடி அகழராய்ச்சியைத் தொடங்கி, நம் தமிழர்களின் தொன்மை, கலாசார வளர்ச்சி, விழுமியங்கள் குறித்தெல்லாம் ஆர்வம் மக்களிடம் வளர்ந்துள்ளது. இந்த ஆர்வத்தாலும் உண்மையான வரலாற்றை வெளிக்கொணரவேண்டும் என்ற நோக்கிலும் பல இடங்களில் அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கீழடி மாத்திரம் மட்டுமல்லாமல் கொந்தகை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களிலும் புதிதாக வெம்பக்கோட்டை, கொற்கை,

சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, துலுக்கர்பட்டி பெரும்பாலை போன்ற இடங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன. தமிழக பண்டையப் பெருமைகளை ஆய்வுரீதியாக அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் இது செய்யப்படுகிறது.

பெரும்பாலை, துலுக்கர் பட்டி - என்ன முக்கியத்துவம்?

தமிழகத்தின் வட பகுதியில் தர்மபுரி, கிருஷ்ணபுரி போன்ற இடங்களில் நிறைய இரும்புக்கால கருவிகள் கிடைக்கின்றன. இங்கே இரும்புக்காலம் என்பது பொது ஆண்டுக்கு முன் 1700 இல் தோன்றியிருக்கவேண்டும் என அறியப்படுகிறது. இது மயிலாடும்பாறை ஆய்வுகளில் தெரியவருகிறது. எனவே இதை ஒட்டி உள்ள இடமான பெரும்பாலையில் ஆய்வு செய்யப்படுகிறது. மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வுகளுக்காக இப்பகுதி ஆய்வுகள் உதவும். தென் தமிழகத்தில் நம்பியாற்றங்கரையில் துலுக்கர்பட்டியில் நடத்தப்படும் ஆய்வுகள் ஆற்றங்கரை நாகரிக காலநிர்ணயத்தை ஊர்ஜிதம் செய்வதற்கு உதவியாக இருக்கும். இங்கிருக்கும் தொல்லியல் மேடும் பல விஷயங்களைக் காண்பிக்கக்கூடியதாக உள்ளது.

கொற்கை ஆய்வுகள் குறித்து...

கொற்கையில் 1968லேயே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கொற்கை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கிய காலத்திலிருந்தே கிடைக்கின்றன. அங்கிருந்து பிற்காலப் பாண்டியர் காலம் வரைக்கும் கூட கொற்கை செயல்பாட்டிலிருந்திருக்கலாம். ஆனால் அந்த கொற்கைக்கும் கடலுக்குமான தூரத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கவேண்டும். இப்போதைய கொற்கையில் இருந்து கடல் பத்து கிமீ கிழக்கு நோக்கிப் போயுள்ளது. தாமிரபரணியில் இருந்து மூன்று கிமீ வடக்கே தான் இன்றைய கொற்கை உள்ளது. ஆனால் அங்கே நடத்தப்பட்ட ஆய்வுகளில்

சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் நிறைய கிடைத்தன. பானை ஓடுகள், வணிகப்பொருட்கள், சங்கு வளையல்கள் என கடல் வணிகம் சார்ந்தபொருட்கள் அவை. கட்டுமானங்கள் கிடைத்தன. துளையிடப்பட்ட குழாய் கிடைத்தது. அந்த காலத்தில் ஏதோ ஒரு வடிகட்டும் பணிக்கு அது பயன்பட்டிருக்கலாம். இப்போது நிலப்பகுதியில் செய்த ஆய்வுகளுக்கு அடுத்தபடியாக பண்டைய கால கொற்கை எங்கே இருந்திருக்கும் என்ற தேடலைத் தொடங்கி உள்ளோம். கடல்

சார் பல்கலைக் கழகங்களுடைய உதவியுடன் தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ஆய்வு நடக்கிறது.

ஒரிசா, கர்நாடகம் கேரளம் போன்ற மாநிலங்களிலும் என்னவிதமான ஆய்வுகள் நடத்த இருக்கிறீர்கள்?

