விஜய் 
அரசியல்

கோட்டையைப் பிடிப்பாரா கோட்?

முத்துமாறன்

இரண்டு போர் யானைகள், வாகைப்பூவுடன் கூடிய கொடி என அரசியல் சூழலை அமர்க்களப்படுத்தி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி, மெல்ல இந்த ஆகஸ்ட்டில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்துள்ளார். தற்போது நடித்துவரும் கோட் படம் செப்டம்பரில் வெளியாகிறது. இதற்கு அடுத்ததாக ஹெச்.வினோத் படத்தில் (தளபதி 69) நடித்து முடித்துவிட்டு, முழு நேர அரசியல்வாதி ஆகவிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலின் போது களத்தில் முழு நேரமாக இருக்கவேண்டும் என்பது அவரது திட்டம்.

 வரும் செப்டம்பர் 23 இல் கட்சியின் முதல் மாநாடு நடக்க இருக்கிறது. விஜய் ரசிகர்கள் சில லட்சம் பேர் திரண்டு கொண்டாடப்போகும் நிகழ்வாக அது அமையும்.

கொடியேற்றி வைத்ததைத் தொடர்ந்து விஜய் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் சில வரிகள் அவரது கட்சியின் கொள்கை எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. ”மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்’ என்ற வரியில் இருக்கும் சமூக நீதி என்ற சொல்லும் மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற பாடுவேன் என்ற இன்னொரு வரியில் இருக்கும் தமிழ்ப்பற்றும் தமிழகத்தில் இருக்கும் முக்கியத் திராவிடக் கட்சிகளின் கொள்கை முழக்கங்களை ஒட்டியே அவரது கட்சியின் கொள்கையும் இருக்கும் எனக்காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

கொள்கை எனக் கேட்டவுடன் தலை சுற்றிவிட்டது என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் விலகிக் கொண்டார். கருப்பு எம்ஜிஆர் என்ற அடைமொழியுடன் கட்சி தொடங்கி முக்கிய எதிர்க்கட்சி என்ற நிலையை எட்டிய விஜயகாந்தும்கூட கொள்கை விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. கட்சியின் கொள்கை என்பதே அதன் அடிப்படையை வலுவாகக் கட்டமைக்க உதவும் என்பதால் விஜய் முன்வைக்க இருக்கும் கொள்கை என்ன என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆர் காலத்துக்குப் பின்னர் அரசியலில் காலூன்றி ஓரளவுக்கு வெற்றி பெற்றவர் என்றால் அது விஜயகாந்த் மட்டுமே. அவருக்கு நடிக்கும்போதே ஒருவிதமான மக்கள் செல்வாக்கு வளர்ந்திருந்தது. பொதுவிசயங்களில் ஆர்வம் காட்டுபவராகவும் அவர் தன்னை முன் வைத்திருந்தார். ஏராளமான உதவிகளைச் செய்து வள்ளலாகவும் அறியப்பட்டிருந்தார். அதனால்தான் சாதி எல்லைகளைத்தாண்டி வட தமிழகத்தில் விருத்தாசலத்தில் அவரால் தனித்து நின்று முதல் தேர்தலிலேயே வெற்றி பெற முடிந்தது.

அவருக்குப் பின் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி பல தேர்தல்களுக்குப் பின் தான் மாநில கட்சி அங்கீகாரம் பெறமுடிந்தது. ஒரு எம்.எல்.ஏ.வைக் கூட பெற்றிட முடியவில்லை. ஆனாலும் அரசியல் களத்தில் தொடர்வதற்கு ஒரு கொள்கைப் பிடிமானத்தை அது பெற்றுள்ளது.

தனிநபர் செல்வாக்கு, கொள்கைப்பிடிமானம் இரண்டும் இருந்தால் அரசியலில் கட்சி தொடங்கி வெல்வது சாத்தியமாகும். விஜய்க்கு முன்னதையும் சரி; பின்னதையும் சரி.. இனிதான் நிரூபித்தாகவேண்டும்.

விஜய் கட்சியில் பிற கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் வந்து இணையக் கூடும். மூத்த தலைவர்களின் ஆலோசனை முக்கியமானது. அது கட்சியை நிதானமாகவும் வலிமையாகவும் அடி எடுத்து வைக்க உதவி செய்யும். ஆனால் அதே சமயம் அப்படி வந்து சேருகிறவர்கள் மீது ஊழல் கறை படிந்திருந்தால் அவர்களைச் சேர்த்துக்கொள்வது பொதுமக்கள் மத்தியில் நற்பெயரைக் கெடுக்கவே செய்யும். இந்த விஷயத்தில் விஜய் எப்படி நடந்துகொள்வார் என்பதை இனிதான் பார்க்கவேண்டும்.

இப்போதைக்கு நா.த.க, விஜய் கட்சியின் மீது ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வேறு சில தலைவர்களும் வரவேற்று இருக்கிறார்கள். பல நூறு கோடிகள் சந்தை மதிப்பு இருக்கும் நடிகர் தன் வருமானத்தைத்துறந்து அரசியலுக்கு வருகிறார் என்பதுதான் விஜய் மீது இருக்கும் ஒரே பிடிமானம். நடிப்பால் திரட்டிய ரசிகர்கள் இன்னொரு பக்கம். ஆனால் தன் செயல்பாடுகளால் எப்படி அவர் பொதுமக்களைக் கவர்வார் என்பது முக்கியமானது.

இளம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? யார் பக்கம் போவார்கள் என்பது ஆதிகாலத்தில் இருந்து இருக்கும் விவாதம். இதைச் சமாளிக்க ஒவ்வொரு கட்சியும் புதிய தலைமுறைத் தலைவர்களை இறக்கிக் கொண்டே இருக்கும். விஜய் திராவிடக் கட்சிகளின் இளம் வாக்காளர்களை தன் பக்கம் இழுப்பாரா என்ற விவாதங்கள் ஊடகங்களில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

”இதுவரை தோராயமாக 90 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்திருப்பார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னரோ அல்லது மாநாட்டிலோ வெளியிடப்படும். வாக்காளர் அடையாள அட்டையை வைத்துத்தான் த.வெ.க.வில் உறுப்பினராக இணைய முடியும். அதற்கேற்ற வகையில்தான் உறுப்பினர் சேர்க்கை செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியில் சேரக் கூடிய உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமானவர்கள்.” என்று தெரிவிக்கிறார் தவெகவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

”த.வெ.க. பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி. அதனால்தான் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் எளிய மக்கள் உயிரிழந்தபோது மாநில அரசின் தவறை சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு வேண்டாம் என சொல்கிறார்.

த.வெ.க.வின் செயல் திட்டம், கொள்கை வரவு ஆகியவற்றை் நடைபெற இருக்கின்ற மாநாட்டில் விஜய் வெளியிடுவார். ஆளும் கட்சி, ஆண்ட கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணையும் முயற்சியில் உள்ளனர். கட்சியில் யாரெல்லாம் சேர்கிறார்கள்; அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் மாநாட்டில் தெரியும்.” என்கிறார் இவர்.

தன் ஐம்பது வயதில் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். சினிமா திரைகளில் இருந்து தலைவர்களைத் தேடும் தலைமுறையாக தமிழ்நாடு இன்னும் இருக்கிறதா? இந்த 2கே தலைமுறை சொல்லவிருக்கும் பதிலுக்காக வீ ஆர் வெய்ட்டிங்க்!.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram