தூத்துக்குடி வேட்பாளர்கள் 
தேர்தல் 2024

தூத்துக்குடி: கலக்கும் கனிமொழி!

அரசியல் செய்தியாளர்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியானது ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், திருவைகுண்டம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. சென்னையில் வசித்தாலும் தூத்துக்குடியை தன் இரண்டாவது இல்லம் ஆக்கிக்கொண்டிருக்கும் கனிமொழியின் அசைக்கமுடியாத கோட்டையாக இத்தொகுதி ஆகிவிட்டிருக்கிறது.

2019-இல் இங்கு போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்து அதிமுக-பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனை சுமார் மூன்றரை லட்சம் வாக்குகளில் வென்றுள்ளார். இம்முறை அதே வலுவான திமுக கூட்டணி இருப்பதால் கனிமொழி தெம்புடன் இருக்கிறார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் ஆர் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்தவர்.  2014-இல் திமுக எதிர்ப்பு அலை வீசிய காலகட்டத்தில் இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயசிங் சுமார் மூன்றரை லட்சம் வாக்குகளைப் பெற்றார்.  ஆனால் அதற்குப் பின் வந்த 2019 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இரண்டே கால் லட்சம் வாக்குகளே பெறமுடிந்தது.

பாஜக கூட்டணியில் இத்தொகுதி தமாகாவுக்கு அளிக்கப்பட்டது. எஸ்டிஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார். இவர் புதுமுகம்; உள்ளூர் காரர்.  கடந்தமுறை இந்த கூட்டணியில் இருக்கும் அமமுக வேட்பாளர் சுமார் 75000 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த வாக்குகளை தமாக வேட்பாளர் பெறமுடியுமா என்று பார்க்கவேண்டும்.

நாம் தமிழர் கட்சியில் ரொவீனா ரூத் ஜேன் களமிறங்கி இருக்கிறார். இவர் பல் மருத்துவர் ஆவார். கடந்தமுறை இக்கட்சி வேட்பாளர் சுமார் 50,000 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இங்கு பாஜக நேரடியாக களமிறங்கும் என்றார்கள். இந்நிலையில் தமாகாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. எனவே போட்டியை திமுகவுக்குத் தரக்கூடிய நிலையில் அதிமுகவே உள்ளது.

சுற்றுலா மேம்பாடு, போக்குவரத்து மேம்பாடு, உள்ளூர் தொழில்களுக்கு உதவி, குறிப்பாக கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலுக்கான மூலப்பொருள் வழங்கல் கோரிக்கைகள், பிற பகுதிகளுடன் மேம்பட்ட ரயில் வசதி போன்றவை இங்குள்ள மக்களின் கோரிக்கைகள்.

சமீபத்தில் கடும் வெள்ளத்தில் பாதிக்கபட்டபோது, மக்களை சந்தித்து கனிமொழி செய்த நிவாரண உதவிகள் பெரும் கவனத்தைப் பெற்றன.

தொகுதியில் வெல்வது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை; எதிரணியில் வலுவான வாக்களர்களை நிறுத்தவில்லை என்ற நிலையில்தான் கனிமொழி பிற தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்துக்குக் கூட சென்றுவந்திருக்கிறார் என்கிறார்கள். இத்தொகுதியில் கடற்கரையோரம் இருக்கும் மக்கள், சிறுபான்மையினர் வாக்குகள் ஆகியவற்றை அப்படியே அள்ளுவதும் திமுகவுக்கு ஆதரவாகவே உள்ளதாக களநிலவரங்கள் சொல்கின்றன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள்: 14,58,430.  இதில் ஆண்கள் 7,13,388, பெண்கள் 7,44,826,  மூன்றாம் பாலினம்: 316