அரசியல்

சரியும் சீட்டுக்கட்டுகளா சிறுகட்சிகள்?

Staff Writer

உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழி நடத்தலும்தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும்தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது! '&

இது, மக்கள் நீதி மையத்தில் இருந்து சமீபத்தில் விலகிவிட்ட, தொழிலதிபரும் அக்கட்சியின் துணைச்செயலாளர்களில் ஒருவருமான சி.கே. குமரவேல் எழுதிய விலகல் கடிதத்தில் இடம்பெற்ற வரிகள்.

இவர் மட்டுமல்ல; கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்., முருகானந்தம், பத்மப்ரியா என பலரது விக்கெட் டுகள் விழுந்துவிட்டன. அற்றகுளத்து அறுநீர்ப் பறவைபோல் தேர்தலில் தோற்றதும் கமல் கட்சியை விட்டு இவர்களெல்லாம் நீங்குகிறார்கள் என்று, ம.நீ.மையத்தின் தீவிர ஆதரவாளர்கள்கூட சொல்ல யோசிக்கிறார்கள்.

காரணம் மிக எளிமையானது. திரைப்பட நடிகராகப் பரிமளித்த பலர், சிறந்த தலைவர்களாகப் பரிமளிக்க முடியாமல் போயிருக்கிறது. கமல்ஹாசன் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறுவாரோ என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மாநிலம் முழுக்க வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, எங்கும் பரவலாகப் போய் பிரசாரம் செய்யாமல், தான் மட்டும் வென்றால் போதும் என சுயநலமாக, மிக அதிக வாக்குகள் பெறக்கூடிய தொகுதியைப் பிடுங்கிக் கொண்டு நிற்பதும், அத்தொகுதியில் உழைக்க முன்வரும் தொண்டர்களின் ஆலோசனையை அல்லது உழைப்பை ஏற்காமல் இருப்பதும் என்பது, நம்ப முடியாத அளவுக்குக் குழப்படியாக இருக்கிறது.

இவரது நோக்கம் தான் என்ன? எல்லோரும் தேர்தலுக்கு முன்னால் சொன்னதுபோல் இவர் அந்தத் தரப்பின் பி டீமா என்று யோசிக்க வைக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டவர், இவர்தான். 2.52 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கும் கமல்ஹாசன், கட்சியில் தன் மேல் நம்பிக்கை வைத்துச் சேர்ந்த, அரசியல் அரங்கில் செயல்பட ஆர்வமுள்ள பல பிரமுகர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

‘‘நீண்டகால நோக்கில்தான் அரசியலுக்கு வரவேண்டும். குறுகிய கால அனுபவங்களை வைத்து எந்த முடிவும் எடுக்க இயலாது. ஆனால் கமலைப் பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுத்தியது மிகச்

சிறப்பானது. அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து அவர் என்ன கற்றுக்கொண்டு செயல்படுத்தப் போகிறார் என்பதில்தான், அவரது கட்சியின் எதிர்காலம் உள்ளது'' என்கிறார், ஓர் அரசியல் நோக்கர்.

2016-இல் ஒரு சதவீத வாக்குகள், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு சதவீத வாக்குகள்; 2021 இல் 6.58 சதவீதம் என வளர்ச்சி. ஆனால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. இது சீமானின் நாம் தமிழர் கட்சியின் நிலை. இந்த வாக்கு சதவீதம் என்பது தி.மு.க. - அ.தி.மு.க .கட்சிகள் பெற்றிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகளுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு. இதை வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கனவு கூடக் காணமுடியாது.

ஆனால் சீமானைப் பொருத்தவரை அவர் இப்போது இருக்கும் வாக்காளத் தலைமுறையைக் குறிவைத்து இயங்கவில்லை. இனிவரும் இளைஞர்களை நோக்கிச் செயல்படுவதாகக் கூறி இருப்பதால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இந்த சதவீதத்தை உயர்த்தலாம் என்று நினைத்திருக்கிறார். தனித்து நின்றே போட்டியிடுவது என்ற அவரது அணுகுமுறை சரியான சூழலில் மாற்றம் பெற்றால், சில எண்ணிக்கையிலான இடங்களை அவரால் பிடிக்க முடியும்தான். கட்சியில் மேலும் சில இரண்டாம் கட்டத் தம்பிகளை அடையாளம் கண்டு வளர்த்துவிடுவதுடன் மக்களிடம் அவர்கள் அடையாளம் பெறச் செய்வதும் மிக அவசியமாகும். ராஜிவ்காந்தி, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் வெளியேறாமல் பார்த்துக்கொள்வதுதான் வரும் ஐந்தாண்டுகளில் சீமானுக்கு இருக்கும் சவால். திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க சில சமரசங்களைச் செய்துகொண்டதுபோல்,  தன் கொள்கைகளில் வரும் ஆண்டுகளில் அவர் சமரசம் செய்துகொள்வாரா என்பதும் கவனிக்கவேண்டிய விஷயமே.

