அரசியல்

அரசியல் என்னும் ஆபத்து!

சஞ்சனா மீனாட்சி

சமீபத்தில் சேலத்தில் நடந்த பாஜக தமிழகப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையில் கொலையாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை திணறிவருகிறது. இக்கொலை ஒரு விதமான பதட்டத்தை தமிழக அரசியல் உலகில் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் படுகொலைகள் அல்லது அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்படுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.  உள்கட்சி மோதல்,  இருகட்சிகளிடையே மோதல், தேர்தல் பகை என அரசியல் கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம். அதில் பெரும்பாலும் நியாயவாதிகளுக்கு இடமில்லாமல் போவது ஒரு பெரும் துயரம்.

தி.மு.க. உள்கட்சி தகராறால் 1956-ல் நடந்த தூத்துக்குடி கே.வி.கே. சாமி கொலையை ஜனநாயக அரசியலுக்கு தமிழகம் திரும்பிய பிறகு நடந்த  முக்கியமான கொலையாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதோடு 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியவர்  இம்மானுவேல் சேகரன். செப்டம்பர் 11, 1957-ல் அவர் படுகொலை செய்யப்பட்டார்.  முதலில் சாதிய ரீதியாக பார்க்கப்பட்ட இந்தக் கொலை பின்னர் அரசியல் முகம் தரித்தது.

சென்னையில் 1994-ல் மதிமுக முன்னோடிகளில் ஒருவரான ஏழுமலை கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அரசியல் உலகில் எழுப்பியது. 1997-ல் மதுரையை உலுக்கியது லீலாவதி படுகொலை. மதுரையில் கைத்தறி நெசவுத் தொழிலை பிரதானத் தொழிலாக நம்பி வாழும் சௌராஷ்டிரா சமூகத்தில்  ஓர்  எளிய குடும்பத்தில் பிறந்தவர் லீலாவதி.  பத்தாவது வரை மட்டுமே படித்தவர் .   மதுரை மாநகராட்சித் தேர்தலில் 59-வது வார்டில் சி.பி.எம். வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றார். வில்லாபுரம் பகுதிக்கு எப்படியாவது குடிநீர் குழாய் இணைப்பு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார் லீலாவதி.   இது அந்தப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்து வந்த சிலரை கோபம் கொள்ள வைத்தது.  1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி காலையில் வழக்கம்போல வார்டு ரவுண்ட்ஸ் போய்விட்டு வீடு திரும்பிய லீலாவதி, காலை உணவு தயாரிப்பதற்காக எண்ணெய் வாங்க அருகிலுள்ள பலசரக்குக் கடைக்குக் கிளம்பினார்.  அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் கொலைகாரக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே சடலமானார் லீலாவதி.  இந்தக் கொலை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் கைதானார்கள்.

சிவகங்கை மாவட்டத்தின் திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்தவர்  ரூசோ.  தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமானவர்.  1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரூசோவை அவருக்கு வீட்டுக்கு அருகில் வைத்தே கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச் செல்வன். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்த இவரது வீடு திருவாரூர் கொரடாச்சேரியை அடுத்த பூண்டியில் உள்ளது.  கடந்த சில வருடங்களுக்கு முன் கொரடாச்சேரியை சேர்ந்த அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் சம்பத் கொலை செய்யப்பட்டார்.  அந்தக் கொலை தொடர்பாக பூண்டி கலைச்செல்வன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.  சம்பவத்தன்று திருமண பத்திரிக்கை கொடுப்பது போல கலைச்செல்வன்  வீட்டிற்கு வந்த கும்பல்  அவரை சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.  திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் சிறிது நேரத்தில் இறந்தார்.   இது 2007-ல் நடந்தது.

