நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அணி திரண்டு காய் நகர்த்தி வருகின்றன. கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பீகாரில் முதல் கூட்டத்தை நடத்தின. இந்த நிலையில் திங்கள், செவ்வாய் கிழமைகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் 2-வது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாஜகவும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் போட்டி கூட்டம் நடத்த திட்டமிட்டது. செவ்வாய்கிழமை மாலையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.