(வலமிருந்து) ஜி.செல்வம், ஈ. ராஜசேகர், வி. ஜோதி  
தேர்தல் 2024

காஞ்சிபுரம்: பளபளப்பது எந்தக் கூட்டணி?

அரசியல் செய்தியாளர்

பட்டுத்தொழிலுக்கும் கோவில்களுக்கும் பெயர்போன காஞ்சிபுரம்(தனி) நாடாளுமன்றத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன.

2009ஆம் ஆண்டுக்கு முன் செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதி யாக இருந்தது மறுசீரமைப்புக்கு பின்னர் காஞ்சிபுரம் என மாறியது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 17, 48, 866, இதில் ஆண்கள்: 8, 53,456, பெண்கள் 8,95,107, மூன்றாம் பாலினத்தவர் 303 பேர் உள்ளனர்.

திமுக கூட்டணியில் தற்போதைய எம்பியான செல்வம் மீண்டும் நிறுததப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஈ. ராஜசேகர், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டு வி ஜோதி களம் காணுகிறார். நாதக சார்பாக சந்தோஷ்குமார் நிற்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் பெற்ற வாக்குகள் 6,84,004; அதிமுக வேட்பாளர் மரகதம் பெற்ற வாக்குகள் 3,97,372, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி பெற்ற வாக்குகள் 62771.

பாமக வேட்பாளர் ஜோதி திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர். ராஜசேகர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். ஆகவே இருவரும் வெளியே இருந்து வருகிறவர்கள் என்கிற பேச்சு தொகுதியில் இருக்கிறது. செல்வம்தான் உள்ளூர்காரர் என திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. அதே சமயம் ராஜசேகரின் சொந்த பந்தங்கள் கணிசமாக இத்தொகுதியில் இருப்பதால் இரட்டை இலையின் பலத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக வாக்குகள் தனி பலத்தை அளித்துள்ளன. பரந்தூர் விமான நிலையப் பிரச்னையை மையப்படுத்தி நாதக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

சந்தோஷ்குமார்

பெரும்பாலும் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களைக் கொண்ட தொகுதி காஞ்சிபுரம்.. மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வசதிகள் செய்யவேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக உள்ளது. நெசவுத்தொழில் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து என்பது கடந்த தேர்தலில் இருந்தே தொடரும் முக்கியக் கோரிக்கை.

தற்போதைய சிட்டிங் எம்பி ஜி செல்வம் அமைதியானவர் எளிமையானவர் என்ற பெயர் இருக்கிறது. ஆனாலும் தொகுதிக்குள் பெரிய அளவுக்குப் பார்க்கமுடியவில்லை என்ற குறையும் உள்ளது. மாவட்டச் செயலாளர் தா மோ அன்பரசனின் களப்பணியும் பத்தாண்டுகால பாஜக அரசுக்கு எதிரான மனநிலை அவருக்கு உதவியாக இருக்கும். அதே சமயம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான மனநிலை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இருப்பினும் நகர்ப்புறங்களைத் தவிர பிற இடங்களில் தேர்தலின்போது இருக்கும் வழக்கமான பரபரப்பைக் காணமுடியவில்லை என்று உள்ளூர் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்.