எம்.எல்.ஏ., எம்.,பி., அமைச்சர் என பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர் தா.கிருட்டிணன்.  தி.மு.க.வின் தூண்களில் ஒருவர். மதுரையில் வசித்து வந்தார். 2003-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் காலையில்  வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இதில் மு.க. அழகிரி உள்ளிட்டோர் கைதானார்கள்.  பின்னர் நிரபராதிகள் என  நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். தா.கி.யை கொன்றது யார்..? இதற்கான விடையை மதுரை மக்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள பாலேகுளத்தைச் சேர்ந்தவர் பழனி. பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தார். இவர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது  கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டதோடு அவரது தலையை தனியாகத் துண்டித்து தூக்கி வீசினர்.“ தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆட்கள் எனது தந்தையை துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் கொலை செய்தார்கள். அரசியல் பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.” என்று அவரது மகன் வாஞ்சிநாதன் புகார் செய்தார். இந்தக் கொலை தொடர்பாக சி.பி.ஐ. கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கைதானார்.

இவையெல்லாம் அரசியல்வாதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் சில. இவற்றில் சில வாக்கிங் படுகொலைகள். காலையில் நடைபயிற்சி செல்லும்போது பிரமுகர்கள் கொல்லப்படுவது சகஜம். கடந்த 2001ம் ஆண்டு சென்னையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் பாலன்  தனது மயிலாப்பூர் வீட்டிலிருந்து வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டார். பின்னர் அவரைக் கொன்று உடலையும் எரித்து விட்டனர். நீண்ட காலம் கழித்துத்தான் இந்தக் கொலையும், உடல் எரிப்பும் போலீஸாருக்குத் தெரிய வந்தது.

தமிழகத்தை உலுக்கிய இன்னொரு வாக்கிங் படுகொலை ஏற்கெனவே பார்த்த மதுரையில் நடந்த தா.கிருட்டிணன் படுகொலை. 2004ம் ஆண்டு இன்னொரு முக்கிய திமுக பிரமுகரான ஆலடி அருணாவும் இதேபோலத்தான் வாக்கிங் போனபோது படுகொலை செய்யப்பட்டார். அதற்கு தொழில்போட்டிதான் காரணமாகச் சொல்லப்பட்டது. அமைச்சராக இருந்த நேருவின் தம்பி ராமஜெயம் கடந்தாண்டு வாக்கிங் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இன்னும் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப் படவே இல்லை.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் புகழேந்தி  வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த   கும்பல்  வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றது. அதுபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கே. புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் குமார், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர்  ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வந்த திமுகவின் திராவிடபாலு போன்றவர்களும் வாக்கிங் படுகொலைகளில் பலியானவர்கள்.

மதுரையில் இப்போது கொலைகள் வேறுவடிவம் எடுத்துள்ளன. அரசியல் பிரமுகர்களை விட்டுவிட்டு அவர்களின் மகன்களைக் கொல்வதை ஒருவித ஸ்டைலாகக் கையிலெடுத்திருக்கிறார்கள்.  மதுரை நகர தி.மு.க. செயலாளராக இருந்த வேலுச்சாமியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்னர், கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க. பிரமுகர் மாரிசாமியின் மகன் கொலையானார். மதுரை தி.மு.க. பகுதிச் செயலாளர் முருகனின் மகன் கொலை செய்யப்பட்டார்” என்று சுட்டிக்காட்டுகிறார் ஒரு மதுரைப் பிரமுகர்.

உள்ளூரில் அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வளர்ச்சியடையும் ஒருவர், தனது பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகளில் சேர்வது வழக்கமாகிவிட்டது. அவ்வாறு அரசியலில் நுழைந்து ஒரு பொறுப்பிற்கு வரும்போது அவர்களுக்கு எதிரிகளும் உருவாவதாக கூறுகின்றனர் குற்றவியல் ஆய்வாளர்கள்.

வேலையில்லாமல் திரியும், பணத்துக்கு ஆசைப்படும் இளைஞர்களை சேர்த்து தமிழகத்தில் மாவட்டம் தோறும் கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் குவாட்டர், பிரியாணி என நண்பர்கள் வட்டமாக உருவாகும் இந்த குழு படிப்படியாக வளர்ந்து  பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்கும் வகையில் பரிணமிப்பதால்  கூலிப்படைகளின் இணைப்புச் சங்கிலி வலுவாக உள்ளது. எனவே இதன் உருவாக்கத்தை காவல்துறையால் எளிதில் தடுக்க முடியவில்லை.