அ.ம.மு.க., சுமார் இருபது இடங்களில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைக் குலைத்துள் ளது.  ஆனால் பெற்ற வாக்குகளோ 2.35

 சதவீதமே. ம.நீ.ம.- வை விடக் குறைவு. டிடிவி தினகரன், தீவிரமாகத் தன் வியூகத்தை மறு ஆய்வு செய்யவேண்டிய நிலையிலிருக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவுக்கு அ.ம.மு.க.வைப் புறக்கணிக்கும் மனநிலையில் இருப்பதையே இது உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆனால் மாறும் அரசியல் சூழல்கள் இக்கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். ‘ ஆனால் அ.ம.மு.க. தன் பயணத்தின் இலக்கை எட்டிவிட்டது. இனி தொடர்வதில் அர்த்தம் இருக்குமா எனத் தெரியவில்லை‘ என்கிறார் நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத அரசியல் நோக்கர் ஒருவர்.

தே.மு.தி.க.வின் நிலைதான் மிகப்பரிதாபம்! தனித்து நின்று எட்டு சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, இந்தத் தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது. பெற்றிருப்பதோ 0.43% வாக்குகள் மட்டுமே. அக்கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தில் நின்று, 25,908 வாக்குகளை மட்டுமே பெற்றார். அங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நலம் குன்றி இருக்கும் நிலையில், தே.மு.தி.க. தன் வாய்ப்புகளை கவனித்து ஆடுவதற்குத் தவறிவிட்டது. ‘‘தேர்தல் அரசியலை, இப்போதைய தே.மு.தி.க. தலைமை, பேர அரசியலாக மாற்றியதால், தே.மு.தி.க.  சறுக்குகிறது!'' என்பது, மூத்த அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்து.

புதிய கட்சிகளுக்கு, தே.மு.தி.க.வின் பதினைந்து ஆண்டு காலஅரசியல் பயணம், நல்ல பாடமாக அமைகிறது. பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், மக்களுடன் மட்டும் கூட்டணி என்று விஜயகாந்த் முனைந்தபோது இருந்த எழுச்சி, அ.தி.மு.க.வுடன் இணைந்து கணிசமான தொகுதிகளை வென்ற பின் குறைந்துவிட்டதை கவனிக்கவும்.

இதே அபாய நிலைதான்,  ஒரு காலகட்டத்தில் மதிமுகவுக்கும் ஏற்பட்டது. தேர்தல் சமயங்களில் தொடர்ச்சியாக அக்கட்சி எடுத்த  எல்லா நிலைப்பாடுகளும் தோல்வியைத் தரவே, ம.தி.மு.க. மிகுந்த சரிவைப் பெற்றது. இந்த சரிவுக்காக அக்கட்சி கொடுத்த விலையும் மிக அதிகமே.

இந்நிலையில், யதார்த்தத்தை உணர்ந்ததாலேயே அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்பியாக வைகோவும்; நாடாளுமன்ற உறுப்பினராக கணேசமூர்த்தியும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்று சட்டமன்றத்தில் அக்கட்சியின் நான்கு உறுப்பினர்கள் குரல் ஒலிக்கும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் பிடிவாதமாகப் பானை சின்னத்தில் போட்டியிட்டதை கௌரவமாக நினைத்த நிலையில், இரு இடங்களை இழந்து நான்கு இடங்களை வென்றுள்ளது. அதில் நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய இரண்டும் பொதுத்தொகுதிகள் என்பது, அக்கட்சிக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்குமே ஒரு நல்ல ஆரம்பம்!

மக்கள் நலக்கூட்டணி என 2016 தேர்தலில் சேர்ந்து நின்று தலையில் மண்ணைப் போட்டுக்கொண்ட கட்சிகளில் இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க. ஆகிய கட்சிகள் உஷாராகித் தப்பித்துக்கொண்ட நிலையில் தே.மு.தி.க., த.மா.கா., ஆகிய கட்சிகள் தோல்வியை அடைந்துள்ளன. த.மா.கா. நிலையாவது பரவாயில்லை; ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க.விடம் பெறமுடிந்தது. அத்துடன் இந்தத் தேர்தலில் ஆறு இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது. வாசன் முன்னால் இருந்த சிறந்த வாய்ப்பு, இதுமட்டும்தான். இருந்தும் வெற்றி ஏதுவும் இல்லாமல் நழுவிவிட்டது. அவர் இன்னும் நீண்டகாலம் காத்திருக்கவேண்டும்.

தமிழகத்தில் புதிய மற்றும் சிறுகட்சிகளின் நிலை இதுதான். அவற்றின் கனவுகளும் தலைவர்களின் பேச்சுகளும் இமாலய அளவுக்கு உள்ளன. அவற்றில் சில, ஊடகங்களில் பெறும் கவனமும் மிக அதிகம். ஆனால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியினர் ஏறக்குறைய 85 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றுவிடும் நிலையில் மீதி பதினைந்தில் இவர்களால் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட இயலாது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதில் தவறொன்றும் இல்லை! தட்டினால்தானே திறக்கப்படும்? காலங்கள் கனியும்போது தயாராக இருக்கவேண்டுமே...

ஜூன், 2021