பண்டைகால தமிழ்த் துறைமுகங்கள் என்று பார்த்தால் முசிறி முக்கியமான இடமாக இருந்துள்ளது. கேரளத்தில் உள்ள இப்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு, ரோம் நாடுகளுக்கு மிகப்பெரிய தொடர்பு உள்ளது. சேர நாட்டின் பகுதி என்பதால் அங்கே ஆராயவேண்டும். அப்போதைய சங்க கால சான்றுகள் அங்கே கிடைக்கலாம். ஒரிசா, கர்நாடகா போன்ற இடங்கள் எல்லாம் நம் படைகள் சென்று வென்ற இடங்கள். ராசேந்திர சோழன் கங்கை வரை சென்றுள்ளார். அங்குள்ள பால வம்ச அரசர்கள் ஆண்ட மேற்கு வங்கம் வரை அவர் சென்றுள்ளதற்குச் சான்றுகளாக போர் வெற்றிச் சின்னங்களாக அங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ள சிற்பங்களை இப்போதும் பார்க்கலாம். கும்பகோணத்தில் நாகேஸ்வரசுவாமி கோவிலில் உள்ள விநாயகர் சிலை பாலர்கள் பாணி சிற்பம். மேலக்கடம்பூரில் உள்ள வெண்கல சிற்பங்கள் பாலர்கள் பாணியில் உருவாக்கப்பட்டவை. கலிங்கம், நுளம்பர்கள், சாளுக்கியர்கள் போன்றவர்களிடம் இருந்து படையெடுப்பினால் கொண்டுவரப்பட்ட சிலை களை இன்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் காணலாம். ஆக இவ்வாறு நாம் போர் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆய்வு செய்ய விருப்பப்படுகிறோம். அந்த காலத்தில் நிறுவப்பட்ட வெற்றித்தூண்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கண்டறிதல், கலிங்கத்துப் பரணியின் இலக்கிய சான்றுகளை மெய்ப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள விரும்புகிறோம். பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட என்றுதான் ராசேந்திரனின் மெய்க்கீர்த்தி தொடங்கும். இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாமல் கடல் கடந்து பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற இடங்களுக்கு சென்றதற்கான சான்றுகளைத் தேடியும் ஆய்வுகள் நடத்த விருப்பங்கள் உள்ளன.

தமிழக வரலாற்றில் எதைப் பொற்காலம் என சொல்லலாம்?

சோழர் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்து கங்கை வரை படையெடுத்துப் போய் தம் பலத்தை நிரூபித்து வந்துள்ளனர். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மௌரியர், குப்தர் காலத்திலிருந்து அந்தபேரரசுகளின் ஆளுகைக்கு உட்படாத ஒரு நிலப்பரப்பு என்றால் அது தமிழக நிலப்பரப்புதான். எனவே தான் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படவேண்டும் என்கிறோம். இங்கு உருவான அரசுகளில் மகோன்னதத்தை அடைந்தது என்றால் அது சோழர் அரசுதான். ராஜராஜன் காலத்தில் ஈழம் உள்ளிட்ட சில தீவுகளை அவர் வென்றிருந்தாலும் அதை மிகப்பெரிய அளவில் கொண்டுபோனவர் ராசேந்திரன். அதே சமயம் பாண்டியர்களின் எழுச்சியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அவர்களின் மீட்சி நிகழ்ந்தாலும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பாண்டிய ஆட்சி உச்சத்தை எட்டியது. இவையெல்லாம் நம் வரலாற்றில் முக்கியமான கட்டங்களாக நான் எண்ணுவேன். ஆனால் பொற்காலம் என என்னிடம் கேட்டீர்களேயானால் நான் திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த காலம்தான் பொற்காலம் என்பேன்.

பெரும் பரப்பிலான அரசை ஆண்ட சோழர்கள், பாண்டியர்களின் மாளிகைகள் அரண்மனைகள் எதுவும் இன்று இல்லையே?

