என் ஆட்கள், ஆதரவாளர்கள் உன்னை (ஸ்டாலினை) முதல்வராக விட மாட்டார்கள்' - ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் மத்தியில் அழகிரியின் பேசிய பேச்சின் ஹைலைட் இது தான்.
தந்தி டிவி அக்டோபர் 2018இல் தொடங்கி நான்கு முறை தமிழக நிலவரம் பற்றி கருத்துகணிப்பு நடத்தியுள்ளது.நான்கு முறையும் பெரிய வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் முன்னணியில் உள்ளார்.
பல்வேறு உளவுத்துறை கணிப்புகளும் தந்தி டிவியின் முடிவோடு ஒத்துபோவதாக விபரம் அறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ஜனவரி 27 அன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,'மீண்டும் அம்மா ஆட்சியை அமைத்து நாம் அனைவரும் மீண்டும் இதே நினைவிடத்தில் நன்றி செலுத்த வீர சபதம் ஏற்போம்' என்று பேசினார்
குபேரனின் கஜானாவை பக்கத்தில் வைத்திருப்பதாக ரஜினியால் கூறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா, ஓபிஎஸ்,டி.டி.வி தினகரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் பல்முனை தாக்குதல்கள் இப்போது அணிவகுக்கின்றன. இவற்றை சமாளிக்கவே திணறுவதால் அவர் எதிர்பார்த்தபடி காரியங்கள் முன்னகருவதில் சிரமம் ஏற்பட்டு ,எங்கே செல்லும் இந்த பாதை என்ற 'திக்திக்கில்' நாட்கள் நகர்வதுபோல் தோன்றுகிறது.
சசிகலா சிறைக்குச் சென்றபின் ஆட்சியை தக்க வைக்க உதவிய குபேரனின் கஜானா, மீண்டும் ஆட்சியைப்பிடிக்க உதவுமா என்பது தான் தற்போது அதிமுகவில் உலாவி வரும் பெரிய கேள்வி.இந்த கேள்வியோடு சிறைமீண்ட சின்னம்மாவின் அடுத்த மூவ் பற்றிய எதிர்பார்ப்பும் சேர்ந்திருக்கிறது.
இந்த கூடாரத்தில் பிரச்னைகள் ஓய்ந்து நிலவரம் ஒரு வடிவத்திற்கு வர இன்னும் நான்கு வாரங்கள் ஆகும் என்பது எதிர்பார்ப்பு.
அதே சமயம் திமுகவிலும் முடிவிற்கு வராத பல விவகாரங்கள் உள்ளன.
'திமுக கூட்டணி பற்றிய பல தலைவர்களின் பேச்சுகளும் பேட்டிகளும், கசியும் கிசுகிசுக்களும், தொலைக்காட்சி விவாதங்களும் ஏதோ பெரிய பிரச்னை இருப்பதாக கட்டமைக்கின்றன.இதில் பல ஊகங்கள் தான், அதைத்தவிர வேறெதுவும் இல்லை!' என்கிறார் திமுகவின் தலைவர் ஓருவர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, ‘‘மதச்சார்பற்ற அரசியல் பேசும் கமல்ஹாசன் காங்கிரஸ் அணிக்கு வரவேண்டும். காங்கிரசை ஆதரிக்க வேண்டும்'' என்று கூறியதும் அதற்கு கமல்ஹாசன்,' காங்கிரஸின் அன்பை மதிக்கிறேன்' என்று பதிலளித்துள்ளதையும் பார்க்கும் போது இரண்டு கட்சிகளுக்கு இடையில் என்ன பிரச்னை என்ற கேள்வி எழாமல் இல்லை.
கமல்ஹாசன் பரப்புரைக்கு பெரும் திரளான கூட்டம் கூடுகிறது,கமல்ஹாசன் திமுகவின் வாக்கு வங்கியை பிரித்து ஏதாவது சேதாரம் செய்துவிடக்கூடும் என்ற கருத்து அறிவாலயத்தில் விவாதப் பொருளாக உள்ளது என்று பரவிய செய்திகள் அடங்கி விட்டது.கடந்த இதழில் அந்திமழை இது பற்றி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
2011 மற்றும் 2016 இல் திமுக காங்கிரஸிற்கு அதிகமான(63 ,41) இடங்களை ஒதுக்கியது.2016இல் திமுக தோற்றதற்கு காங்கிரஸ் தான் காரணம் ,இந்தமுறை எச்சரிக்கையாக இருங்கள் என்பது ஸ்டாலினுக்கு தொடர்ச்சியாக தரப்பட்ட எச்சரிக்கை.
தமிழக காங்கிரஸ் தலைமையை வழிக்கு கொண்டு வரத் தான் புதுவையில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கணிக்கிறார்கள். ஜனவரி 18 ஆம் தேதி நடந்த புதுச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு திமுகவின் மேலிடப் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் எம்பி கலந்துகொண்டார்.அந்தக் கூட்டத்திலேயே பலரும் புதுச்சேரியின் திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை முன்மொழிந்தனர்.
