டாலர்சிட்டி எனப் புகழப்படும் பனியன் நகரம் உண்மையிலேயே உள்ளூர ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பனியன் ஆர்டர்கள், சாயப்பட்டறைகள் வங்காளத்திற்கும், குஜராத்திற்கும் கைமாறின கோலம், போட்ட முதலீடுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் திண்டாடும் ஏற்றுமதியாளர்கள்,
அதை வெளியே சொன்னாலோ, தொழிலைக் கைவிட்டாலோ கடன்காரன் உள்ளே நுழைந்து விடுவான்; வங்கிக்காரன் ஜப்தி நடவடிகை எடுத்து விடுவான் என்ற அச்சத்துடன், ‘புலி வாலைப் பிடிச்சாச்சு. நட்டமோ லாபமோ காலம் முடிவு செய்யட்டும்!’ என்றே ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான தொழிலதிபர்கள். செகன்ட் சேல்ஸ், உள்ளூர் விற்பனை, சின்னச்சின்ன பட்டன், காஜா, ஊசித் தொழில்கள் என சகலத்திலும் ஜி.எஸ்.டி ஏற்றின விளைவு, அதற்கு முன்பு பணமதிப்பிழப்பு. இதில் எல்லாம் ரொம்பவும் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய நகரம் என்றால் அதில் முதலாவதாக துண்டைப் போட்டு அமர்ந்து கொள்ளும் நகரம்தான் திருப்பூர்.
சுற்றுவட்டார அத்தனை கிராமங்களுக்கு மட்டுமல்ல, தென்மாவட்டங்கள், வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் ஆதர்ஷ சக்தி. இன்றைக்கு சோபையிழந்து கிடக்கிறதே. அதற்கு தீர்வு இந்த மோடி ஆட்சி போனால்தான் ஆச்சு!’ என்ற கடுங்கோபத்தில் போன 2019 தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனுக்கு வாக்குகளை குத்தித் தீர்த்தார்கள் மக்கள்.
அதில்தான் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வந்தார் சுப்பராயன். அடுத்த நிலையில் அ.தி.மு.க ஆனந்தன் பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357. மக்கள் நீதி மய்யம் சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகள். இப்போது தேர்தல் களத்தில் சிட்டிங் எம்.பி. சுப்பராயனே திமுக கூட்டணியில் சிபிஐ கட்சியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அருணாசலம் (அ.தி.மு.க, ), ஏ.பி. முருகானந்தம் ( பா.ஜ.க), மா. கி. சீதாலட்சுமி (நாம் தமிழர்) களம் காண்கிறார்கள்.
2 முறை எம்.எல்.ஏ, 2 முறை எம்.பி. என்று பதவி வகித்து விட்ட சுப்பராயன் கட்சி விதிகளின்படி திரும்ப தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது கட்சிக்குள் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் கூட திருப்பூரில் பேச்சாக இருந்தது. ஆனால் கட்சியில் சிறப்பு தீர்மானத்தின்படியும், முதல்வர் ஸ்டாலின் சொல்வாக்கின்படியும் மீண்டும் சீட் பெற்று போட்டியிடுகிறார்.
மோடி எதிர்ப்பு போன தேர்தலை விட இப்போதும் திருப்பூரில் கடுமையாகத்தான் இருக்கிறது. அதே கடுமை சுப்பராயன் தொகுதிக்கு என்ன செய்தார்? என்ற மக்கள் கேள்வியிலும் இருக்கிறது. அதையே எதிர்க்கட்சியினர் பிரச்சார அஸ்திரமாகவும் கொள்கிறார்கள்.
மோடி ஆட்சியின் அபகீர்த்தி என்ன எல்லாம், அதில் ஜி.எஸ்.டியின் கொடுங்கோன்மை என்னென்ன? மாநில சர்க்காரை இயங்கவே விடாமல் செய்வதில் மத்திய அரசு எப்படியெல்லாம் செயல்படுகிறது? அதற்கு முதல் போராட்டக்குரலை எங்கெல்லாம் தோழர் சுப்பராயன் ஒலித்தார் என்பதை எல்லாம் தி.மு.க- கம்யூனிஸ்ட்டுகள் மூச்சு முட்ட பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் ஓரளவு திருப்தி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிகள். இவை இரண்டும் முழுக்க, முழுக்க நகர்புறம். புரிந்து கொள்ளும் வாக்காளர்கள் நிறைய.
ஆனால் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் பகுதிகள் தோழர்களை பிரச்சாரத்திலேயே தண்ணி குடிக்க வைத்து விடுகிறது. இங்கெல்லாம் இரட்டை இலைக்கான அலை நன்றாகவே அடிக்கிறது. அது கிராமங்களுக்கே உரிய பெரும்பான்மை ஜாதி அலையா? வேட்பாளர் மீதான கோப அலையா புரிவதில்லை. சுப்பராயனும் தொகுதியில் பெரும்பான்மை சமூகமான கவுண்டர் சமூகத்தவர்தான். ஆனால் அதிமுக பக்கம் நிறைய பேர் பேசுவது பேராச்சர்யமாக இருக்கிறது.
திருப்பூர் தொகுதி சீரமைப்புக்கு முன்பு கோவை மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது 3 முறை காங்கிரஸ் எம்.பியான சி.கே.குப்புசாமி இருந்துள்ளார். அடுத்தது அவரின் அண்ணன் மகன் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக எம்.பியாக இரண்டு முறை இருந்துள்ளார். இவர்கள் இருவருமே திருப்பூர்வாசிகள். பனியன் தொழிலதிபர்கள். அவர்கள் தொழிலுக்கு செய்த மாதிரி தொழிற்சங்கவாதியான சுப்பராயன் செய்யவில்லை என்பதும் சிலரது குரலாக உள்ளது.
அதனால் மோடிக்கு எதிர்ப்பலை இருந்தாலும் கூட தி.மு.க கூட்டணி சிட்டிங் எம்.பி என்கிற கணக்கில் போட்டியை கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ஜ.க வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் அக்கட்சியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவர். கோவையைச் சேர்ந்தவர். அங்கேதான் அவர் போட்டியிடுவதாக இருந்தது. அதற்கான பூர்வாங்க வேலைகளையும் முழுக்க செய்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் அங்கே அண்ணாமலை குதித்து விட, இவர் இங்கே தாவ வேண்டியதாகப் போயிற்று.
எனவே இவர் நம் ஊர்க்காரர் அல்ல என்ற அதிருப்தி இங்குள்ள பாஜகவினர் மத்தியிலேயே உருள்கிறது. இத்தனைக்கும் இந்து முன்னணி பலமாக உள்ள ஊர் திருப்பூர். அ.தி.மு.க வேட்பாளர் அருணாசலத்திற்கு இந்தப் பிரச்சனை ஏதுமில்லை. புதியவர். எந்தப் பதவிகளையும் அனுபவியாதவர். இவருக்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் எம்.எல்.ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன். முன்னாள் எம்.பி.சிவசாமி முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் என ஒரு டீமே சுழன்றாடுகிறது.
ஆனாலும் கூட்டணி பலம், மோடி எதிர்ப்பு அலை. தொழில் பிரச்சனை. ஜி.எஸ்.டி கோபம் எல்லாம் சேர்ந்து சிட்டிங் எம்.பி. சுப்பராயனே மீண்டும் வெல்லக்கூடும். கொஞ்சம் கஷ்டப்பட்டு வெல்வார் என்றே கருத்து சொல்கிறார்கள் திருப்பூர் அரசியல் நோக்கர்கள்.