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த பெரிய பகை முக்கியக் காரணம். சோழர்களின் கல்வெட்டுகளைப் பார்த்தால் பாண்டிய குலாசனி ( பாண்டிய குலத்தின் சனி) என்று வரும். மதுராந்தகன் அதாவது மதுரைக்கு அந்தகன் என்று வைத்துக்கொண்டனர். பாண்டியர்கள் சோழ குலாந்தகன் என்று பெயர் வைத்துக்கொண்டனர். பரம்பரை வைரிகளாக இருந்தனர். திரும்புறம்பியம் போர்க்களம்தான் பல்லவர்கள், பாண்டியர்கள் இருவருக்குமான முடிவுரையை எழுதியது. அதில்தான் விஜயாலயச் சோழர் எழுச்சி பெற்றார். சோழர்களின் கல்வெட்டுகள் கன்னியாகுமரி வரை உள்ளன. இவர்களின் ஆதிக்கத்தில் பாண்டிய நாடு இருந்தது. பாண்டிய அரண்மனைகள் அழித்தொழிக்கப்பட்டன. சோழ பாண்டியன் என்ற பெயரில் சோழ இளவரசர்கள் மதுரையை ஆண்டனர். பின்னாளில் சுந்தரபாண்டியன் படையெடுத்து வரும்போது சோழர்களின் பூமியில் இருக்கும் எல்லா மாடமாளிகைகளையும் இடித்து கழுதையைக் கொண்டு உழுது, அவுரிச்செடிகளை விதைத்துவிட்டு, கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்காக கட்டப்பட்ட மண்டபத்தை மட்டு விட்டுவிட்டு அழித்ததாக திருவெள்ளறை கல்வெட்டு

சொல்கிறது. ஆனால் கோவில்களை மட்டும் விட்டு வைத்தனர். என் சரித்திரம் நூலில் உவேசா, எஞ்சிய சோழர்களின் கோட்டை சுவர் மட்டும் இருந்ததாகப் பதிவு செய்துள்ளார். இன்று சோழன் மாளிகை என்ற ஊர் மட்டும் இருக்கிறது. மாளிகை இல்லை.

காந்தளூர்ச் சாலை என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும்' என்று செல்கிற ராஜராஜனின் மெய்க்கீர்த்திதான் எல்லோரையும் போல எனக்கும் நினைவுக்கு வரும். காந்தளூர்ச் சாலை என்ற ஊர் எது என்பதுகுறித்து பெரிய விவாதங்கள் உண்டு. பொதுவாக ராஜராஜனின் கல்வெட்டுகள் திருமகள் போல எனத் தொடங்கினாலும் வேறு சில கல்வெட்டுகள் சாலை கலமறுத்து அருளிய என்று மட்டுமே தொடங்கும். சாலை என்பதற்கு இரண்டு பொருள் கொள்ளலாம். ஒன்று போர்க்கப்பல்கள் இருந்த காந்தளூர்சாலை துறைமுகத்தை அங்கிருந்த கப்பல்களை அழித்து துறைமுகப்பட்டனத்தைக் கைப்பற்றினார் என்பது. இன்னொன்று சாலை என்பது ஒரு கல்விச்சாலை. கலமறுத்து அருளிய என்பதன் மூலம் அங்கே அவர் ஒரு கல்விச்சாலையை உருவாக்கினார் என்றும் கூட சொல்வார்கள். இதுகுறித்து ஆய்வாளர்கள் இடையே மாறுமட்ட கருத்துகள் உண்டு. இன்றைய கேரளத்தில் மூணார் அருகேகூட காந்தளூர் என்று ஓர் ஊர் உண்டு. கலமறுத்தருளிய என்று பார்த்தால் இங்கு அதற்கு வாய்ப்பு இல்லை. மிகப்பெரும்பான்மை கருத்து அது ஒரு துறைமுகப்பட்டனம் என்பதுவே.

உங்களைப் பரவசப்படுத்திய தொல்பொருள் எது?

