அரசியல்

கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி இலவசமா? சலுகையா? கைமாறா? முதலமைச்சர் ‘நச்’ பேட்டி!

Staff Writer

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் "THE WEEK" ஆங்கில இதழுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி அளித்தது இலவசமா? சலுகையா? உதவியா? கைமாறா? எனக் கேட்டுள்ளார்.

மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கிய முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரதமர் மோடி இதை ‘இலவசக் கலாச்சாரம்’ என்றும், ‘இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது’ என்றும் கூறுகிறாரே? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,

”இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்தது குஜராத் பா.ஜ.க. மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று சொல்லி வாக்கு கேட்டது கர்நாடக பா.ஜ.க. ஆனால் பிரதமர் மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த மாநில பா.ஜ.க. எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா?

வறுமையும் மக்கள்தொகையும் அதிகமாக உள்ள நாட்டில் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். இதனை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது.

“தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது என்பதுதான் எங்களது கேள்வி" என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கூறியிருந்தார்.

''உழவர்களுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசமாகக் கருதமுடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றையும் இலவசமாகக் கருதமுடியுமா? மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது" என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இல்லாத மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கிறது. இலவசமாக எதையும் தரமாட்டோம் என்று இருக்க முடியாது. ஏழைகளுக்குத் தருவதை குறை சொல்லும் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில்தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது இலவசமா? சலுகையா? உதவியா? கைம்மாறா?” என பதிலளித்துள்ளார்.