அரசியல்

பெண் எம்.பி.களுக்கு ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுப்பதா? - பா.ஜ.க. பாய்ச்சல்!

Staff Writer

நாடாளுமன்றத்தில் பெண் எம்பிகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மீது இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேசினார். அவரையடுத்துப் பேசிய அமைச்சர் ஸ்மிருதி ராணி, அவரின் பெயரைக் குறிப்பிடாமல், தனக்கு முன்னாள் பேசிய நபர் நாடாளுமன்றத்தில் முறைகேடாக நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

பெண் வெறுப்புக் கொண்ட ஒருவரே இப்படி அவைக்குள் சக பெண் உறுப்பினர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கமுடியும் என்றும் குரோத உணர்ச்சியிலிருந்து வந்தவர் என்பதை, பெண்கள் மீது அவருடைய குடும்பமும் கட்சியும் எப்படி நினைக்கிறது என்பதையும் காட்டுகிறது என்றும் அமைச்சர் ஸ்மிருதி கூறினார். இப்படியான கண்ணியமற்ற நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லை என்றும் ஸ்மிருதி ராணி குறிப்பிட்டார்.

பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் சேசாத் பூனாவால ராகுலின் பறக்கும் முத்தம் ஒரு வெட்கம்கெட்ட செயல் என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பிரச்னையைப் பற்றி பேசும் அவரின் இந்த நடத்தை கருணையற்றதாக இல்லையா என்றும் அவர் கேட்டுள்ளார்.

அமைச்சர் ஸ்மிருதி ரானியின் எதிர்ப்பை அடுத்து, பாஜக பெண் உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரிடம் புகார் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

இன்னொரு மைய அமைச்சர் சோபா கரந்த்லாஜியும் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டோம் என்று அவர் கூறினார்.