அரசியல்

மக்கள் மருந்தகங்கள் 25,000ஆக அதிகரிக்கப்படும் - பிரதமர் மோடி பெருமிதம்

Staff Writer

நாட்டில் தற்போதுள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

” மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு புதிய சக்தியை அளித்துள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 மருந்துக் கட்டணம் வருகிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு வழங்குகிறோம்.” என்று பிரதமர் கூறினார்.

” சில உலக சந்தைகளில் ஒரு மூட்டை யூரியா ரூ.3,000 க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு மூட்டை யூரியா விவசாயிகளுக்கு ரூ.300க்குள் வழங்கப்படுகின்றன. நமது விவசாயிகளுக்கு யூரியாவுக்கு ரூ.10 லட்சம் கோடி மானியம் வழங்கப்படுகிறது.” என்றும்,

” பாரம்பரிய கைவினைக் கலையில் திறம்படைத்தவர்கள் பயனடையும் வகையில் 'விஸ்வகர்மா யோஜனா' என்னும் திட்டத்தை விரைவில் அரசு தொடங்கும். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, குறிப்பாக பிற்பட்ட சமூகத்தினர் பயனடையும் இத்திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாயில் தொடங்கும் இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் சமூகப் பங்கேற்பு பெறுவார்கள்.” என்றும் பிரதமர் கூறினார்.

அரசின் வறுமை ஒழிப்பு முயற்சிகள் குறித்துப் பேசிய மோடி, முதல் ஐந்தாண்டு காலத்தில் 13.5 கோடி ஏழை மக்களும் பெண்களும் வறுமையியிலிருந்து விடுபட்டு நடுத்தட்டு வகுப்புக்கு உயர்ந்துள்ளனர் என்றார்.

பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ .50,000 கோடி, பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு என அரசின் திட்டங்களை பெருமிதத்தோடு பிரதமர் பட்டியலிட்டார்.