தமிழகக் காவல்துறை தலைவர்  ராமானுஜம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியல் மூலம் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் மாநிலம் முழுவதும் உள்ளதாக கூறியிருந்தார்.

சென்னை, நெல்லை, மதுரையில் இப்பட்டியல்படி ரவுடிகள் அதிகம். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறது ஒரு அறிக்கை. தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் சுமார் பதினைந்து அரசியல் கொலைகள் நடந்ததாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

“அரசியல் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஜனநாயக விரோதப் போக்கு வளர்வதைக் காட்டுகிறது. அரசியலானது சமீபகாலமாக மத வெறித்தனமும் சாதி வெறித்தனமும் கொண்ட அரசியலாக மாறியிருப்பது எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.  கட்டபஞ்சாயத்து, ரியல் ஸ்டேட்  போன்றவைகளை  மையமாக வைத்து நடக்கும் அரசியல் பிரமுகர்கள் கொலைகளும்  அதிகமாகிவருகின்றன.  குறுக்கு வழிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுவது சகஜமாகும்போது அரசியல் படுகொலைகளும் அதிகரிக்கின்றன” என்று கருத்து தெரிவிக்கிறார்  ‘சமம் மக்கள் இயக்கத்தின்’  மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. ராசன்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருப்பது மக்கள் பிரச்னைக்காகப் போராடியதில் அல்ல. உட்கட்சி மோதலும் சுயநலபோக்கும் தொழில்போட்டியும் பல கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. இதுமிகவும் வருத்தம் தரக்கூடிய போக்காகும். ஜனநாயக அரசியல் இந்தியாவில் மிக ஆபத்தானதாக மாறிக் கொண்டிருக்கிறது!

---

மேலும் சில அரசியல் கொலைகள்

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த வக்கீல் ராஜகோபாலன்

ஏ.வி.பி.வி. அமைப்பின் தலைவர் பேராசிரியர் பரமசிவம்

திருச்சி பா.ஜனதா மாவட்ட தலைவர் வக்கீல் ஸ்ரீதர்

தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன். 2006-ல் குண்டுவீச்சில் இவரது மனைவி ஜெஸிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார்.

பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளஞ்செழியன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம்

சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ்.

பா.ஜ.க.வின் மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி.

சிவகங்கை மாவட்ட பாஜக பிரமுகர்  படைவென்றான் அம்பலம் (வயது37).

பரமக்குடி  தேங்காய் கடை முருகன்

பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி    

வேலூர் இந்து முன்னணி அமைப்பின் செயலர் வெள்ளையன்         

நாகூர் விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் ரெங்கையன்,

விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட துணை செயலாளர் மேகவர்ணன்

மதுரையில் அதிமுக வார்டு செயலாளர் மனோகரன்,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் முக்காணி அதிமுக செயலாளர் கண்ணன், தரமணி அதிமுக மகளிர் அணி செயலாளர் பானு,

நீலகிரி மாவட்டம்  கொளப்பள்ளியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் தங்கவேல்,  

செங்கல்பட்டு நகர தேமுதிக செயலாளர் சுரேஷ்,

ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பாலாஜி

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலர்  கதிரேசன், அவரது மகன் பிரசன்னா (12), ஓட்டுநர் பூமிநாதன்

விருதுநகர் நகராட்சி  வார்டு அதிமுக கவுன்சிலர் நாகராஜன். 

திமுகவைச்  சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர்  

ஈரோடு தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்

சென்னை . ஆர்.கே. நகர் பகுதி தேமுதிக  துணை செயலாளர்  பிரகாஷ்

கம்பம், நாராயணதேவன்பட்டியை சேர்ந்த தேமுதிக

சின்னமுருகன்.

...பட்டியல் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை.

செப்டம்பர், 2013