சங்ககால மன்னர்களின் நாணயங்களைப் பார்த்தபோது உண்மையில் பெரும் பரவசத்துக்கு ஆட்பட்டேன். கொல் இரும்பொறை, கொல்லிப்பொறை போன்றவர்களின் நாணயங்கள். அதில் தமிழி எழுத்துகள்... இவையெல்லாம் ஆச்சர்யப்படுத்தி உள்ளன. குட்டுவன் கோதை, அயனன் சேந்தன் காசுகள் எல்லாம் உள்ளன. கோட்டுருவத்துடன் மீன் இருக்கும் பாண்டியர் காசுகள், புலி பொறித்த சோழர் காசுகள், வில் இருக்கக்கூடிய காசுகள். யானையின் சின்னமும் இருக்கும். சதுர செவ்வக வடிவில் இக்காசுகள் கிடைக்கும். ரோமானியர் தொடர்பு கிடைத்ததும் இவர்கள் தங்கள் உருவங்களைப் பொறித்து காசுகளை வெளியிட்டனர். அதில் மாக்கோதையின் காசும் ஒன்று. பாண்டியர் காசுகளிலும் தலை பொறிக்கப்பட்ட சிலவற்றை நான் பார்த்துள்ளேன். இவற்றைப்போலவே அகழாய்வில் கிடைக்கும் நல்ல தமிழி எழுத்துகள் உள்ள பானை ஓடுகள் என்னை பரவசப்படுத்துகின்றன. தமிழர்களுக்கு என்று ஓர் எழுத்துமுறை இருந்தது. அது குகைகளில் பாறைகளில் மாத்திரம் அல்லாமல் எளியமக்களிடம் இருக்கும் பானைகளிலும் இருந்தது. அதாவது அன்றைய நாகரிகத்தில் சாமானியரிடமும் எழுத்துக்கல்வி அறிவு பரவி இருந்ததற்கு அது ஓர் எடுத்துக்காட்டு. மிக நீண்ட அதாவது 13 எழுத்துகள் கொண்டவை கூட கிடைத்துள்ளன.

பிற நாகரிகங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாகரீகம் எவ்வளவு பழையது?

தொழில்வளர்ச்சி பெற்ற, எழுத்துமுறையை அறிந்திருந்த, வணிகத் தொடர்புகள் கொண்டதாக, நகர நாகரிகம் கொண்டதான ஒரு நாகரிகம் இங்கே நிலவி வந்துள்ளதை நாம் உறுதிப்படுத்த முடியும். இரும்பை உருக்கும் குழாய்களை இங்கே காண்கிறோம். பொது யுகத்தில் இருந்து முன்பாக ஆறாம் நூற்றாண்டு காலத்தில் எழுத்துமுறையைக் காண்கிறோம். ஆனால் இதற்கு முன்பாகவே ஆதிச்சநல்லூர் மிகப் பழையது. அதன் காலம் பொதுயுகத்துக்கு 1500 ஆண்டுகள் முன்பானது. அங்கே தங்கத்தின் பயன்பாடும் மற்ற பொருட்களின் பயன்பாடும் உள்ளது. மயிலாடும்பாறை ஆய்வுகள் இதை இன்னும் பின்னோக்கி இட்டுச்செல்வதாக உள்ளது. நாம் என்ன முடிவுகளை வேண்டுமானாலும்  சொல்லலாம். ஆனால் அவற்றை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளும் சரியான ஆதாரங்களுடன் சொல்லவேண்டும். அந்த கடமை நமக்கு உள்ளது.

அது சரி.. அகழாய்வில் கிடைக்கும் நெல்மணிகள் முளைப்புத்திறனுடனா உள்ளன? இப்படியெல்லாம் தகவல்கள் பரப்பப்படுவதைக் காண்கிறோம்...

இல்லையே... அவையெல்லாம் கார்பனாகி விடுகின்றன. அவற்றின் கரிமப்பகுப்பாய்வைத்தான் நாம் செய்கிறோம். அது முளைக்கிறது. அது சீரகச் சம்பாவாக உள்ளது என்றெல்லாம்

சொல்ல முடியாது (சிரிக்கிறார்). வாட்ஸப்பில்  சொல்வதெல்லாம் உண்மையில்லை. நமது எழுத்துமுறையை பொதுயுகத்துக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லவே நம் ஊர் அறிஞர்களே தயாராக இல்லாத காலம் இருந்தது. ஆய்வுலகத்திலும் அறிவுலகத்திலும் மாற்றுக்கருத்துகள் இருக்கும். ‘ன்‘ என்ற எழுத்து நமக்கு கிடைத்தபின்னர்தான் அந்த காலம் பின்னோக்கிச் சென்றது. அசோகன் பிராமியில் அது இல்லை. அசோகன் பிராமியில் இருந்துதான் நமக்கு பிராமி எழுத்துமுறை வந்தது எனக் கோட்பாடு இருந்தது. புலிமான் கோம்பை கல்வெட்டு கிடைக்கும் வரை நம் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு தாண்டி கொண்டுபோக முடியவில்லை.  கீழடி அகழாய்வுக்குப் பின் தான் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வு முடிவுகளுடன் தான் நாம் எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டி உள்ளது.

சந்திப்பு: அசோகன்

அக்டோபர், 2022