நிலைமை கைமீறிப் போவதாக பதறிய புதுச்சேரி காங்கிரஸ் தில்லி தலைமைக்கு சொல்ல, ராகுல் காந்தியிடமிருந்து ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாகவும் அதையடுத்து திமுக &காங்கிரஸ் கூட்டணி பிரசினைகள் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 21ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,' 'நம்முடைய கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதில் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள். நானும் இதையே விரும்புகிறேன். நம்முடைய ஒவ்வொரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளும் கடந்த ஐந்து வருடமாக நம்மோடு சேர்ந்து போராடி வருகிறார்கள். நம்மோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை நாம் விட முடியாது, விடக்கூடாது.மாவட்டச் செயலாளர்கள் ஆகிய நீங்களும் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டைக் குறைவாகக் கொடுங்கள் என்று சொல்கிறீர்கள்'' என்றார்.
திமுக தரப்பில் கசிய விடப்படும் தொகுதி பங்கீடு பின்வருமாறு இருக்கிறது.
காங்கிரஸ் 24
சிபிஎம் 6
இந்திய கம்யூனிஸ்டு 6
மதிமுக 6
விடுதலைச் சிறுத்தைகள் 6
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி 3
இந்திய ஜனநாயகக் கட்சி 2
மமக 3
தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1
மொத்தம் 60 இடங்கள்
கடைசி நேர ரிசர்வ் 8 இடங்கள்
திமுக 165 லிருந்து 170 இடங்களில் போட்டியிடும்.இதில் சிறிய மறுதல்கள் இருக்குமே தவிர பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் இவற்றுக்கு கூட்டணிக் கட்சிகள் எப்படி ஏற்றுக்கொண்டு வழிக்கு வரபோகின்றன என்பதைப் பார்க்கவேண்டும்.
ஸ்டாலினின் மிகப் பெரிய தலைவலியாக இருக்கப் போவது வேட்பாளர் தேர்வு தான். திமுக கார்பரேட் மயமாகிவிட்டது என்ற விமர்சனத்தை பாஜகவும் , அதிமுகவும் தொடர்ந்து முன்வைக்கின்றன.எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைகளில் அதிமுகவில் சாதாரண மனிதர்கள் உயர் பதவிக்கு வரலாம் என்று தொடர்ந்து சொல்கிறார்.
இது பற்றிய கருத்தை திமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது,விமர்சகரும் எழுத்தாளருமான சுபகுணராஜன் ஒரு கட்டுரையில் பதிவு செய்த சம்பவத்தை முன் வைத்தார், ‘‘தஞ்சாவூர் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்குகின்றனர். அவர் காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு , மாலைக் கூட்டத்துக்காக ஆடுதுறை வந்திறங்கியிருக்கிறார். பேருந்து நிலையத்தில் வாடகை சைக்கிள் கடை வைத்திருக்கும் கட்சித் தோழர் , அண்ணாவை அழைத்துச் சென்று கடையில் அமர்த்தி,சர்பத் வாங்கி குடிக்கிறார். அன்றைய கூட்ட அமைப்பாளர் மணி எங்கே எனக் கேட்க கடைத்தோழர் , ‘இன்னைக்கு மணியோட கழனியில கதிரடிப்பு . களத்துமேட்டில இருப்பார். ஆனா மேடையெல்லாம் நேத்தே போட்டாச்சு அண்ணா‘ என்கிறார். ‘ சரி , வாப்பா மணியை போய் பார்ப்போம்‘ என அண்ணா அழைக்கிறார்.
சைக்கிள் கடைத்தோழர் அண்ணாவை சைக்கிள் கேரியரில் அமரவைத்துக் கழனி நோக்கி விரைகிறார்.அவர்கள் கழனியை நெருங்கும் போது , மணி களத்தில் நெல்தாள் வாங்கி அடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அண்ணா களத்து மேட்டை அடையும் போது தான் அவரைக் கவனிக்கிறார் மணி. பதறிப்போய் , ‘ என்ன அண்ணா... நீங்க போய் இங்க வந்திருக்கீங்க!‘ என்கிறார்.தொடர்ந்து ‘ வாங்கண்ணா ஊருக்குள்ள போவோம் ‘ எனப் புறப்படுகிறார்.‘பரவாயில்லப்பா , வேலைய முடிச்சினு போலாம்‘ என அங்குள்ள கட்டிலில் அமருகிறார் அண்ணா.வேலை தொடருகிறது.மெல்ல கட்டிலில் சாய்ந்து , படுத்துத் தூங்குகிறார்.மணி அவரை எழுப்பும் போது அண்ணாவின் கூட்டத்துக்கான அறிவிப்பொலி கேட்கிறது. அது அந்த சைக்கிள் கடைத் தோழரின் குரல். மணியின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கூட்டத்துக்கு கிளம்புகிறார் அண்ணா. போகிற வழியில் மணியின் கிராமக் கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்கிறார்.மணியிடம் கூட்டுறவுச் சங்கங்கள் கும்பகோணம் வட்டாரத்தில் வேகமாக உருவாகி வருவதாக சொல்கிறார்.
மணி பின்னாலே கோ.சி.மணி என்று அறியப்பட்டார்.தமிழக அமைச்சர்களில் ஒருவரானார்.''
இந்த நிகழ்வை நம்மிடம் பகிர்ந்த அந்த திமுக பிரமுகர் ''இந்தியாவில் சாமானியர்களுக்கு அதிகாரத்தில் இடமளித்த முக்கிய கட்சி திமுக தான்.ஆரம்பகாலத்தில் இருந்ததைப் போல் இந்த சூழலை மீண்டும் தளபதியார் உருவாக்குவார்'' என்றார் நம்பிக்கையோடு.
இந்த நம்பிக்கை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்போம்.
பிப்ரவரி, 2021