ஹா ரியானா, மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் மட்டுமே ஆட்சியை பாஜக& சிவசேனா கூட்டணி பெரும்பான்மையுடன் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய பாஜகவின் தேர்தல் வியூகங்கள் அங்கே விரிவாக இருந்தன. சென்ற தேர்தலில் வென்றதை விட பெருமளவுக்கு இடங்களைக் கூடுதலாகப் பெறுவார்கள். காங்கிரஸ்& தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியை அப்படியே அரபிக்கடலில் தள்ளிவிடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்குக் காரணமும் இருந்தது.
மகராஷ்ட்டிராவில் பாஜக உயர்சாதி மற்றும் வணிக இனத்தவர்களின் கட்சியாகவே கருதப்பட்டது. பிரமோத் மகாஜனும் கோபிநாத் முண்டேவும் இருந்த காலத்தில் கட்சிக்கு ஓபிசி மற்றும் பழங்குடி சாதியினரை ஈர்த்தனர். ஆனாலும் மகராஷ்டிராவில் உள்ள மராத்தா இனத்தவரிடம் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. இவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பதாகச் சொல்லி இட ஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக போராடி வந்தவர்கள். ஆனால் அரசியல் அதிகாரம் இவர்கள் கையில்தான் இருந்து வந்தது.மராத்தாக்கள் மகாராஷ்டிராவில் சுமார் 34 சதவீதம் இருக்கிறார்கள். சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு வங்கிகளில் 90 சதவீதம் இவர்கள் கையில் உள்ளது.
பிராமண வகுப்பைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸை பாஜக 2014 -ல் முதல்வர் ஆக்கியது. எப்போதுமே மராத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதல்வர் ஆவார்கள். சவான்கள், பவார்கள், தேஷ்முக்குகள் எல்லோருமே மராத்தியர்களே. ஆனால் பட்னாவிஸை பாஜக முன்னிறுத்தியது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதேசமயம் ஒரு மாறுதலான அணுகுமுறையையும் முன்னிறுத்தியது.
''மகாராஷ்டிர அரசியலில் பிராமணராக இருப்பது எப்போதுமே வசதியான ஒன்றல்ல., ஆனால் என் இருபது ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் சாதிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. செயல்களால் தான் ஒருவன் நல்ல மனிதன் ஆகிறான். எல்லா இனத்தவரையும் அரவணைத்தால்தான் ஒருவர் நல்ல தலைவர் ஆக முடியும்,'' என்று பட்னாவிஸ் சொல்லிவந்தார்.
ஆனால் அவரும் காய்களை கவனமுடன் நகர்த்தினார். தம் ஆட்சிக்காலத்தில் மராத்தா இனத்தவர்களுக்கு 16 சதவீத இடொதுக்கீட்டைக் கொண்டுவந்தார். இதன் நோக்கம் தமக்கு எப்போதும் இருக்கும் சாதிகளின் ஆதரவை அப்படியே தக்க வைத்துக்கொள்வது அத்துடன் இன்னொரு பெரிய சாதியினரின் ஆதரவையும் கூடுதலாகப் பெறுவது.
''இதுவரைக்கும் இங்கே பதவியில் இருந்த பல மராத்தா இனத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் செய்யாததை ஒரு பிராமணர் செய்துவிட்டார்!'' என்று பெருமையாக பாஜகவினர் பேசிக்கொள்ள வழி செய்தது. இதுவரை பிராமண சமூகத்தைச்
சேர்ந்த யாரும் முதல்வர் ஆனது இல்லை. எல்லோரும் மராத்தா இனத்தவர்களே. பிராமணர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இம்மாநிலத்தில் போட்டி உண்டு. இதை பட்னாவிஸ் தவிடுபொடி ஆக்கி, தன் பக்கம் மராத்தியர்களை ஈர்த்துவிட்டார் என்று பெரிதாகச்
சொன்னார்கள்.
ஏட்டில் எழுதிப்பார்த்தால் இதுதான் மிகப்பெரிய வெற்றி வியூகம். இதைத் தொடர்ந்து இத்தேர்தலில் சாதி அடிப்படையில் கவனமாக பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பாஜக சென்ற தேர்தலில் பெற்றதை விட குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. இன்னமும் மராத்தா இனத்தவரின் ஆதரவைப் பெறமுடியவில்லை என்பதோடு, ஏற்கெனவே பக்கபலமாக இருந்த சாதிப்பிரிவுகளின் வாக்குகளைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
கூட்டணிக்கட்சியான சிவசேனாவை சமாளிப்பதில் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஐந்தாண்டுகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இம்முறை இடங்களைக் குறைவாகப் பெற்றிருப்பதால் ஆட்சியில் பங்கேற்கும்
சிவசேனா கூடுதலான அதிகாரங்களைக் கேட்கும். பட்னாவிஸ் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது போகப்போகத்தெரியும்.
ஹரியானாவிலும் கிட்டத்தட்ட இதே போன்ற நிலைதான். அங்கும் முக்கியமான ஜாட் இனத்தைச் சாராத ஒருவரான மனோகர்லால் கட்டாரை முதல்வராக ஆக்கி இருந்தது பாஜக. அத்துடன் ஜாட் அல்லாத பிற பிற்படுத்த சாதியினரையும் குறிவைத்து இயங்கியது. அவர்களின் ஆதரவுடனே பல வெற்றிகளையும் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அந்த கணிப்புகள் பிசகி இருப்பது பாஜக குறைவான இடங்களை வென்றதைக் காட்டுகிறது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு இடங்களிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு இடங்களும் திமுக கூட்டணிக்கு உரியவை. அவற்றை வென்றுள்ளது அதிமுக. பணபலம், சாதி பலம் இரண்டும் வெற்றிக்குக் காரணம் என்றாலும் விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகளைக் குறிவைத்து திமுக அவ்வளவு தீவிரமாக இயங்கி இருக்கவேண்டாமோ என்று தோன்றுகிறது. ஒரு தொகுதிக்காக தீவிர
சாதி அரசியல் பேசும்போது மாநிலம் முழுக்க அதன் எதிரொலிகள் கேட்பதைத் தவிர்க்கமுடிவதில்லை என்பதை கட்சிகள் உணரவேண்டும்.
நவம்பர், 2019.